search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹால் டிக்கெட்"

    • வைரஸ் காய்ச்சல், கொரோனா போன்றவை நீடிப்பதால் அதனாலும் பரீட்சை எழுத வரவில்லை என்ற காரணங்களை முன் வைக்கின்றனர்.
    • இடைநின்ற மாணவர்களையும் பிளஸ்-2 படிப்பது போல் தொடர்ந்து கணக்கு காட்டி அரசின் தேர்வுத் துறைக்கு ‘லிஸ்ட்’ அனுப்பி உள்ளனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 10-ம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு பொதுத் தேர்வுகளை 25 லட்சம் முதல் 27 லட்சம் மாணவர்கள் வரை எழுதுகின்றனர்.

    ஒவ்வொரு தேர்விலும் வழக்கமாக 3 முதல் 4 சதவீத மாணவர்கள் தேர்வு எழுத வராமல் 'ஆப்சென்ட்' ஆவது வழக்கம்.

    ஆனால் நேற்று முன் தினம் தொடங்கிய பிளஸ்-2 தமிழ் தேர்வை 50 ஆயிரத்து 674 மாணவர்கள் எழுத வரவில்லை என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பள்ளி படிப்பின் இறுதி கட்டமான பிளஸ்-2 பொது தேர்வை அதுவும், தாய் மொழியான தமிழ் பாடத்தையே 50,674 மாணவர்கள் எழுதாமல் புறக்கணித்தது கல்வித்துறையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது.

    இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது தேர்வு பயம், மற்றும் உடல்நிலை சரியின்மை ஆகியவற்றை முக்கியமான காரணமாக கூறி வருகின்றனர். அது மட்டுமின்றி வைரஸ் காய்ச்சல், கொரோனா போன்றவை நீடிப்பதால் அதனாலும் பரீட்சை எழுத வரவில்லை என்ற காரணங்களை முன் வைக்கின்றனர்.

    கடந்த ஆண்டு 32 ஆயிரம் மாணவர்கள் முதல் நாளில் தேர்வு எழுத வராத நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக 18 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுத வராதது பற்றி கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளனர்.

    இதன் அடிப்படையில் அரசுப் பள்ளியில் எவ்வளவு பேர் பரீட்சை எழுதவில்லை, தனியார் பள்ளிகளில் எவ்வளவு பேர் எழுதவில்லை என்ற பட்டியலை எடுத்து அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறையில் விசாரித்தபோது கிடைத்த தகவல் வருமாறு:

    பிளஸ்-1 பொதுத் தேர்வில் கடந்த ஆண்டு 83 ஆயிரத்து 819 பேர் தேர்ச்சி பெறவில்லை. இதில் பிளஸ் 1 துணைத் தேர்வு எழுதி 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்று தற்போது பிளஸ்-2 படித்து வந்தனர்.

    மீதம் உள்ள மாணவர்கள் பிளஸ்-1 பொதுத்தேர்வில் சில பாடங்களில் தேர்ச்சி பெறாத நிலையில் பிளஸ்-2 வகுப்பில் எப்படி தேர்ச்சி பெற முடியும் என்று பயந்து படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டனர். ஆனால் இவர்கள் பள்ளிக் கூடங்களில் தொடர்ந்து படிப்பது போல் கணக்கு காட்டி மாணவர்களின் எண்ணிக்கையை குறையாமல் காண்பித்துள்ளனர்.

    இந்த மாணவர்களை இடைநிற்றலாக கணக்கு காட்டினால், பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாட்டில் பல்வேறு கேள்விகள் எழும்.

    இதை மறைக்கவே இடைநின்ற மாணவர்களையும் பிளஸ்-2 படிப்பது போல் தொடர்ந்து கணக்கு காட்டி அரசின் தேர்வுத் துறைக்கு 'லிஸ்ட்' அனுப்பி உள்ளனர்.

    அதன்படி அனைத்து மாணவர்களுக்கும் 'ஹால் டிக்கெட்' பெற்றுள்ளனர்.

    மாணவர்கள் வகுப்புக்கே வரவில்லை என்பதை மறைத்து ஹால் டிக்கெட் வழங்கப்பட்டதாகவும் ஆனால் தேர்வுக்கு வரவில்லை என்று கூறி 'ஆப்சென்ட்' பட்டியலில் சேர்த்துள்ளதாகவும் காரணம் தெரியவந்துள்ளது.

    மேலும் சில மாணவர்கள் தேர்வு பயம் காரணமாக தேர்வு எழுத வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

    குறிப்பாக நகர்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில் அதிக அளவில் மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்ற தகவலும் தெரிய வந்துள்ளது.

    கடந்த ஆண்டு பிளஸ்-1 வகுப்பில் தோல்வி அடைந்த பல மாணவர்கள் பிளஸ்-2 வகுப்பில் பள்ளிகளில் பங்கேற்கவில்லை. பள்ளிக்கே சரியாக வராத இவர்கள் பரீட்சைக்கும் வரவில்லை என்பதுதான் நிதர்சன உண்மை என்கிறார்கள் அதிகாரிகள்.

    2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா காரணமாக பள்ளிகள் முழுமையாக இயங்காத சூழலில் 'ஆல் பாஸ்' நடைமுறை கொண்டு வரப்பட்டது.

    கொரோனா சரியான நிலையில் கடந்த ஆண்டு முழு பாடத்திட்டங்களோடு தேர்வு நடத்தப்படவில்லை. பாதி படத்திட்டத்தோடுதான் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 மாணவர்கள் பொதுத் தேர்வை சந்தித்தனர். ஆனால் இப்போது அப்படியில்லை. முழு பாடத் திட்டத்தோடு தேர்வு நடைபெறுவதால் பல மாணவர்களுக்கு தேர்வு பயம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்தனர்.

    ஒட்டு மொத்தத்தில் கொரோனா தாக்கம் மாணவர்கள் மத்தியில் இன்னும் நீடிக்கிறது. அவர்களை மனதளவில் தயார் செய்திருக்க வேண்டும். பள்ளிக்கு சரிவர வராத மாணவர்களுக்கு கவுன்சிலிங் அளித்திருக்க வேண்டும் என்று பெற்றோர்கள் குறை கூறி வருகின்றனர்.

    இதுபற்றி தனியார் பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் வருகை பதிவு குறைந்தபட்சம் இவ்வளவு என்று இருக்க வேண்டும். பள்ளிக்கே வராத மாணவர்களுக்கு டி.சி. கொடுக்க வேண்டும்.

    ஆனால் எதுவும் செய்வதில்லை. அரசு பள்ளியில் பள்ளிக்கே வராத மாணவர்களையும் படிப்பதாக கணக்கு காட்டுகிறார்கள். இது தவறு. அரசு பள்ளியின் பாலிசியை மாற்ற வேண்டும், என்றனர்.

    இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கேட்டதற்கு மாணவர்கள் தேர்வு எழுத வராததற்கு காரணங்கள் என்ன என்பது பற்றி விசாரித்து வருவதாகவும் ஓரிரு நாளில் விளக்கமாக தெரிய படுத்தப்படும் என்றும் கூறினார்.

    • நெட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் 2 முறை கணினி வாயிலான தேர்வாக நடத்துகிறது.
    • கூடுதல் விவரங்களை http://www.nta.ac.in/ என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

    சென்னை:

    பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரிவதற்கும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசு வழங்கக்கூடிய உதவித்தொகையை பெறுவதற்கும் 'நெட்' தகுதித்தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறுபவர்களே உதவி பேராசிரியர்களாக சேரவும், மத்திய அரசின் உதவித்தொகையை பெறவும் முடியும்.

    அந்த வகையில் இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் 2 முறை கணினி வாயிலான தேர்வாக நடத்துகிறது. அதன்படி, கடந்த டிசம்பர் மாதத்துக்கான நெட் தேர்வு நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (மார்ச்) 10-ந் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட இருக்கிறது.

    இந்த தேர்வில் முதல்கட்டமாக நடத்தப்பட உள்ள 57 பாடங்களின் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகள் தற்போது வெளியிடப்பட்டு உள்ளன. தேர்வர்கள் https://ugcnet.nta.nic.in/ என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மீதம் உள்ள பாடங்களுக்கான தேர்வுக்கால அட்டவணை, ஹால்டிக்கெட் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படப்படும் என்றும், கூடுதல் விவரங்களை http://www.nta.ac.in/ என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

    ×