என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சண்டே மார்க்கெட்டுக்கு அனுமதி கோரி வியாபாரிகள் வயிற்றில் ஈரத்துணியை கட்டிக் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுச்சேரி:

    கொரோனா ஊரடங்கு காரணமாக புதுவையில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக சண்டே மார்க்கெட் மூடப்பட்டுள்ளது. இதனால் அங்கு கடைகள் போட்ட வியாபாரிகளின் குடும்பம் வருமானம் இன்றி, அவதிப்பட்டு வருகிறது. இந்தநிலையில் 4-ம் கட்ட ஊரடங்கு முடிந்ததும் பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்தி கடைகள், ஓட்டல்கள், கோவில்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.

    இந்தநிலையில் முதல்- அமைச்சர் நாராயணசாமியை சண்டே மார்க்கெட் வியாபாரிகள் சந்தித்து சண்டே மார்க்கெட்டில் கடைகள் போட அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் இதுகுறித்து அரசு சார்பில் எந்த முடிவும் தெரிவிக்கப்படாமல் இருந்து வந்தது. இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று திடீரென்று வியாபாரிகள் கடை போட்டனர். இதற்கு அதிகாரிகள் தடை விதித்தனர். இதுகுறித்து நாராயணசாமி கூறுகையில், ‘கொரோனா காலம் முடியும் வரை சண்டே மார்க்கெட் திறக்க அனுமதி இல்லை. இதனை மீறி கடை வைப்போர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும்’ என்று எச்சரித்தார்.

    இதனை கண்டித்தும், சண்டே மார்க்கெட் கடைகளை திறக்க அனுமதிக்க கோரியும், இல்லையென்றால் வியாபாரிகள் ஒவ்வொருவருக்கும் ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இதற்காக புதுச்சேரி பிரதேச சாலையோர வியாபாரிகள் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் வியாபாரிகள் நேற்று காலை காந்தி வீதியில் வயிற்றில் ஈரத்துணியை கட்டிக்கொண்டு நூதனமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு சங்க சிறப்பு தலைவர் பிரபுராஜ் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர்கள் அழகர்ராஜ், வடிவேலு உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் சண்டே மார்க்கெட்டை இடமாற்றம் செய்யக் கூடாது. மீண்டும் கடைகள் போட அனுமதிக்க வேண்டும். இல்லையென்றால் நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.

    இதுபற்றிய தகவல் அறிந்து பெரியகடை போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை கைது செய்தனர். இந்த போராட்டத்தால் காந்தி வீதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 
    கதிர்காமம் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய மோட்டார் சைக்கிள் திருடனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் பீதி அடைந்துள்ளனர்.
    புதுச்சேரி:

    முதலியார்பேட்டை போலீசார் மரப்பாலம் சந்திப்பில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அரியாங்குப்பம் ராம்சிங் நகர் பகுதியைச் சேர்ந்த ரமணா (வயது 24) என்பதும், மோட்டார் சைக்கிளை அவர் திருடிக் கொண்டு வந்ததும் தெரியவந்தது.

    இதனையடுத்து ரமணாவை போலீசார் கைது செய்தனர். அவர் தெரிவித்த தகவலின்பேரில் 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சிறையில் அடைப்பதற்கு முன் கொரோனா தொற்று பரிசோதனை செய்வதற்காக ரமணாவை கதிர்காமம் கொரோனா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதனைக்காக உமிழ்நீர் உள்ளிட்ட மாதிரிகள் எடுக்கப்பட்ட நிலையில் இயற்கை உபாதைக்காக கழிவறைக்கு சென்று விட்டு வருவதாக ரமணா கூறிச் சென்றார். நீண்டநேரமாக அவர் வெளியே வராததால் சந்தேகமடைந்து கழிவறையை திறந்து பார்த்த போது அங்கிருந்த ஜன்னலை உடைத்து தண்ணீர் குழாய் வழியாக ஏறி தப்பி இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்தநிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று முன்தினம் இரவு உறுதி செய்யப்பட்டது. இதனால் ரமணாவை கைது செய்த முதலியார்பேட்டை போலீசார் 6 பேர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அவர்கள் பணியாற்றி வந்த முதலியார்பேட்டை போலீஸ் நிலையம் முழுவதும் நேற்று கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இதனால் அங்கு பணிசெய்யும் மற்ற போலீசாரும் திருடனுடன் தொடர்பில் இருந்தவர்களும் பீதியில் உள்ளனர். தப்பி ஓடிய ரமணாவால் மற்றவர்களுக்கு தொற்று பரவ வாய்ப்பு உள்ளது என்பதால் அவரை 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    புதுவையில் கொரோனா தொற்று வேகமாக பரவுவதற்கு தனிநபர் பழக்க, வழக்கமே முக்கிய காரணம் என்று கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    கவர்னர் கிரண்பேடி நேற்று சமூக வலைத்தளத்தில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் புள்ளி விவரங்களை பார்க்கும் போது முதல் 81 நாட்களில் 100 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 2-வது 10 நாட்களில் 100 நபர்கள் பாதிக்கப்பட்டனர். 3-வது 5 நாட்களில் 100 பேர் என பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தனிப்பட்ட பொறுப்பான நடத்தை மட்டுமே பரவலின் வேகத்தை தடுக்க முடியும்.

    கொரோனா தொற்று இதே வேகத்தில் பரவினால் புதுச்சேரியில் மக்கள் அனைவரும் கடினமான சூழலில் இருப்போம். கொரோனா பாதிப்பு அதிவேகமாக பரவ தனிநபர் பழக்க வழக்கமே முக்கிய காரணம். சிலர் முகக்கவசம் சரியாக பயன்படுத்துவதில்லை. பலரும் கைக்குட்டையை முககவசமாக பயன்படுத்துகின்றனர். இது முற்றிலும் தவறு. கைக்குட்டை முகக் கவசமாகாது.

    பொது இடத்தில் வந்து பேசும்போது முகக்கவசம் அணியாமல் இருப்பது மிகப்பெரிய தவறு. எனவே, வெளியில் செல்லும்போது நாம் கட்டாயமாக முகக்கவசத்தை பயன்படுத்த வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். வெளியில் சென்று திரும்பிய உடன் கை, கால்களை சோப்பு போட்டு கழுவி சுத்தமாக இருப்பதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். இதன் மூலமாக நாம் சுகாதாரத்தை பாதுகாக்க முடியும். நமது ஒன்றிணைந்த முயற்சிகளால்தான் கொரோனா பரவலை தடுக்க முடியும்

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    புதுச்சேரியில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில், மாஸ்க் அணியாமல் சென்றால் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகளை கடுமையாக்க அரசு முடிவு செய்துள்ளது.

    அனைத்துக் கடைகளும் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    மாஸ்க் அண்யாமல் வெளியே சென்றால் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

    புதுச்சேரி கடற்கரை 10 நாட்களுக்கு மூடப்பட்டு இருக்கும்.

    தொழிற்சாலைகள் வழக்கம்போல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

    மதுக்கடைகள் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும். பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இயங்கும். மேலும், பால் விற்பனை மையங்கள் மாலை 6 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

    ஜூன் 23 முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    புதுவையில் ஒருங்கிணைந்த முயற்சிகளால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்று கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    கவர்னர் கிரண்பேடி நேற்று சமூக வலைத்தளத்தில் ஒரு ஆடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரியில் தினந்தோறும் 30 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். நேற்று மட்டும் 52 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற நாட்களை ஒப்பிடும்போது இது 2 மடங்கு அதிகம். இதே நிலை தொடர்ந்தால் அடுத்த மாதம் (ஜூலை) ஆயிரம் பேர் பாதிக்கப்படுவார்கள். இதுதொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு தேவை.

    இந்த நேரத்தில் தமிழ் நாட்டில் சில மாவட்டங்களில் முழு அடைப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. முழு அடைப்பை திரும்பப் பெறும்போது கொரோனாவின் அளவு அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே தயவு செய்து கூட்டம் கூடுவதை தவிர்க்கவும். முக கவசம் அணிதல், சுகாதாரத்தை கடைபிடித்தல், சமூக இடைவெளியுடன் செயல்படுதல் என்ற 3 முறைகளையும் பின்பற்றவும்.

    நம்மை நாம் பாதுகாப்பதன் வழியாக மற்றவர்களையும் பாதுகாக்க முடியும். வரும்முன் காப்பதே சிறந்தது. புதுச்சேரி குறைந்த மக்கள் தொகையை தான் கொண்டுள்ளது. நம்முடைய ஒருங்கிணைந்த முயற்சிகளால் நம்மால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும். இதுதான் என்னுடைய வேண்டுகோள்.

    கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த எங்களுக்கு (புதுச்சேரி நிர்வாகத்துக்கு) தயவு செய்து உதவுங்கள். கடற்கரை சாலையில் நடைபயிற்சி மேற்கொள்ளும் சிலர் சமூக இடைவெளி இல்லாமல் கூட்டமாக இருக்கின்றனர். இது தண்டனைக்குரிய குற்றமாகும். பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
    புதுச்சேரியில் இன்று 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 369 ஆக உயர்ந்துள்ளது.
    தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. அம்மாநில முதல்வர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

    வெளிமாநில நபர்களுக்கு அனுமதி கிடையாது. ஊருக்குள் வந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும். 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்த வேண்டும் உள்பட பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    என்றாலும் தினந்தோறும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 369 ஆக உயர்ந்துள்ளது.
    பெரிய மார்க்கெட் காய்கறி கடைகள் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் புதுச்சேரி புதிய பஸ் நிலையத்துக்கு மீண்டும் இடமாற்றம் செய்யப்படுகிறது.
    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா வால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 5-ம் கட்டமாக பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது தற்காலிகமாக புதிய பஸ் நிலையத்தில் இயங்கி வந்த பெரிய மார்க்கெட்டிற்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

    அங்கு வரும் பொதுமக்களும், வியாபாரிகளும் சமூக இடைவெளியை கடைபிடிக்காதது, முகக்கவசம் அணியாதது உள்பட ஊரடங்கு விதிமுறைகளை கடைபிடிக்கவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து பெரிய மார்க்கெட்டில் இடநெருக்கடியை குறைப்பதற்காக அங்கிருந்து காய்கறி கடைகளை ஏ.எப்.டி. மைதானத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் நேரு வீதி பழைய சிறைச்சாலை வளாகத்தில் நடைபாதை கடைகளை மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு அந்த வியாபாரிகள் ஒப்புக் கொள்ளவில்லை.

    இந்தநிலையில் புதுவை சாரம் பழைய கலெக்டர் அலுவலகத்தில் பெரிய மார்க்கெட் வியாபாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சப்- கலெக்டர் சுகாதர் தலைமை தாங்கினார். இதில் நகராட்சி அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நாளை மறுநாள் முதல் (திங்கட்கிழமை) பெரிய மார்க்கெட்டில் இயங்கி வரும் மொத்தம், சில்லரை மற்றும் அடிக்காசு காய்கறி கடைகள் மீண்டும் புதிய பஸ் நிலையத்தில் இயங்க முடிவு எடுக்கப்பட்டது.

    பெரிய மார்க்கெட்டில் வழக்கம்போல் மளிகைக் கடைகள், பழக்கடைகள், பூக்கடைகள் செயல்படலாம். புதிய பஸ்நிலையத்தில் வியாபாரிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் பொதுப்பணித்துறை, நகராட்சி அதிகாரிகள் செய்து கொடுக்க வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது.
    புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்க அரசு முடிவு செய்துள்ளது.
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் 52 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்தம் 339 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

    புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகளை கடுமையாக்க அரசு முடிவு செய்திருப்பதாகவும், இது தொடர்பான அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என்றும் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

    உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்தவுடன் இந்த மாத இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் நாராயணசாமி கூறினார்.

    கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால், புதுச்சேரி சட்டசபை வளாகத்திற்குள் பொதுமக்கள் வருகைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சரியான காரணங்கள் இல்லாமல் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் அலுவலகத்திற்குள் பொதுமக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். சம்பந்தப்பட்ட அலுவலகத்தின் முன் அனுமதி பெற்றால் மட்டுமே அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இரவு நேரத்தில் வெளியில் சுற்றினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    மூலக்குளம்:

    புதுவை வடக்கு சரக பகுதியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டம் மேட்டுப்பாளையம் போலீஸ் சூப்பிரண்டு சுபம் சுந்தர்கோஷ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்வது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

    இதன்பின் போலீஸ் சூப்பிரண்டு சுபம் சுந்தர் கோஷ் நிருபர்களிடம் கூறுகையில், ‘வடக்கு சரக பகுதியில் 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர்கள் வசித்து வந்த 35-க்கும் மேற்பட்ட பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக மாற்றப்பட்டு கண்காணிப்பில் இருந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்றினால் ஒருவர் உயிரிழந்தார். அவருடன் தொடர்பில் இருந்த 8 பேருக்கு தற்போது தொற்று உறுதியாகியுள்ளது.

    கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கை மக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். எனவே இரவு 9 மணிக்கு மேல் வெளியில் நடமாடுவதை தவிர்க்கவேண்டும். தேவையின்றி வெளியில் சுற்றினால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
    புதுச்சேரியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை தவிர்க்க அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என துணை நிலை கவர்னர் கிரண்பேடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி துணை நிலை கவர்னர் கிரண்பேடி கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்படுகிற ஏறக்குறைய 30 நபர்களை தினந்தோறும் கண்டறிந்து வருகிறோம். இந்த நேரத்தில் நமக்கு அருகில் உள்ள மாநிலமான தமிழ்நாட்டில் முழு ஊரடங்கை மேற்கொண்டுள்ளனர். முழு ஊரடங்கை திரும்ப பெறும் போது கொரோனாவின் அளவு அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

    எனவே தயவு செய்து கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். முக கவசம் அணிதல், சுகாதாரத்தை கடைபிடித்தல், தனிமனித இடைவெளியுடன் செயல்படுத்தல் என்று 3 முறைகளையும் தயவு செய்து பின்பற்ற வேண்டும். நம்மை நாம் பாதுகாப்பதன் வழியாக மற்றவர்களையும் பாதுகாக்க முடியும். நம்முடைய ஒருங்கிணைந்த முயற்சிகளால் இந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும். எனவே அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து இ-பாசுடன் மருத்துவ சிகிச்சைக்கு வந்தால் அனுமதி அளிக்கப்படும் என்று புதுவை மாவட்ட கலெக்டர் அருண் தெரிவித்துள்ளார்.
    பாகூர்:

    புதுவை - கடலூர் சாலையில் மாநில எல்லையான முள்ளோடையில் போலீசாரின் கண்காணிப்பு பணிகளை ஆய்வு செய்த புதுவை மாவட்ட கலெக்டர் அருண் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவையில் ஜிப்மர் உள்பட 7 மருத்துவ கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் இருப்பதால் மருத்துவ சிகிச்சைக்காக தமிழகத்தில் இருந்து ஏராளமானவர்கள் இங்கு வருகின்றனர். மருத்துவத்திற்காக வருபவர்களை தடுத்து நிறுத்தவில்லை. கடலூர், விழுப்புரம் மாவட்ட கலெக்டர்களிடம் இருந்து இ-பாஸ் பெற்று மருத்துவத்திற்காக வருபவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இ-பாஸ் இல்லாமல் மருத்துவத்திற்காக வருபவர்கள் திருப்பி அனுப்புகிறோம்.

    இவ்வாறு கலெக்டர் அருண் கூறினார்.
    புதுவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மத்திய அரசு ஆதரவு அளிக்கவில்லை என முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை முதல்-அமைச்சர் நாராயணசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் அங்கு சென்று கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் பகுதிகளை ஆய்வு செய்தனர்.

    அதன்பின் மருத்துவ அதிகாரிகள், மருத்துவர்களுடன் அங்கு ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. புதுவையில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை எதிர்த்து பெரிய அளவில் போராடி வருகிறோம். புதுச்சேரியில் கடந்த 17 தினங்களாக 67 சதவீதம் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் அரசு மருத்துவமனைகள் மற்றும் கல்லூரிகளில் பிற அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா சிகிச்சைப்பணி கூடுதல் பணி. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வை நிபுணர்கள்மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்தியாவிலேயே தமிழ்நாடு, மராட்டியம், குஜராத் ஆகிய மாநிலங்களில் தான் அதிக அளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடிப்பது, தொற்றுக்கு ஆளானவர்களை தனிமைப்படுத்துவது போன்றவை தான் கொரோனா பரவலில் முக்கிய பணியாக உள்ளது.

    புதுச்சேரியில் முதலில் டெல்லி மாநாட்டில் இருந்து வந்தவர்கள், அடுத்து கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து வந்தவர்கள், பின்னர் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கு சென்று திரும்பியவர்களால் தான் கொரோனா தொற்று அதிகரித்தது. ஒருவர் பாதிக்கப்பட்டால், அவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள்.

    மாநில முதல்-அமைச்சர்களுடன் காணொலி காட்சி மூலம் பேசிய பிரதமர் ஜூன் 30-க்கு பிறகு மேலும் தளர்வுகள் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். அப்போது கொரோனா நிவாரண பணிகளை மேற்கொள்வது குறித்து புதுச்சேரிக்கு தேவையான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தோம். ஆனால் எதற்கும் மத்திய அரசு ஆதரவு அளிக்கவில்லை.

    வெளிமாநில மக்களை அனுமதிக்க கூடாது என்ற கட்டுப்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இனிமேல் புதுச்சேரியில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறையும். இருக்கின்ற வசதிகளை கொண்டு புதுச்சேரி மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். கிராமப்புறத்திலும் தற்போது கொரோனா பரவி வருகின்றது. எனவே கொரோனா தொற்று குறித்து கிராம மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    ×