என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசிப்போருக்கு அரசு சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
    புதுச்சேரி:
     
    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதுவையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மெத்தனமாக இருக்க கூடாது. ஏனெனில் கிராமப்புறத்தில் தற்போது ஊடுருவ ஆரம்பித்து உள்ளது. இப்போது தனிமைப்படுத்தப்பட்ட பகுதியும் 25 மீட்டர் அளவுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்போருக்கு அரசு சார்பில் உதவிட துணை சபாநாயகர் எம்.என்.ஆர்.பாலன் என்னிடம் வலியுறுத்தினார். அவர்களுக்கு முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து அரிசி, கோதுமை, எண்ணெய், சர்க்கரை போன்றவற்றை வழங்க கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

    இந்த காலகட்டத்தில் அரசின் சிக்கன நடவடிக்கை காரணமாக அரசு ஊழியர்களுக்கு மார்ச், ஏப்ரல், மே மாத சம்பளத்தை குறைக்காமல் கொடுத்துள்ளோம். மற்ற மாநிலங்களில் குறைவாகத்தான் கொடுத்துள்ளனர். தற்போது மத்திய அரசு வழங்கிய சரக்கு மற்றும் சேவை வரிக்கான இழப்பீட்டு தொகையை கொண்டு ரிசர்வ் வங்கியில் வாங்கிய கடனை அடைத்து உள்ளோம். நமக்கு தர வேண்டிய நிதியை தான் மத்திய அரசு தந்துள்ளது. கூடுதலாக ஒன்றும் தரவில்லை. ஆனால் மத்திய அரசு கூடுதலாக நிதி தந்தது போன்ற மாயையை கவர்னர் கிரண்பேடி உருவாக்குகிறார்.

    மக்களிடையே இப்போது சகஜ வாழ்க்கை திரும்பி உள்ளது. மத வழிபாட்டு தலங்களை திறப்பது தொடர்பாக வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகிகளை அழைத்து பேசி உள்ளோம். அப்போது விதிமுறைகளை கடைப்பிடிப்பது தொடர்பாக அறிவுறுத்தி உள்ளோம். நாளை (திங்கட்கிழமை) முதல் ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்படும். அங்கும் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும். ஓட்டல்களில் வந்து தங்குபவர்கள் குறித்த விவரங்களை ஓட்டல் நிர்வாகிகள் அரசுக்கு முழுமையாக தருமாறு வலியுறுத்தி உள்ளோம்.

    புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் விரைவில் கூட உள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசுக்கு கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததும் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும்.

    பட்ஜெட்டில் சேர்க்க வேண்டிய அம்சங்கள் குறித்து எம்.எல்.ஏ.க்கள் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து உள்ளனர். கொரோனா தாக்குதல் காலமென்பதால் அரசு ஊழியர் பல்வேறு சமூக சமுதாய அமைப்பு தலைவர்களிடம் பட்ஜெட் குறித்து நேரடியாக கருத்து பெற முடியவில்லை. அவர்களை எழுத்துப்பூர்வமாக தர கேட்டு உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    புதுச்சேரி மாநிலத்தில் ஜிப்மர் மருத்துவமனை டாக்டர்கள் ஐந்து பேர் உள்பட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பக்கத்து மாநிலமான புதுச்சேரியில் மெல்லமெல்ல அதிகரித்து வருகிறது.

    இன்று ஜிப்மர் மருத்துவமனை டாக்டர்கள் உள்பட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    கொரோனா ஊரடங்கால் தொழில் பாதிக்கப்பட்டதால் எம்.பி.ஏ. பட்டதாரி ஒருவர் மூலிகை டீ விற்பனை செய்து வருகிறார்.
    புதுச்சேரி:

    புதுவை முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் சுரேஷ் சபாபதி. எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் சொந்தமாக செல்போன் சர்வீஸ் மற்றும் கம்ப்யூட்டர் பழுது பார்க்கும் கடை நடத்தி வந்தார்.

    கொரோனா ஊரடங்கால் இவரது தொழில் பாதிக்கப்பட்டது. இதனால், 3 மாதங்களாக வேலை இல்லாமல் கடையை மூடி வைத்தார்.

    வருமானம் இல்லாததால் வீட்டு வாடகை, கடை வாடகையை கொடுக்க முடியாத நிலை உருவானது.

    இதனையடுத்து மாற்று வேலைக்கு செல்லலாமா என்று சிந்தித்து தற்போது மக்களின் அத்தியாவசிய தேவையான எதிர்ப்பு சக்தி தரும் பானம் விற்க முடிவெடுத்தார்.

    கடந்த 10 நாட்களாக கடற்கரை சாலை அருகில் அதிகாலை 5 மணி முதல் தனது இருசக்கர வாகனத்தையே விற்பனையகமாக மாற்றி எதிர்ப்பு சக்தி பானம் விற்று வருகிறார்.

    இதுகுறித்து கடற்கரை சாலையில் விற்றுக்கொண்டிருந்த எம்.பி.ஏ. பட்டதாரி சுரேஷ் சபாபதி கூறியதாவது:-

    கொரோனா பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. என்னுடைய தொழில் முடங்கியதால் வாடகை மற்றும் வாழ வழி தேடி மக்களுக்கு தேவையான எதிர்ப்பு சக்தி பானத்தை விற்க முடிவு செய்தார்.

    இதில் மக்களை ஈர்க்கும் வகையில் சீரக நீருடன், தேன், இஞ்சி, புதினா, எலுமிச்சை ஆகியவற்றை கலந்து உடலில் எதிர்ப்பு சக்தியை கூட்டும் தேநீரை விற்க தொடங்கினேன்.

    தொடக்கத்தில் நிலைமை இப்படியாகி விட்டதே என்ற மன கஷ்டம் இருந்தது. ஆனாலும், ஏதாவது ஒரு வகையிலும் வருமானத்தை ஈட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாகூர் பகுதியில் பெய்த திடீர் மழையால் அறுவடை செய்ய சில நாட்களே உள்ள நிலையில் நெல் வயல்களில் தண்ணீர் புகுந்து சுமார் 500 ஏக்கர் நெற்பயிர்கள் பாதித்துள்ளது.

    பாகூர்:

    புதுவையில் கோடை வெயில் வாட்டி வதைத்த நிலையில் நேற்று மாலை திடீரென பாகூர் பகுதியில் மழை பெய்தது.

    குறிப்பாக பாகூர், கிருமாம்பாக்கம், நெட்டப் பாக்கம் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன பலத்த மழை பெய்தது.

    இந்த மழை நேற்று மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர் மழையாக பெய்தது. பாகூர் அளவில் மட்டும் 51 மில்லி மீட்டர் மழை பெய்து இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த மழையால் தாழ்வான பகுதிகளிலும், விவசாய நிலங்களிலும், நெற்பயிர்களிலும் மழைநீர் தேங்கி பாதிக்கப்பட்டுள்ளது.

    பாகூர், கரையாம்புத்தூர், கரிக்கலாம்பாக்கம், சேலியமேடு, அரங்கனூர், பரிக்கல்பட்டு ஆகிய பகுதிகளில் அறுவடை செய்ய சில நாட்களே உள்ள நிலையில் இந்த திடீர் மழையால் நெல் வயல்களில் தண்ணீர் புகுந்து சுமார் 500 ஏக்கர் நெற்பயிர்கள் பாதித்துள்ளது.

    இதனால் நெற்பயிர்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டு இருப்பதாக அப்பகுதி விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

    இந்த இடி-மின்னலுடன் கூடிய மழையால் மின் வினியோகம் இரவு முழுக்க நிறுத்தப்பட்டது. இந்த இடி மின்னலுக்கு பாகூர் பகுதியில் 40-க்கும் மேற்பட்ட இன்ஸ்பசினேடர்கள் பழுதாகியும் மின்கம்பி அறுந்து விட்டதாகவும் மின்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த மின் இணைப்பு துண்டிப்பால் பாகூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதி மக்கள் சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் இல்லாமல் அவதிக்குள்ளானார்கள்.

    இதனை சரி செய்யும் பணியில் நேற்று இரவு முதல் இன்று காலை வரையும் மின்துறை ஊழியர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் படிப்படியாக மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இரவு- பகலாக மின்துறை ஊழியர்கள் இப்பணியில் ஈடுபட்டது பொது மக்களிடையே பாராட்டுக்களை பெற்றுள்ளனர்.


    கிருமாம்பாக்கம் அருகே கொரோனா பாதித்த பகுதியை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேரில் பார்வையிட்டார்.
    பாகூர்:

    புதுவை மாநிலம் அபிஷேகப்பாக்கம், தவளக்குப்பம், பூரணாங்குப்பம், ஆகிய பகுதியை சேர்ந்த தலா ஒருவர் வீதம் 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதனையடுத்து அந்த பகுதியில் சீல் வைக்கப்பட்டு போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மதி கிருஷ்ணாபுரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் கணவன்-மனைவி, மகனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். உடனே அந்த பகுதியை சீல் வைத்தனர்.

    இந்த நிலையில் கிருமாம்பாக்கத்தை அடுத்த பிள்ளையார்குப்பம் பேட் பகுதியில் சென்னையில் பணிபுரிந்து வந்த வாலிபர் ஒருவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து கதிர்காமம் கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதனையடுத்து அந்த பகுதி சீல் வைக்கப்பட்டு போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப் பட்டது.

    இதுபற்றி தகவல் அறிந்த அமைச்சர் கந்தசாமி பிள்ளையார்குப்பம் கிராமத்தில் சென்று அங்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ள பகுதியை நேற்று ஆய்வு செய்தார். இந்த நிலையில் இன்று காலை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேரில் வந்து பார்வையிட்டார்.

    அங்கு வசித்து வரும் மக்களுக்கு கொரோனா பரிசோதனை, தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் நிவாரண உதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இதில் அமைச்சர் கந்தசாமி, கிருமாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரி டாக்டர் நாராயணன், பாகூர் தாசில்தார் குமரன், பஞ்சாயத்து ஆணையர் மனோகரன் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

    புதுவை அருகே மது பழக்கத்தை மனைவி கண்டித்ததால் கட்டிட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை குரும்பாபேட் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணபதி (வயது40) கட்டிட தொழிலாளி. இவருக்கு ராதிகா என்ற மனைவியும், 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

    கணபதிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. மேலும் அவர் சரியாக வேலைக்கும் செல்வதில்லை. இதனால் ராதிகா அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார். ஆனாலும் குடும்பம் நடத்த போதிய வருமானம் இல்லாததால் ராதிகா சிலரிடம் பணம் கடன் வாங்கியிருந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கணபதி குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது ஏற்கனவே கடன் இருக்கும் போது இப்படி குடித்துவிட்டு வருகிறீர்களே என அவரது மனைவி கண்டித்தார். மனைவி கண்டித்ததால் கணபதி வேதனையடைந்து சாப்பிடாமல் வீட்டின் மாடிக்கு சென்றார்.

    கோபம் தணிந்து சிறிது நேரம் கழித்து கணவர் சாப்பிட வருவார் என ராதிகா எதிர்பார்த்து இருந்தார். ஆனால் கணபதி வெகுநேரமாக வராததால் சந்தேகமடைந்து மாடிக்கு சென்று பார்த்தார். அப்போது இரும்பு பைப்பில் துப்பட்டாவால் கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு ராதிகா அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் இருந்து கணபதியை மீட்டு கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே கணபதி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீடாக புதுச்சேரிக்கு ரூ.247¾ கோடி வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது என்று கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவையில் அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தை வழங்க பொது நிதியை பயன்படுத்த கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் இதனால் ரிசர்வ் வங்கியில் கடன் வாங்கி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கவர்னர் கிரண்பெடி மீது அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் குற்றம் சாட்டி இருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    பொது நிதி என்பது அரசு ஊழியர்களின் பணம். அது அரசுக்கு சொந்தமானது அல்ல. அந்த பணத்தை எடுத்து மே மாதத்திற்கான சம்பளத்தை வழங்க அரசு ஒப்புதல் கேட்டது. ஆனால் அந்த பணத்தை டெபாசிட் செய்து விட்டு ரிசர்வ் வங்கியிடம் இருந்து பணம் பெற்று சம்பளம் வழங்க கவர்னர் அலுவலகம் கூறியது. நம்பிக்கையின் அடிப்படையில் வைத்திருக்கும் நிதி திசை திருப்பப்படாததை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    தற்போது புதுவை யூனியன் பிரதேசத்திற்கு டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதத்திற்கான சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டு தொகை ரூ. 247 கோடியே 75 லட்சம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது புதுவை யூனியன் பிரதேசத்தின் நிதிச்சுமையை குறைக்கும்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
    கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
    பாகூர்:

    புதுச்சேரியில் ஊரடங்கு தளர்வு ஏற்படுத்திய பிறகு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. ஜிப்மர் டாக்டர், அபிஷேகப்பாக்கத்தை சேர்ந்த கேண்டீன் ஊழியருக்குகொரோனா உறுதியானது. அவர்கள் ஏற்கனவே சிறப்பு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    தற்போது இவர்களுடன் தொடர்பில் இருந்த தவளக் குப்பம் ராமதாஸ் நகரை சேர்ந்த 34 வயது நபருக்கும், பூரணாங்குப்பம், மதி கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த தலா ஒருவருக்கும் என 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் வசித்து வந்த பகுதிகள் சீல் வைக்கப்பட்டு போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அரசு கொறடா அனந்தராமன் ஆகியோர் நேற்று காலை பூரணாங்குப்பம் கிராமத்திற்கு சென்று சீல் வைக்கப்பட்ட பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்பகுதி மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்கும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள காலங்களில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய உதவிகள் கிடைக்கவும், நோய் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    தவளக்குப்பம் மற்றும் மதி கிருஷ்ணாபுரத்தில் தலா ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பாகூர் தாசில்தார் குமரன், கிருமாம்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரி நாராயணன், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மனோகரன் ஆகியோர் தலைமையிலான ஊழியர்கள் அந்த பகுதிக்கு சீல் வைத்தனர். அந்த நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். அப்பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
    பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தங்கள் பள்ளி முதல்வர், துணை முதல்வர், தலைமை ஆசிரியர்களை தொடர்பு கொண்டு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை பெறலாம் என்று புதுவை பள்ளிக்கல்வி இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை பள்ளிக்கல்வி இணை இயக்குனர் குப்புசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஒத்திவைக்கப்பட்ட 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் வருகிற 15-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி வரை நடக்கிறது.

    பிளஸ்-1 மாணவர்களுக்கு கடந்த மார்ச் 26-ந் தேதி நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்ட பொதுத்தேர்வு வருகிற 16-ந் தேதி மாணவர்கள் படித்த பள்ளியிலேயே நடத்தப்பட உள்ளது.

    பிளஸ்-2 மாணவர்களுக்கு கடந்த மார்ச் 24-ல் நடந்த தேர்வுக்கு ஊரடங்கால் வர முடியாத மாணவர்களுக்கான மறு தேர்வு வருகிற 18-ந் தேதி ஏற்கனவே எழுதிய தேர்வு மையங்களில் நடக்கிறது.

    இந்த தேர்வுகளை எழுத உள்ள அனைத்து தனித்தேர்வர்களும் இன்று (வியாழக்கிழமை) மதியம் 2 மணி முதல் இணையதளத்தில் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    மாணவர்கள் தங்கள் பள்ளி முதல்வர், துணை முதல்வர், தலைமை ஆசிரியர்களை தொடர்பு கொண்டும் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை பெறலாம்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    புதுவை மாநிலம் காரைக்காலில் அரிசி ஆலை ஊழியர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்கால்:

    புதுவை மாநிலம் காரைக்கால் கைலாசநாதர் கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன். (வயது 50). அந்த பகுதியில் உள்ள அரிசி ஆலையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முகமது ரியாஸ் என்பவருக்கும் பொதுக்குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக முன்விரோதம் உள்ளது. இதனால் 2 பேரும் அடிக்கடி மோதி உள்ளனர்.

    நேற்று இரவு மோகன் அந்த பகுதியில் உள்ள குடிநீர் தொட்டிக்கு மோட்டார் மூலம் தண்ணீர் ஏற்ற வந்தார். அப்போது அங்கு வந்த முகமது ரியாசுக்கும், மோகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அது மோதலாக வெடித்தது.

    ஆத்திரம் அடைந்த முகமது ரியாஸ், அவரது மனைவி பதுர்நிஷா ஆகியோர் மோகனை அங்கு உள்ள சுவற்றில் மோத செய்தனர். இதில் அவர் நிலைகுலைந்தார். பின்னர் அவரை 2 பேரும் காலால் மிதித்தனர். இதனை தடுக்க வந்த மோகனின் தந்தை பாலசுப்பிரமணியனையும் அவர்கள் தாக்கினர். இதில் தந்தை- மகனும் மயங்கினர்.

    இதனை பார்த்ததும் முகமது ரியாஸ் அங்கிருந்து மனைவியுடன் தப்பி ஓடிவிட்டார். மயங்கி கிடந்த 2 பேரையும் அக்கம் பக்கம் உள்ளவர்கள் தூக்கி கொண்டு காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மோகனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். பாலசுப்பிரமணியனுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து காரைக்கால் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து முகமது ரியாஸ், அவரது மனைவியை தேடி வருகிறார்கள்.
    புதுவையில் ஆரம்ப கட்டத்தில் ஒற்றை இலக்கத்தில் இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது படிப்படியாக அதிகரித்து 100-ஐ எட்டும் நிலையை அடைந்துள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை கதிர்காமம் அரசு கொரோனா மருத்துவமனை, ஜிப்மரில் ஏற்கனவே 90 நோயாளிகள் சிகிச்சை பெற்றனர்.

    இதில் 33 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தற்போது 57 பேர் நேற்றைய தினம் சிகிச்சையில் இருந்தனர்.

    புதுவையின் மற்ற பிராந்தியங்களான காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்று நோயாளிகள் யாரும் இல்லை.

    இந்த நிலையில் இன்றைய தினம் புதுவையில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்தவர்கள்.

    இதனால் புதுவையில் ஒட்டுமொத்தமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது.

    தற்போது 64 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஊரடங்கு தளர்விற்கு பிறகு கொரோனா தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

    ஆரம்ப கட்டத்தில் ஒற்றை இலக்கத்தில் இருந்த எண்ணிக்கை தற்போது படிப்படியாக அதிகரித்து 100-ஐ எட்டும் நிலையை அடைந்துள்ளது.

    புதுச்சேரியில் ரேசன் கார்டுதாரர்களுக்கு 3 மாதங்களுக்கு இலவசமாக அரிசி வழங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
    புதுடெல்லி:

    புதுச்சேரி மாநிலத்தில் ரேசன் கார்டுதார்களுக்கு இலவசமாக அரிசி வழங்குவதற்கு பதிலாக, அவர்களின் வங்கிக் கணக்கில் பணமாக வழங்க வேண்டும் என்று ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து முதல்வர் நாராயணசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

    இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசின் கொள்கை முடிவில் ஆளுநர் தலையிட முடியாது என்று புதுச்சேரி அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. 3 மாதங்களுக்கு இலவச அரிசி தர ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு விளக்கம் அளித்தது.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஜூன் 23ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி மத்திய அரசு, புதுவை ஆளுநர் கிரண் பேடி ஆகியோருக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
    ×