search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    சரிவிலிருந்து மீட்ட ஷகீல், வாசிம் ஜுனியர் - நியூசிலாந்துடனான முதல் டெஸ்டை டிரா செய்தது பாகிஸ்தான்
    X

    பொறுப்புடன் ஆடிய சர்ப்ராஸ் கான், இமாம் உல் ஹக்

    சரிவிலிருந்து மீட்ட ஷகீல், வாசிம் ஜுனியர் - நியூசிலாந்துடனான முதல் டெஸ்டை டிரா செய்தது பாகிஸ்தான்

    • பாகிஸ்தான் 2வது இன்னிங்சில் 311 ரன்னுக்கு டிக்ளேர் செய்தது.
    • நியூசிலாந்து 2வது இன்னிங்சில் 61 ரன் எடுத்தபோது ஆட்டம் முடிவுக்கு வந்தது.

    கராச்சி:

    பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கராச்சியில் நடந்தது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 438 ரன் எடுத்தது. அடுத்து ஆடிய நியூசிலாந்து 9 விக்கெட்டுக்கு 612 ரன் குவித்து டிக்ளேர் செய்தது.

    174 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய பாகிஸ்தான் அணி நேற்றைய 4-ம் நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 77 ரன் எடுத்திருந்தது.

    இந்நிலையில், இன்று 5-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. பாகிஸ்தான் அணியின் நௌமன் அலி, பாபர் அசாம் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

    ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் இமாம் உல் ஹக் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவருக்கு சர்ப்ராஸ் கான் ஒத்துழைப்பு கொடுத்தார். சர்ப்ராஸ் கான் 53 ரன்னிலும், ஆகா சல்மான் 6 ரன்னிலும் வெளியேறினர். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இமாம் உல் ஹக் 96 ரன்னில் அவுட்டானார். அப்போது 7 விக்கெட் இழப்புக்கு பாகிஸ்தான் 206 ரன்கள் எடுத்திருந்தது.

    அப்போது 8வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சவுத் ஷகீல், வாசிம் ஜுனியர் பொறுப்புடன் ஆடினர். இந்த ஜோடி 71 ரன்களை எடுத்தபோது பிரிந்தது. வாசிம் ஜுனியர் 43 ரன்னில் அவுட்டனார்.

    இறுதியில், பாகிஸ்தான் 8 விக்கெட்டுக்கு 311 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. ஷகீல் 55 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து, 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது. அடித்து ஆடி வெற்றி பெற வேண்டும் என அந்த அணி வீரர்கள் விளையாடினர்.

    இறுதியில், நியூசிலாந்து 7.3 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 61 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டம் முடித்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது. பிரேஸ்வெல் 3 ரன்னில் அவுட்டானார். டாம் லாதம் 35 ரன்னும், கான்வே 18 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இதனால் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. ஆட்ட நாயகனாக கேன் வில்லியம்சன் அறிவிக்கப்பட்டார். 2-வது டெஸ்ட் போட்டி ஜனவரி 2-ம் தேதி தொடங்குகிறது.

    Next Story
    ×