என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கோரிமேடு, முள்ளோடை, மதகடிப்பட்டு, கனகசெட்டிக்குளம் ஆகிய எல்லைகள் மூடப்பட்டன. போலீசாரின் கெடுபிடியால் தமிழகத்தில் இருந்து வந்த வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.
    புதுச்சேரி:

    உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் நோயின் தாக்கம் குறையாததால் அடுத்தடுத்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தற்போது 5-வது கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது.

    முதன் முதலில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது மாநில எல்லைகள் மூடப்பட்டன. தமிழக பகுதியில் இருந்து புதுவைக்கு வரும் 80-க்கும் மேற்பட்ட குறுக்கு சாலைகளும் சீல் வைக்கப்பட்டன. அதேநேரத்தில் மருத்துவம் மற்றும் அத்தியாவசிய பணிகளுக்கான வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.

    இதன்பின் ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், மாநில எல்லைகளில் கெடுபிடிகள் தளர்த்தப்பட்டது. புதுவையில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் 10-க்கும் குறைவாகவே இருந்த கொரோனா பாதிப்பு, ஊரடங்கு தளர்வுக்குப் பின் வேகமெடுக்க ஆரம்பித்தது. தற்போது தினமும் 10-க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர். அதன்படி புதுவை மாநிலத்தில் நேற்று வரை 245 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்தநிலையில் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் புதுவைக்கு திரும்புபவர்களால் கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருவதாகவும், இதேநிலை நீடித்தால் அடுத்த மாதத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஆயிரத்தை தொடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்தனர்.

    இதற்கிடையில் சென்னையில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த நாளை (வெள்ளிக்கிழமை) முதல் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இதனால் சென்னையில் வசித்து வரும் புதுவையை சேர்ந்தவர்கள் சொந்த ஊருக்கு வரலாம் என்பதால் அவர்கள் மூலம் தொற்று பரவாமல் நடவடிக்கை எடுப்பது குறித்து அரசு ஆலோசனை நடத்தியது. இதையடுத்து மாநில எல்லைகளை சீல் வைப்பது, இ-பாஸ் வைத்திருந்தாலும் சென்னையில் இருந்து வருபவர்களுக்கு அனுமதி இல்லை. கடலூர், விழுப்புரத்தில் இருந்து மருத்துவ தேவைக்காக வருபவர்களை மட்டும் அனுமதிப்பது, மற்றவர்களை அனுமதிக்கக் கூடாது என முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டார்.

    இதன் காரணமாக நேற்று அதிகாலை முதல் புதுவை மாநில எல்லைகளான கோரிமேடு, முள்ளோடை, மதகடிப்பட்டு, கனகசெட்டிக்குளம் ஆகிய நுழைவுவாயில்கள் மூடப்பட்டன. புதுவை - திண்டிவனம் சாலையில் உள்ள கோரிமேடு எல்லையில் தமிழகத்தில் இருந்து வந்த பொதுமக்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்களில் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இ-பாஸ் வைத்திருப்பவர்களிடம் விசாரித்து சரியான காரணம் இல்லாமல் இருப்பது தெரியவந்தால் அவர்களை திருப்பி அனுப்பினர். இதனால் எல்லை பகுதியில் சுமார் 2 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ஒரு சிலர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் புதுவைக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.

    மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளுக்காக இ-பாசுடன் வந்தவர்களிடம் சோதனை நடத்தப்பட்டது. மருத்துவ சிகிச்சைக்கான உரிய ஆவணங்கள் வைத்திருந்தால் மட்டுமே அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அந்த வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

    புதுச்சேரி - கடலூர் சாலையில் முள்ளோடை எல்லையில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் தலைமையில், போலீஸ் சூப்பிரண்டுகள் சுப்ரமணியன், ஜிந்தா கோதண்டராமன், இன்ஸ்பெக்டர்கள் வரதராஜன், தனசேகரன், தன்வந்திரி மற்றும் போலீசார், மருத்துவக்குழுவினர் எல்லையை மூடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கடலூரில் இருந்து புதுவைக்கு வர முயன்ற வாகனங்களை தடுத்து நிறுத்தினர். மருத்துவ சிகிச்சைக்காக இ-பாஸ் வைத்திருந்தவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். மற்ற தேவைக்காக இ-பாஸ் வைத்திருந்தவர்களும், இ-பாஸ் இல்லாமல் வர முயன்றவர்களும் திருப்பி அனுப்பப்பட்டனர். சிலர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    புதுச்சேரி - விழுப்புரம் எல்லையான மதகடிப்பட்டு பகுதியில் ஐ.ஆர்.பி.என். உதவி கமாண்டன்ட் ராஜேஷ், சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகர வல்லாட் ஆகியோர் தலைமையில் உள்ளூர் போலீசார், ஐ.ஆர்.பி.என். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழுப்புரம் பகுதியில் இருந்து வந்தவர்களை தடுத்து நிறுத்தி, உரிய அனுமதி இல்லாதவர்களை திரும்பிச் செல்லுமாறு எச்சரித்தனர்.

    ஆனால் அங்கிருந்து போக மறுத்து அவர்கள் அந்த இடத்திலேயே நின்றனர். இதையடுத்து ஒருசில மோட்டார் சைக்கிள்களின் முகப்பு விளக்குகளின் கண்ணாடியை போலீசார் லத்தியால் அடித்து நொறுக்கினர். இதையடுத்து அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதேபோல் புதுவை - சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் காலாப்பட்டு அருகே கனகசெட்டிக்குளம் எல்லை தடுப்புகளால் சீல் வைக்கப்பட்டது. இதனால் அந்த வழியாக வந்த கார், லாரி, இருசக்கர வாகனங்கள் சுமார் 2 கி.மீ. தூரத்துக்கு அணிவகுத்து நின்றன.

    இதில் மருத்துவ சிகிச்சைக்காக வந்தவர்களை ஏற்றிவந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன. புதுச்சேரியை சேர்ந்தவர்கள் ஆதார் கார்டு காண்பித்தால் மருத்துவ பரிசோதனைக்குப்பின் அனுமதிக்கப்பட்டனர். அதே வேளையில் புதுவையில் இருந்து தமிழக பகுதிக்கு சென்றவர்கள் மீண்டும் உள்ளே அனுமதிப்பதில்லை எனவும் போலீசார் கண்டிப்புடன் தெரிவித்தனர்.

    திருக்கனூர் எல்லை மூடப்பட்டதால், அந்த வழியாக வந்த தமிழக அரசு பஸ் தடுத்து நிறுத்தப்பட்டது. அதில் வந்த பயணிகள் அனைவரும் நடுவழியில் இறக்கி விடப்பட்டனர். அவர்கள் பல கி.மீ. தூரம் நடந்தே அவரவர் ஊர்களுக்கு சென்றனர். மாநில எல்லைகள் திடீரென்று மூடப்பட்டதால், தமிழக பகுதியில் இருந்து கட்டுமானம், தனியார் கம்பெனிகளுக்கு வேலைக்கு வந்தவர்கள் பாதிக்கப்பட்டனர். ஒரு சிலர் கிராமப்புற குறுக்கு சாலைகள் வழியாக புதுவைக்கு வந்தனர்.
    புதுவை சுற்றுலா வளர்ச்சி கழக ஊழியர்களுக்கு கடந்த 2 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து அவர்கள் பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
    புதுச்சேரி:

    புதுவை சுற்றுலா வளர்ச்சி கழக ஊழியர்களுக்கு கடந்த 2 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து அவர்கள் பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் இதுவரை சம்பளம் வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்தநிலையில் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி சுற்றுலா வளர்ச்சி கழக கூட்டு நடவடிக்கை குழு சார்பில் சுற்றுலா துறை இயக்குனர் அலுவலகம் முன்பு கடந்த 5 நாட்களாக காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. 6-வது நாளாக நேற்றும் அவர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். அதன்படி சுற்றுலாத்துறை அலுவலகம் முன்பு கஞ்சி காய்ச்சி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன், இணை ஒருங்கிணைப்பாளர் கஜபதி ஆகியோர் தலைமை தாங்கினர். ஊழியர்கள் 25-க்கும் மேற்பட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

    இதேபோல் காரைக்காலில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள், கடற்கரை சாலையில் உள்ள சீகல்ஸ் நிறுவனம் முன்பு கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்தினர். சம்பளம் வழங்கும் வரை இந்த காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என சுற்றுலா வளர்ச்சிகழக சம்மேளனம் காரைக்கால் தலைவர் ரோலண்ட், செயலர் அண்ணாதுரை ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
    புதுவை அருகே மொபட்டில் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    புதுவை முதலியார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை கொம்பாக்கம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பள்ளிக்கூடம் எதிரே மொபட்டில் சாக்கு மூட்டைகளுடன் ஒருவர் வந்தார். அவரை பிடித்து விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினார்.

    இதையடுத்து அவர் வைத்திருந்த மூட்டைகளை சோதனையிட்டபோது, அதில் மணல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கொம்பாக்கம் புதுநகரை சேர்ந்த இருதயராஜ் (வயது 37) என்பதும், அப்பகுதியில் உள்ள ஆற்றில் இருந்து திருட்டுத்தனமாக மணல் எடுத்து கடத்தி வந்ததும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். மணல் கடத்த பயன்படுத்திய மொபட் மற்றும் 3 மூட்டை மணல் பறிமுதல் செய்யப்பட்டது.
    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நேற்று இரவு கலெக்டர் மீண்டும் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
    புதுச்சேரி:

    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி புதுச்சேரியில் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் சிலர் கடைகளை திறந்து வைத்து இருப்பதாகவும், தேவையில்லாமல் மக்கள் வெளியில் நடமாடுவதாகவும் மாவட்ட கலெக்டருக்கு புகார்கள் வந்தன.

    இதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அருண், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் மற்றும் அதிகாரிகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நகர பகுதியில் திடீர் ஆய்வு செய்து, விதியை மீறி 9 மணிக்கு மேல் திறந்திருந்த 10 கடைகளுக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுத்தார்.

    இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு கலெக்டர் மீண்டும் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். கலெக்டர் அலுவலகத்தில் இருந்து காரில் புறப்பட்ட கலெக்டர் அருண், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் ஆகியோர் காமராஜர் சாலை, அண்ணா சாலை, மறைமலை அடிகள் சாலை, முதலியார் பேட்டை உள்பட நகரப்பகுதி முழுவதும் ஆய்வு செய்தனர். அப்போது அண்ணா சிலை அருகே சிலர் இருசக்கர வாகனங்களில் சென்றனர். அவர்களை நிறுத்தி, எங்கு செல்கிறீர்கள் என்று கலெக்டர் விசாரித்தார். அவர்களிடம் தேவையில்லாமல் வெளியே சுற்றித்திரியக் கூடாது என்று எச்சரிக்கை செய்தார். இந்த ஆய்வின் போது கலெக்டர் அருண், தானே காரை ஓட்டி சென்றார்.
    புதுவை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் இறுதி செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
    புதுச்சேரி:

    புதுவை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் இறுதி செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. உள்மதிப்பீடு அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் மருத்துவம், என்ஜினீயரிங், பல் மருத்துவம், ஆயுர்வேதம், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் என 92 அரசு, தனியார் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படிக்கின்றனர்.

    கொரோனா தொற்று பரவல் காரணமாக புதுவையில் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கடந்த 1-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு படிப்படியாக தளர்த்தப்பட்ட நிலையில், ஜூலை மாதத்தில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளுக்கு தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் பல்கலைக்கழக நிர்வாக கவுன்சில் கூடி இணைப்பு கல்லூரிகளில் இறுதி ஆண்டு தவிர்த்து மற்ற மாணவர்களுக்கு பல்கலைக்கழக தேர்வுகளை ரத்து செய்து அறிவித்தது.

    நேற்று மீண்டும் புதுவை பல்கலைக்கழக நிர்வாக கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில் கல்லூரிகளில் படித்து வரும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கும் தேர்வை ரத்து செய்வது எனவும், உள்மதிப்பீடு அடிப்படையில் இறுதி செமஸ்டர் தேர்வு முடிவை வெளியிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

    இதுகுறித்து புதுவை பல்கலைக்கழக தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் லாசர் கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு எழுத இருந்த மாணவர்களுக்கும் பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது. மாணவர்கள் பெற்ற உள்மதிப்பீடு மற்றும் தொடர் உள்மதிப்பீட்டின் அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு ஏப்ரல், மே மாத செமஸ்டர் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்படும்.

    இறுதியாண்டு மற்றும் இறுதி செமஸ்டரின் வழக்கமான தேர்வுகளுக்கும், அரியர் தேர்வுகளுக்கும் இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படும். விதிமுறைக்குட்பட்டு மாணவர்களுக்கு உள்மதிப்பீட்டு மதிப்பெண்களை கல்லூரிகள் வழங்க வேண்டும். தேர்வுக்கு விண்ணப்பித்தல், கட்டணம் செலுத்துதல், குறைந்தபட்ச வருகை பதிவேடு உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளையும் கடைப்பிடிக்கவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    புதுவை பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி, ஆராய்ச்சி பாடப்பிரிவுகளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்களுக்கு ஏப்ரல், மே மாதத்திற்கான செமஸ்டர் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் ஆலோசனை நடத்தி வருகிறது. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
    சீன ராணுவத்துடனான தாக்குதலில் வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களுக்கு புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    சீன ராணுவத்துடனான தாக்குதலில் வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களுக்கு புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    இந்திய எல்லையை பாதுகாக்கும்போது சீன ராணுவத்தோடு நடந்த தாக்குதலில் இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். இறந்த வீரர்கள் தங்களது உயிரை நாட்டுக்காக தியாகம் செய்துள்ளனர். நமது எல்லையை எந்த விலை கொடுத்தாலும் பாதுகாப்போம். நாட்டுக்காக உயிரை தியாகம் செய்த வீரர்களுக்கு வீரவணக்கம் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    புதுவையில் கொரோனா தொற்றை சமாளிக்க ஒப்பந்த அடிப்படையில் டாக்டர்கள், செவிலியர்களை நியமிக்க முதல்-அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளதாக அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதுச்சேரியில் தற்போது கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மே 15-ந் தேதி முதல் ஜூன் 15 வரை கொரோனா தொற்று 7.3 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 5 நாட்களில் 50 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

    தற்போது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான உபகரணங்கள் போதிய அளவில் உள்ளது. மருத்துவ வல்லுனர்கள் கொரோனா தொற்றின் தாக்கம் நவம்பர், டிசம்பர் மாதங்களில் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கின்றனர். அவ்வாறு நீடித்தால் மருத்துவ உபகரணங்கள் கூடுதலாக தேவைப்படும். இது தொடர்பாக முதல்- அமைச்சரிடம் வலியுறுத்துவேன். கொரோனா நோயாளிகளை சமாளிக்க மருத்துவர்கள், செவிலியர்களும் தேவைப்படுவார்கள். அவர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க முதல்- அமைச்சரிடம் வலியுறுத்தி வருகிறேன்.

    சில நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக்கொள்வதாக கோரிக்கை விடுக்கின்றனர். வெளிமாநிலங்களில் நாள் ஒன்றுக்கு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளில் ரூ.40 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதனை குறைத்து நிர்ணயிக்க முதல்-அமைச்சரிடம் வலியுறுத்த உள்ளேன்.

    கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க கண்டிப்பாக முககவசம் அணிவது, அடிக்கடி கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்வது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது ஆகியவற்றை பின்பற்றவேண்டும். புதுச்சேரியில் 10 முதல் 15 சதவீத மக்கள் இதை கடைபிடிக்காமல் உள்ளனர். வெளி மாநிலங்களில் முக கவசம் அணியாவிட்டால் முதல் முறை ரூ.500-ம், 2-வது முறை ரூ.ஆயிரமும் அபராதம் வசூலிக்கின்றனர். அதுபோல் அபராதம் விதிப்பதை புதுச்சேரியிலும் கடுமையாக்க வேண்டும்.

    புதுச்சேரி மக்களிடம் பணப்புழக்கம் இல்லை. ஆந்திரா மக்களுக்கு அந்த மாநில முதல்-அமைச்சர் பல்வேறு வகைகளில் நிவாரணங்களை வழங்கி வருகின்றார். இதனால் ஏனாமை சுற்றியுள்ள ஆந்திர மாநில மக்களிடம் பணப்புழக்கம் அதிகம் உள்ளது. புதுச்சேரியில் 30 சதவீதம் வரை வியாபாரம் குறைந்துவிட்டது. ஆனால் வாடகை, சம்பளம், வங்கி மாதாந்திர தொகை ஆகியவை அப்படியே கொடுக்க வேண்டியுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தமிழகத்தில் இருந்து வருவோர் இ-பாஸ் வைத்திருந்தாலும் புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் சென்னையிலும் அதை சுற்றி அமைந்துள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பகுதிகளிலும் நோய்த்தொற்று பரவல் மிகவும் அதிகரித்து இருக்கிறது.

    கொரோனா பரவல் அதிகரிப்பதை தடுக்க சென்னையில் வருகிற 19-ந் தேதி முதல் 12 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. சென்னையை யொட்டி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அமைந்துள்ள புறநகர் பகுதிகளுக்கும் இது பொருந்தும்.

    புதுவையிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கும் என்று எச்சரிக்கப்பட்டு வரும் நிலையில் பொதுமக்கள் கண்டிப்பாக தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது. இதையும் மீறி அலட்சியமாக இருந்தால் தொற்று பாதிப்பு அதிகமாகும். எனவே தேவை இல்லாமல் வெளியே வருவதை தவிர்த்து எச்சரிக்கையாக வீடுகளிலேயே இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் தமிழகத்தில் இருந்து வருவோர் இ-பாஸ் வைத்திருந்தாலும் புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

    கடலூர், விழுப்புரத்தில் இருந்து மருத்துவ உதவிக்காக வருவோர் தவிர பிறருக்கு புதுச்சேரிக்குள் அனுமதியில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 11 திட்டப்பணிகளை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலத்தில் ரூ.1,850 கோடி மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஒரு சில பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. இந்தநிலையில் தலைமை செயலகத்தில் உள்ள கருத்தரங்க கூடத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் தற்போதைய நிலை குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று காலை நடந்தது.

    கூட்டத்திற்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். இதில் தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், வளர்ச்சி ஆணையர் அன்பரசு, ஸ்மார்ட் சிட்டி திட்ட முதன்மை செயல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான அருண், அரசு செயலர்கள் சரண், மகேஷ், பூர்வா கார்க், உள்ளாட்சி துறை இயக்குனர் மலர்கண்ணன், தலைமை பொறியாளர் மகாலிங்கம், கல்வித்துறை இயக்குனர் ருத்ர கவுடு மற்றும் இணை செயல் அதிகாரி மாணிக்கதீபன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

    அப்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சைக்கிள் ஷேரிங், நடமாடும் கழிவறைகள், நவீன கழிவறைகள் உள்பட 4 திட்டப் பணிகளுக்கு ஆணை வழங்கப்பட்டு உள்ளதாகவும், ரூ.15 கோடிக்கு 3 திட்டங்களை மேற்கொள்ள ஒப்பந்தம் விடப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும், ரூ.125 கோடிக்கு 9 திட்டங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டு ஒப்பந்தம் கோரப்படவுள்ளது. இதில் ரூ.60 கோடி மழைநீர் வடிகால் திட்டத்திற்கும், ரூ.25 கோடி நவீன மின்மாற்றிகள் அமைப்பதற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. அண்ணா திடலில் மினி விளையாட்டு திடல், நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள வாய்க்கால்களை சீரமைப்பது, கல்வே காலேஜ் பள்ளி கட்டிடத்தை ரூ.4 கோடிக்கு சீரமைப்பது, கடற்கரையில் பழைய நீதிமன்ற வளாகத்தில் இருந்து திப்புராயப்பேட்டை வரை நடைபாதை அமைப்பது உள்ளிட்ட திட்டங்களும் இடம் பெற்றுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை கேட்டறிந்த அமைச்சர் நமச்சிவாயம் 11 திட்ட பணிகளையும் 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
    பாகூர் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பாகூர்:

    பாகூர் அருகே சேலியமேடு கிராமத்தை சேர்ந்தவர் சிவலிங்கம். வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். இவரது மூத்த மகன் செந்தில்நாதன் (வயது 23), கண் கண்ணாடி தொடர்பாக படித்து முடித்துவிட்டு, தந்தைக்கு உதவியாக வெல்டிங் பட்டறையில் வேலை செய்து வந்தார்.

    இந்தநிலையில் செந்தில்நாதனின் நடவடிக்கையில் மாற்றம் தெரியவந்ததையடுத்து அவரை பெற்றோர் கண்டித்தனர். இந்தநிலையில் மணல்மேட்டில் உறவினர் இறந்து போனதையொட்டி குடும்பத்தினருடன் சிவலிங்கம் அங்கு சென்று இருந்தார். அங்கிருந்து செந்தில்நாதன் மட்டும் சேலியமேடு கிராமத்துக்கு வந்தார். அதன்பிறகு அவர் மணல்மேட்டுக்கு வரவில்லை.

    இதனால் சந்தேகமடைந்த சிவலிங்கம் சேலியமேட்டில் உள்ள வீட்டுக்கு வந்து பார்த்த போது அங்கு செந்தில்நாதன் தூக்குப் போட்டு பிணமாக தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து புகார் செய்யப்பட்டதன்பேரில் பாகூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று செந்தில்நாதனின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரியில் கொரோனா தொற்றால் 216 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கொரோனா நிலவரம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறியதாவது:-

    புதுச்சேரியில் புதிதாக 14 பேருக்கு கொரோனா நோய் ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 216 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 113 பேர் சிகிச்சையில் உள்ளனர். 99 பேர் குணமடைந்துள்ளனர் என்றார்.

    நவம்பர், டிசம்பரில் நோய் தொற்று அதிகமாகும் என மத்திய அரசு தெரிவிக்கிறது என்றும், மே மாதம் முதல் ஜூன் வரை நோய் தொற்று சராசரியாக 7% இருந்தது. இந்த வாரம் மட்டும் 10% இருக்கிறது. அதனால் டிசம்பரில் அதிகமாக கூடும். இதனால் 6 மாதங்களுக்கு நோய் தடுப்புக்கு தயாராக சுகாதாரத்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்க முதல்வரை கேட்க உள்ளோம்.

    இவ்வாறு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறினார். 
    புதுச்சேரியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்கள் வசித்து வந்த பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது.
    புதுச்சேரி:

    புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்கள் வசித்து வந்த பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது. அதன்படி மேலும் புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்கள் வசித்து வந்த சண்முகாபுரம் விநாயகர் கோவில் வீதி, தட்டாஞ்சாவடி மங்கலட்சுமி நகர் சிந்து வீதி, கணுவாப்பேட்டை புதுநகர் 5-வது குறுக்குத்தெரு ஒருபகுதி, மாகி காவலர் குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் குடியிருப்பு வளாகம் ஆகியவை கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது.

    இந்த பகுதியில் பொதுபோக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டத்திற்கு தடை செய்யப்படுகிறது. புதுவை மாநிலத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 3,532 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 16,548 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கொரோனா தொற்று விதி மீறலுக்காக நேற்று ஒரே நாளில் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துக்களில் ரூ.7,200 அபராதம் வசூலிக்கப்பட்டது.

    இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
    ×