என் மலர்
புதுச்சேரி
புதுச்சேரி:
புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு மாநில அரசுக்கு 2019-20 ரூ.200 கோடி கொடுத்ததாக சிலர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் பெற்றதாக வாட்ஸ் அப்பில் தகவல் பகிர்ந்து வருகின்றனர். மாநில அரசின் கோரிக்கையை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மத்திய அரசு மாநில அரசுக்கு ரூ.3 ஆயிரம் கோடி மானியம் வழங்க வேண்டும். ஆனால் ரூ ஆயிரத்து 700 கோடி தருவதாக மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. அதிலும் இதுவரை ரூ 520 கோடி மட்டுமே கொடுத்துள்ளனர். மீதி உள்ள நிதி இதுவரை வரவில்லை.
7-வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்தியதற்காக 4 ஆண்டிற்கு ரூ ஆயிரத்து 800 கோடி நிதி தர வேண்டும். ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகை ரூ.700 கோடி தரவேண்டும். இவை எதையும் மத்திய அரசு கொடுக்க வில்லை
ஆனால் கடந்த 2019-20-க்கு மத்திய அரசு புதுவை அரசுக்கு ரூ.200 கோடி கொடுத்து விட்டது என்று தம்பட்டம் அடித்துக் கொள்கின்றனர். இப்படி பேசி மக்கள் மத்தியில் பொய்யான தகவல்களை பரப்பி கொண்டிருப்பவர்களுக்கு சொல்கிறேன்.
புதுவை மாநிலத்தை மத்திய அரசு புறக்கணிக்கிறது. மாநிலத்திற்கு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்கவில்லை ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையை கொடுக்கவில்லை. இதனை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய கடமை. எங்களுக்கு இருக்கிறது ரூ.200 கோடியை வைத்துக்கொண்டு ஒரு மாநில அரசை நடத்த முடியுமா.?
இதனைப் புரிந்துகொண்டு அவர்கள் பேச வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் நடத்துகின்றனர். கடந்த 8 மாதமாக அவர்களுக்கான ஊதியத்தை கொடுக்க முடியவில்லை.
இதன்மூலம் அவர்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை கவர்னர் கிரண்பேடி செய்துள்ளார். இதனால் அவர்கள் இன்று தெருவில் இறங்கி போராட்டம் நடத்துகின்றனர்.
இதே போல் ரோடியர், சுதேசி, பாரதி பஞ்சாலை தொழிலாளர்களுக்கு பிரச்சினையை உருவாக்கு கிறார். மானியத்தில் இருந்து பணம் கொடுக்கக் கூடாது என கிரண்பேடி கூறுகிறார். அப்படியானால் அந்த குடும்பங்களின் நிலை என்ன ஆகும்.
அதுபோல் கூட்டுறவு நிறுவனங்களுக்கும் கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்கக் கூடாது என்கிறார். இவ்வாறு புதுவை அரசுக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் கிரண்பேடி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். நீதிமன்ற உத்தரவையும் மீறுகிறார், மாநில முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கிறார் அவரால் புதுவைக்கு என்ன பயன் என்பதை மக்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.
இவ்வாறு நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி:
புதுவையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக புதுவையின் பல்வேறு பகுதிகளில் கொரோனா பரிசோதனைகள் அதிக அளவில் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் வீடு, வீடாக சென்று கொரோனா பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வெங்கடேஸ்வரா நகர் தென்றல் நகரில் கட்டுப்பாடு மண்டல பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு வீடுகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் பாதுகாப்பு கவச உடை அணிந்து சென்று நேரில் சந்தித்தார்.
அப்போது அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதையடுத்து கொரோனா நோயாளிகளின் குறைகளை போக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் கொரோனா நோயாளிகளின் குறையை கலைய உடனடி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.
அமைச்சருடன் இந்திய முறை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குனர் ஸ்ரீராமுலு. கோவிட் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ரமேஷ் மற்றும் மருத்துவ அதிகாரிகள் இந்த ஆய்வின் போது உடனிருந்தனர்.
புதுச்சேரி:
கொரோனா தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம் சட்டசபை வளாகத்தில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சர் அலுவலகத்தில் நடந்தது. அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வளர்ச்சி ஆணையர் அன்பரசு, சுகாதாரத்துறை செயலாளர் அருண், இயக்குனர் மோகன்குமார் மற்றும் சுகாதாரதுறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்
கூட்டத்தில் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் பேசியதாவது:-
கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் வீடுகளில் உள்ள முதியோர், குழந்தைகள், கர்ப்பிணி பெண்களுக்கு வீடு தேடிச் சென்று பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தொற்று அதிகம் உள்ள 25 பகுதிகள் கண்டறியப்பட்டு உள்ளது. இந்த பகுதியில் வீடு, வீடாக சென்று அவர்களுக்கு கொரோனா உள்ளதா? என மாதிரி சேகரிக்கப்பட வேண்டும் என்றார்.
தொடர்ந்து நடந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பு பணிக்கான லேப் டெக்னீசியன் பணிக்கு ஜிப்மரில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கலாம் என முடிவெடுக்கப்பட்டது. மேலும் கொரோனா நோயாளிகளை இடமாற்றம் செய்ய பி.ஆர்.டி.சி. மினிபஸ் ஆகியவற்றை பயன்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
அதோடு, 10 புதியதாக ஆம்புலன்ஸ்கள் வாங்க முடிவு செய்யப்பட்டது. புதிய ஆம்புலன்ஸ் வரும் வரை தனியார் ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை கவர்னர் கிரண் பேடிக்கும் முதல்-அமைச்சர் நாராயணாசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் இடையில் ஏற்கனவே மோதல் போக்கு இருந்து வருகிறது.
இந்த மோதல் அவ்வப்போது வெடித்து உச்சகட்டத்தை அடையும். பின் சில மாதங்களில் சரியாகி புதிய விவகாரத்தில் மீண்டும் மோதல் ஏற்படும், இந்த நிலை கடந்த 4 ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த ஜூலை மாதத்தில் நடந்த பட்ஜெட் கூட்ட தொடரில் உரையாற்ற வருகை தர கவர்னர் மறுத்தார். இதனால் கவர்னருக்கும் முதல்- அமைச்சருக்கும் இடையில் மீண்டும் மோதல் ஏற்பட்டது. தற்போது அடுத்த விவகாரம் வெடித்துள்ளது.
புதுவை பட்ஜெட்டில் தாழ்த்தப்பட்டோருக்கான சிறப்பு கூறு நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. இந்நிதியை தாழ்த்தப்பட்டோருக்கு முழுமையாக செலவு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது, இதனால் கர்நாடகா மாநிலத்தில் உள்ளது போல சட்டம் வரையறுக்க வேண்டும் என ஆதிதிராவிடர் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 28 -ந் தேதி அமைச்சர் கந்தசாமி பட்ஜெட் அதிகாரி ரவிச்சந்திரனை தொடர்பு கொண்டு சிறப்பு கூறு நிதியை முழுமையாக செலவு செய்யப்படாதது குறித்தும் பட்ஜெட்டில் சட்டம் இயற்ற அறிவிப்பு வெளியிடாதது குறித்தும் பேசினார். அவர் பேசும்போது தன்னிடம் ஆதிதிராவிடர் அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் இனி அந்த அமைப்பினரை உங்களிடமே நேரடியாக பேச அனுப்ப இருப்பதாகவும் கூறியதாக தெரிகிறது.
இதனையடுத்து பட்ஜெட் அதிகாரி ரவிச்சந்திரன் தன்னை வேறு துறைக்கு மாற்றும்படி நிதித்துறை செயலருக்கு கடிதம் எழுதினார். நிதித்துறை செயலர் பட்ஜெட் அதிகாரியன் அனுபவமும் ஆற்றலும் துறைக்கு தொடர்ந்து தேவை என்பதால் வேறு துறைக்கு மாற்ற கூடாது என்று கவர்னருக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.
இதையடுத்து கவர்னர் கிரண்பேடி சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமிக்கு ஒரு கடிதம் எழுதினார் அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
நிதித்துறை தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் விவரங்கள் மற்றும் தீர்க்கப்பட வேண்டிய விஷயங்கள் இருப்பின் நீங்கள் நிதிச்செயலர் அல்லது தலைமை செயலருடன் பேசலாம்,மாறாக இளநிலை அதிகாரிகளுடன் குறிப்பிட்ட வகையில் விவாதம் செய்து அவர்களுக்கு மனதளவில் பாதுகாப்பின்மையும், சுயபாதுகாப்பு குறித்த பயத்தையும் உருவாக்காதீர்கள்.
பட்ஜெட் அதிகாரி ரவிசங்கர் திறமை வாய்ந்தவர். பொறுப்பு வாய்ந்தவர் மற்றும் கடின உழைப்பாளி. அவரது சிறந்த சேவையை அரசு நிதித்துறையில் அளித்து வருகிறார். அந்த அதிகாரியை மீண்டும் பணியில் இணைத்து அவருடைய பணியினை எந்தவித பயமும் பாரபட்சமும் இன்றிமேற்கொள்ள நிதி செயலருக்கு அறிவுறுத்தி உள்ளேன்.
மேலும் காவல்துறை தலைவருக்கு, ரவிசங்கருக்கு தனிப்பட்ட பாதுகாப்பினை அளிக்குமாறு அறிவுறுத்தி உள்ளேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கவர்னர் குறிப்பிட்டுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை பூமியான்பேட்டை பாவாணர் நகரை சேர்ந்தவர் சுப்புராயன். ஓட்டல் ஊழியர். இவரது தாய் சின்ன பொண்ணு (வயது 70) வயது முதிர்வு காரணமாகவும் உடல்நல குறைவாலும் இவர் அவதிப்பட்டு வந்தார்.
கடந்த 2 நாட்களாக சின்ன பொண்ணு கடுமையான நோய் கொடுமையால் துடித்து வந்தார்.
இதனால் மனமுடைந்த சின்னபொண்ணு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று காலை பொதுக்கழிவறைக்கு சென்ற அவர் அங்கு தனது சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
இதனை கண்ட அப்பகுதி மக்கள் ரெட்டியார்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். ரெட்டியார்பாளையம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்
புதுச்சேரி:
புதுவை ஜிப்மர் மருத்துவ மனையில் மயக்க மருந்தியல் துறை டாக்டர் அதிதன்.
தற்போது இவர் கொரோனா வார்டில் பணியாற்றி வருகிறார். கடந்த 31-ந் தேதி இவர் பணியில் இருந்தபோது உதவிக்கு ஊழியர் செந்தில்குமார் என்பவரை அழைத்துள்ளார்.
ஆனால் செந்தில்குமார் வர மறுத்துள்ளார். அப்போது அவர்களுக்குள் இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமார், டாக்டர் அதிதனை தகாத வார்த்தைகளால் திட்டி கையால் தாக்கினார்.
இதனிடையே டாக்டரை தாக்கிய ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஜிப்மரில் டாக்டர்கள் கடந்த 3 நாட்களாக கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் டாக்டர் அதிதன் தன்னை தாக்கிய ஊழியர் மீது கோரிமேடு போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின்அடிப்படையில் ஊழியர் செந்தில்குமார் மீது போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுவையில் நேற்றைய தினம் 1437 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கோள்ளப்பட்டது.
இதில் மாநிலம் முழுவதும் 408 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் புதுவையில் 343 பேருக்கும், காரைக்காலில் 25 பேருக்கும், ஏனாமில் 32 பேருக்கும் மாகியில் 8 பேரும் அடங்குவர்.
தற்போது மருத்துவமனைகளில் 1762 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அதே நேரத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு 3399 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களை விட இருமடங்காகும்.
ஒட்டுமொத்தமாக மாநிலம் முழுவதும் 16,566 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதில் 11,107 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
நேற்று ஒரே நாளில்433 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர் இது தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை விட உயர்ந்துள்ளது.
அதே நேரத்தில் நேற்றைய தினம் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 18 பேர் பலியாகியுள்ளனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 298 ஆக உயர்ந்துள்ளது.
இத்தகவல்களை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புதுவை மாநிலத்தில் 32 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் உள்ளன.
இதில் 450-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
மேலும் 400 பேர் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இவர்களுக்கு கடந்தாண்டு டிசம்பர் மாதம் முதல் சம்பளம், ஓய்வூதியம் ஆகியவை வழங்கப்படவில்லை.
இதனை கண்டித்து அரசு நிதி உதவி பெறும் ஆசிரியர்கள் சங்கத்தினர் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆயினும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் ஆசிரியர் தினத்தை புறக்கணித்து கவர்னர் மாளிகையை முற்றுகையிட போவதாக அறிவித்திருந்தனர்.
இதன்படி இன்று காலை ஆசிரியர்கள் ரங்கப்பிள்ளை வீதி- மிஷன் வீதி சந்திப்பில் ஒன்று கூடினர். அங்கிருந்து பேரணியாக புறப்பட்டு தலைமை தபால் நிலையம் வழியாக கவர்னர் மாளிகையை முற்றுகையிட வந்தனர். அங்கு போலீசார் தடுப்பு கட்டைகளை அமைத்து அவர்களை தடுத்தனர்.
இதனையடுத்து தலைமை தபால் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆசிரியர் தினத்தன்று ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






