என் மலர்
விளையாட்டு
- மகளிர் உலக கோப்பை தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் வென்று ஸ்பெயின் இறுதி போட்டிக்கு முன்னேறியது.
- மகளிர் உலக கோப்பை தொடரின் இறுதி போட்டி ஆகஸ்ட் 20-ம் தேதி நடைபெற இருக்கிறது.
பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற முதல் இரண்டு காலிறுதி ஆட்டங்களில் நெதர்லாந்தை வீழ்த்தி ஸ்பெயின் அணியும், ஜப்பானை வீழ்த்தி சுவீடன் அணியும் அரையிறுதிக்கு முன்னேறின.

முதல் அரையிறுதி போட்டியில் ஸ்பெயின் மற்றும் ஸ்வீடன் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஸ்பெயின் அணி 2-1 என்ற அடிப்படையில் ஸ்வீடனை வீழ்த்தி முதல் முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியது. அந்த வகையில் 2023 மகளிர் கால்பந்து உலக கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.
இந்த போட்டியில் 1-3 என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணி அமோக வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. இதன் மூலம் ஆகஸ்ட் 20-ம் தேதி நடைபெற இருக்கும் இறுதி போட்டியில் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
- இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது.
- இந்த போட்டிகளுக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை 2023 தொடர் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளன. உலக கோப்பை தொடருக்காக ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
அந்த வகையில் ஒவ்வொரு அணிகளும், தொடர்ந்து ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை மற்ற அணிகளுடன் விளையாடி வருகின்றன. இந்த போட்டிகள் ஒவ்வொரு அணிக்கும், உலக கோப்பைக்கான பயிற்சி ஆட்டமாகவே பார்க்கப்படுகின்றன. இதன் மூலம் அந்தந்த அணிகள் வீரர்களின் பலம், எந்த இடத்தில் ஆட வைக்க வேண்டும் என்று பல்வேறு விஷயங்கள் பற்றி அணி நிர்வாகம் இறுதி முடிவை எடுக்கும்.

அந்த வரிசையில், இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதையொட்டி இந்த போட்டிகளுக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் பென் ஸ்டோக்ஸ் இடம்பெற்று இருக்கிறார். கடந்த ஆண்டு இங்கிலாந்து அணியில் இருந்து ஓய்வு பெறுவதாக பென் ஸ்டோக்ஸ் அறிவித்தார்.
எனினும், உலக கோப்பை தொடரில் பென் ஸ்டோக்ஸ்-ஐ விளையாட வைக்க வேண்டும் என்ற கருத்து பொதுப்படையாக நிலவி வந்தது. மேலும் அணி நிர்வாகமும், இதே போன்ற கருத்தை கொண்டிருந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக பென் ஸ்டோக்ஸ் தனது ஓய்வு முடிவை மாற்றிக் கொண்டு உலக கோப்பை தொடர் முடியும் வரை இங்கிலாந்து அணிக்காக விளையாட வேண்டும் என்று அணி நிர்வாகம் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் இடம்பெற்று இருக்கிறார். இதன் மூலம் பென் ஸ்டோக்ஸ் இந்தியாவில் நடைபெற இருக்கும் உலக கோப்பை தொடரிலும் விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதன் பிறகு, அவர் தனது இடது காலில் ஏற்பட்ட காயத்திற்காக அறுவை சிகிச்சை செய்து கொள்வார் என்றும், இதனால் அவர் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது.
நியூசிலாந்துக்கு எதிரான இங்கிலாந்து அணி வீரர்கள் விவரம்:
ஜாஸ் பட்லர் (கேப்டன்), மொயின் அலி, கஸ் அட்கின்சன், ஜான்னி பேர்ஸ்டோ, சாம் கர்ரன், லியம் லிவிங்ஸ்டோன், டேவிட் மலான், அடில் ரஷித், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டொப்லி, டேவிட் வில்லி, மார்க் வுட் மற்றும் க்ரிஸ் வோக்ஸ்.
- பாகிஸ்தானை சேர்ந்த சர்வதேச வீரர்கள் சோயீப் மசூர், அர்ஷத் இக்பால் உள்ளிட்ட வீரர்கள் விளையாடி உள்ளனர்.
- விளக்கம் கேட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இஸ்லாமாபாத்:
அமெரிக்காவில் நடந்த மைனர் 'லீக்' கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தானை சேர்ந்த சர்வதேச வீரர்கள் சோயீப் மசூர், அர்ஷத் இக்பால் உள்ளிட்ட வீரர்கள் விளையாடி உள்ளனர். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் தடையில்லா சான்றிதழ் எதுவும் பெறாமல் அவர்கள் அமெரிக்க போட்டியில் விளையாடி உள்ளனர்.
இதையொட்டி அவர்களிடம் விளக்கம் கேட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
- சர்வதேச கிரிக்கெட்டில் இவர் 237 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.
- இந்திய அணிக்கு எதிரான போட்டியில் இவர் 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் வாஹப் ரியாஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருக்கிறார். எனினும், உலகம் முழுக்க பிரான்சைஸ் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட விரும்புவதாக அவர் தெரிவித்து இருக்கிறார்.
38 வயதான இடது கை பந்துவீச்சாளரான வாஹப் ரியாஸ் கடைசியாக 2020 டிசம்பர் மாதம் பாகிஸ்தான் அணிக்காக களமிறங்கினார். இவர் 2011, 2015 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடர்களில் விளையாடி இருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் 27 டெஸ்ட் போட்டிகள், 91 ஒருநாள் போட்டிகள் மற்றும் 36 டி20 போட்டிகளில் சுமார் 237 விக்கெட்களை கைப்பற்றி இருக்கிறார்.

2008-ம் ஆண்டு சிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி மூலம் பாகிஸ்தான் அணியில் வாஹப் அறிமுகமானார். 2011 உலக கோப்பை தொடரின் போது இந்திய அணிக்கு எதிரான போட்டியில் வாஹப் ஐந்து விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இதே போன்று 2015 உலக கோப்பை தொடரின் காலிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பாக பந்துவீசி அசத்தினார்.
முன்னதாக 2019 வாக்கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வாஹப், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வந்தார். அந்த வகையில், தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக வாஹப் அறிவித்து இருக்கிறார்.
"சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்காக களமிறங்கி விளையாடியது பெருமைக்குரிய விஷயம் ஆகும். இந்த பயணத்திற்கு முடிவு சொல்வதில் எனக்கு மகிழ்ச்சியாக உணர்கிறான். புதிய பயணத்தை துவங்கும் வகையில் பிரான்சைஸ் கிரிக்கெட்டில் விளையாட இருப்பதில் ஆவலோடு இருக்கிறேன். இதன் மூலம் தொடர்ந்து உலகளவில் சிறந்த வீரர்களுடன் விளையாடி ரசிகர்களை மகிழ்விப்பேன்," என்று வாஹப் ரியாஸ் தெரிவித்தார்.
- அகமதாபாத்தில் உள்ள ஒரு 5 நட்சத்திர டீலக்ஸ் ஓட்டலில் சுமார் 180 அறைகள் உள்ளன.
- ஓட்டல்களில் ஒருநாள் வாடகை ரூ.20 ஆயிரம் முதல் ரூ.2½ லட்சம் வரை கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத்:
13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடக்கிறது.
இதில் போட்டியை நடத்தும் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.
அகமதாபாத்தில் நடைபெறும் உலக கோப்பை போட்டியின் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய அணி முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 8-ந்தேதி சென்னையில் சந்திக்கிறது.
இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் அகமதாபாத்தில் அக்டோபர் 14-ந்தேதி நடக்கிறது.
உலக கோப்பை போட்டிக்கான டிக்கெட் விற்பனை வருகிற 25-ந்தேதி தொடங்குகிறது. இந்தியா அல்லாத போட்டிகளுக்கு டிக்கெட்டுகள் அன்று விற்பனையாகிறது. இந்திய அணி முதல் 3 ஆட்டத்தில் மோதும் போட்டிக்களுக்கான டிக்கெட்டுகள் (சென்னை, டெல்லி, புனே) வருகிற 31-ந்தேதி விற்பனையாகிறது.
இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை செப்டம்பர் 3-ந்தேதி விற்பனையாகிறது. ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகள் விற்பனையாகிறது.
டிக்கெட் பெறுவதற்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. ரசிகர்கள் உலக கோப்பை கிரிக்கெட் இணையதளத்தில் தங்கள் பெயரை முன்பதிவு செய்துக் கொண்டால் அவர்களுக்கு டிக்கெட் விற்பனை தொடர்பான தகவல்கள் முதலில் தெரிவிக்கப்படும். அவர்களுக்கு டிக்கெட் கிடைக்க இது கூடுதல் வாய்ப்பாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்காக அகமதாபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் முழுவதும் நிரம்பியுள்ளன. 3 முதல் 5 நட்சத்திர ஓட்டல்களுக்கான முன்பதிவு புக்கிங் முற்றிலும் முடிவடைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அகமதாபாத்தில் உள்ள ஒரு 5 நட்சத்திர டீலக்ஸ் ஓட்டலில் சுமார் 180 அறைகள் உள்ளன. அவை கிட்டத்தட்ட முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஓட்டல்களில் ஒருநாள் வாடகை ரூ.20 ஆயிரம் முதல் ரூ.2½ லட்சம் வரை கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதி நவீன வசதிகள் கொண்ட ஓட்டல் அறையின் ஒருநாள் கட்டணம் ரூ.1 லட்சம் முதல் ரூ.2½ லட்சமாக இருக்கிறது.
இதேபோல அகமதாபாத் செல்வதற்கான விமான கட்டணமும் கடுமையாக உயர்ந்து உள்ளது. அக்டோபர் 13 முதல் 15 வரை மும்பை, டெல்லியில் இருந்து அகமதாபாத் செல்லும் பெரும்பாலான விமானங்களின் கட்டணம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரத்தை எட்டியுள்ளது. இது மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாதாரண நாட்களில் ரூ.2500 முதல் ரூ.5 ஆயிரம் வரை தான் கட்டணமாகும். உலக கோப்பை போட்டி காரணமாக 5 மடங்கு அதிகரித்துள்ளது.
அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 1 லட்சத்துக்கு மேற்பட்ட ரசிகர்கள் அமரலாம். இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்காக 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரசிகர்கள் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து குஜராத் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்திய அணி அயர்லாந்து தொடரில் பங்கேற்கிறது.
- வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கேப்டன் பொறுப்பேற்றுள்ளார்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், சஹல் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு இந்திய அணியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஜஸ்பிரித் பும்ரா, ருதுராஜ் கெய்க்வாட், ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே, ஷபாஸ் அகமது, சஞ்சு சாம்சன், ஜிதேஷ் ஷர்மா, ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப்சிங், முகேஷ் குமார், ஆவேஷ்கான் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி நேற்று விமானம் மூலம் அயர்லாந்து புறப்பட்டுச் சென்றது.
இந்திய அணி கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார். சி.எஸ்.கே .வீரர் ருதுராஜ் கெய்வாட் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி டப்ளினில் நாளை மறுதினம் இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. 2-வது டி20 போட்டி ஆகஸ்ட் 20-ம் தேதியும், 3-வது டி20 போட்டி 23-ம் தேதியும் நடைபெறுகிறது.
- சவுதி அரேபியாவின் அல்-ஹிலால் கிளப் நெய்மாரை 2 ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
- அல்-நசர் என்ற சவுதி கிளப் அணியில் போர்ச்சுகலின் ரொனால்டோ விளையாடி வருகிறார்.
ரியாத்:
பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் நெய்மார், பிரான்சில் உள்ள பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.) கால்பந்து கிளப்புக்காக கடந்த 6 ஆண்டுகளாக விளையாடி வந்தார்.
இதற்கிடையே, நெய்மாரை தங்கள் அணியில் இணைக்க சவுதி அரேபியாவின் அல்-ஹிலால் கிளப் முயற்சி மேற்கொண்டது. அவரை விற்க பி.எஸ்.ஜி நிர்வாகமும் ஒப்புக்கொண்டது.
இதையடுத்து, 2 ஆண்டு ஒப்பந்தம் அடிப்படையில் அல்-ஹிலால் அணியில் இணைய நெய்மார் சம்மதம் தெரிவித்துள்ளார். அவருக்கு ரூ.908 கோடி ஊதியம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், சவுதி அரேபியாவின் அல்-ஹிலால் கிளப்பில் இணைவதற்கான ஒப்பந்தத்தில் நெய்மார் இன்று கையெழுத்திட்டார்.
ஏற்கனவே, சவுதி கிளப் அணியான அல்-நசர் என்ற அணியில் போர்ச்சுகல் நாட்டின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மகளிர் உலக கோப்பை தொடரின் முதல் காலிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- பிரான்ஸ் அணிகள் மோதின.
- மூன்றாவது இடத்துக்கான போட்டி ஆகஸ்ட் 19-ம் தேதி மதியம் 1.30 மணிக்கு நடைபெற இருக்கிறது.
பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற முதல் இரண்டு காலிறுதி ஆட்டங்களில் நெதர்லாந்தை வீழ்த்தி ஸ்பெயின் அணியும், ஜப்பானை வீழ்த்தி சுவீடன் அணியும் அரையிறுதிக்கு முன்னேறின.
முதல் காலிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- பிரான்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி முடிவில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் 7-6 என ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து- கொலம்பியா அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து 2-1 என வெற்றி பெற்றது. காலிறுதி ஆட்டங்களை தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 15) முதல் அரையிறுதி போட்டி நடைபெற்றது. இதில் ஸ்பெயின் மற்றும் ஸ்வீடன் அணிகள் மோதின.

பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஸ்பெயின் அணி 2-1 என்ற அடிப்படையில் ஸ்வீடனை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. அந்த வகையில் 2023 மகளிர் கால்பந்து உலக கோப்பை தொடரின் இறுதி போட்டிக்கு முதல் அணியிாக ஸ்பெயின் தகுதி பெற்றுள்ளது. இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
இரு அணிகள் இடையேயான இரண்டாவது அரையிறுதி போட்டி இந்திய நேரப்படி நாளை பிற்பகல் 3.30 மணிக்கு துவங்க இருக்கிறது. இதைத் தொடர்ந்து மூன்றாவது இடத்திற்கான போட்டி ஆகஸ்ட் 19-ம் தேதியும், இறுதி போட்டி ஆகஸ்ட் 20-ம் தேதியும் நடைபெற உள்ளன. இறுதி போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு துவங்க இருக்கிறது.
- செனனாயகே கடந்த 2020-ம்ஆண்டு இலங்கை பிரிமீயர் லீக்கில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
- 3 மாதம் வெளிநாடு செல்ல தடைவிதித்து உத்தரவிட்டு உள்ளது.
கொழும்பு;
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் செனனாயகே. 38 வயதான இவர் 2012 முதல் 2016 வரையில் 49 ஒருநாள் போட்டி, ஒரு டெஸ்ட் மற்றும், 24 இருபது ஓவர் ஆட்டங்களில் விளையாடி உள்ளார்.
செனனாயகே கடந்த 2020-ம்ஆண்டு இலங்கை பிரிமீயர் லீக்கில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிலையில் இது தொடர்பான வழக்கை விசாரித்த கொழும்பு தலைமை மாஜிஸ்திரேட் கோர்ட்டு செனனாயகே 3 மாதம் வெளிநாடு செல்ல தடைவிதித்து உத்தரவிட்டு உள்ளது. இதுதொடர்பான உத்தரவை குடியேற்றம் மற்றும் குடியமர்வு பிரிவு பொதுக் கட்டுப்பாட்டாளர் துறைக்கு அனுப்பியுள்ளது.
இந்த உத்தரவு கிடைத்து உள்ளதாக இலங்கை அட்டர்னி ஜெனரல் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் செனனாயகே மீது சிறப்பு விசாரணைக்குழு அறிக்கையின் பேரில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யுமாறு அட்டர்னி ஜெனரல் பிரிவுக்கு உத்தரவை கோர்ட்டு அனுப்பியுள்ளது.
- அணிக்காக விளையாட பென் ஸ்டோக்ஸிடம் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்து இருப்பதாக கூறப்படுகிறது.
- பென் ஸ்டோக்ஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்ததை அதை திரும்ப பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக கடந்த ஆண்டு அறிவித்தார்.
இந்நிலையில், விரைவில் வரவுள்ள உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்காக விளையாட வருமாறு பென் ஸ்டோக்ஸிடம் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்து இருப்பதாக கூறப்படுகிறது
இதைதொடர்ந்து, பென் ஸ்டோக்ஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்ததை அதை திரும்ப பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்மூலம், இந்தியாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை தொடரில் பென் ஸ்டோக்ஸ் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.
பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து ஒருநாள் அணிக்கு திரும்புவார் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
- பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது.
- அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, ரஷியாவின் சாம்சனோவாவுடன் மோதினார்.
டொரண்டோ:
கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தொடர் அங்குள்ள டொரண்டோ, மான்ட்ரியல் நகரங்களில் நடைபெற்றன. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர். இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, ரஷியாவின் சாம்சனோவாவுடன் மோதினார். இதில் பெகுலா 6-1, 6-0 என்ற நேர் செட்களில் சாம்சனோவாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
- 2 ஆயிரம் வீரர்கள் இந்த விளையாட்டில் கலந்து கொள்கிறார்கள்.
- கேரளாவில் இருந்து 2 அணிகளும், பெங்களூரில் உள்ள ஒரு கல்லூரியும் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன.
சென்னை:
லயோலா கல்லூரி சார்பில் சென்னையில் ஆண்டுதோறும் பெர்ட்ராம் நினைவு விளையாட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டுக்கான கல்லூரிகள், பள்ளிகள் இடையேயான 89-வது பெர்ட்ராம் நினைவு விளையாட்டு போட்டிகள் நாளை ( 15- ந் தேதி) முதல் 31-ந் தேதி வரை நுங்கம்பாக்கத்தில் உள்ள அந்த கல்லூரி மைதானத்தில் நடக்கிறது.
இதில் லயோலா, எம்.சி.சி, திருச்சி ஜமால் முகமது பி.எஸ்.ஜி. (கோவை) உள்பட 50 கல்லூரிகளும், 15 பள்ளிகளும் ஆகமொத்தம் 65 அணிகள் பங்கேற்கின்றன.
கேரளாவில் இருந்து 2 அணிகளும், பெங்களூரில் உள்ள ஒரு கல்லூரியும் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன. 2 ஆயிரம் வீரர்கள் இந்த விளையாட்டில் கலந்து கொள்கிறார்கள்.
கைப்பந்து, கூடைப்பந்து, பால் பேட்மிண்டன், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், செஸ், கபடி, கோகோ ஆகிய விளையாட்டுகள் நடைபெறுகிறது.
பள்ளி மாணவர்களுக்கு கூடைப்பந்து, கைப்பந்து மற்றும் டென்னிஸ் (ஒற்றையர் பிரிவு) ஆகிய போட்டிகள் நடக்கிறது. பார்வையற்ற பள்ளி மாணவர்களுக்கு முதல் முறையாக கைப்பந்து போட்டி நடத்தப்படுகிறது.
இந்தப் போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.2 லட்சமாகும்.
மேற்கண்ட தகவலை லயோலா கல்லூரி முதல்வர் ஏ. லூயிஸ் ஆரோக்கியராஜ், விளையாட்டு இயக்குனர் எம்.எஸ். ஜோசப் அந்தோணி ஜேக்கப், உடற்கல்வி இயக்குனர் எஸ். விஜயகுமார் ஆகியோர் தெரிவித்தனர்.






