search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தொற்று பரிசோதனை
    X
    கொரோனா தொற்று பரிசோதனை

    புதுவையில் மேலும் 12 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 145 ஆக உயர்வு

    புதுவையில் மேலும் புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.
    புதுச்சேரி:

    புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    புதுவை அரசு மருத்துவமனை மற்றும் ஜிப்மரில் 72 பேர், வெளிமாநிலத்தில் புதுவையை சேர்ந்த 3 பேர் என மொத்தம் 75 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.
    இந்நிலையில் இன்று புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கதிர்காமம் அரசு கொரோனா மருத்துவமனையில் 8 பேர், ஜிப்மரில் 4 பேர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    தற்போது புதுவை மருத்துவமனைகளில் 82 பேர், வெளிமாநிலத்தில் 2 பேர் என மொத்தம் 84 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒட்டு மொத்தமாக புதுவையில் 145 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் 60 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் இறந்துள்ளார்.

    புதுவை அரசு மருத்துவ மனையில் இதய நோயால் சிகிச்சை பெற்று வந்த விழுப்புரத்தை சேர்ந்த 82 வயது முதியவர் உயிரிழந்தார். அவரை பரிசோதனை
    செய்ததில் கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது.

    கடந்தமுறை நடந்த தவறுகள் நடைபெறாமல் இருக்க அவரின் குடும்பத்தினர் அனுமதி பெற்று அரசு சார்பில் உடல் மின் தகனம் செய்ய உள்ளது. முதியவர் கடந்த 6 நாட்களாக புதுவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

    இதனால் அரசு மருத்துவமனை டாக்டர்கள், ஊழியர்கள் என 19 பேரை தனிமைப்படுத்தி பரிசோதனை செய்ய உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது சுகாதாரத்துறை செயலர் பிரசாந்த்குமார் பாண்டே, இயக்குனர் மோகன்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
    Next Story
    ×