search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பாக அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.
    X
    ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பாக அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.

    ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை 6 மாதத்துக்குள் முடிக்க வேண்டும்- அமைச்சர் உத்தரவு

    புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 11 திட்டப்பணிகளை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலத்தில் ரூ.1,850 கோடி மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஒரு சில பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. இந்தநிலையில் தலைமை செயலகத்தில் உள்ள கருத்தரங்க கூடத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் தற்போதைய நிலை குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று காலை நடந்தது.

    கூட்டத்திற்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். இதில் தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், வளர்ச்சி ஆணையர் அன்பரசு, ஸ்மார்ட் சிட்டி திட்ட முதன்மை செயல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான அருண், அரசு செயலர்கள் சரண், மகேஷ், பூர்வா கார்க், உள்ளாட்சி துறை இயக்குனர் மலர்கண்ணன், தலைமை பொறியாளர் மகாலிங்கம், கல்வித்துறை இயக்குனர் ருத்ர கவுடு மற்றும் இணை செயல் அதிகாரி மாணிக்கதீபன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

    அப்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சைக்கிள் ஷேரிங், நடமாடும் கழிவறைகள், நவீன கழிவறைகள் உள்பட 4 திட்டப் பணிகளுக்கு ஆணை வழங்கப்பட்டு உள்ளதாகவும், ரூ.15 கோடிக்கு 3 திட்டங்களை மேற்கொள்ள ஒப்பந்தம் விடப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும், ரூ.125 கோடிக்கு 9 திட்டங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டு ஒப்பந்தம் கோரப்படவுள்ளது. இதில் ரூ.60 கோடி மழைநீர் வடிகால் திட்டத்திற்கும், ரூ.25 கோடி நவீன மின்மாற்றிகள் அமைப்பதற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. அண்ணா திடலில் மினி விளையாட்டு திடல், நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள வாய்க்கால்களை சீரமைப்பது, கல்வே காலேஜ் பள்ளி கட்டிடத்தை ரூ.4 கோடிக்கு சீரமைப்பது, கடற்கரையில் பழைய நீதிமன்ற வளாகத்தில் இருந்து திப்புராயப்பேட்டை வரை நடைபாதை அமைப்பது உள்ளிட்ட திட்டங்களும் இடம் பெற்றுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை கேட்டறிந்த அமைச்சர் நமச்சிவாயம் 11 திட்ட பணிகளையும் 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
    Next Story
    ×