என் மலர்tooltip icon

    செய்திகள்

    வயிற்றில் ஈரத்துணியை கட்டிக் கொண்டு வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் செய்தபோது எடுத்த படம்.
    X
    வயிற்றில் ஈரத்துணியை கட்டிக் கொண்டு வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் செய்தபோது எடுத்த படம்.

    வயிற்றில் ஈரத்துணியை கட்டி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

    சண்டே மார்க்கெட்டுக்கு அனுமதி கோரி வியாபாரிகள் வயிற்றில் ஈரத்துணியை கட்டிக் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுச்சேரி:

    கொரோனா ஊரடங்கு காரணமாக புதுவையில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக சண்டே மார்க்கெட் மூடப்பட்டுள்ளது. இதனால் அங்கு கடைகள் போட்ட வியாபாரிகளின் குடும்பம் வருமானம் இன்றி, அவதிப்பட்டு வருகிறது. இந்தநிலையில் 4-ம் கட்ட ஊரடங்கு முடிந்ததும் பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்தி கடைகள், ஓட்டல்கள், கோவில்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.

    இந்தநிலையில் முதல்- அமைச்சர் நாராயணசாமியை சண்டே மார்க்கெட் வியாபாரிகள் சந்தித்து சண்டே மார்க்கெட்டில் கடைகள் போட அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் இதுகுறித்து அரசு சார்பில் எந்த முடிவும் தெரிவிக்கப்படாமல் இருந்து வந்தது. இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று திடீரென்று வியாபாரிகள் கடை போட்டனர். இதற்கு அதிகாரிகள் தடை விதித்தனர். இதுகுறித்து நாராயணசாமி கூறுகையில், ‘கொரோனா காலம் முடியும் வரை சண்டே மார்க்கெட் திறக்க அனுமதி இல்லை. இதனை மீறி கடை வைப்போர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும்’ என்று எச்சரித்தார்.

    இதனை கண்டித்தும், சண்டே மார்க்கெட் கடைகளை திறக்க அனுமதிக்க கோரியும், இல்லையென்றால் வியாபாரிகள் ஒவ்வொருவருக்கும் ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இதற்காக புதுச்சேரி பிரதேச சாலையோர வியாபாரிகள் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் வியாபாரிகள் நேற்று காலை காந்தி வீதியில் வயிற்றில் ஈரத்துணியை கட்டிக்கொண்டு நூதனமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு சங்க சிறப்பு தலைவர் பிரபுராஜ் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர்கள் அழகர்ராஜ், வடிவேலு உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் சண்டே மார்க்கெட்டை இடமாற்றம் செய்யக் கூடாது. மீண்டும் கடைகள் போட அனுமதிக்க வேண்டும். இல்லையென்றால் நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.

    இதுபற்றிய தகவல் அறிந்து பெரியகடை போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை கைது செய்தனர். இந்த போராட்டத்தால் காந்தி வீதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 
    Next Story
    ×