என் மலர்
விளையாட்டு
- பூரி கடற்கரையில் பார்வையாளர்களை கவரும் வகையில் மணல் சிற்பம் வடிவமைப்பு.
- பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், இதை உருவாக்கி உள்ளார்.
பூரி:
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப்பண்ட், நேற்று காலை டெல்லி புறநகர் பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்தார். டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ரிஷப் பண்ட் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரிஷப் பண்ட் விரைவாக குணமடைய வாழ்த்து தெரிவித்து ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் மணல் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது. பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், இதை உருவாக்கி உள்ளார்.
கிரிக்கெட் பேட்டில் ரிஷப் பண்ட் உருவம் மணலால் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் விரைவில் குணமடையுங்கள் ரிஷப் பண்ட் என அதில் எழுதப்பட்டுள்ளது. இந்த மணல் சிற்பத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பட்நாயக் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
- பாகிஸ்தான் 2வது இன்னிங்சில் 311 ரன்னுக்கு டிக்ளேர் செய்தது.
- நியூசிலாந்து 2வது இன்னிங்சில் 61 ரன் எடுத்தபோது ஆட்டம் முடிவுக்கு வந்தது.
கராச்சி:
பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கராச்சியில் நடந்தது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 438 ரன் எடுத்தது. அடுத்து ஆடிய நியூசிலாந்து 9 விக்கெட்டுக்கு 612 ரன் குவித்து டிக்ளேர் செய்தது.
174 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய பாகிஸ்தான் அணி நேற்றைய 4-ம் நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 77 ரன் எடுத்திருந்தது.
இந்நிலையில், இன்று 5-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. பாகிஸ்தான் அணியின் நௌமன் அலி, பாபர் அசாம் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் இமாம் உல் ஹக் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவருக்கு சர்ப்ராஸ் கான் ஒத்துழைப்பு கொடுத்தார். சர்ப்ராஸ் கான் 53 ரன்னிலும், ஆகா சல்மான் 6 ரன்னிலும் வெளியேறினர். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இமாம் உல் ஹக் 96 ரன்னில் அவுட்டானார். அப்போது 7 விக்கெட் இழப்புக்கு பாகிஸ்தான் 206 ரன்கள் எடுத்திருந்தது.
அப்போது 8வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சவுத் ஷகீல், வாசிம் ஜுனியர் பொறுப்புடன் ஆடினர். இந்த ஜோடி 71 ரன்களை எடுத்தபோது பிரிந்தது. வாசிம் ஜுனியர் 43 ரன்னில் அவுட்டனார்.
இறுதியில், பாகிஸ்தான் 8 விக்கெட்டுக்கு 311 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. ஷகீல் 55 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து, 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது. அடித்து ஆடி வெற்றி பெற வேண்டும் என அந்த அணி வீரர்கள் விளையாடினர்.
இறுதியில், நியூசிலாந்து 7.3 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 61 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டம் முடித்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது. பிரேஸ்வெல் 3 ரன்னில் அவுட்டானார். டாம் லாதம் 35 ரன்னும், கான்வே 18 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதனால் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. ஆட்ட நாயகனாக கேன் வில்லியம்சன் அறிவிக்கப்பட்டார். 2-வது டெஸ்ட் போட்டி ஜனவரி 2-ம் தேதி தொடங்குகிறது.
- சாஹீன் ஷா அஃப்ரிடி, பண்ட் உனக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன், விரைவில் மீண்டு வா எனக்குறிப்பிட்டுள்ளார்.
- முகமது ஹஃபீஸும் பண்ட்-க்காக பிரார்த்தனை செய்கிறேன் எனக்கூறினார்.
ரூர்கி:
உத்தர்காண்ட் சென்றிருந்த ரிஷப் பண்ட் சாலை மார்க்கமாக டெல்லி நோக்கி புறப்பட்டுள்ளார். அவர் சென்ற கார் ரூர்கி என்ற பகுதியை அடைந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. சாலையின் தடுப்பில் மோதிய அந்த கார், சுழன்றுக்கொண்டே சென்று இறுதியில் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் சிக்கிய ரிஷப் பண்ட் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் ரிஷப் பண்ட்-க்கு கார் விபத்து என அறிந்தவுடன் பாகிஸ்தான் நாட்டின் கிரிக்கெட் வீரர்கள் அவர் குணமடைய வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார். பண்ட் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாகிஸ்தானின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் சாஹீன் ஷா அஃப்ரிடி, பண்ட் உனக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன், விரைவில் மீண்டு வா எனக்குறிப்பிட்டுள்ளார்.
இதே ஆல்ரவுண்டர் சதாப் கானும், ரிஷப் பண்ட் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிஃப் மாலிக், " பண்ட்-ன் விபத்து குறித்து தற்போது தான் தெரியவந்தது. சீக்கிரமாக எழுந்து வாருங்கள் சகோதரரே, உங்களுக்காக நிறைய பிரார்த்தனைகளை செய்யப்போகிறேன் எனக்கூறியுள்ளார்.
முகமது ஹஃபீஸும் பண்ட்-க்காக பிரார்த்தனை செய்கிறேன் எனக்கூறினார்.
இதே போல முன்னாள் வீரர் ஹசன் அலி, " ரிஷப் பண்ட்-க்கு எந்தவித பெரிய பாதிப்புகள் இருக்காது என நம்புகிறேன். நீங்கள் விரைந்து குணமடைய வாழ்த்துகிறேன். உங்களுடன் கடவுள் துணையாக நின்று சீக்கிரமாக குணப்படுத்துவார். களத்தில் மீண்டும் வாருங்கள், உங்களின் அதிரடியை காண வேண்டும் எனக்குறிப்பிட்டிருக்கிறார்.
இந்திய வீரருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பிரார்த்தனை செய்வது கிரிக்கெட் ரசிகர்களிடையே நெகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- நீங்கள் சரியாக ஆடவில்லை என்றால் வேறு ஒருவர் வரத்தான் செய்வார்.
- கே.எல்.ராகுலுக்கு மட்டுமல்ல, விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கும் இதே விதிமுறைதான்.
மும்பை:
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே 3 டி20 போட்டிகள் மட்டும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் மோதவுள்ளன.
இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஹர்திக் பாண்ட்யாவின் தலைமையில் டி20 அணி தனியாகவும், ரோகித் சர்மா தலைமையில் 50 ஓவர் கிரிக்கெட்டிற்கான ஒரு அணியும் உருவாக்கப்பட்டுள்ளன. உலகக்கோப்பையை மனதில் வைத்து இந்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த விஷயம் கே.எல்.ராகுல் மீது நடவடிக்கை எடுத்திருப்பது தான். தொடர்ச்சியாக சொதப்பி வரும் கே.எல்.ராகுல் சமீபத்தில் நடந்த வங்கதேச டெஸ்ட் தொடரிலும் 22, 23, 10, 2 என மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் அவர் இந்தியாவின் டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுமட்டுமல்லாமல் கே.எல்.ராகுலிடம் இருந்த துணைக்கேப்டன் பதவியும் பறிக்கப்பட்டு, ஹர்திக்கிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கே.எல்.ராகுலுடன் லக்னோ அணியில் பணிபுரியும் கவுதம் கம்பீர் அறிவுரை கூறியுள்ளார்.
நம்மால் கட்டுப்படுத்தக்கூடிய விஷயத்தை மட்டுமே கட்டுப்படுத்த முடியும். தேர்வுக்குழுவை கட்டுப்படுத்த முடியாது. அடுத்த தொடரில் என்ன நடக்கும் என்பதை முடிவு செய்ய முடியாது. எனவே இந்த முறை 3 ஒருநாள் போட்டிகளில் ஆடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனை சரியாக பயன்படுத்தி விளையாட வேண்டும்.
நம்மால் மாற்ற முடியாத விஷயத்தை நினைத்து நம்மை நாமே அழுத்தத்தில் போட்டுக்கொள்ள கூடாது. நீங்கள் சரியாக ஆடவில்லை என்றால் வேறு ஒருவர் வரத்தான் செய்வார். கே.எல்.ராகுலுக்கு மட்டுமல்ல, விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கும் இதே விதிமுறைதான். அவர்கள் குறித்தும் நீங்கள் கேள்வி எழுப்பலாம். யாருமே இங்கு நிரந்தரமானவர்கள் கிடையாது. சிறப்பாக விளையாடி இடத்தை தக்கவையுங்கள்.
இவ்வாறு கம்பீர் கூறியுள்ளார்.
- இலங்கை அணிக்கு எதிரான தொடரில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
- 5-வது அல்லது 6-வது இடத்தில் வாய்ப்பு கிடைத்தால் நன்கு அதிரடி ஷாட்களுடன் கலக்க வேண்டும்.
மும்பை:
இலங்கை அணியுடனான தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு பெற்றுள்ள சஞ்சு சாம்சன், தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றால் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் செய்துவிடக்கூடாது என முன்னாள் வீரர் குமார் சங்ககாரா கூறியுள்ளார்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மோதவுள்ளன. இந்த தொடர் ஜனவரி 3-ம் தேதி தொடங்கி ஜனவரி 15-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த தொடர்களுக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் ஹர்திக் பாண்ட்யா தலைமையில் டி20 தொடருக்கு ஒரு அணியும், ரோகித் சர்மா தலைமையில் 50 ஓவர் கிரிக்கெட் தொடருக்கு ஒரு அணியும் பிரிக்கப்பட்டிருந்தன.
இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது தான். கடைசியாக கடந்த நியூசிலாந்துடனான 50 ஓவர் கிரிக்கெட் தொடரில் வாய்ப்பு பெற்ற சாம்சன், அதன்பின் வங்கதேச தொடரில் தற்போதும் இலங்கையுடனான டி20 தொடருக்கு மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சஞ்சு சாம்சனுக்கு முன்னாள் வீரர் குமார் சங்ககாரா முக்கிய அறிவுரையை கொடுத்துள்ளார். இவர்கள் இருவரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஒன்றாக பணியாற்றியுள்ளனர்.
சஞ்சு குறித்து சங்ககாரா கூறியதாவது:-
சஞ்சு சாம்சன் தனது பணி என்னவென்பதை முதலில் அறிய வேண்டும். அதுகுறித்து நன்கு தெளிவு பெற்ற பின்னர் தான் எப்படிபட்ட அனுகுமுறையை வெளிப்படுத்தப்போகிறோம் என முடிவு செய்ய வேண்டும். டாப் ஆர்டரில் வாய்ப்பு கிடைத்தால் அதற்கேற்றார் போல நிதானம் வேண்டும், ஒருவேளை 5வது அல்லது 6வது இடத்தில் வாய்ப்பு கிடைத்தால் நன்கு அதிரடி ஷாட்களுடன் கலக்க வேண்டும்.
எனவே குழப்பிக்கொள்ளாமல் தெளிவாக விளையாட வேண்டும். இதனையெல்லாம் விட ஒரே ஒரு விஷயத்தை சஞ்சு சாம்சன் செய்யவே கூடாது. சஞ்சு சாம்சனுக்கு நீண்ட நாட்களுக்கு ஒருமுறை வாய்ப்பு கிடைக்கலாம். ஆனால் இதுதான் தனது கடைசி வாய்ப்பு, இதில் நிரூபித்தே தீர வேண்டும் என்ற எண்ணத்துடன் மட்டும் இருந்துவிடக்கூடாது. அவர் இளம் வீரர், நிறைய திறமைகள் உள்ளே உள்ளன. எனவே நிதானமாக ஒவ்வொன்றாக மெதுவாக அவற்றினை கொண்டு வர வேண்டும். அவசரப்பட்டு இழந்துவிடக்கூடாது என சங்ககாரா கூறியுள்ளார்.
- ஏற்கனவே 2019-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக ரஷித் கான் இருந்திருக்கிறார்.
- ரஷித் கான் கேப்டன்சியில் ஆடிய 7 டி20 போட்டிகளில் 4 வெற்றிகளை ஆப்கானிஸ்தான் அணி பெற்றது.
டி20 உலக கோப்பையில் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட ஆப்கானிஸ்தான் அணி தொடர் தோல்விகளை தழுவி, தொடரை விட்டு வெளியேறியது. ஆப்கானிஸ்தான் அணி எதிர்பார்த்த அளவிற்கு ஆடவில்லை. டி20 உலக கோப்பை தோல்வி எதிரொலியாக அந்த அணியின் கேப்டன்சியிலிருந்து விலகினார் முகமது நபி.
இதையடுத்து ஆப்கானிஸ்தான் டி20 அணியின் புதிய கேப்டனாக ரஷித் கான் நியமிக்கப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் அணியின் மிகச்சிறந்த ஸ்பின் ஆல்ரவுண்டரும் மேட்ச் வின்னருமான ரஷித் கான், சர்வதேச கிரிக்கெட்டில் 5 டெஸ்ட், 86 ஒருநாள் மற்றும் 74 டி20 போட்டிகளில் ஆடிய சிறந்த அனுபவம் கொண்டவர்.
பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்துவகையிலும் சிறப்பான பங்களிப்பை செய்து ஆப்கானிஸ்தான் அணியின் மேட்ச் வின்னராக ஜொலித்துவரும் ரஷித் கான், ஏற்கனவே 2019-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்திருக்கிறார்.
2019-ல் 7 டி20, 7 ஒருநாள் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்து வழிநடத்தியிருக்கிறார். ரஷித் கான் கேப்டன்சியில் ஆடிய 7 டி20 போட்டிகளில் 4 வெற்றிகளை ஆப்கானிஸ்தான் அணி பெற்றது. இந்நிலையில், இப்போது மீண்டும் ஆப்கானிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
வெறும் 24 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த அனுபவத்தை பெற்றுள்ள ரஷித் கான் தான் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டின் எதிர்காலம். ஒரு சிறந்த ஆல்ரவுண்டர், அணியை முன்னின்று வழிநடத்த சரியான வீரர் ஆவார்.
- ரிஷப் பண்டுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தலை காயங்களுக்கு கட்டு போடப்பட்டுள்ளது.
- ரிஷப்பண்ட், கார் விபத்தில் சிக்கியதை அறிந்ததும் இந்திய வீரர்கள் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப்பண்ட் இன்று காலை டெல்லியில் இருந்து சொகுசு காரில் உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டி சென்றார்.
டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் மங்க்ரூர் பகுதி அருகே திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலை தடுப்பில் மோதியது.
இதில் சாலை தடுப்புகளை உடைத்து கொண்டு கார் சில அடி தூரம் சென்று நின்றது. இந்த விபத்தில் ரிஷப்பண்ட் படுகாயம் அடைந்தார். அவரது தலை, முதுகு, கால் ஆகியவற்றில் காயம் ஏற்பட்டது.
சாலை தடுப்பில் மோதிய வேகத்தில் காரில் திடீரென தீப்பிடித்தது. உடனே ரிஷப் பண்ட் காரில் இருந்து வெளியேற முயற்சித்தார். கார் கண்ணாடியை உடைத்து அவர் வெளியே வந்தார். காரில் தீப்பிடித்ததால் முற்றிலும் எரிந்து நாசமானது. காரில் இருந்து ரிஷப்பண்ட் உடனே வெளியேறியதால் காயத்துடன் தப்பினார்.
விபத்து குறித்த தகவலறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். ரிஷப் பண்டை மீட்டு அப்பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் டேராடூனில் உள்ள மேக்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ரிஷப் பண்டுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தலை காயங்களுக்கு கட்டு போடப்பட்டுள்ளது.
அவரது உடல்நிலை சீராக உள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. அசோக் குமார் கூறும்போது, இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் சென்ற கார் இன்று அதிகாலை 5.30 மணியளவில் விபத்துக்குள்ளானது.
ரூர்க்கி அருகே முகமது பூர் ஜாட் என்ற இடத்தில் விபத்து நடந்துள்ளது. கார் சாலை தடுப்பில் மோதி தீப்பிடித்தது. விபத்து தொடர்பாக ரிஷப்பண்ட் போலீசாரிடம் கூறும்போது, 'தான் சிறிது தூக்கக் கலக்கத்தில் இருந்ததாக தெரிவித்துள்ளார்.
காயம் அடைந்து ரிஷப்பண்ட் டேராடூனில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றார்.
சமீபத்தில் இலங்கைக்கு எதிரான 20 ஓவர போட்டி தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் அவர் இடம்பெறவில்லை. பிப்ரவரியில் நடக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கு முன்னதாக தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு ரிஷப்பண்ட் செல்ல இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரிஷப்பண்ட், கார் விபத்தில் சிக்கியதை அறிந்ததும் இந்திய வீரர்கள் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். ரிஷப்பண்ட் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளனர்.
- 2-வது இன்னிங்சை விளையாடிய பாகிஸ்தான் அணி நேற்றைய 4-ம் நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 77 ரன் எடுத்திருந்தது.
- பாகிஸ்தானின் எஞ்சிய 6 விக்கெட்டுகளை கைப்பற்ற நியூசிலாந்து முயற்சித்து வருகிறது.
கராச்சி:
பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கராச்சியில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 438 ரன் எடுத்தது. பின்னர் விளையாடிய நியூசிலாந்து 9 விக்கெட்டுக்கு 612 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. 174 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய பாகிஸ்தான் அணி நேற்றைய 4-ம் நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 77 ரன் எடுத்திருந்தது.
கைவசம் 8 விக்கெட் உள்ள நிலையில் இன்று 5-வது நாள் ஆட்டத்தை தொடங்கியது பாகிஸ்தான். அந்த அணி டிரா செய்யும் நோக்கில் ஆடியது. நௌமன் அலி மற்றும் பாபர் அசாம் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். பாகிஸ்தானின் எஞ்சிய 6 விக்கெட்டுகளை கைப்பற்ற நியூசிலாந்து முயற்சித்து வருகிறது. இதனால் பரபரப்பான கட்டத்தில் முதல் டெஸ்ட் உள்ளது.
- மெல்போர்ன் கிரிக்கெட் கிளப்பும் (எம்.சி.சி.), விக்டோரியா மாகாண அரசும் மெல்போர்ன் ஸ்டேடியத்தில் இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியை நடத்த ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தது.
- எதிர் காலத்தில் அல்லது எந்த நாட்டிலும் இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்காக திட்டங்கள் எதுவும் இல்லை.
மும்பை:
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையே 2007-ம் ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் போட்டி நடைபெறவில்லை. இதற்கிடையே ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் கிளப்பும் (எம்.சி.சி.), விக்டோரியா மாகாண அரசும் மெல்போர்ன் ஸ்டேடியத்தில் இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியை நடத்த ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தது.
இந்த நிலையில் இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியை நடத்தும் திட்டமில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் கூறும் போது, எதிர் காலத்தில் அல்லது எந்த நாட்டிலும் இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்காக திட்டங்கள் எதுவும் இல்லை. யாருக்காவது அத்தகைய விருப்பம் இருந்தால் அதை அவர்களே வைத்து கொள்ளுங்கள் என்று தெரிவித்தனர்.
- இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் பண்ட் இடம்பெறவில்லை.
- பண்ட் ஆபத்தில் இருந்து வெளியேறிவிட்டார் என விவிஎஸ் லஷ்மண் கூறியுள்ளார்.
இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் உத்தரகண்ட் மாநிலம் ரூர்க் பகுதி அருகே கார் விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் (என்சிஏ) தலைவர் விவிஎஸ் லக்ஷ்மண் ட்விட்டரில் இதுகுறித்து கூறுகையில், பண்ட் ஆபத்தில் இருந்து வெளியேறிவிட்டார். ஆனால் அவரது காயம் எந்த அளவிற்கு உள்ளது என்பது இன்னும் தெரியவில்லை.
இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலையில், பண்ட் டெல்லிக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

25 வயதான பண்ட் ஜனவரி 3 ஆம் தேதி தொடங்கும் இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- டேபிள் டென்னிசில் தமிழக வீராங்கனைகள் ஆர்.லத்திகா, ஆர்.உத்பிரக்ஷா ஆகியோர் தங்கப்பதக்கம் வென்று அசத்தினர்.
- சென்னை பெரம்பூரில் உள்ள கே.ஆர்.எம். பள்ளியில் படித்து வரும் மாணவிகள் லத்திகா, உத்பிரக்ஷா இருவரும் மாநில பயிற்சியாளர் ராஜேஸ்குமாரிடம் பயிற்சி எடுத்து வருகிறார்கள்.
சென்னை:
3-வது சர்வதேச பள்ளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் அந்தமான் தலைநகர் போர்ட்பிளேரில் நடந்து வருகிறது. டேபிள் டென்னிஸ், சிலம்பம், கைப்பந்து, யோகா, கூடைப்பந்து, தடகளம், கபடி உள்ளிட்ட போட்டிகள் நடக்கின்றன.
இதில் டேபிள் டென்னிசில் தமிழக வீராங்கனைகள் ஆர்.லத்திகா, ஆர்.உத்பிரக்ஷா ஆகியோர் தங்கப்பதக்கம் வென்று அசத்தினர்.
17 வயதுக்குட்பட்டோர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் லத்திகா 3-0 என்ற செட் கணக்கில் இலங்கை வீராங்கனையையும், 8 வயதுக்குட்பட்டோர் பிரிவில் உத்பிரக்ஷா 3-1 என்ற செட் கணக்கில் நேபாளம் வீராங்கனையையும் தோற்கடித்தனர்.
சென்னை பெரம்பூரில் உள்ள கே.ஆர்.எம். பள்ளியில் படித்து வரும் மாணவிகள் லத்திகா, உத்பிரக்ஷா இருவரும் மாநில பயிற்சியாளர் ராஜேஸ்குமாரிடம் பயிற்சி எடுத்து வருகிறார்கள்.
- புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
- இதய செயல் இழப்பால் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சாவ் பொல்ஹொ:
பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து ஜாம்பவான் பீலே (வயது 82) புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. பின்னர் கடந்த ஆண்டு செப்டம்பரில் இருந்து அவருக்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட பீலே, பிரேசிலின் சாவ் பொல்ஹொ பகுதியில் உள்ள மருத்துவமனையில் கடந்த மாதம் இறுதியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தொடந்து சிகிச்சை அளித்து வந்தனர். நுரையீரல், இதய செயல் இழப்பு சிகிச்சைகளுக்காக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பீலேவை மருத்துவர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி பீலே இன்று உயிரிழந்ததாக அவரது மகள் தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். பீலே மறைவுக்கு உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்கள், இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். பிரேசில் நாட்டிற்காக மூன்று முறை உலகக் கோப்பையை வென்று தந்த பீலே, அனைத்து காலத்திற்குமான சிறந்த கால்பந்து வீரராக கருதப்படுகிறார்.






