என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கொரோனா பரவாமல் தடுப்பதில் கூட்டு பொறுப்பு உள்ளது. எனவே முகக்கவசம், சமூக இடைவெளி, பொது சுகாதாரம் ஆகிய 3 விஷயங்களை கடைபிடியுங்கள் என கவர்னர் கிரண்பேடி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரி மக்களுக்கு மீண்டும் வேண்டுகோள் முன்வைக்கிறேன். இதில் முக்கியமாக 3 விஷயங்களை கடைபிடியுங்கள். முகக்கவசம் அணியுங்கள், சமூக இடைவெளியை பொது இடங்களில் கடைபிடியுங்கள், அனைத்து இடங்களிலும் சுகாதாரத்தை முழுமையாக பேணுங்கள். முக கவசம் உங்களையும், மற்றவர்களையும் காக்கும்.

    காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட் என பொது இடங்களில் சமூக இடைவெளி அவசியம் கடைபிடியுங்கள். வேகமாக இடித்துப் பிடித்துக் கொண்டு செல்ல வேண்டாம். பொறுமையுடன் இடைவெளியை கடைபிடித்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்லுங்கள். மார்க்கெட்டுகளில் இது முக்கியம். முக்கியமாக பொது சுகாதாரத்தையும், தனிநபர் சுகாதாரத்தையும் அனைத்து இடத்திலும் பேணி பாதுகாக்க வேண்டும்.

    நாம் தற்போது கடினமான சூழலில் இருக்கிறோம். தடுப்பு நடவடிக்கை அவசியம். கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதில் அனைவருக்கும் கூட்டு பொறுப்பு உள்ளது. நமக்கு பாதுகாப்பு மிக அவசியம். தொடர்ந்து தனிநபர் சார்ந்தும், சமூகம் சார்ந்தும் கூட்டு பொறுப்புடன் செயல்படுங்கள். ஏனெனில் நாட்டின் சில பகுதிகளில் உள்ள தகவல்கள் பயமுறுத்துகின்றன. அதனால் தடுப்பு தொடர்பான அனைத்து முயற்சிகளையும் பின்பற்ற வேண்டும். கடுமையான தடுப்பு நடவடிக்கைகள் இருந்தால் தான் மக்களை காப்பாற்ற முடியும்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
    கொரோனாவை தடுக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். மக்களின் உயிரை காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
    புதுச்சேரி :

    புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று சட்டசபை வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    புதுவை மாநிலத்தில் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்கும் பணிக்காக டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்கள் கூடுதலாக தேவைப்படுகின்றனர். இதுகுறித்து அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவிடம் கலந்து பேசி ஒப்பந்த அடிப்படையில் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்களை நியமிக்க உள்ளேன். இதுதொடர்பான கோப்பு ஏற்கனவே தயாராக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து டாக்டர்களை பெறவும் அரசு நடவடிக்கை எடுக்கும்.

    புதுவை மாநிலத்தை பொறுத்தவரை தேவையான மருந்துகள், மருத்துவ பரிசோதனைகள் செய்ய தேவையான உபகரணங்கள் வாங்க அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆர்.டி.கிட்டுகள் வாங்க வேண்டிய நிலையில் உள்ளோம்.

    இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு உமிழ்நீர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்னும் அதிக பரிசோதனைகள் செய்தால் தான் கொரோனா நோயாளிகளை கண்டறிய முடியும். எனவே முதல்-அமைச்சரின் கொரோனா நிவாரண நிதியிலிருந்து மருத்துவ உபகரணங்கள் வாங்க நிதி ஒதுக்க உள்ளோம். புதுவையில் ஒரு சில கடைகளில் அரசின் விதிமுறைகள் பின்பற்றப்படுவது இல்லை. அந்த கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா வேகமாக பரவும் காலம். இதனை கட்டுப்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். பிரதமரின் உரைக்கு பின்னர் சில கடுமையான கட்டுப்பாடுகளை அரசு எடுக்கும் நிலை ஏற்படும். அதற்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும். மக்களின் உயிர் மிக முக்கியம். அதை காப்பாற்ற வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. அதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்கும் பொதுமக்கள் இதனை பொறுத்துக் கொள்ள வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மலைவாழ் மக்களின் உரிமையை காக்க மருத்துவம் மற்றும் முதுநிலை மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அரசு சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். 
    புதுச்சேரியில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த எண்ணிக்கை 193 ஆக உயர்ந்துள்ளது.
    தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன. இன்று மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்ய்ப்பட்டுள்ளதால் மொத்த எண்ணிக்கை 193 ஆக உயர்ந்துள்ளது.

    புதுச்சேரியில் வழிபாட்டு தலங்களில் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கவர்னர் கிரண்பேடி வலியுறுத்தி உள்ளார்.
    புதுச்சேரி:

    கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன்படி கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது 5-ம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கடந்த 8-ந் தேதி முதல் மதவழிபாட்டுத் தலங்களில் பக்தர்களை அனுமதிக்க மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அனுமதி அளித்தது.

    அதன்பேரில் புதுச்சேரியில் கடந்த 8-ந் தேதி முதல் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். வழிபாட்டுத் தலங்களுக்குள் நுழையும் முன்பு கை, கால்களை கழுவுதல், முக கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்களை பக்தர்கள் கடைபிடித்து வருகின்றனர்.

    இதுகுறித்து புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி சமூக வலைத்தளத்தில் ஒரு ஆடியோ மூலம் கருத்து வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    தற்போது வழிபாட்டுத்தலங்கள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன. புதுவையில் வாழும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் அனைவருக்கும் நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். அனைவரும் வழிபாட்டுத் தலங்களுக்கு செல்லும்போது கண்டிப்பாக முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது அவசியம். இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த மசூதிக்கு செல்லும்போது இதனை பின்பற்ற வேண்டும். தொழுகை நடத்தும் போது பயன்படுத்தப்படும் விரிப்புகளை வீட்டிலிருந்தே கொண்டு வந்து எடுத்துச் செல்வது நல்லது.

    இதுதொடர்பாக ஏற்கனவே அமைச்சர் ஷாஜகான் வக்பு வாரிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளார். இதேபோல் தேவாலயங்களிலும், கோவில்களிலும் வழிபாடு நடத்தும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்களில் குளிர்சாதன வசதிகளை பயன்படுத்த வேண்டாம். அரசின் விதிமுறைகளுக்கு ஒத்துழைக்கும் அனைவருக்கும் எனது நன்றியை கூறிக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    எலக்ட்ரிக் கடையில் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்கால்:

    காரைக்கால் திருநள்ளாறு சாலையில் திருவேங்கடம் என்பவர் எலக்ட்ரிக் கடை நடத்தி வருகிறார். இவருடைய செல்போனுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் மர்ம அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய மர்மநபர், ‘நீ கடை நடத்தும் இடம் அரசுக்கு சொந்தமானது. இதுகுறித்து புகார் தெரிவிக்காமல் இருக்க வேண்டுமானால் ரூ. 50 ஆயிரம் உடனடியாக தர வேண்டும் என கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் திருவேங்கடம் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருவேங்கடத்துக்கு பேசிய செல்போன் எண் மூலம் விசாரணை நடத்தியதில், காரைக்கால் நகர பகுதியை சேர்ந்த ரபீக் (வயது 36), இளையராஜா (34) சுதன் (36) என்பது தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது இனியும் நீடித்தால் புதுச்சேரியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி சட்டசபையில் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவின் தளர்வுகள் விலக்கி கொள்ளப்பட்டன. இந்த நிலையில் புதுவையில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதே நிலை நீடித்தால் அடுத்த மாதத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகமாகிவிடும். தமிழகத்திலும் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. முத்தியால்பேட்டையை சேர்ந்த முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது உடல் அரசு சார்பில் பாதுகாப்பாக தகனம் செய்யப்படும்.

    கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கிறதோ, அதனை பின்பற்றி புதுச்சேரியிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது சுகாதாரத்துறை செயலாளர் பிரசாந்த்குமார் பாண்டா, இயக்குனர் மோகன் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    அதையடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்போது அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

    பின்னர் கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளையும், வெளிப்புற சிகிச்சைக்காக வரும் நோயாளிகளையும் தனித்தனியாக அமரவைத்து பரிசோதனை செய்து அனுமதிக்குமாறு டாக்டர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து அவர்களுக்கு வழங்கப்படும் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

    அதைத்தொடர்ந்து ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது சுகாதாரத்துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

    எய்ம்ஸ் தேர்வு எழுத வருபவர்கள் ஹால் டிக்கெட்டை அனுமதி சீட்டாக பயன்படுத்தலாம் என்று புதுவை கலெக்டர் அருண் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி கலெக்டர் அருண் விடுத்துள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கொரோனா தொற்றை தடுக்க ஊரடங்கு அமலில் இருந்து வரும் நிலையில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் தள்ளி வைக்கப்பட்ட எய்ம்ஸ் நுழைவுத்தேர்வு இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. புதுச்சேரியை தேர்வு மையமாக தேர்ந்தெடுத்துள்ள பிற மாவட்ட மற்றும் மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் தங்களது ஹால் டிக்கெட்டை புதுச்சேரி எல்லையை கடப்பதற்கான அனுமதி சீட்டாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

    காவல்துறையினரும், எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மற்றும் அலுவலர்களும் தேர்வு எழுத வருபவர்களை அனுமதிக்க வேண்டும். அதேபோல் வருகிற 14, 21, 22, 26 ஆகிய தேதிகளில் போஸ்ட்கிராஜுவட் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் எஜுகேசன் ரிசர்ச் தேர்வு எழுத வருவோரும் ஹால் டிக்கெட்டை அனுமதி சீட்டாக பயன்படுத்தலாம்.

    இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
    காம்பவுண்டு சுவர் கட்டுவது தொடர்பாக நடந்த தகராறில் 2 பேர் காயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கத்தை அடுத்த பனித்திட்டு கெங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராம மூர்த்தி. இவரது மனைவி மல்லிகா.

    இவருக்கும் இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த கோர்ட்டு உதவியாளரான கணேசன் என்பவருக்கும் காம்பவுண்டு சுவர் கட்டுவது சம்பந்தமாக தகராறு இருந்து வந்தது. தனது இடத்தில் எப்படி சுவர் கட்டலாம் என மல்லிகா அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று மல்லிகாவுக்கும், கணேசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனை மல்லிகாவின் மருமகனான ஏழுமலை (வயது48) ஆட்டோ டிரைவர் தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த கணேசன், ஏழுமலையிடம் தகராறு செய்தார்.

    மேலும் ஆபாசமான வார்த்தைகளால் திட்டி கீழே கிடந்த கல்லால் தாக்கினார். இதில் இருவரும் தாக்கி கொண்டதில் ஏழுமலைக்கும் கணேசனுக்கும் காயம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் கிருமாம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

    பின்னர் இதுகுறித்து ஏழுமலையும், கணேசனும் தனித்தனியாக கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வட்டிக்கடையில் கவரிங் நகை கொடுத்து ரூ.1 லட்சம் மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    மரக்காணம்:

    கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 50). இவர் மரக்காணம் பஸ் நிலையம் அருகில் அடகு கடை நடத்தி வருகிறார். நேற்று சாமிநாதன் கடையில் இருந்து வெளியே சென்றார். கடையில் அவரது மனைவி இருந்தார்.

    அப்போது ஒருவர் 41 கிராமில் செயின் ஒன்று கொண்டு வந்தார். இந்த நகையை வைத்து கொண்டு ரூ. 1 லட்சம் கேட்டார். சாமிநாதன் மனைவி நகையை வாங்கிக்கொண்டு ரூ.1 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார்.

    இதையடுத்து கடைக்கு வந்த மர்ம நபர் பணத்தை வாங்கி கொண்டு சென்று விட்டார்.

    பின்னர் கடைக்கு சாமிநாதன் வந்தார். அப்போது நகையை சோதனை செய்தார். அப்போது அந்த செயின் கவரிங் நகை என்று தெரிந்தது. இதனால் சாமிநாதன் அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து சாமிநாதன் மரக்காணம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து வழக்கு பதிவு செய்து, கடையில் இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை கொண்டு ஆய்வு செய்தனர். மோசடி செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுவையில் மின்துறை ஊழியர்களுடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டக்குழுவினர் போராட்டங்களை தள்ளி வைத்துள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவையில் மின் வினியோகத்தை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை பொறியாளர்கள், ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனால் சங்க நிர்வாகிகளை அழைத்து முதல்-அமைச்சர் நாராயணசாமி, மின்துறை அமைச்சர் கமலக்கண்ணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சட்டசபை கமிட்டி அறையில் நடந்த பேச்சு வார்த்தையில் தலைமைச் செயலர் அஸ்வனிக்குமார், மின்துறை செயலர் தேவேஷ்சிங், கண்காணிப்பு பொறியாளர்கள் முரளி, சண்முகம், ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    மின்துறை பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழுவின் தலைவர் ராஜேந்திரன், பொதுச்செயலர் வேல்முருகன், பொருளாளர் மதிவாணன், ஆலோசகர் ராமசாமி, செயல் தலைவர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    மின் வினியோகத்தை தனியார் மயமாக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என போராட்டக்குழுவின் நிர்வாகிகள் கேட்டுக் கொண்டனர்.

    பொதுமக்கள் பாதிக்கும் வகையில் போராட்டம் நடத்த வேண்டாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. போராட்டக்குழுவின் நிர்வாகிகள் கூறும்போது, புதுவையில் மின் வினியோகத்தை தனியார் மயமாக்குவதை அரசு ஏற்காது என முதல்-அமைச்சரும், அமைச்சரும் தெரிவித்தனர். இதுகுறித்து, பிரதமர், மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆகியோருக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பி உள்ளதாகவும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கடிதம் அனுப்ப உள்ளதாகவும் முதல்-அமைச்சர் தெரிவித்தார்.

    சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றவும் உறுதி அளிக்கப்பட்டது. எனவே போராட்டங்களை வருகிற 18-ந்தேதி வரை தள்ளிவைப்பது என முடிவெடுத்துள்ளோம் என தெரிவித்தனர்.


    புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அரசு மருத்துவமனையில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
    புதுச்சேரி:

    புதுவை இந்திராகாந்தி அரசு மருத்துவமனைக்கு தமிழகத்தில் இருந்து வேறு மருத்துவ காரணங்களுக்காக சிகிச்சை பெற்று வந்தவர் இறந்தார். அவரது உடலை பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அரசு மருத்துவமனையில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

    மருத்துவமனை முழுவதும் உடனடியாக கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.

    அதன்படி மருத்துவமனை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மருத்துவமனையில் அனைத்து வார்டுகளையும் பார்வையிட அமைச்சர், அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    பின்னர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். ஆய்வின் பொது சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார், இந்திய இயன்முறை மருத்துவ இயக்குனர் ராமுலு, மருந்தியல் துறைத் தலைவர் ரமேஷ், மருத்துவ கண்காணிப்பாளர் வாசுதேவன், உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ரவி ஆகியோர் உடனிருந்தனர்.

    முதல்-அமைச்சர் தலைமையில் நடந்த கூட்டத்தில் கொரோனா தொற்றினால் இறக்கும் நோயாளிகளின் உடலை மத்திய அரசு விதிமுறைகளின்படி அடக்கம் செய்ய வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது.

    இதன்படி அரசு மருத்துவமனையில் இறந்த தமிழக பகுதியை சேர்ந்தவரின் உடலை அடக்கம் செய்ய அமைச்சர் உத்தரவிட்டார்.

    உடலை அடக்கம் செய்வதற்கான அங்கிகளையும், மருத்துவ உபகரணங்களையும் அமைச்சர் பார்வையிட்டார்.

    மேலும் கலெக்டர் அருணை தொடர்புகொண்ட அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், வருவாய், சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை ஊழியர்களின் மூலம் இறந்தவரின் உடலை அரசு வழிகாட்டுதலின்படி பாதுகாப்பாக அடக்கம் செய்ய உத்தரவிட்டார்.

    மருத்துவ படிப்புகளில் உரிய இடஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்காதது சமூக நீதிக்கு எதிரானது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறி உள்ளார்.
    புதுச்சேரி:

    மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு மாநிலங்கள் தரும் இடங்களில் ஓபிசிக்கு 50 சதவீதம் கோரி நீதிமன்றம் செல்வோம் என்று  புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறி உள்ளார்.

    உரிய இடஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்காதது சமூக நீதிக்கு எதிரானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    ஒவ்வொரு குடும்பத்திலும் 5 கிலோ அரிசி வழங்கியதை தவிர மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை என்றும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் தவறான நடவடிக்கையால் புதுச்சேரியின் பொருளாதாரம் பாதிப்பட்டுள்ளதாக புதுச்சேரி முதல்வர்  நாராயணசாமி கூறி உள்ளார்.
    ×