search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை முதலமைச்சர் நாராயணசாமி
    X
    புதுவை முதலமைச்சர் நாராயணசாமி

    தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசிப்போருக்கு நிவாரண உதவி- நாராயணசாமி உறுதி

    புதுச்சேரியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசிப்போருக்கு அரசு சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
    புதுச்சேரி:
     
    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதுவையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மெத்தனமாக இருக்க கூடாது. ஏனெனில் கிராமப்புறத்தில் தற்போது ஊடுருவ ஆரம்பித்து உள்ளது. இப்போது தனிமைப்படுத்தப்பட்ட பகுதியும் 25 மீட்டர் அளவுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்போருக்கு அரசு சார்பில் உதவிட துணை சபாநாயகர் எம்.என்.ஆர்.பாலன் என்னிடம் வலியுறுத்தினார். அவர்களுக்கு முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து அரிசி, கோதுமை, எண்ணெய், சர்க்கரை போன்றவற்றை வழங்க கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

    இந்த காலகட்டத்தில் அரசின் சிக்கன நடவடிக்கை காரணமாக அரசு ஊழியர்களுக்கு மார்ச், ஏப்ரல், மே மாத சம்பளத்தை குறைக்காமல் கொடுத்துள்ளோம். மற்ற மாநிலங்களில் குறைவாகத்தான் கொடுத்துள்ளனர். தற்போது மத்திய அரசு வழங்கிய சரக்கு மற்றும் சேவை வரிக்கான இழப்பீட்டு தொகையை கொண்டு ரிசர்வ் வங்கியில் வாங்கிய கடனை அடைத்து உள்ளோம். நமக்கு தர வேண்டிய நிதியை தான் மத்திய அரசு தந்துள்ளது. கூடுதலாக ஒன்றும் தரவில்லை. ஆனால் மத்திய அரசு கூடுதலாக நிதி தந்தது போன்ற மாயையை கவர்னர் கிரண்பேடி உருவாக்குகிறார்.

    மக்களிடையே இப்போது சகஜ வாழ்க்கை திரும்பி உள்ளது. மத வழிபாட்டு தலங்களை திறப்பது தொடர்பாக வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகிகளை அழைத்து பேசி உள்ளோம். அப்போது விதிமுறைகளை கடைப்பிடிப்பது தொடர்பாக அறிவுறுத்தி உள்ளோம். நாளை (திங்கட்கிழமை) முதல் ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்படும். அங்கும் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும். ஓட்டல்களில் வந்து தங்குபவர்கள் குறித்த விவரங்களை ஓட்டல் நிர்வாகிகள் அரசுக்கு முழுமையாக தருமாறு வலியுறுத்தி உள்ளோம்.

    புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் விரைவில் கூட உள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசுக்கு கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததும் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும்.

    பட்ஜெட்டில் சேர்க்க வேண்டிய அம்சங்கள் குறித்து எம்.எல்.ஏ.க்கள் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து உள்ளனர். கொரோனா தாக்குதல் காலமென்பதால் அரசு ஊழியர் பல்வேறு சமூக சமுதாய அமைப்பு தலைவர்களிடம் பட்ஜெட் குறித்து நேரடியாக கருத்து பெற முடியவில்லை. அவர்களை எழுத்துப்பூர்வமாக தர கேட்டு உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×