search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செமஸ்டர் தேர்வு ரத்து"

    • இன்று நடைபெற இருந்த தமிழ் பாட தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்தது.
    • மாணவர்களுக்கான தேர்வு உரிய முறையில் நடைபெறவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அறிவித்தார்.

    சென்னை பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிகளில் இன்று 2ம் ஆண்டு மாணவர்களுக்கான 3வது செமஸ்டர் தமிழ் பாட தேர்வு நடந்தது. இந்த தேர்வை ஏராளமான மாணவர்கள் எழுத சென்றனர்.

    காலை தேர்வு தொடங்கியதும் மாணவ- மாணவிகளுக்கு வினாத்தாள் வழங்கப்பட்டது. அதை வாங்கி பார்த்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தாங்கள் படித்த வினாக்கள் எதுவும் வரவில்லையே என அவர்கள் குழப்பம் அடைந்தனர்.

    இதுபற்றி அவர்கள் தேர்வு அறைக்கு வந்த பேராசிரியரிடம் கூறினார்கள். அப்போதுதான் வினாத்தாள் மாறி வழங்கப்பட்ட விவரம் தெரிந்தது. 3-வது செமஸ்டர் தமிழ் வினாத்தாளுக்கு பதில் கடந்த ஆண்டு நடந்த 4-வது செமஸ்டர் வினாத்தாள் மாணவர்களுக்கு வினியோகிக்கபட்டது கண்டுபிடிக்கபட்டது.

    இதையடுத்து இன்று நடைபெற இருந்த தமிழ் பாட தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்தது.

    இந்நிலையில், சென்னை பல்கலைக்கழக தேர்வு விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

    சென்னை தலைமை செயலகத்தில் உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தமிழ் தேர்வில் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட வினாத்தாளை இன்றைய தேர்வுக்கு வழங்கி உள்ளனர். இது தெரியவந்ததும் தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட்டு தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    மாணவர்களுக்கான தேர்வு உரிய முறையில் நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும். பச்சையப்பன் கல்லூரி உதவி பேராசிரியர்கள் விவகாரத்தில் தனியாக அறக்கட்டளை நடத்தி அதன் கீழ் பேராசிரியர்களை நியமனம் செய்து வருவதால் உதவி பேராசிரியர்கள் நியமனம் தொடர்பாக குழு அமைத்து நியமனம் முறையாக நடைபெறுகிறதா? என்று கண்காணிக்கப்படும்.

    கல்லூரியில் உதவி கவுரவ விரிவுரையாளராக பணியாற்றினாலும் கட்டாயம் தேர்வு எழுதிய பிறகுதான் பணி அமர்த்தப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பொறியியல், பாலிடெக்னிக் மாணவர்கள் படிக்கும்போதே பயிற்சி பெற 6 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று அமைச்சர் பொன்முடி முன்னிலையில் கையெழுத்தானது.

    ×