என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • சுப்மான் கில் டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து போட்டிகளிலும் நன்றாக விளையாடுகிறார்.
    • நடப்பாண்டில் 50 ஓவர் கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதனால் டி20 அணியில் அவர் விளையாடும் வாய்ப்பு மிகவும் குறைவு.

    மும்பை:

    இலங்கைக்கு எதிராக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் பிசிசிஐ அதிரடி மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. ஒரு நாள் கிரிக்கெட் அணியில் இருந்து ஷிகர் தவான் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். துணை கேப்டன் பதவியில் இருந்து கே எல் ராகுல் தூக்கப்பட்டிருக்கிறார். அதேபோன்று டி20 அணியில் விராட் கோலி ,ரோஹித் சர்மா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்திய அணியின் முக்கிய வீரராக கருதப்படும் ரிஷப் பண்ட் இலங்கைத் தொடரில் விளையாடவில்லை. ஸ்ரேயாஸ், முகமது சிராஜ் ஆகியோருக்கு டி20 போட்டிகளில் ஓய்வு வழங்கப்பட்டிருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    இந்திய அணி தேர்வு குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளதாவது:-

    ஷிகர் தவான் குறித்து நிச்சயமாக கவலைப்படுகிறேன். அவருக்கான வாய்ப்பு முடிவுக்கு வந்துவிட்டது. முதலில் டி20 மற்றும் டெஸ்ட் அணியில் தனது இடத்தை இழந்தார். அதை எல்லாம் தாண்டி ஒரு நாள் போட்டியில் தவானுக்கு வாய்ப்பு கிடைத்தது.

    ஏதேனும் ஒரு இன்னிங்ஸில் தவான் நன்றாக விளையாடி வந்தார். ஆனால் இப்போதெல்லாம் சில போட்டிகளில் ரன் சேர்க்கவில்லை என்றால் உங்களுடைய இடத்திற்கு ஆபத்து வந்துவிடும். காரணம் பல இளைஞர்கள் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஷிகர் தவானுக்கு மாற்றாக சுப்மான் கில்லுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கிறேன். சுப்மான் கில் டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து போட்டிகளிலும் நன்றாக விளையாடுகிறார்.

    இதனால் ஷிகர் தவானுக்கு சிக்கல் அதிகரித்து விட்டது. இதேபோன்று இஷான் கிஷனும் தொடக்க வீரருக்கான வாய்ப்புக்காக காத்திருக்கிறார். இதற்காக தவான் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விட்டது என்று சொல்ல முடியாது. எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

    ஹர்திக் பாண்டியா டி20 அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறது ஐபிஎல் தொடரில் சாதித்ததற்காக கிடைத்த வெகுமானம். கேப்டனாக ஹர்திக் சிறப்பாக செயல்பட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார்.

    ஐபிஎல் போன்ற பெரிய தொடரில் அவர் அணியை வழி நடத்திய விதம் பாராட்டத்தக்கது. விராட் கோலியை பொறுத்தவரை டி20 போட்டியில் அவருடைய இடத்திற்கு ஆபத்து வந்துவிட்டது. 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2023 ஆம் ஆண்டு நடைபெறுகிறது. இதனால் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் தான் அதிகம் விளையாடுவார்.

    இந்திய ஒரு நாள் அணியில் முக்கியமான வீரராக விராட் கோலி திகழ்வதால் அவர் நடப்பாண்டில் 50 ஓவர் கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதனால் டி20 அணியில் அவர் விளையாடும் வாய்ப்பு மிகவும் குறைவு. இதனால் டி20 அணியில் பல இளம் வீரர்கள் தங்களது வாய்ப்பை பயன்படுத்தி கொள்வார்கள் என்பதால், விராட் கோலிக்கு நெருக்கடி ஏற்படும்.

    எனினும் அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலக கோப்பையில் விளையாட விராட் கோலி நிச்சயம் ஆர்வம் காட்டுவார். இதனால் விராட் கோலி டி 20 கிரிக்கெட்டில் விளையாட மாட்டார் என்று சொல்ல முடியாது.

    • அதே சமயம் மற்றொரு இந்திய வீரர் யுகி பாம்ப்ரி தகுதி சுற்றில் இருந்தே விளையாட உள்ளார்.
    • 5-வது மராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி வருகிற 31-ந்தேதி முதல் ஜனவரி 7-ந்தேதி வரை புனேயில் நடக்கிறது.

    புனே:

    5-வது மராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி வருகிற 31-ந்தேதி முதல் ஜனவரி 7-ந்தேதி வரை புனேயில் நடக்கிறது. தெற்காசியாவில் நடக்கும் ஒரே ஏ.டி.பி. தொடரான இதில் குரோஷியாவின் மரின் சிலிச், எமில் ருசுவோரி (பின்லாந்து), ஜான்ட்சுல்ப் (நெதர்லாந்து), கிரஜினோவிச் (செர்பியா) உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பங்கேற்கிறார்கள்.

    இந்த நிலையில் தரவரிசையில் 340-வது இடத்தில் உள்ள சென்னையைச் சேர்ந்த எஸ்.முகுந்துக்கு இந்த போட்டியில் நேரடியாக பிரதான சுற்றில் களம் இறங்க வகை செய்யும் 'வைல்டு கார்டு' சலுகை வழங்குவதாக போட்டி அமைப்பாளர்கள் நேற்று அறிவித்தனர். அதே சமயம் மற்றொரு இந்திய வீரர் யுகி பாம்ப்ரி தகுதி சுற்றில் இருந்தே விளையாட உள்ளார்.

    • மொத்தம் நான்கு வீரர்கள் இந்த விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
    • ஐசிசி வளர்ந்து வரும் கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இந்திய வீராங்கனைகள் ரேணுகா சிங் மற்றும் யாஸ்திகா பாட்டியா இடம் பிடித்துள்ளனர்.

    துபாய்:

    ஆண்டுதோறும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் கிரிக்கெட் வீரர்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகளை வழங்கி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) பாராட்டுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பரிந்துரைகள் வெளியாக தொடங்கி உள்ளன. வரும் 30-ம் தேதி வரையில் இந்த பரிந்துரை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டு விருதுகள் வழங்கப்பட உள்ளது. ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த கிரிக்கெட் வீராங்கனை, சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர், சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர், சிறந்த டி20 கிரிக்கெட் வீரர், வளர்ந்து வரும் வீரர் மற்றும் வீராங்கனை என மொத்தம் 13 விருதுகள் வழங்கப்பட உள்ளன.

    இந்தியாவின் அர்ஷ்தீப் சிங், தென் ஆப்ரிக்காவின் மார்கோ யான்சன், நியூஸிலாந்து அணியின் ஃபின் ஆலன், ஆப்கானிஸ்தான் அணியின் இப்ராஹிம் ஸாத்ரன் ஆகியோர் இந்த விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

    23 வயதான அர்ஷ்தீப் சிங், உள்ளூர் கிரிக்கெட்டில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருபவர். ஐபிஎல் அரங்கில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த ஜூலையில் இந்திய கிரிக்கெட்டில் அறிமுகமானார். இடது கை பந்துவீச்சாளர். இதுவரை 21 டி20 போட்டிகளில் விளையாடி 33 விக்கெட்டுகள் கைப்பற்றி உள்ளார். இவரது பவுலிங் எக்கானமி 8.17.

    ஐசிசி வளர்ந்து வரும் கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இந்திய வீராங்கனைகள் ரேணுகா சிங் மற்றும் யாஸ்திகா பாட்டியா இடம் பிடித்துள்ளனர்.

    • கால்பந்தாட்ட கோல்கீப்பராக தனது விளையாட்டு கரியரை தொடங்கியவர் டோனி.
    • டோனி மற்றும் மெஸ்சி இடையே நிறைய ஒற்றுமைகள் உள்ளன.

    ராஞ்சி:

    கால்பந்து விளையாட்டின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான மெஸ்சி தனது கையொப்பமிட்ட அர்ஜென்டினா ஜெர்ஸியை டோனியின் செல்ல மகள் ஸிவாவுக்கு அனுப்பியுள்ளார். இதனை ஸிவா தனது அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    கால்பந்தாட்ட கோல்கீப்பராக தனது விளையாட்டு கரியரை தொடங்கியவர் டோனி. பின்னர் கிரிக்கெட் விளையாட்டில் விக்கெட் கீப்பராக உருவெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட்டில் ஐசிசி நடத்தும் அனைத்து தொடர்களையும் வென்ற ஒரே கேப்டனும் அவர்தான்.

    டோனி மற்றும் மெஸ்சி இடையே நிறைய ஒற்றுமைகள் உள்ளன. அதனை உலகக் கோப்பையை வைத்தே ஓர் உதாரணமாக சொல்லலாம். இருவரும் தங்கள் நாட்டை உலகக் கோப்பை தொடரில் வழிநடத்தி சாம்பியன் பட்டம் வெல்லச் செய்தவர்கள். இருவருமே இறுதிப் போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியவர்கள். அவர்கள் விளையாடிய விளையாட்டு மட்டும்தான் இங்கு வேறுபடுகிறது.

    இந்தச் சூழலில் உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு டோனியின் ஏழு வயதான மகள் ஸிவாவுக்கு அர்ஜென்டினா அணியின் ஜெர்ஸியை தனது கையொப்பமிட்டு மெஸ்ஸி அனுப்பி உள்ளார்.

    "Para Ziva என அவர் ஸ்பானிய மொழியில் எழுதி தனது கையொப்பமிட்டு இந்த ஜெர்ஸியை மெஸ்ஸி, ஸிவாவுக்கு அனுப்பியுள்ளார். அதனை ஆசையுடன் ஸிவா அணிந்துகொண்டு 'அப்பாவை போலவே மகளும்' என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

    • நான் விதைத்த விதைகள், மரமாக வளர்ந்து அதன் பழங்களை அனுபவித்து வருகிறேன்.
    • போட்டிக்கு வரும் போது எனது ஆட்டத்தை ரசித்து என்னை வெளிப்படுத்தி கொள்ளவே பார்க்கிறேன்.

    மும்பை:

    இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது.

    இப்போட்டி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. காயம் காரணமாக கேப்டன் ரோகித் சர்மா 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடவில்லை.

    20 ஓவர் போட்டி தொடருக்கு ஹர்த்திக் பாண்ட்யா கேப்டனாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். துணை கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    துணை கேப்டன் பதவிக்கு நியமனம் செய்யப்படுவது தொடர்பாக சூர்ய குமார் யாதவ் கூறியதாவது:-

    துணை கேப்டன் பதவியை எதிர்பார்க்கவில்லை. நான் கண்களை மூடிக்கொண்டு என்னை நானே கேட்டு கொண்டேன் இது கனவா என்று. இதை இன்னும் கனவு போல் உணர்கிறேன். அணி அறிவிக்கப்பட்டதும் என் தந்தை எனக்கு அந்த செய்தியை அனுப்பினார்.

    பின்னர் இருவரும் பேசி கொண்டோம். மேலும் அவர் எனக்கு அனுப்பிய செய்தியில், எந்த அழுத்தத்தையும் எடுத்து கொள்ள வேண்டாம். உனது பேட்டிங்கை அனுபவித்து விளையாடு என்று கூறி இருந்தார்.

    எனது பல வருட கடின உழைப்புக்கு பலன் கிடைத்து உள்ளது. நான் விதைத்த விதைகள், மரமாக வளர்ந்து அதன் பழங்களை அனுபவித்து வருகிறேன். அதனால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

    நான் இந்தியாவுக்காக விளையாடிய காலத்திலிருந்தே என் மீது எப்போதும் பொறுப்பும், அழுத்தமும் இருந்தது. அதே வேளையில் எனது ஆட்டத்தை ரசித்து விளையாடி வருகிறேன்.

    நான் எந்த சுமையையும் எடுத்து செல்வதில்லை. போட்டிக்கு வரும் போது எனது ஆட்டத்தை ரசித்து என்னை வெளிப்படுத்தி கொள்ளவே பார்க்கிறேன். ஹர்த்திக் பாண்ட்யாவுடன் பந்தம் எப்பொழுதும் நன்றாகவே இருக்கிறது.

    இந்தியா மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக நிறைய சேர்ந்து விளையாடி உள்ளோம். அவரது கேப்டன் ஷிப்பின் கீழ் விளையாடுவதை நான் மிகவும் ரசிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 386 ரன்கள் பின் தங்கிய நிலையில் தென் ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை விளையாடியது.
    • தென் ஆப்பிரிக்க 68.5 ஓவரில் 204 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா 189 ரன்னில் சுருண்டது.

    பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 575 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. டேவிட் வார்னர் இரட்டை சதமும் (200 ரன்), அலெக்ஸ் கேரி சதமும் (111 ரன்) அடித்தனர்.

    ஸ்டீவன் சுமித் 85 ரன்னும், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன் தலா 51 ரன்னும் எடுத்தனர். 386 ரன்கள் பின் தங்கிய நிலையில் தென் ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை விளையாடியது. கேப்டன் டீன் எல்கர் டக்-அவுட் ஆனார்.

    நேற்றைய 3-வது நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா ஒரு விக்கெட்டுக்கு 15 ரன் எடுத்திருந்தது. டிபுருன் 6 ரன்னுடனும், சாரல் எர்வீ 7 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது.

    தொடர்ந்து விளையாடிய இந்த ஜோடி சிறிது நேரம் மட்டுமே தாக்கு பிடித்தது. எர்வீ 21 ரன்னிலும், டிபுருன் 28 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.

    அடுத்து களம் வந்த கயா சோன்டோ ஒரு ரன்னில் ரன் அவுட் ஆனார். தென் ஆப்பிரிக்கா அணி 65 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்தது.

    அதன்பின் பவுமா-வெர்ரின்னே ஜோடி நிதானமாக விளையாடியது. இந்த ஜோடி மதிய உணவு இடைவேளை வரை தாக்கு பிடித்தது. இடைவேளைக்கு பிறகு வெர்ரின்னே (33 ரன்) ஆட்டமிழந்தார்.

    பொறுமையாக விளையாடிய பவுமா அரை சதம் அடித்தார். அடுத்து களம் இறங்கிய மார்கோ ஜேன்சன் 5 ரன்னிலும், கேசவ் மகராஜ் 13 ரன்னிலும் அவுட் ஆனார். பவுமா 65 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

    தென் ஆப்பிரிக்க 68.5 ஓவரில் 204 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 182 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் லயன் 3 விக்கெட்டும், ஸ்காட் போலண்ட் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இந்த வெற்றி மூலம் 3 ஆட்டம் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று கைப்பற்றி உள்ளது. பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.

    இரு அணிகளும் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 4-ந்தேதி சிட்னியில் தொடங்குகிறது.

    • ஹாக்கி இந்தியா செயற்குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
    • வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினால் வீரர்களுக்கு தலா ரூ.10 லட்சம், மற்றவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் அளிக்கப்படும்.

    புதுடெல்லி:

    15-வது உலகக் கோப்பை ஹாக்கி தொடர் அடுத்த மாதம் (ஜனவரி) 13-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை ஒடிசாவின் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் நடக்கிறது. 16 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் இந்திய அணி 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. இங்கிலாந்து, ஸ்பெயின், வேல்ஸ் ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும். உலக தரவரிசையில் 6-வது இடம் வகிக்கும் இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் ஜன.13-ந்தேதி ஸ்பெயினை சந்திக்கிறது.

    1975-ம் ஆண்டு தங்கப்பதக்கத்தை உச்சிமுகர்ந்த இந்திய அணி அதன் பிறகு எந்த பதக்கமும் வென்றதில்லை. நீண்ட கால ஏக்கத்தை உள்நாட்டில் நடக்கும் இந்த போட்டியின் மூலம் இந்திய வீரர்கள் தணிப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில் ஹாக்கி இந்தியா அமைப்பு இந்திய வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில், ஊக்கத்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது.

    உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி மகுடம் சூடினால் வீரர்களுக்கு தலா ரூ.25 லட்சமும், அணியின் உதவியாளர்களுக்கு தலா ரூ.5 லட்சமும் வழங்கப்படும். 2-வது இடத்தை பிடித்து அதற்குரிய வெள்ளிப்பதக்கத்தை பெற்றால் வீரர்களுக்கு தலா ரூ.15 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்கப்படும். வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினால் வீரர்களுக்கு தலா ரூ.10 லட்சம், மற்றவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் அளிக்கப்படும்.

    ஹாக்கி இந்தியா செயற்குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. ஹாக்கி இந்தியா தலைவர் திலிப் திர்கே கூறுகையில், 'சீனியர் உலகக் கோப்பை போட்டியில் பதக்க மேடையில் ஏறுவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. இந்த ஊக்கத்தொகை, வீரர்களுக்கு மேலும் உத்வேகம் அளிக்கும் என்று நம்புகிறோம். உள்ளூர் ரசிகர்கள் மத்தியில் பதக்கம் வெல்லும் போது நிச்சயம் அது நமது வீரர்களுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும். அவர்கள் சிறப்பாக செயல்பட வாழ்த்துகள்' என்றார்.

    • ஆஸ்திரேலியா வீரர் லபுஸ்சேன் தரவரிசையில் தொடர்ந்து முதலிடம்.
    • பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 2-வது இடத்தில் உள்ளார்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஸ்சேன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். பாகிஸ்தானின் பாபர் அசாம் 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித் 3-வது இடத்திலும் மாற்றமின்றி தொடருகிறார்கள்.

    ரிஷப் பண்ட் 6-வது இடத்திலும், ரோகித் சர்மா 9-வது இடத்திலும் நீடிக்கிறார்கள். வங்காள தேசத்துக்கு எதிரான டெஸ்டில் 87 மற்றும் 29 ரன் வீதம் எடுத்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்த இந்திய வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் 10 இடங்கள் எகிறி 16-வது இடத்தை பிடித்துள்ளார். புஜரா 19-வது இடத்தையும், விராட் கோலி 14-வது இடத்தையும் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளனர்.

    பந்து வீச்சாளர் தரவரிசையில் வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் 6 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஒரு இடம் முன்னேறி சக வீரர் ஜஸ்பிரித் பும்ராவுடன் 4-வது இடத்தை பகிர்ந்துள்ளார். 

    • இந்திய அணியின் கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார்.

    புதுடெல்லி:

    ஐ.சி.சி. சார்பில் பெண்களுக்கான 8-வது டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு தென் ஆப்ரிக்க மண்ணில் பிப்ரவரி 10-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடக்கவுள்ளது.

    மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான போட்டி அட்டவணையை ஏற்கனவே ஐசிசி வெளியிட்டது. இந்த தொடரில் இந்திய அணி 'குரூப் 2'ல் இடம் பெற்றுள்ளது. இதில் இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து அணிகளும் உள்ளன.

    இந்திய அணி பிப். 12-ம் தேதி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை சந்திக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் (பிப். 15), இங்கிலாந்து (பிப். 18), அயர்லாந்து (பிப். 20) அணிகளை இந்திய அணி சந்திக்கிறது.

    இந்நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி விவரம் வருமாறு:

    ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷபாலி வர்மா, யாஸ்திகா பாட்டியா, ரிச்சா கோஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்லீன் தியோல், தீப்தி ஷர்மா, ராதா யாதவ், ரேணுகா தாக்கூர், அஞ்சலி சர்வானி, பூஜா வஸ்த்ரகர், ராஜேஸ்வரி கெய்க்வாட், ஷிகா பாண்டே

    • முதலில் ஆடிய பாகிஸ்தான் 438 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • கேப்டன் பாபர் அசாம், ஆகா சல்மான் சதமடித்து அசத்தினர்.

    கராச்சி:

    பாகிஸ்தான், நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கராச்சியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் 438 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்திய கேப்டன் பாபர் அசாம் 161 ரன்னில் அவுட்டானார். ஆகா சல்மான் 103 ரன்னில் ஆட்டமிழந்தார். சப்ராஸ் அகமது 86 ரன்னில் வெளியேறினார்.

    நியூசிலாந்து சார்பில் சவுத்தி 3 விக்கெட், அஜாஸ் பட்டேல், பிரேஸ்வெல், ஐஷ் சோதி தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இதையடுத்து, நியூசிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 165 ரன்கள் எடுத்திருந்தது. லாதம் 78 ரன்னுடனும், கான்வே 82 ரன்னுடனும் அவுட்டாகாமல் இருந்தனர்.

    இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. டேவன் கான்வே 92 ரன்னில் அவுட்டானார். டாம் லாதம் சதமடித்து 113 ரன்னில் அவுட்டானார். டாம் லாதம், கான்வே ஜோடி முதல் விக்கெட்டுக்கு 183 ரன்கள் சேர்த்தது.

    அடுத்து இறங்கிய கேன் வில்லியம்சன் நிதானமாக ஆடி சதமடித்தார். டாம் பிளெண்டல் 47 ரன்னும், டேரில் மிட்செல் 42 ரன்னும் எடுத்தனர்.

    மூன்றாம் நாள் முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 440 ரன்கள் எடுத்துள்ளது.

    பாகிஸ்தான் சார்பில் அப்ரார் அகமது 3 விக்கெட்டும், நவ்மான் அலி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • 8வது விக்கெட்டுக்கு அலெக்ஸ் கேரியும், கேமரூனும் 100 ரன் சேர்த்தனர்.
    • அலெக்ஸ் கேரி 111 ரன்னில் அவுட் ஆனார். கேமரூன் கிரீன் 51 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

    ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 189 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா  நேற்றைய 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 386 ரன் குவித்து இருந்தது.

    டேவிட் வார்னர் தனது 100வது டெஸ்டில் இரட்டை சதம் அடித்து முத்திரை பதித்தார். அவர் 200 ரன்னில் காயத்தால் வெளியேறினார். ஸ்டீவ் சுமித் 85 ரன் எடுத்தார். டிரெவிஸ் ஹெட் 48 ரன்னும், அலெக்ஸ் கேரி 9 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். 

    இன்று 3வது நாள் ஆட்டம் நடந்தது. ஹெட் 7 பவுண்டரி , 1 சிக்சருடன் அரைசதம் அடித்தார். அவர் 51 ரன் எடுத்து இருந்தபோது ஆட்டம் இழந்தார்.

    6வது வீரராக களம் இறங்கிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி சிறப்பாக ஆடி சதம் அடித்தார். அவர் 133 பந்தில் 13 பவுண்டரியுடன் 100 ரன்னை தொட்டார். 14வது டெஸ்டில் விளையாடும் அலெக்ஸ் கேரிக்கு இது முதல் சதமாகும்.

    இதற்கு முன்பு 93 ரன் எடுத்ததே அதிகபட்சமாகும். 8வது விக்கெட்டுக்கு அலெக்ஸ் கேரியும், கேமரூனும் 100 ரன் சேர்த்தனர். ஆஸ்திரேலியா தொடர்ந்து சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தது.

    ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்புக்கு 575 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. இது தென்ஆப்பிரிக்காவின் ஸ்கோரை விட 386 ரன் கூடுதலாகும். அலெக்ஸ் கேரி 111 ரன்னில் அவுட் ஆனார். கேமரூன் கிரீன் 51 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

    • ஒருநாள் போட்டிகளுக்கு இந்திய அணி கேப்டனாக ரோகித் சர்மா தேர்வு.
    • முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் இடம் பெற்றனர்.

    இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. அந்த அணியுடன் டி20 போட்டிகளில் விளையாடும் இந்திய அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும், துணை கேப்டனாக சூர்யா குமார் யாதவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணிக்கு கேப்டனாக ரோகித் சர்மாவும், துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒருநாள் தொடரில் இந்திய அணி வேகப்பந்து பிரிவில் முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் இடம் பெற்றனர். 


    இரு அணிகளுக்கும் இடையே முதல் ஒருநாள் போட்டி கவுகாத்தியில் ஜனவரி 10ந் தேதி நடைபெறுகிறது. கொல்கத்தாவில் ஜனவரி 12ந் தேதி 2வது ஒருநாள் போட்டியும், திருவனந்தபுரத்தில் ஜனவரி 15ந் தேதி 3வது ஒருநாள் போட்டியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணி விபரம் வருமாறு: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (வி.கீப்பர்), இஷான் கிஷன் (வி.கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்.), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப். யாதவ், அக்சர் படேல், முகமது. ஷமி, முகமது. சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்.

    ×