search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vanur"

    வானூர் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி வாலிபர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #bombrange

    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறைகாசிப் பாளையத்தை சேர்ந்தவர் உதயகுமார்(வயது 38). இவர் அதேபகுதியில் செங்கல்சூளை நடத்தி வருகிறார்.

    இவர் தொழில் சம்பந்தமாக பணம் வசூல் செய்ய புதுவை சென்றிருந்தார். பின்னர் நேற்று இரவு உதயகுமார் புதுவையில் இருந்து காசிப்பாளையத்துக்கு ரூ.50 ஆயிரம் பணத்துடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அவர் நள்ளிரவு 12 மணிக்கு காசிப்பாளையம் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது உதயகுமாரை மர்மகும்பல் திடீரென்று வழிமறித்தனர்.

    அவர்களை பார்த்ததும் உதயகுமார் அதிர்ச்சி அடைந்தார். உடனே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அருகில் உள்ள முந்திரிதோப்புக்குள் ஓடினார். அங்கிருந்து உதயகுமார் தனது உறவினர் மற்றும் நண்பர்களுக்கு செல்போன் மூலம் மர்மகும்பல் வழிமறித்த தகவலை தெரிவித்தார்.

    உடனே அவரது உறவினர் மணிபாலன்(28) உள்பட 4 பேர் சம்பவ இடத்துக்கு வந்தனர். மர்மகும்பலை பிடிக்க முயன்றனர். இதைபார்த்த மர்மகும்பல் அவர்கள் மீது சரமாரியாக வெடிகுண்டு வீசினர். இதில் உதயகுமாரின் உறவினர் மணிபாலன்(28) என்பவர் படுகாயம் அடைந்தார். அவரை புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அவரது உறவினர்கள் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து உதயகுமார் வானூர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வெடிகுண்டு வீசிய மர்மகும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

    தொழில் போட்டி காரணமாக வெடிகுண்டு வீச்சு சம்பவம் நடந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். #bombrange

    வானூர் அருகே நள்ளிரவில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட காடுவெட்டி குரு சிலை அகற்றப்பட்டதால் ஆத்திரம் அடைந்த பாமக தொண்டர்கள் 2 பேர் தீக்குளிக்க முயன்றனர்.

    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ளது கடைபேரிக்குப்பம். இந்த பகுதியில் பா.ம.க. கொடிக்கம்பம் உள்ளது. இதன் பக்கத்தில் 2 சிங்கங்கள் சிலை அமைப்பதற்கு பீடத்தை பா.ம.க.வினர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கட்டினார்கள். ஆனால் இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இந்த பீடத்தை போலீசார் இடித்து அகற்றினர்.

    இந்தநிலையில் நள்ளிரவு 1 மணி அளவில் கடைப்பேரி குப்பத்தை சேர்ந்த பா.ம.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் முத்துக்குமரன் தலைமையில் பா.ம.க.வினர் கொடிக் கம்பம் முன்பு திரண்டனர். இங்கு பள்ளம் தோண்டி 6 அடி உயரத்துக்கு கிரானைட் கற்கள் அமைத்தனர். அதில் மறைந்த வன்னியர்சங்க தலைவர் காடுவெட்டி குருவின் மார்பளவு சிலையை வைத்தனர். அந்த சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர்கள் எழிலரசி, திருமணி, ஜோசப் செல்வராஜ், சப்-இன்ஸ் பெக்டர்கள் பரசுராமன், சுரேஷ் முருகன், தனிப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் நாகராஜ், வானூர் தாசில்தார் ஜோதிவேல் மற்றும் வருவாய் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்தனர். அனுமதி இல்லாமல் சிலை வைக்கக் கூடாது என்று கூறினர். இதனால் பா.ம.க. வினருக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது.

    இதையறிந்த அந்த பகுதி பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். அவர்கள் சிலையை அகற்ற விட மாட்டோம் என கூறினர். அப்போது பா.ம.க. தொண்டர்கள் அன்பரசு, ரகுராஜ் ஆகிய 2 பேரும் திடீரென தங்களது உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். சிலையை அகற்றினால் தற்கொலை செய்வோம் என கூறினர். அதிர்ச்சியடைந்த போலீசார் அவர்கள் 2 பேரின் உடலிலும் தண்ணீரை ஊற்றினர்.

    அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட சிலை அகற்றப்படும். நீங்கள் கலைந்து செல்லுங்கள் என கூறினர். ஆனால் சிலையை அகற்றவிடமாட்டோம் என கூறி பா.ம.க.வினர் மற்றும் பொதுமக்கள் அங்கேயே கோ‌ஷங்கள் எழுப்பியவாறே நின்றனர்.

    போலீசார் திடீரென தடியடி நடத்தினர். இதில் நாலாபுறமும் அலறியடித் துக் கொண்டு பா.ம.க.வினர் மற்றும் பொதுமக்கள் சிதறி ஒடினர். பின்னர் சிலையை போலீசார் அகற்றினர்.

    போலீசார் தடியடி நடத்தியதில் கடைப் பேரிகுப்பத்தை சேர்ந்த முத்துலட்சுமி, அன்பரசன் உள்பட 8 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் வானூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து வானூர் போலீசில் கிராம நிர்வாக அதிகாரி மீனாட்சி புகார் செய்தார். இதையொட்டி முன்னாள் பா.ம.க. ஒன்றிய செயலாளர் முத்துக்குமரன் உள்பட 10 பேர் மீது வழக்குபதிவு செய்தனர்.

    இதில் சிலம்பரசன் (வயது 24), மணிகண்டன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவானவர்களை தேடி வருகின்றனர். போலீசார் வீடு வீடாக சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் ஆண்கள் தலைமறைவாகி விட்டனர்.

    பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமே வீட்டில் உள்ளனர். அவர்களும் வெளியேவராமல் வீட்டுக்குள்ளே முடங்கியுள்ளனர். இதனால் அந்த கிராமமே வெறிச்சோடி காணப்படுகிறது.

    கடைபேரிக்குப்பம் புதுவை மாநிலத்தை ஒட்டி உள்ள பகுதி என்பதால் சேதுராப்பட்டு சப்-இன்ஸ் பெக்டர் முத்துக்குமாரசாமி தலைமையில் கரசூர் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் கடை பேரிக்குப்பம் பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

    வானூர் அருகே தி.மு.க. பிரமுகர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து ரூ.4 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ளது பூத்துறை கிராமம். இந்த பகுதியை சேர்ந்தவர் முரளி (வயது 52). இவர் வானூர் ஒன்றிய தி.மு.க. செயலாளராக உள்ளார். இவரது மனைவி உஷா (48).

    முரளியுடன் அவரது தந்தை திருக்காமு (55), தாய் வசந்தி (75) ஆகியோரும் வசித்து வருகிறார்கள். இவர்கள் வசிக்கும் வீடு பழமை வாய்ந்த அரண்மனை போன்ற பல அறைகளை கொண்டதாகும். வீட்டின் பின்புறம் சவுக்கு தோப்பும், தென்னந்தோப்பும் உள்ளது.

    நேற்று இரவு வீட்டின் வரண்டா பகுதியில் முரளியும், அவரது தந்தை திருக்காமும் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். வீட்டில் உள்ள மற்றொரு அறையில் உஷாவும், வசந்தியும் தூங்கினர்.

    இந்த நிலையில் நள்ளிரவு 2 மணி அளவில் மர்ம மனிதன் தோட்டத்தின் வழியாக வந்து வீட்டின் பின்பக்க கதவை கடப்பாரையால் உடைத்தான்.

    பின்னர் வீட்டுக்குள் புகுந்து அங்கு மேஜை டிராயரில் இருந்த ரூ.65 ஆயிரத்தை திருடினான். அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 73 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்தான்.

    அதன் பிறகு உஷா தூங்கி கொண்டிருந்த அறைக்கு சென்றான். அவரின் கழுத்தில் கிடந்த 15 பவுன் தாலிச்செயினை அறுத்தான். திடுக்கிட்டு எழுந்த உஷா வீட்டுக்குள் மர்ம மனிதன் நிற்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். திருடன்... திருடன்... என கூச்சலிட்டார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு வசந்தி மற்றும் முரளி, திருக்காமு ஆகியோர் எழுந்து ஓடி வந்தனர். அதற்குள் நகையை பறித்த கொள்ளையன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான். கொள்ளை போன நகை- பணத்தின் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும்.

    இது குறித்து வானூர் போலீசில் முரளி புகார் செய்தார். உடனே இன்ஸ்பெக்டர் எழிலரசி, சப்- இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், பரசுராமன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் இந்த கொள்ளையில் துப்பு துலக்க விழுப்புரத்தில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவான ரேகைகளை பதிவு செய்தனர்.

    கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம மனிதன் ஜட்டி மட்டும் அணிந் திருந்ததாக கூறப்படுகிறது.

    கொள்ளையனை போலீசார் தேடிவருகின்றனர். பூத்துறை கிராமத்தில் அடிக்கடி வழிப்பறி சம்பவங்களும், ஆடு-மாடுகள் திருட்டுப்போவதாகவும் அந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    எனவே, அந்த கிராமத்தில் இரவு நேரத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #Tamilnews
    ×