என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பயணம் செய்யும்போதும் முக கவசம் அணிய வேண்டும் என்று புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஊரடங்கு தளர்வுகள் நடைமுறைக்கு வந்துள்ளதால் வழிபாட்டு தலங்கள், ஓட்டல்கள் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளது.

    இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு 10 வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இதன்படி பொது இடங்களில் பணியிடம் மற்றும் பயணங்களின்போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.

    பொது இடங்களில் குறைந்தபட்சம் 6 அடி இடைவெளியை தனி நபர்கள் கடைபிடிக்க வேண்டும். பொது இடத்தில் அதிகளவில் கூடுவது தடை செய்யப்படுகிறது.

    திருமண நிகழ்ச்சியில் 50 பேருக்கு மிகாமலும், இறுதி சடங்கில் 20 பேருக்கு மிகாமலும் பங்கேற்கலாம். பொது இடத்தில் எச்சில் துப்புவது அபராதத்துடன் கூடிய தண்டனைக்குரிய குற்றமாகும்.

    பொது இடத்தில் பான்மசாலா, குட்கா, புகையிலை பயன்படுத்த தடை செய்யப்படுகிறது. முடிந்தவரை வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை பின்பற்ற வேண்டும். அலுவலகங்கள், பணியிடங்கள், கடைகள், தொழில், வர்த்தக நிறுவன்களில் வேலைநேரத்தை ஷிப்ட் முறையில் பின்பற்ற வேண்டும். நுழைவு வாயிலில் வெப்ப ஸ்கேனிங், கை கழுவுதல், சுத்திகரிப்புக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    புதுவையில் மேலும் புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.
    புதுச்சேரி:

    புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    புதுவை அரசு மருத்துவமனை மற்றும் ஜிப்மரில் 72 பேர், வெளிமாநிலத்தில் புதுவையை சேர்ந்த 3 பேர் என மொத்தம் 75 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.
    இந்நிலையில் இன்று புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கதிர்காமம் அரசு கொரோனா மருத்துவமனையில் 8 பேர், ஜிப்மரில் 4 பேர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    தற்போது புதுவை மருத்துவமனைகளில் 82 பேர், வெளிமாநிலத்தில் 2 பேர் என மொத்தம் 84 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒட்டு மொத்தமாக புதுவையில் 145 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் 60 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் இறந்துள்ளார்.

    புதுவை அரசு மருத்துவ மனையில் இதய நோயால் சிகிச்சை பெற்று வந்த விழுப்புரத்தை சேர்ந்த 82 வயது முதியவர் உயிரிழந்தார். அவரை பரிசோதனை
    செய்ததில் கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது.

    கடந்தமுறை நடந்த தவறுகள் நடைபெறாமல் இருக்க அவரின் குடும்பத்தினர் அனுமதி பெற்று அரசு சார்பில் உடல் மின் தகனம் செய்ய உள்ளது. முதியவர் கடந்த 6 நாட்களாக புதுவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

    இதனால் அரசு மருத்துவமனை டாக்டர்கள், ஊழியர்கள் என 19 பேரை தனிமைப்படுத்தி பரிசோதனை செய்ய உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது சுகாதாரத்துறை செயலர் பிரசாந்த்குமார் பாண்டே, இயக்குனர் மோகன்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
    புதுச்சேரியில் 80 வயது முதியவர் கொரோனாவுக்கு பலியானார். அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்காமல் அரசு சார்பில் இன்று அடக்கம் செய்யப்பட உள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா வால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடக்கத்தில் இருந்து நீண்ட காலமாக ஒற்றை இலக்க எண்ணில் இருந்து வந்தது. இந்தநிலையில் கடந்த ஒருமாதமாக கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகமாகி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்தது.

    புதுவையில் இதுவரை மொத்தம் 132 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இவர்களில் 55 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 77 பேர் புதுச்சேரி கதிர்காமம் கொரோனா சிறப்பு மருத்துவமனையிலும், ஜிப்மர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்தநிலையில் விழுப்புரம் அருகே குமளம் பகுதியை சேர்ந்த 80 வயது முதியவருக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற காரணத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதற்கு சிகிச்சை பெறுவதற்காக புதுவை அரும்பார்த்தபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார். உறவினருடன் கடந்த 4-ந்தேதி கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார்.

    அப்போது அவருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் கதிர்காமம் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அந்த முதியவர் உயிரிழந்தார்.

    அவரது உடல் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக உறவினர்களிடம் ஒப்படைக்காமல் அரசு சார்பில் இன்று (புதன்கிழமை) உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.

    ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்ததால் முதியவருக்கும் தொற்று பரவி உள்ளது. இந்தநிலையில் உயிரிழந்ததையொட்டி முதியவர் தங்கி இருந்த உறவினர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். கடந்த 5-ந்தேதி சென்னையில் இருந்து புதுவைக்கு வந்த தனியார் நிறுவன மேலாளர் ஒருவரும், ஏற்கனவே மாகி பிராந்தியத்தில் முதியவர் ஒருவரும் கொரோனாவுக்கு உயிரிழந்து உள்ளனர்.
    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் பற்றி அவதூறு வீடியோ வெளியிட்ட அரசு ஊழியர் மீது சைபர் கிரைம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    புதுவை வில்லியனூரை அடுத்த உளவாய்க்காலை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 55).

    புதுவை அரசு ஊழியரான சந்திரசேகரன் கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார். இவர், சமூக வலைதளங்களில் காங்கிரஸ் அரசையும், முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் மாநில தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் ஆகியோரை விமர்சித்து அடிக்கடி வீடியோ பதிவு வெளியிட்டு வந்தார்.

    இது தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகி சூசைராஜ் புதுவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். புகாரில் அரசு ஊழியரான சந்திரசேகரன் ஜாதி, மத ரீதியாக முதல்-அமைச்சர், அமைச்சர்கள் பற்றி பேசி அவதூறு வீடியோ வெளியிட்டு வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.

    அதன்பேரில் சைபர் கிரைம் போலீசார் சமூக வலைதளத்தில் அவதூறு பரப்புதல், ஆபாசமாக திட்டுதல், மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சந்திரசேகரனை கைது செய்தனர்.

    அவர் கொரோனா மருத்துவ பரிசோதனைக்காக கோவிட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு வருகிற 15-ந்தேதி நடைபெற இருப்பதாக அரசு அறிவிப்பு வெளியிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்தது. அதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஆசிரியர் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 15ந்தேதி பத்தாம் வகுப்பு தேர்வை தொடங்க அனுமதிக்க முடியாது என்று கூறி, விசாரணையை வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், தமிழகத்தில் நடைபெற இருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படுவதாகவும், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவித்தார்.

    தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டார். 

    கொரோனா தாக்கம் அதிகரித்து இருக்கும் இந்த சூழ்நிலையில், பொதுத்தேர்வை இப்போது நடத்தக்கூடாது என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    புதுச்சேரியில் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு நேற்று முதல் அனுமதிக்கப்பட்டனர். இதனால் கோவில்களில் கூட்டம் அலைமோதியது.
    கொரோனா வைரஸ் தாக்குதலை தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி முதல் அனைத்து மத வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன. தற்போது 5-ம் கட்டமாக ஊரடங்கு தளர்வுடன் அறிவிக்கப்பட்டுள்ளதால் மத வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்கள் ஆகியவற்றை திறக்க புதுவை அரசு அனுமதி அளித்துள்ளது. வணிக வளாகங்களும் செயல்பட தடை இல்லை. ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து புதுவையில் நேற்று காலை கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். அதன்படி புதுச்சேரி மணக்குள விநாயகர், காந்தி வீதியில் உள்ள வரதராஜ பெருமாள், வேதபுரீஸ்வரர், செட்டிக்கோவில், முத்தியால்பேட்டை எம்.எஸ். அக்ரகாரத்தில் உள்ள வீரஆஞ்சநேயர் கோதண்டராமர், ராமகிருஷ்ணா நகரில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர், தென்கலை ஸ்ரீனிவாச பெருமாள், கற்பக விநாயகர், வசந்த நகரில் உள்ள குருவேலயுத ஈஸ்வரர், சாரத்தில் உள்ள கிருஷ்ணன், மகாவீர் நகரில் உள்ள பெருமாள், ரெயில் நிலையம் அருகே கவுசிக பாலசுப்பிரமணிய சாமி, முதலியார்பேட்டை வன்னிய பெருமாள் ஆகிய கோவில்களில் சாமி தரிசனத்திற்காக நேற்று பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சமூக இடைவெளியை கடைப்பிடித்து நீண்ட வரிசையில் நின்று அவர்கள் சாமி தரிசனம் செய்தனர். அரவிந்தர் ஆசிரமமும் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது.

    முன்னதாக கோவிலுக்கு வரும் பக்தர்களின் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு கிருமிநாசினி வழங்கப்பட்டது. மேலும் பக்தர்கள் தங்களது கைகளை கழுவிய பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கோவிலுக்கு சென்று வழிபடுவதற்கு வசதியாக தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. ஆனால் விபூதி, குங்குமம், பூ மற்றும் பிரசாதங்கள் போன்றவை வழங்கப்படவில்லை. மேலும் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

    இதேபோல் ஓட்டல்களிலும் நேற்று சமூக இடைவெளியை பின்பற்றி மக்கள் அமர்ந்து உணவு சாப்பிட அனுமதிக்கப்பட்டனர். மேலும் வணிக வளாகம் திறக்கப்பட்டது. அங்கு வந்த பொதுமக்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்து கிருமி நாசினி வழங்கப்பட்டது. வணிக வளாகத்தில் தியேட்டர்கள் செயல்படாததால் பெரிய அளவில் கூட்டம் இல்லை. இதேபோல் புதுவை தாவரவியல் பூங்கா நேற்று முதல் செயல்பட தொடங்கியது. தற்போது விடுமுறை காலம் என்பதால் குழந்தைகள் சிலர் தங்களது பெற்றோருடன் அங்கு வந்திருந்தனர்.
    விழுப்புரம் அருகே கர்ப்பிணி பெண் மற்றும் அவரது தங்கைக்கும் கொரோனா தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
    கண்டமங்கலம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேக மாக பரவி வருகிறது. இதைத்தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே பெரியபாபுசமுத்திரம் காலனி பகுதியை சேர்ந்த 23 வயது பெண் திருமணத்திற்கு பின் சென்னையில் வசித்து வந்தார்.

    அந்த பெண் தற்போது கர்ப்பிணியாக இருந்தார். அவருடன் 17 வயதுடைய தங்கை மேல்படிப்பு படித்து வந்தார். இதையடுத்து அந்த கர்ப்பிணி பெண்ணும், அவரது தங்கையுமான, மாணவியும் சொந்த ஊரான பெரியபாபுசமுத்திரம் பகுதிக்கு வந்தனர்.

    தகவல் அறிந்த மருத்துவ குழுவினர் அவர்களின் வீட்டுக்கு சென்று கொரோனா நோய் தொற்று உள்ளதா?என்று பரிசோதனை செய்தனர்.

    பரிசோதனையில் அவர்களிடம் இருந்து உமிழ்நீர் மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டது. இதையடுத்து கர்ப்பிணி பெண் மற்றும் அவரது தங்கைக்கும் கொரோனா தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

    தொடர்ந்து அவர்களை விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு கர்ப்பிணி பெண் மற்றும் மாணவியை தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் அவர்களின் குடும் பத்தினருக்கும் கொரோனா தொற்று உள்ளதா? என்றும் மருத்துவ குழுவினர் பரிசோ தனை செய்தனர். அவர்கள் வீட்டுக்கு வந்தவர்களிடமும் பரிசோதனை செய்யப்பட்டது.

    அவர்கள் குடும்பத்தினர் வெளியே வரக்கூடாது என மருத்துவ குழுவினர் அறிவுறுத்தினர். மேலும் அவர்களுக்கு உணவு பொருட்களை வருவாய் துறையினர் வழங்கினர். சுகாதாரத்துறையினர் அந்த பகுதியில் கிருமி நாசினி மருந்து தெளித்தனர்.

    வெளியாட்கள் உள்ளே வராதவாறும், உள்ளே இருப்பவர்கள் வெளியே செல்ல முடியாதவாறும் தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.

    தகவல் அறிந்த விழுப் புரம் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், கண்டமங்கலம் இன்ஸ் பெக் டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு பார்வையிட்டனர். இதையடுத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னையில் இருந்து வந்த கர்ப்பிணி பெண் மற்றும் அவரது தங்கைக்கு கொரோனா தொற்று உறுதி செய்ப்பட்டதால் அந்த பகுதியில் வசித்து வரும் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
    புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு அவர்கள் படித்து வரும் பள்ளிகளிலேயே ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது.
    புதுச்சேரி:

    எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு வருகிற 15-ந்தேதி தொடங்கி நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகளில் ஈடுபடுவதற்காக அனைத்து ஆசிரியர்களையும் பணிக்கு திரும்ப கல்வித்துறை உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, 75 நாட்களுக்கு பிறகு நேற்று ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர். பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் நேற்று ஹால் டிக்கெட் மற்றும் முககவசங்களை வாங்குவதற்காக அந்தந்த பள்ளிகளில் வந்திருந்தனர்.

    பள்ளிக்கு வந்திருந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முககவசம் அணிந்திருந்தால் மட்டுமே வளாகத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதுமட்டுமில்லாமல் தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் அவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது.

    பின்னர் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது. அப்போது அதனுடன் சேர்த்து ஒவ்வொரு மாணவருக்கும் 2 முக கவசங்கள் வழங்கப்பட்டன. வருகிற 19-ந்தேதி மேலும் ஒரு முக கவசமும் வழங்கப்பட இருக்கிறது. முக கவசங்கள் மற்றும் ஹால் டிக்கெட்டுகளை சமூக இடைவெளியை கடைப்பிடிக்கச் செய்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வழங்கினர். தேர்வுக்கு எப்படி தயாராக வேண்டும்? தேர்வு நாளன்று எப்படி வரவேண்டும்? என்பன போன்ற அறிவுரைகளையும் தெரிவித்தனர்.
    வானூர் அருகே ரவுடி கொலை செய்யப்பட்டது தொடர்பாக சந்தேகத்தின்பேரில் புதுவையை சேர்ந்த ரவுடிகள் 15 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வானூர்:

    புதுவை பூமியான்பேட்டையை சேர்ந்தவர் கொட்டாரமேஷ் (வயது 48). பிரபல ரவுடியான இவர் மீது புதுவை மாநிலத்தில் பல்வேறு கொலை வழக்குகள் உள்ளது.

    இவர் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக கோட்டக்குப்பம் பகுதிக்கு சென்றார். சின்ன கோட்டக்குப்பம் அருகே சென்றபோது 2 மோட்டார் சைக்கிளில் 4 பேர் அவரை பின்தொடர்ந்து சென்றனர்.

    அவர்களை பார்த்ததும் கொட்டாரமேஷ் வானூர் அருகே உள்ள சின்னக்கோட்டக்குப்பம் ஊருக்குள் சென்றார். அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவர் மீது நாட்டு வெடிகுண்டு ஒன்றை வீசினர். அது வெடித்து புகை மண்டலமானது.

    அப்போது கொட்டாரமேஷ் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று விட்டார். மற்றொரு குண்டையும் அந்த கும்பல் வீசியது. அந்த குண்டு கொட்டாரமேஷ் மீது பட்டு வெடித்து சிதறியது. இதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    அப்போது அந்த மர்ம கும்பல் கொட்டாரமேசை சுற்றி வளைத்தனர். அவரை சரமாரியாக வெட்டினர். இதில் கொட்டாரமேஷ் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    அதன் பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

    கொலை செய்யப்பட்ட கொட்டாரமேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

    மேலும் கொட்டா ரமேசை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மர்ம மனிதர்களை பிடிக்க கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் சரவணன், ஆரோவில் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் ஆகியோர் தலமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் அந்த பகுதியில் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் சந்தேகத்தின்பேரில் புதுவையை சேர்ந்த ரவுடிகள் 15 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொட்டாரமேஷ் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு கொலை வழக்குகள் உள்ளதால் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் பழிக்கு பழியாக கொட்டா ரமேசை கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாகூர் அருகே வீடு, கடை, ஓட்டலில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பாகூர்:

    பாகூர் அருகே உள்ள குருவிநத்தம் மேலண்ட வீதியை சேர்ந்தவர் ஞானவேலு (வயது 42). தனது வீட்டிலேயே பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது சகோதரர் முத்து அதே இடத்தில் சிறிய ஓட்டல் நடத்தி வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு ஞானவேலுவின் வீடு மற்றும் கடை திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. அதற்குள் முத்துவின் ஓட்டலுக்கும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.

    இதுபற்றி தகவல் அறிந்து பாகூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து வீடு, கடை மற்றும் ஓட்டலில் பிடித்த தீயை அணைத்தனர். அதற்குள் அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின. பாகூர் பகுதியில் கடந்த சில நாட்களாக குறைந்த மின்னழுத்த பிரச்சினை இருந்து வருகிறது. இதன் காரணமாக ஞானவேலு வீடு, கடை தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தீ விபத்து குறித்து அறிந்து தனவேலு எம்.எல்.ஏ. சம்பவ இடத்திற்கு வந்து ஞானவேலு, முத்து ஆகியோருக்கு ஆறுதல் கூறி நிவாரண பொருட்கள் வழங்கினார். 
    வானூர் அருகே இன்று காலை பிரபல ரவுடி குண்டு வீசி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே இன்று காலை நடந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    புதுவை மாநிலம் பூமியான்பேட்டையை சேர்ந்தவர் கொட்டாரமேஷ் (வயது 40). பிரபல ரவுடியான இவர் மீது புதுவை மாநிலத்தில் பல்வேறு கொலை வழக்குகள் உள்ளது.

    இவர் இன்று காலை மோட்டார் சைக்கிளில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக கோட்டக்குப்பம் பகுதிக்கு சென்றார். சின்னகோட்டக்குப்பம் அருகே சென்ற போது 4 பேர் மோட்டார் சைக்கிளில் அவரை பின்தொடர்ந்தனர்.

    சுதாரித்து கொண்ட கொட்டாரமேஷ் தமிழக பகுதியான வானூர் அருகே சின்னக்கோட்டக்குப்பம் பகுதி குடியிருப்புக்குள் சென்றார். அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு ஒன்றை வீசினர்.

    அப்போது கொட்டாரமேஷ் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று விட்டார். இதனால் அந்த குண்டு தரையில் விழுந்து வெடித்து சிதறியது. மர்ம நபர்களின் பிடியில் இருந்து தப்பிய கொட்டாரமேஷ் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு தெருவில் உயிர் பயத்துடன் கூச்சலிட்டபடியே ஓடினார்.

    சத்தம் கேட்டு அந்த கிராம மக்கள் திரண்டனர். உடனே கொட்டாரமேஷ் ஒரு குறுகலான தெருவுக்குள் புகுந்தார். அப்போது மர்ம நபர்கள் அவரை சுற்றி வளைத்தனர். பின்னர் நாட்டு வெடிகுண்டை கொட்டாரமேசின் தலை மீது வீசினர். இதில் அவர் தலைசிதறி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    ஆத்திரம் தணியாத அந்த கும்பல் கொட்டாரமேசின் உடலில் சரமாரியாக கத்தியால் வெட்டினர். அதன் பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

    இந்த தகவல் அந்த பகுதியில் காட்டுத்தீ போல பரவியது. உடனே கிராம பகுதியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன. அங்கு பதட்டம் நிலவியது.

    தகவல் அறிந்த கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய்தங்கம், இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

    குண்டு வீச்சில் பலியான கொட்டாரமேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். கொலை செய்யப்பட்ட ரவுடி கொட்டாரமேஷ் புதுவை மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் புதுவை போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

    இது தொடர்பாக கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொலை செய்யப்பட்ட கொட்டாரமேஷ் கள்ளக்காதல் தகராறில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தொழில் போட்டி காரணமாக அவரை மர்ம நபர்கள் கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புதுச்சேரியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசிப்போருக்கு அரசு சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
    புதுச்சேரி:
     
    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதுவையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மெத்தனமாக இருக்க கூடாது. ஏனெனில் கிராமப்புறத்தில் தற்போது ஊடுருவ ஆரம்பித்து உள்ளது. இப்போது தனிமைப்படுத்தப்பட்ட பகுதியும் 25 மீட்டர் அளவுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்போருக்கு அரசு சார்பில் உதவிட துணை சபாநாயகர் எம்.என்.ஆர்.பாலன் என்னிடம் வலியுறுத்தினார். அவர்களுக்கு முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து அரிசி, கோதுமை, எண்ணெய், சர்க்கரை போன்றவற்றை வழங்க கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

    இந்த காலகட்டத்தில் அரசின் சிக்கன நடவடிக்கை காரணமாக அரசு ஊழியர்களுக்கு மார்ச், ஏப்ரல், மே மாத சம்பளத்தை குறைக்காமல் கொடுத்துள்ளோம். மற்ற மாநிலங்களில் குறைவாகத்தான் கொடுத்துள்ளனர். தற்போது மத்திய அரசு வழங்கிய சரக்கு மற்றும் சேவை வரிக்கான இழப்பீட்டு தொகையை கொண்டு ரிசர்வ் வங்கியில் வாங்கிய கடனை அடைத்து உள்ளோம். நமக்கு தர வேண்டிய நிதியை தான் மத்திய அரசு தந்துள்ளது. கூடுதலாக ஒன்றும் தரவில்லை. ஆனால் மத்திய அரசு கூடுதலாக நிதி தந்தது போன்ற மாயையை கவர்னர் கிரண்பேடி உருவாக்குகிறார்.

    மக்களிடையே இப்போது சகஜ வாழ்க்கை திரும்பி உள்ளது. மத வழிபாட்டு தலங்களை திறப்பது தொடர்பாக வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகிகளை அழைத்து பேசி உள்ளோம். அப்போது விதிமுறைகளை கடைப்பிடிப்பது தொடர்பாக அறிவுறுத்தி உள்ளோம். நாளை (திங்கட்கிழமை) முதல் ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்படும். அங்கும் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும். ஓட்டல்களில் வந்து தங்குபவர்கள் குறித்த விவரங்களை ஓட்டல் நிர்வாகிகள் அரசுக்கு முழுமையாக தருமாறு வலியுறுத்தி உள்ளோம்.

    புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் விரைவில் கூட உள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசுக்கு கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததும் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும்.

    பட்ஜெட்டில் சேர்க்க வேண்டிய அம்சங்கள் குறித்து எம்.எல்.ஏ.க்கள் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து உள்ளனர். கொரோனா தாக்குதல் காலமென்பதால் அரசு ஊழியர் பல்வேறு சமூக சமுதாய அமைப்பு தலைவர்களிடம் பட்ஜெட் குறித்து நேரடியாக கருத்து பெற முடியவில்லை. அவர்களை எழுத்துப்பூர்வமாக தர கேட்டு உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×