என் மலர்
புதுச்சேரி
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா தொற்று பாதிப்பு இருப்பதால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதினேன். இதுவரை எந்த பதிலும் வரவில்லை.
இதற்+கிடையே மத்திய அரசு நீட் தேர்வை கண்டிப்பாக நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் மூலம் தீர்ப்பை பெற்றுள்ளது.
புதுவை சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கின்றனர்.
பல இடங்களுக்கு சென்று தேர்வு எழுதுவதற்கு வாகன வசதி இல்லாத நிலையில், பிரதமர் எவ்வித கவுரவமும் பார்க்காமல் வருகிற 13-ந் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்.
தற்போது சமையல் எரிவாயுக்கு கொடுக்கின்ற மானியத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கச்சா எண்ணை ஒரு பேரல் 140 டாலரில் இருந்து 44 டாலராக ஆகி விட்டது.
கொரோனாவால் அனைவரும் பாதிக்கப்பட்ட இந்த நேரத்தில் விலையை குறைக்காமல் எரிவாயுக்கான மானியத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு கூறுகிறது.
இதனால் சாதாரண, நடுத்தர மக்கள் மீது மத்திய அரசுக்கு எந்த விதமான அக்கறையும் இல்லை என்பதை காட்டுகிறது. மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது.
காங்கிரஸ் ஆட்சியில் எப்படி எரிவாயுக்கு மானியம் வழங்கப்பட்டதோ, அதேபோல் தொடர்ந்து மானியம் வழங்க வேண்டும் என்று பிரதமரிடம் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவையில் நேற்று ஆயிரத்து 73 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதிதாக 292 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்களில் புதுவையில் 283, காரைக்காலில் 17, ஏனாமில் 3, மாகேயில் 9 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவையில் தற்போது ஆயிரத்து 476, காரைக்காலில் 83, ஏனாமில் 153, மாகியில் 38 பேர் நோய் தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் புதுவையில் 460, காரைக்காலில் 29, ஏனாமில் 10, மாகேயில் 4 பேர் என மொத்தம் 503 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 17 ஆயிரத்து 316 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆயிரத்து 752 பேர் தொற்றுடன் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். 12 ஆயிரத்து 135 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
புதுவையில் 2 ஆயிரத்து 824, காரைக்காலில் 144, ஏனாமில் 136 பேர் என 3 ஆயிரத்து 104 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 314 பேர் கொரோனாவுக்கு பலியாகியிருந்தனர்.
இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 11 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். புதுவை ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர், கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 8 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
இதனால் புதுவை மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 325 ஆக உயர்ந்துள்ளது. இத்தகவலை புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் பணியாற்றிய ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் சட்டசபை சில நாட்கள் மூடப்பட்டது.
பின்னர் வழக்கம் போல சட்டசபையில் அமைச்சர்கள், அரசியல்கட்சி அலுவலகங்கள் இயங்கி வந்தது. இந்நிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமியின் அலுவலக ஊழியர் ஒருவருக்கு காய்ச்சல் இருந்ததால் 2 நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சென்றார். அவர் ஜிப்மரில் பரிசோதனை செய்த போது கொரோனா தொற்று உறுதியானது. இதனைத்தொடர்ந்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் முதல்-அமைச்சர் அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
புதுச்சேரி:
அதிகாரிகளுடன் பேச தடை விதித்து கவர்னர் கிரண்பேடி அமைச்சர் கந்தசாமிக்கு கடிதம் எழுதினார். இதற்கு முதல்- அமைச்சர் நாராயணசாமி அமைச்சர்களின் அதிகாரத்தை கட்டுப்படுத்துவதா.? என கண்டனம் தெரிவித்து கடிதம் எழுதினார்.
இந்த நிலையில் கவர்னர் கிரண்பேடி முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
மக்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைவரும் மிக அழுத்தம் தரக்கூடிய காலத்தில் இருக்கிறோம். அந்த நேரத்தில் முன்னுரிமை தரவேண்டிய விஷயம் எதுவென்பதில் சரியான தேர்வு தேவை.
குற்றச்சாட்டுகளை வெளியிடுவதும், பொய்யைப் பரப்புவதும் மக்களை குணமாக்கப் போவதில்லை, ஆனால் அதிகமானவர்களை காயப்படுத்துகிறது. நீங்கள் சொல்லும், குற்றம் சாட்டும் அனைத்தையும் என்னால் மறுக்க முடியும், ஆனால் அதற்கான நேரம் இதுவல்ல. தயவு செய்து கொரோனாவை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள். கொரோனா சவாலை எதிர் கொள்ள மத்திய அரசு தந்துள்ள ஐ.சி.எம்.ஆர். குழுவின் முழு உதவியை பெறுங்கள்.
அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான ஊதியம் வழங்குவது குறித்து முடிவு எங்கு நடக்கிறது என்று நான் உங்களுக்கு கேள்வி எழுப்புகிறேன். அதுதொடர்பான விஷயம் ஏதும் ராஜ்நிவாசில் நிலுவையில் இல்லை.
ஆனால் அவர்கள் இங்கு போராட்டம் நடத்துகிறார்கள். அதேபோல் மீனவர் விவகாரத்திலும் எந்த விஷயமும் ராஜ்நிவாசில் நிலுவையில் இல்லாத போதும் அவர்கள் இங்கு போராட்டம் நடத்துகிறார்கள்.
அதேபோல் பட்ஜெட் அதிகாரியாரால் அச்சுறுத்தப்பட்டார் என்று கேள்வி எழுப்புகிறேன். இதேபோல் வேறு பல விஷயங்களும் உள்ளன. தயவு செய்து பிரச்சினைகளை திசைதிருப்பாதீர்கள்.
இவ்வாறு கிரண்பேடி கடிதத்தில் கூறியுள்ளார்.
புதுச்சேரி:
கடந்த 2016 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பணி நிரந்தரம் உறுதி செய்யப்பட்ட எம்.டி.எஸ் ஊழியர்களுக்கு பணி நிரந்தர உத்தரவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடிநீர் உந்து நிலையங்கள், கீழ்நிலை மற்றும் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள், கழிவு நீர் உட்கோட்டம் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஊழியர்கள் பற்றாக்குறையை போக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிய எம்.டி.எஸ். ஊழியர்களுக்கு பணிமூப்பு பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும். கொரோனா பணிக்கு சென்றுள்ள எம்.டி.எஸ். ஊழியர்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுப்பணித்துறை எம்.டி.எஸ்.ஊழியர் சங்கத்தின் சார்பில் இன்று காலை பொதுப்பணித்துறை பொது சுகாதார கோட்ட அலுவலக வாயிலில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்க தலைவர் முரளி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
புதுச்சேரி:
புதுவை உப்பளம் நேதாஜி நகர்-2 பால்வாடி தெருவை சேர்ந்தவர் தேவசகாயராஜ். இவரது மனைவி ஸ்டெல்லா. இவர்களுக்கு ஜெயராஜ் (வயது19), பேட்ரிக்(15) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். ஸ்டெல்லா ஆசிரமத்தில் கூலி வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று மாலை ஸ்டெல்லாவின் இளையமகன் பேட்ரிக் நேதாஜிநகர் ரங்கநாதன் தெருவில் சென்ற போது அப்பகுதியை சேர்ந்த சாந்தகுமார் என்பவரின் நாய் பேட்ரிக்கை பார்த்து குரைத்தது.
இதனை பேட்ரிக் குடும்பத்தினர் தட்டிக்கேட்ட போது அவர்களுக்கும் சாந்தகுமாருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து பேட்ரிக் குடும்பத்தினர் அங்கிருந்து வீடு திரும்பி விட்டனர். இதன்பின்னர் ஸ்டெல்லாவின் மூத்த மகன் ஜெயராஜ் இரவு 9 மணியளவில் சாந்தகுமாரின் வீட்டு வழியாக சென்றார்.
அப்போது ஜெயராஜை தகாத வார்த்தைகளால் திட்டிய சாந்தகுமார் திடீரென வீட்டுக்குள் சென்று அரிவாளை எடுத்து வந்து ஜெயராஜை சரமாரியாக வெட்டினார். மேலும் கொலை செய்து விடுவதாக சாந்தகுமார் மிரட்டல் விடுத்தார்.
இந்த தாக்குதலில் ஜெயராஜூக்கு இடது கை மற்றும் தோள் பட்டை முதுகில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டது. அவரை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஸ்டெல்லா ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்கு பதிவு செய்து சாந்தகுமாரை தேடி வருகிறார்.
புதுச்சேரி:
புதுவை சட்டமன்ற அ.தி.மு.க. கட்சித்தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் உள்ள 739 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 35 மாவட்டங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் புதுவை கொரோனா பாதிப்பு அதிகம் பாதிக்கும் மாவட்டமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
நாட்டில் தேசிய இறப்பு விகிதம் 1.72 சதவீதத்தை தாண்டி, புதுவையில் இறப்பு விகிதம் 1.83 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கு காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி அரசின் செயல்படாத தன்மையே காரணம். ஆளும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி அரசு மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளது. கொடிய சூழ்நிலையிலும் கவர்னர், அரசு ஒருவர் மீது ஒருவர் குறை கூறி மலிவு விளம்பர அரசியல் நடத்தி மக்களுக்கு துரோகம் செய்கின்றனர்.
பரிசோதனையை அதிகப்படுத்தி ஆரம்பத்திலேயே உரிய சிகிச்சை அளிக்க அரசு தவறி வருகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளைவிட 3 மடங்கு நோயாளிகள் வீட்டிலேயே தங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
வீட்டில் தங்கும் நோயாளிகள் நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு உபாதைக்கு தள்ளப்பட்டவுடன் நோயின் தாக்கம் அதிகமாகி மருத்துவமனையில் சேர்க்கப்படும் நோயாளிகள் மரணமடைந்து வருகிறார்கள்.
போதிய மருந்துகளும் அரசிடம் இருப்பு இல்லை. அரசின் அலட்சியத்தால் மரணமடைபவர்களின் ஆத்மா கூட கவர்னர், தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி அரசை மன்னிக்காது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






