என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ரிஷப் பண்டின் உடல் நிலையில் கணிசமான முன்னேற்றம் உள்ளது.
    • லண்டனில் இருந்த ரிஷப் பண்டின் தாய் சரோஜ், சகோதரி சாஷி ஆகியோர் நேற்று காலை இந்தியா வந்தனர்.

    இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கி சென்ற போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி தீப்பிடித்தது. இதில் ரிஷப் பண்ட் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    தலை, முதுகு, கால் ஆகியவற்றில் காயம் அடைந்து அவர் டேராடூனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    நெற்றி காயத்துக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது. ரிஷப் பண்டின் உடல் நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகிறார்கள். அவரது உடல் நிலை சீராக உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் ரிஷப் பண்ட் உடல் நிலை முன்னேற்றம் அடைந்து வருகிறது என்று உறவினர்கள், குடும்ப நண்பர்கள் தெரிவித்தனர்.

    ரிஷப் பண்டின் உடல் நிலையில் கணிசமான முன்னேற்றம் உள்ளது. அவரை வேறு மருத்துவமனைக்கு மாற்ற வேண்டுமா என்பதை மருத்துவர்கள் இன்னும் முடிவு செய்யவில்லை.

    லண்டனில் இருந்த ரிஷப் பண்டின் தாய் சரோஜ், சகோதரி சாஷி ஆகியோர் நேற்று காலை இந்தியா வந்தனர். அவர்கள் ரிஷப் பண்டுடன் இருந்து அவரை கவனித்து வருகிறார்கள் என்றனர்.

    ரிஷப் பண்ட்டை டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்க இயக்குனர் ஷியாம் சர்மா சந்தித்தார். பின்னர் அவர் கூறும் போது, "ரிஷப் பண்ட் இங்குள்ள மருத்துவர்களால் நன்கு கவனிக்கப்பட்டு வருகிறார். அவர்களுடன் இந்திய கிரிக்கெட் வாரியமும் தொடர்பில் உள்ளது. தற்போது ரிஷப் பண்ட் டேராடூனில் உள்ள மருத்துவமனையில் மட்டுமே வைக்கப்படுவார்.

    ரிஷப் பண்ட் காரில் சென்றபோது சாலையில் ஒரு பள்ளத்தை தவிர்க்க முயன்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதாக தெரிவிதார்" என்றார்.

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட் பங்கேற்க மாட்டார்.
    • இஷான் கிஷன், கே.எஸ்.பரத், உபேந்திர யாதவ் இடையே கடும் போட்டி.

    வரும் பிப்ரவரி மாதம் இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா- ஆஸ்திரேலியா இடையே முதலாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 9-ந்தேதி நாக்பூரில் தொடங்குகிறது. இந்நிலையில் சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இந்த தொடரில் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மேல் சிகிச்சைகாக டேராடூனில் உள்ள மருத்துவமனையில் இருந்து டெல்லி அல்லது மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு விரைவில் பண்ட் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரிஷப் பண்டுக்கு நீண்ட கால சிகிச்சை தேவைப்படுவதாக அவரது பயிற்சியாளர் தேவேந்திர சர்மா கூறியுள்ளார். காயத்தில் இருந்து பண்ட் முழுமையாக குணமடைய குறைந்தது 3 முதல் 6 மாதங்கள் வரை ஆகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதனை அடுத்து ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கு புதிய விக்கெட் கீப்பரை தேர்வு செய்வது குறித்து தேர்வு கமிட்டி ஆலோசித்து வருகிறது. இரண்டு புதிய விக்கெட் கீப்பர்கள் அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என கூறப்படுகிறது. ரிஷப் இடத்திற்கு இஷான் கிஷன், கே.எஸ்.பரத், இந்தியா ஏ அணியை சேர்ந்த உபேந்திர யாதவ் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இஷான் கிஷனை கே.எஸ்.பரத்துக்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

    • இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இந்திய கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்படுகிறார்.
    • ஒருநாள் தொடருக்கு ரோகித் சர்மா கேப்டன், ஹர்திக் பாண்ட்யா துணை கேப்டனாக செயல்படுகின்றனர்.

    புதுடெல்லி:

    இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்படுவார் என பிசிசிஐ அறிவித்தது.

    ஜனவரி 3-ம் தேதி தொடங்கும் இலங்கை தொடருக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாகவும், சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனாகவும் செயல்படுவார்கள் எனவும் அறிவிப்பு வெளியானது. ஒருநாள் தொடருக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்ட்யா துணை கேப்டனாகவும் செயல்படுகின்றனர்.

    இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை பாண்ட்யா சகோதரர்கள் இன்று நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர்.

    இதுதொடர்பாக ஹர்திக் பாண்ட்யா வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், உங்களுடன் விலைமதிப்பற்ற நேரத்தைச் செலவிட எங்களை அழைத்ததற்கு நன்றி. உங்களை சந்தித்தது பெருமையாகவும், பாக்கியமாகவும் இருந்தது என குறிப்பிட்டுள்ளார்.

    • பயிற்சியாளர்கள் இந்திய அணியில் எதற்கு உள்ளார்கள்? தேர்வுக்குழுவினர் எதற்கு உள்ளார்கள்?
    • குறிப்பாக பிரித்வி ஷா போன்றவர்களை சரியான பாதையில் கொண்டு செல்ல முயற்சிக்க வேண்டும்.

    இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. அதில் முதலாவதாக நடைபெறும் டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள தலைமையில் நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த தொடரில் சமீப காலங்களில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வாய்ப்புக்காக காத்திருக்கும் நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் டெல்லியைச் சேர்ந்த இளம் வீரர் பிரிதிவி ஷா இத்தொடரில் மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளது ஒரு சிலருக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. பயிற்சியாளர் என்ன பண்றிங்க: 2018 அண்டர்-19 உலகக் கோப்பை வென்ற இந்திய கேப்டனாக சாதனை படைத்து சர்வதேச அரங்கில் அறிமுகமான அவர் அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்து அசத்தினார். அதனால் சச்சின், சேவாக், லாரா ஆகியோர் கலந்த கலவை என்று அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டினார்.

    அவருக்கு ஏன் வாய்ப்பு வழங்கவில்லை என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் தேர்வுக்குழுவிடம் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு:-

    பயிற்சியாளர்கள் இந்திய அணியில் எதற்கு உள்ளார்கள்? தேர்வுக்குழுவினர் எதற்கு உள்ளார்கள்? அவர்கள் அணியை தேர்ந்தெடுப்பதற்கு மட்டுமல்ல தரமான வீரர்களை கண்டறிந்து அவர்களை போட்டிக்கு தயார்படுத்துவதற்கும் உள்ளனர். தேர்வாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அணி நிர்வாகத்தினர் இவர்களைப் போன்ற இளம் வீரர்களை மீண்டும் அணிக்குள் கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.

    குறிப்பாக பிரித்வி ஷா போன்றவர்களை சரியான பாதையில் கொண்டு செல்ல முயற்சிக்க வேண்டும். அது அணி நிர்வாகத்தின் முக்கிய வேலைகளில் ஒன்றாகும். அணியினரை தயார்படுத்தி பயிற்சிக்கு உதவுவது மட்டும் அவர்களது வேலையல்ல. அந்த வகையில் ராகுல் டிராவிட் அல்லது தேசிய தேர்வுக்குழுவினர் அவரிடம் (பிரிதிவி) பேச்சுவார்த்தை நடத்தி தேர்வு பற்றி தெளிவுபடுத்தியிருக்க வேண்டும்.

    சொல்லப்போனால் அவர் இந்திய அணியை சுற்றியிருக்க வேண்டும். எப்போதும் சரியான பாதையில் இல்லாதவர்களை நீங்கள் அணியை சுற்றியிருக்க வைத்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அவர்களை கண்டுகொள்ளாமல் விட்டால் பின்னர் நீங்கள் அவரைப் போன்ற தரமான வீரரை தேடி அனைத்து இடங்களிலும் அலைய நேரிடும்.

    நாட்டுக்காக விளையாட நீங்கள் போதுமான அர்ப்பணிப்பு ஆர்வத்துடன் அனைத்து அளவுருக்களையும் சரியாக செய்ய வேண்டும். அது உடற்பயிற்சியாக இருந்தாலும் சரி ஒழுக்கமாக இருந்தாலும் சரி. அதை பிரிதிவி ஷா செய்வதற்கு பயிற்சியாளர்கள் தான் தூண்ட வேண்டும். மேலும் அவரைப் போன்ற ஒரு இளம் வீரருக்கு குறைந்தபட்சம் ஓரிரு வாய்ப்புகள் கொடுக்க வேண்டும். ஒருவேளை அதிலும் அவர் எதுவுமே செய்யவில்லை என்றால் பின்னர் அவர் நாட்டிற்காக ஆர்வத்துடன் விளையாடுவதற்கு தயாராக இல்லை என்று முடிவெடுக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இளம் வீரர்களை ஒருங்கிணைத்து இலங்கை அணிக்கு கடுமையான நெருக்கடியை அவர் கொடுப்பார் என்று எதிர்பார்க்கிறேன்.
    • நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற வலுவான அணிகள் கேப்டன்ஷிப் மாற்றத்தின்போது சிக்கல்களை சந்தித்துள்ளன.

    இந்தியா- இலங்கை அணிகள் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் மோதவுள்ளது. இரு அணிகளும் ஜனவரி 3 முதல் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும். இந்த தொடருக்கான டி20 கேப்டனாக நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை பிசிசிஐ நியமித்துள்ளது.

    இந்த நிலையில் ஹர்திக் குறித்து இலங்கையின் முன்னாள் மூத்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குமார் சங்ககாரா பெரிய கருத்தை தெரிவித்துள்ளார்.

    கேப்டன்ஷிப்பை மாற்றுவது, புதிய கேப்டனின் கீழ் விளையாடுவது என்பது எப்போதுமே சவாலாகத்தான் இருக்கும். ஆனால், ஹர்திக் பாண்ட்யா மிக எளிதாக தனது புதிய கேப்டன் பொறுப்பை கையாள்வார் என்று கருதுகிறேன். கேப்டன்ஷிப் மாற்றம் என்பது கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாதது. அதற்கு அனைத்து வீரர்களின் ஒத்துழைப்பும் அவசியம்.

    நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற வலுவான அணிகள் கேப்டன்ஷிப் மாற்றத்தின்போது சிக்கல்களை சந்தித்துள்ளன. ஆனால், ஹர்திக் பாண்ட்யாவிடம் கேப்டனுக்கான அனைத்து தகுதிகளும் உள்ளன. இளம் வீரர்களை ஒருங்கிணைத்து இலங்கை அணிக்கு கடுமையான நெருக்கடியை அவர் கொடுப்பார் என்று எதிர்பார்க்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    உலகின் மிகப்பெரிய லீக்கான இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) முதல்முறையாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார்.

    தனது முதல் சீசனில் ஹர்திக் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு கேப்டன் பொறுப்பை ஒப்படைத்தது குஜராத். அணியின் அறிமுகப் போட்டியிலும், கேப்டனான முதல் போட்டியிலும் ஹர்திக் அபாரமாக செயல்பட்டு அணியை ஐபிஎல் சாம்பியனாக்கினார்.

    அதைத் தொடர்ந்து, நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான கேப்டனாகவும் ஹர்திக் தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கும் தொடரை தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்டார்.

    • இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரையும் கைப்பற்றுவோம் என டேவிட் வார்னர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    • இந்தியாவில் நாக்பூர், டெல்லி, தர்மசாலா மைதானங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை.

    பிப்ரவரியில் இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

    தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதல் மற்றும் 2-வது டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியுள்ளது. இதையடுத்து 3-வது டெஸ்ட் போட்டி ஜனவரி 4ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதன்பின்னர் 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது.

    2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் இரட்டை சதம் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். நீண்ட நாட்களாக தடுமாறி வந்த அவர், மீண்டும் ஃபார்மிற்கு வந்திருப்பதால் ஆஸ்திரேலிய அணியின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பிப்ரவரியில் இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

    இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரையும் கைப்பற்றுவோம் என டேவிட் வார்னர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவில் நாக்பூர், டெல்லி, தர்மசாலா மைதானங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை. இந்த மைதானங்களில் நாங்கள் ஏற்கனவே விளையாடி இருக்கிறோம்.

    இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் மிகுந்த சவாலாக இருக்கும். இருப்பினும் இந்த தொடரை நாங்கள் போராடி வெல்வோம். தற்போது பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் ஆஸ்திரேலிய அணி நல்ல ஃபார்மில் உள்ளது. நாதன் லயன் போன்ற உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னர்கள் எங்களிடம் உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் தரவரிசை பட்டியல் இன்று அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இதன்படி 78.57 வெற்றி சதவீதத்துடன் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில் 58.93 வெற்றி சதவீதத்துடன் இந்திய அணி 2ஆம் இடத்தை பிடித்துள்ளது.

    3-ம் இடத்தில் 53.33 சதவீதத்துடன் இலங்கை அணியும், 50 வெற்றி சதவீதத்துடன் தென்னாப்பிரிக்கா 4ஆம் இடத்திலும் உள்ளன.

    இதற்கு அடுத்தடுத்த இடங்களில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேச அணிகள் தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

    முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணி இறுதிப்போட்டியில் பங்கேற்கும். அந்த வகையில் இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் இறுதி போட்டியில் மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • உணர்வின்மையுடன் சில மீடியாக்கள் செயல்படுகின்றன.
    • ஒருவர் அடிப்பட்டு மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருக்கும் வேளையில் அவரது புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைதளத்தில் வெளியிடுவது மிகவும் தவறான விஷயம்.

    இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் நேற்று அதிகாலை நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கி மோசமான காயங்களுடன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று அதிகாலை அவருக்கு நடைபெற்ற இந்த விபத்தினை அடுத்து சமூக வலைதளத்தில் அவர் குறித்த செய்திகளே அதிகளவு பகிரப்பட்டு வருகின்றன. அந்த அளவிற்கு அவருக்கு ஏற்பட்ட இந்த விபத்து குறித்த தகவல் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

    அதோடு ரிஷப் பண்டின் மெடிக்கல் ரிப்போர்ட், போலீஸ் அறிக்கை மற்றும் பிசிசிஐ-யின் தகவல் என பல்வேறு விஷயங்கள் ரிஷப் பண்ட் குறித்து சமூக வலைதளத்தில் அவர் குறித்த செய்திகளே அதிகஅளவு பகிரப்பட்டன. அதேபோன்று அவர் விபத்தினை சந்தித்த அந்த இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் என பல்வேறு விஷயங்கள் நேற்று சமூக வலைதளத்தில் அதிகஅளவு பகிரப்பட்டு இருந்தது. அதோடு ரிஷப பண்ட் விரைவில் குணமடைந்து இந்த இக்கட்டான நிலையில் இருந்து மீண்டு வர வேண்டும் என்று பலரும் தங்களது பிரார்த்தனைகளையும் பகிர்ந்திருந்தனர்.

    இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவு தற்போது அதிகளவு கவனத்தை ஈர்த்துள்ளது.

    இதுகுறித்து அவர் பதிவிட்டு இருந்த அந்த கருத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது :

    ஒருவர் அடிப்பட்டு மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருக்கும் வேளையில் அவரது புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைதளத்தில் வெளியிடுவது மிகவும் தவறான விஷயம். இதுபோன்று சிலர் பகிர்ந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது.

    ஏனெனில் ரிஷப் பண்டின் குடும்பத்தாரோ அல்லது அவர்களின் நெருங்கிய நண்பர்களோ அவரது இந்த நிலை குறித்து வருத்தப்படும் வேளையில் இது போன்ற சில விஷயங்களை பார்த்தால் அவர்கள் மனதளவில் எவ்வளவு காயப்படுவார்கள் என்று யோசிக்க வேண்டும்.

    உணர்வின்மையுடன் சில மீடியாக்கள் செயல்படுகின்றன.

    • அல்-நசர் அணியுடன் ரொனால்டோ, 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை ஒப்பந்தம் செய்துள்ளார்.
    • இதையடுத்து அல்-நசர் அணியின் டி-சர்ட் ரொனால்டோவிடம் வழங்கப்பட்டது.

    லிஸ்பன்:

    பிரபல கால்பந்து நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

    இங்கிலாந்தை சேர்ந்த மான்செஸ்டர் யுனைடெட் அணியில் விளையாடி வந்த ரொனால்டோ அந்த கிளப் அணியில் இருந்து சமீபத்தில் வெளியேறினார். இதையடுத்து அவரை ஒப்பந்தம் செய்ய பல கிளப் அணிகள் போட்டியிட்டன.

    இதில் சவுதி அரேபியாவை சேர்ந்த கிளப் அணியில் ரொனால்டோ இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் சவூதி அரேபியாவை சேர்ந்த கிளப் அணியான அல்-நசர் அணியுடன் ரொனால்டோ ஒப்பந்தம் செய்துள்ளார்.

    இந்த ஒப்பந்தத்தின் படி அவர் ஆண்டுக்கு 200 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் ரூ.1770 கோடி) பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அல்-நசர் அணியுடன் ரொனால்டோ, 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை ஒப்பந்தம் செய்துள்ளார். இதையடுத்து அல்-நசர் அணியின் டி-சர்ட் ரொனால்டோவிடம் வழங்கப்பட்டது. அவரது பெயர் பொறித்த டி-சர்ட்டை அறிமுகப்படுத்தினார்.

    புதிய அணியில் இணைந்தது குறித்து ரொனால்டோ கூறியதாவது:-

    ஐரோப்பிய கால்பந்தில் நான் பெற்ற வெற்றியால் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். ஆசியாவில் எனது அனுபவத்தை பகிர்ந்து கொள்ள இதுவே சரியான தருணம் என்று கருதுகிறேன்.

    எனது புதிய அணியின் வீரர்களுடன் இணைவதை எதிர்நோக்கி இருக்கிறேன். அவர்களுடன் சேர்ந்து வெற்றியை அடைய உதவுவேன் என்றார். அல்-நசர் கிளப் அணி டுவிட்டரில் கூறும் போது, வரலாறு உருவாக்கப்பட்டிருக்கிறது.

    இது எங்கள் கிளப்பை இன்னும் பெரிய வெற்றியை அடைய ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், எங்கள் லீக், தேசம், எதிர்கால சந்ததியினரை ஊக்குவிக்கும் ஒரு கையொப்பமாகும். ரொனால்டோவை வரவேற்கிறோம் என்று தெரிவித்து உள்ளது.

    37 வயதில் ரொனால்டோ விளையாட உள்ள 6-வது அணி அல்-நசர் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அவரை ரசிகர்களாகச் சந்தித்தோம் என கபூர் கூறினார்.
    • கபூருடன் வந்த கேர், கிரிக்கெட் வீரரை மிகவும் சிரிக்க வைத்ததாக கூறினார்.

    படுகாயமடைந்த ரிஷப் பந்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்த பாலிவுட் நடிகர்கள்டேராடூன்:

    இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் நேற்று அதிகாலை டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் தனது சொகுசு கார் சாலையின் நடுவே உள்ள தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது. அதில் அவர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    இந்நிலையில் கார் விபத்தில் காயமடைந்து மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்தை பாலிவுட் நடிகர்கள் அனில் கபூர் மற்றும் அனுபம் கேர் ஆகியோர் சந்தித்தனர்.

    அவர் (பண்ட்) நலமாக இருக்கிறார். அவரை ரசிகர்களாகச் சந்தித்தோம். அவர் விரைவில் குணமடைய பிரார்த்திகிறோம். அவர் மீண்டும் விளையாடுவதைப் பார்ப்போம் என்று மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த பிறகு செய்தியாளர்களிடம் கபூர் கூறினார்.


    கபூருடன் வந்த கேர், கிரிக்கெட் வீரரை மிகவும் சிரிக்க வைத்ததாக கூறினார்.

    மேலும் அவர், மருத்துவமனையில் பந்த், அவருடைய அம்மா மற்றும் உறவினர்களை சந்தித்தோம். பண்ட் நலமாக இருக்கிறார். அவரை மிகவும் சிரிக்க வைத்தோம்," என்று கூறினார்.

    அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்டை பஸ் டிரைவர், கண்டக்டர் உதவி செய்து காப்பாற்றினர்.
    • ரிஷப் பண்டுக்கு உதவிய பஸ் டிரைவர், கண்டக்டர் ஆகியோர் மாநில அரசு சார்பில் கவுரவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பண்ட் நேற்று கார் விபத்தில் சிக்கினார். டெல்லியில் இருந்து உத்தரகாண்டின் ரூர்க்கிக்கு சொகுசு காரில் சென்ற போது, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து கார் சாலை தடுப்பில் வேகமாக மோதி தீப்பிடித்தது.

    கார் கண்ணாடியை உடைத்து ரிஷப் பண்ட் வெளியே குதித்து உயிர் தப்பினார். விபத்தில் அவருக்கு தலை, முதுகு, காலில் பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயம் அடைந்த ரிஷப் பண்ட், டேராடூனில் உள்ள மேக்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    வலது கால் முட்டியில் ஜவ்வு கிழிந்துள்ளது. நெற்றி, மணிக்கட்டு, கணுக்காலில் காயம் ஏற்பட்டு உள்ளது. முகத்தில் உள்ள காயத்தை சரி செய்ய பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது.

    ரிஷப் பண்டின் உடல் நிலை சீராக உள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும் அவருக்கு மூளை மற்றும் முதுகெலும்பில் ஸ்கேன் செய்ததில் எந்த பாதிப்பும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

    இந்த நிலையில் ரிஷப் பண்ட் டேராடூனில் உள்ள ஆஸ்பத்திரியில் இருந்து டெல்லி அல்லது மும்பையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு விரைவில் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ரிஷப் பண்ட்டின் பயிற்சியாளர் தேவேந்திர சர்மா கூறும் போது, ரிஷப் பண்டுக்கு நீண்ட கால சிகிச்சை தேவைப்படுகிறது. முழங்காலில் உள்ள தசை நார் காயத்துக்கு சிகிச்சை தேவைப்படுகிறது.

    அவர் விரைவில் டெல்லி அல்லது மும்பைக்கு அழைத்து செல்லப்படுவார். அங்கு அடுத்த சிகிச்சை முறை முடிவு செய்யப்படும் என்றார்.

    கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்டை பஸ் டிரைவர், கண்டக்டர் உதவி செய்து காப்பாற்றினர். ஹரித்துவாரில் இருந்து பானிபட் நோக்கி சென்ற பஸ்சை சுஷில்குமார் என்பவர் ஓட்டி சென்றார்.அதில் கண்டக்டராக பரம்ஜித் என்பவர் இருந்தார்.

    ரிஷப் பண்ட் சென்ற கார் விபத்தில் சிக்கியதை பார்த்ததும், சுஷில்குமார், பரம்ஜித் இருவரும் பஸ்சை நிறுத்தி விட்டு காரை நோக்கி சென்றனர். அவர் கள் ரிஷப் பண்டை காரில் இருந்து வெளியேற உதவி செய்து மீட்டனர்.

    ரிஷப் பண்டுக்கு உதவிய பஸ் டிரைவர், கண்டக்டர் ஆகியோர் மாநில அரசு சார்பில் கவுரவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களை அரியானா மாநில சாலைத்துறை பாராட்டி உள்ளது.

    • 2019 ஐபிஎல் கிரிக்கெட்டின் போது டெல்லி அணியில் ஷிகர் தவான் மற்றும் ரிஷிப் பண்ட் இடம்பெற்றிருந்தனர்.
    • பேட்டியின் போது எனக்கு ஏதேனும் அறிவுரை நீங்கள் கூற விரும்பினால் கூறுங்கள் என்று ஷிகர் தவானிடம் ரிஷப் பண்ட் கேட்கிறார்.

    டெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட். இவர் நேற்று அதிகாலை டெல்லியில் இருந்து சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டம் ரூர்கீக்கு சொகுசு காரில் சென்றார். காரை ரிஷப் பண்டே ஓட்டி சென்றார்.

    நேற்று அதிகாலை 5.30 மணியளவில் டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் மங்கலார் என்ற பகுதியில் அதிவேகமாக சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே உள்ள தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரின் கண்ணாடியை உடைத்து வெளியே குதித்து ரிஷப் பண்ட் உயிர் தப்பினார். ஆனால், அவரது தலை, முதுகு, காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

    விபத்து ஏற்பட்ட உடன் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. அப்போது, அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் ரிஷப் பண்டை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு தற்போது டேராடூனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வாகனம் ஓட்டுவது தொடர்பாக ரிஷப் பண்ட்டை ஷிகர் தவான் 2019-ம் ஆண்டே எச்சரித்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    2019 ஐபிஎல் கிரிக்கெட்டின் போது டெல்லி அணியில் ஷிகர் தவான் மற்றும் ரிஷிப் பண்ட் இடம்பெற்றிருந்தனர். அப்போது, ஒரு பேட்டியின் போது எனக்கு ஏதேனும் அறிவுரை நீங்கள் கூற விரும்பினால் கூறுங்கள் என்று ஷிகர் தவானிடம் ரிஷப் பண்ட் கேட்கிறார். அதற்கு, நீ வாகனத்தை கவனமாக ஓட்ட வேண்டும்' என்று ஷிகர் தவான் அறிவுரை வழங்கினார். இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு பண்ட் விபத்தில் சிக்கிய நிலையில் இந்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • ஆண்கள் பிரிவில் இந்திய வீரர்கள் ஹரி கிருஷ்ணன், நிஹல் சரின், அதிபன் உள்ளிட்டோர் டாப்-10 இடத்திற்குள் கூட வரவில்லை.
    • நம்பர் ஒன் வீரர் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) 16 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து 6-வது முறையாக மகுடம் சூடினார்.

    அல்மாட்டி:

    உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தானில் உள்ள அல்மாட்டியில் நடந்தது. இதில் பெண்கள் பிரிவில் பங்கேற்ற இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பி கடைசி நாளான நேற்று 8 கேம்களில் 7.5 புள்ளிகளை பெற்று அசத்தினார். 17-வதுமற்றும் கடைசி சுற்று முடிவில் ஹம்பி 12.5 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கத்தை தட்டி சென்றார்.

    இதன் மூலம் உலக பிளிட்ஸ் சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்தார். கஜகஸ்தானின் பிபிசரா பாலபயேவா 13 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். மற்றொரு இந்திய வீராங்கனை ஹரிகா 10.5 புள்ளிகளுடன் 13-வது இடத்தை பெற்றார்.

    இதன் ஆண்கள் பிரிவில் 'நம்பர் ஒன்' வீரர் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) 16 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து 6-வது முறையாக மகுடம் சூடினார். இந்திய வீரர்கள் ஹரி கிருஷ்ணன், நிஹல் சரின், அதிபன் உள்ளிட்டோர் டாப்-10 இடத்திற்குள் கூட வரவில்லை.

    ×