என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    புதுச்சேரியில் கொரோனாவுக்கு 80 வயது முதியவர் பலி

    புதுச்சேரியில் 80 வயது முதியவர் கொரோனாவுக்கு பலியானார். அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்காமல் அரசு சார்பில் இன்று அடக்கம் செய்யப்பட உள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா வால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடக்கத்தில் இருந்து நீண்ட காலமாக ஒற்றை இலக்க எண்ணில் இருந்து வந்தது. இந்தநிலையில் கடந்த ஒருமாதமாக கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகமாகி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்தது.

    புதுவையில் இதுவரை மொத்தம் 132 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இவர்களில் 55 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 77 பேர் புதுச்சேரி கதிர்காமம் கொரோனா சிறப்பு மருத்துவமனையிலும், ஜிப்மர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்தநிலையில் விழுப்புரம் அருகே குமளம் பகுதியை சேர்ந்த 80 வயது முதியவருக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற காரணத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதற்கு சிகிச்சை பெறுவதற்காக புதுவை அரும்பார்த்தபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார். உறவினருடன் கடந்த 4-ந்தேதி கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார்.

    அப்போது அவருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் கதிர்காமம் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அந்த முதியவர் உயிரிழந்தார்.

    அவரது உடல் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக உறவினர்களிடம் ஒப்படைக்காமல் அரசு சார்பில் இன்று (புதன்கிழமை) உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.

    ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்ததால் முதியவருக்கும் தொற்று பரவி உள்ளது. இந்தநிலையில் உயிரிழந்ததையொட்டி முதியவர் தங்கி இருந்த உறவினர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். கடந்த 5-ந்தேதி சென்னையில் இருந்து புதுவைக்கு வந்த தனியார் நிறுவன மேலாளர் ஒருவரும், ஏற்கனவே மாகி பிராந்தியத்தில் முதியவர் ஒருவரும் கொரோனாவுக்கு உயிரிழந்து உள்ளனர்.
    Next Story
    ×