என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பாஸ்கருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கோரிமேடு இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது தெரியவந்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று அமைச்சர்கள், எம்.எல். ஏ.க்களையும் விட்டு வைக்க வில்லை.

    ஏற்கனவே அமைச்சர்கள் கந்தசாமி, கமலக்கண்ணன், என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெயபால், தி.மு.க. எம்.எல்.ஏ. சிவா ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பாஸ்கர் கடந்த சில நாட்களாக சளி, இருமலால் அவதிப்பட்டு வந்தார்.

    இதனையடுத்து கோரிமேடு இ.எஸ்.ஐ. மருத்துவ மனையில் கொரோனா பரிசோதனை செய்தார். இதில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

    இதையடுத்து அவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    கொரோனா தொற்று பரவ தொடங்கியது முதலே முதலியார்பேட்டை தொகுதியில் பாதிப்பு இருந்து வருகிறது. இதனால் அங்கு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பாஸ்கர் எம்.எல்.ஏ. அரிசி, காய்கறி உள்ளிட்ட பொருட்களை வழங்கி தனது சொந்த செலவிலேயே தொகுதி முழுவதும் கிருமி நாசினியும் தெளித்து வந்தார்.

    இந்த பணிகளையும் நாள்தோறும் பார்வையிட்டு வந்த அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

    கவர்னர் கிரண்பேடி தவறான தகவல்களை கொடுப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் குற்றம்சாட்டியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கொரோனா தொற்று பரிசோதனைகளை தற்போது கிராமப்புறங்களிலும் மேற்கொள்கிறோம். சிகிச்சை அளிப்பது தொடர்பாக தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகங்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. வருகிற 10-ந் தேதிக்குள் ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் வசதி கொண்ட 100 படுக்கைகளை ஏற்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதேபோல் ஒவ்வொரு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் நாள்தோறும் புதுச்சேரியை சேர்ந்த 100 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வலியுறுத்தி உள்ளோம். அவர்களுக்கு தேவையான உணவுக்கான தொகை, மருந்து, பாதுகாப்பு கவச உடைகள் தருவதாக உறுதியளித்துள்ளோம். இதேபோல் தொகுதிதோறும் பரிசோதனை நடத்தும் முகாமும் தொடங்கி உள்ளது.

    அடுத்தட்டமாக சுகாதார பணியாளர்களை கொண்டு வீடுவீடாக சென்று ஆய்வு நடத்த கூறியுள்ளோம். அதாவது ஒரு வீட்டில் 60 வயதுக்கு மேல் மற்றும் 10 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் குறித்த விவரங்களை சேகரிக்க உள்ளோம். கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது.

    ஆனால் அதுதொடர்பான குறிப்புகள் கவர்னர் மாளிகையில் இருந்து வெளியிடப்படுகிறது. கவர்னர் கிரண்பேடி மத்தியக்குழு தனது கட்டுப்பாட்டில் உள்ளதுபோல் செயல்படுகிறார். மக்கள் மத்தியில் அவர் தவறான தகவல்களை கொடுத்து உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    வில்லியனூர் அருகே திருமண ஏக்கத்தில் காவலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வில்லியனூர்:

    ஏம்பலம் அருகே தமிழக பகுதியான பாக்கத்தை சேர்ந்தவர் முத்துகுமரன் (வயது44). இவர் வில்லியனூர் ஆச்சார்யாபுரம் மூகாம்பிகை நகரில் புதிதாக கட்டிவரும் ஒரு வீட்டில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. போதிய வருமானம் இல்லாததால் இவருக்கு யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது.

    இதனால் முத்துகுமரன் மன வருத்தத்தில் இருந்து வந்தார். குறைந்த வயது உள்ளவர்களுக்கும், வருமானம் இன்றி, வேலை இல்லாமல் ஊரை சுற்றி வருபவர்களுக்கும் திருமணம் நடக்கும்போது தனக்கு மட்டும் திருமணம் கை கூடவில்லையே என்று முத்துகுமரன் விரக்தியில் இருந்து வந்தார்.

    இதனால் மனமுடைந்த முத்துகுமரன் நேற்று தான் வேலை பார்க்கும் கட்டிடத்தின் அருகே கட்டுமான பொருட்கள் வைத்திருக்கும் கூரை கொட்டகையில் கயிற்றால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த தகவலின் பேரில் மங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுவையில் உள்ள 15 துணை சுகாதார நிலையங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் கவனிப்பு மையம் என்ற பெயரில் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஒத்துழைப்பும் அவசியமாக உள்ளது. எனவே தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்துடன் சட்டசபை வளாகத்தில் முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், தலைமைச் செயலாளர் அஸ்வினி குமார், வளர்ச்சி ஆணையர் அன்பரசு, சுகாதாரத்துறை செயலாளரும் மாவட்ட கலெக்டருமான அருண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    தனியார் கல்லூரிகள் தரப்பில் அதன் நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளின் பங்களிப்பு குறைவாக உள்ளது என அரசு தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.

    மேலும், மக்கள் நலன் கருதி அரசு எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்திற்க்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

    அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரிகளும் வருகிற 10-ந் தேதிக்குள் கொரோனா பரிசோதனையை தொடங்க வேண்டும். அதில் தினசரி குறைந்தபட்சம் 100 பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    மேலும் அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் ஆக்சிஜனுடன் கூடிய 100 படுக்கைகள் கட்டாயம் வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதோடு, புதுவையில் உள்ள 15 துணை சுகாதார நிலையங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் கவனிப்பு மையம் என்ற பெயரில் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி சளி மற்றும் காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள சுகாதார நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம்.

    டி.என். பாளையம், மேல் சாத்தமங்களம், குருவிநத்தம், மணமேடு,லிங்கா ரெட்டிபாளையம், கோரி மேடு, பொறையூர், பண்ட சோழநல்லூர், ஆலங்குப்பம், செல்லிபட்டு, நல்லவாடு, திருவண்டார்கோயில், கோர்க்காடு, கொடாத்தூர், குருமாம்பட்டு ஆகிய பகுதியில் உள்ள துணை சுகாதார மையங்களில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள முடியும்.

    புதுச்சேரியில் கோழிக்கறி சாப்பிட்டு தூங்கிய கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    புதுவை அருந்ததி நகர் மாரியம்மன் கோவில் வீதியில் வசித்து வந்தவர் சக்திவேல் (வயது 45). கூலி தொழிலாளி. உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார்.

    இவரது மனைவி ஜெயலட்சுமி (44) இவர்களுக்கு குழந்தை இல்லை. நேற்று முன்தினம் இரவு கோழிக்கறி சாப்பிட்டுவிட்டு சக்திவேல் படுத்து தூங்கியுள்ளார். சிறிது நேரத்தில் அவருக்கு நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டது.

    காலையில் சரியாகிவிடும் என நினைத்து சக்திவேல் படுத்து தூங்கியுள்ளார். நேற்று காலை ஜெயலட்சுமி அவரை எழுப்பியபோது சக்திவேல் இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து ஜெயலட்சுமி உருளையன்பேட்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சக்திவேலு கோழிக்கறி சாப்பிட்டதில் உணவு வி‌ஷத்தன்மை மாறி இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வில்லியனூர் அருகே குடிபோதையில் மாடி படிக்கட்டில் தவறி விழுந்த கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வில்லியனூர்:

    வளவனூர் அருகே குமாரக்குப்பம் கலைஞர் நகரை சேர்ந்தவர் அய்யனார் (வயது25). கட்டிட தொழிலாளி இவர் வில்லியனூர் அருகே உருவையாறில் தங்கி புதிதாக கட்டி வரும் ஒரு வீட்டில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தார். அய்யனாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.

    சம்பவத்தன்று அய்யனார் மதுகுடித்து விட்டு குடிபோதையில் தான் தங்கியிருக்கும் வீட்டுக்கு பதிலாக அருகில் புதிதாக கட்டி வரும் மற்றொரு வீட்டின் படிக்கட்டில் ஏற முயன்றார்.

    அப்போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அய்யனாரை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அய்யனார் பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் மங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி, ஏட்டு கருணாகரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதுவையில் 20 பேரில் ஒருவருக்கு தொற்று இருப்பது குறித்து ஜிப்மர் ஆய்வை வெளியான தகவல் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா வைரஸ் தொற்று பரவலின் தாக்கம் தெரிந்துகொள்வதற்காக ஜிப்மர் மருத்துவமனை சமூக ஆய்வை மேற்கொண்டது.

    ஜிப்மர் மருத்துவ மனையின் நுண்ணுயிரியல் துறை மற்றும் சமூக நோய் தடுப்பு துறை வல்லுனர்கள் ஆய்வை மேற்கொண்டனர். இந்த ஆய்வில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் பங்கேற்றனர்.

    இதில் பங்கேற்றவர்களை 30 தொகுப்பாக பிரித்து நகர்ப்புற மற்றும் கிராமப்பகுதியை சேர்ந்தவர்கள் என்ற விகிதத்தில் புதுவையில் உள்ள மக்கள் தொகையை கணக்கில் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    அதன்படி ஜூலை கடைசி வாரத்தில் புதுவையில் 20 பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இந்த தகவலை ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. புதுவையில் 20 பேரில் ஒருவருக்கு தொற்று இருப்பது குறித்து ஜிப்மர் ஆய்வை வெளியான தகவல் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    கொரோனாவால் தனிமைபடுத்தப்பட்டவர்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க தொகுதிவாரியாக முகவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்தவும், அதனை முற்றிலும் ஒழிக்கவும் பல உத்திகளை கையாண்டு அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் கொரோனா நோயாளிகளுடன் நெருக்கி பழகியவர்கள் அனைவரும் மருத்துவர் ஆலோசனைப்படி தங்களை தனிமைபடுத்திக்கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்கள் தனிமைபடுத்திக்கொள்ளும் போது தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியே வரக்கூடாது.

    தனிமைபடுத்தப்பட்டவர்கள் குறிப்பாக அத்தியாவசிய பொருட்களான மளிகை, காய்கறி போன்றவற்றை வாங்குவதற்கான வெளியே வருகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. எனவே அவர்கள் அனைத்து அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு புதுச்சேரி வணிகர் கூட்டமைப்பு மூலமாக விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி புதுவை பிராந்தியத்தில் உள்ள 23 சட்டமன்ற தொகுதிகளிலும் தொகுதிக்கு ஒரு முகவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஒவ்வொரு முகவரும் குறைந்தது 5 வியாபாரிகள் கொண்ட குழுவாக இயங்குவார்கள். தனிமைபடுத்தப்பட்டவர்கள் தங்களுக்கு வேண்டிய அனைத்து அத்தியாவசிய பொருட்களை இந்த முகவர்கள் மற்றும் வியாபாரிகள் மூலமாக பெற்றுக்கொள்ளலாம். இந்த முகவர்கள் மற்றும் வியாபாரிகள் வாட்ஸ் அப் குரூப் அமைத்து இயங்குவார்கள். புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பின் முக்கிய நிர்வாகிகள் செல்போன் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. சிவசங்கர்-9443239933, பாலு-8668033939, தங்கமணி-9443236018, சித்திக்-9944071712, அவசர கால மையம்-1070,1077.

    இவர்களின் ஒருங்கிணைப்பை புதுவை மாநில அவசர கால செயல் மையம் மற்றும் கொரோனா கட்டுப்பாட்டு அறை செய்து கொடுக்கும். தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க விரும்புவோர் மாநில அவசர கால செயல் மையத்திற்கோ, அல்லது தங்கள் தொகுதியில் உள்ள முகவர்களுக்கோ, வியாபாரிகளுக்கோ தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாங்கிக்கொள்ளலாம். அவ்வாறு தனிமை படுத்தப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

    அவர்கள் முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்து கொண்டு கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு தொடர்பில்லா முறையில் அவர்களுக்கு வேண்டிய அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்வார்கள். இது போன்று விற்பனை செய்பவர்கள் பொருட்களின் விலையை தவிர அதிகமான பணம் வாங்க மாட்டார்கள். இந்த சேவையை தனிமைபடுத்தப்பட்டவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் புதுவை அரசு தோல்வி கண்டுள்ளது என்று அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றஞ்சாட்டினார்.
    புதுச்சேரி:

    புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா தடுப்பு விஷயத்தில் புதுவை காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி அரசு முழுமையாக தோல்வியை கண்டுள்ளது. இந்த தோல்விக்கு கவர்னர் மற்றும் ஆளும் அரசுக்கு இடையேயான மோதல் போக்கும் ஒரு காரணமாக அமைந்தது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பே மருத்துவம் சார்ந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், உபகரணங்கள் வாங்கவும், போதுமான டாக்டர்கள், நர்சுகள் நியமனம் செய்யவும் அரசால் அனுப்பப்பட்ட கோப்புகளுக்கு இப்போதுதான் அனுமதி கிடைத்து ஒரு சில நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கடந்த 4 மாதங்களுக்கு முன்பே கவர்னர் அனுமதி வழங்கியிருந்தால் கொரோனா தொற்றை புதுச்சேரியில் ஓராளவு கட்டுக்குள் கொண்டு வந்திருக்கலாம்.

    தற்போது தினசரி செய்யப்படும் 1,800 பரிசோதனைகளை 3 ஆயிரமாக உயர்த்த முதல்-அமைச்சர் அறிவித்து இருந்தார். ஆனால் அவரது அறிவிப்புக்கு பின்னர் அந்த எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டு இப்போது 1,300 நபர்களுக்கு மட்டுமே பரிசோதனை செய்யும் நிலையை சுகாதாரத்துறை இயக்குனர் வாய்மொழி உத்தரவு மூலம் செய்துள்ளார்.

    முதல்-அமைச்சரின் உத்தரவையே மீறும் அதிகாரத்தை சுகாதாரத்துறை இயக்குனருக்கு யார் அளித்தது? இதில் உள்ள உண்மை நிலையை கவர்னரும், முதல்-அமைச்சரும் உணர்ந்து சுகாதாரத்துறை இயக்குனரை மாற்ற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    சுப, துக்க நிகழ்ச்சிகளில் கூட்டம் கூடுவதை மக்கள் தவிர்க்கவேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதுவைக்கு வந்த மத்தியக்குழு பல பரிந்துரைகளை வழங்கியுள்ளது. ஆனால் அதற்கு முன்பாகவே நாம் சில ஆயத்த வேலைகளை செய்துள்ளோம். கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளின் எண்ணிக்கையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் ஜிப்மரிலும் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

    தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் தொடர்பாகவும் நிறைய புகார்கள் வருகின்றன. டாக்டர்கள் வந்து நோயாளிகளை பார்ப்பதில்லை, உணவு சரியான நேரத்திற்கு வழங்குவதில்லை என்கின்றனர். தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் 100 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், அவை தவிர்த்து 200 படுக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    தனியார் ஆஸ்பத்திரிகளில் நிலவும் குறைகள் தொடர்பாக அந்த நிர்வாகங்களை அழைத்து பேச உள்ளோம். எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் மக்கள் அரசோடு ஒத்துழைக்கவேண்டும். மத்திய அரசு தற்போது தளர்வுகளை அறிவித்துள்ளது. தளர்வுகள் அதிகரிக்கும்போது நோய் பாதிப்பு அதிகரிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. எனவே பொதுமக்கள் திருமணம், இறப்பு நிகழ்ச்சிகளில் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும்.

    பெருகிவரும் நோயாளிகளுக்கு ஏற்ப மருத்துவ பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கழிப்பறை சரியில்லை என்ற புகாரின் அடிப்படையில் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்தார். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளும் தங்கள் வீட்டு கழிவறையைப்போல் சுத்தமாக வைத்திருக்க உதவிட வேண்டும்.

    மத்திய அரசு நமக்கு தரவேண்டிய நிதியை தரவில்லை. குறிப்பாக 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்தியதற்கான நிதி, ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தொகை, சரக்கு மற்றும் சேவை வரிக்கான 5 மாத இழப்பீடு ஆகியவை இன்னும் வழங்கப்படவில்லை. நமது மாநில வருவாயும் குறைந்துள்ளது.

    கடந்த ஜூலை மாதம் நடந்த சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் கூட்டத்தில் மாநிலங்களுக்கு மத்திய அரசு தரவேண்டிய இழப்பீட்டு தொகையை வழங்க வலியுறுத்தினோம். ஆனால் மத்திய நிதி மந்திரி அந்த தொகையை ரிசர்வ் வங்கியில் கடன் வாங்கிக்கொள்ள வேண்டும் என்றும் அதற்கு மத்திய அரசு உத்தரவாதம் அளிப்பதாகவும் கூறினார். அந்த தொகையை மாநில அரசுகளே 2 வருடத்தில் திருப்பி செலுத்த வேண்டுமாம். இதனை மாநில அரசுகள் ஏற்கவில்லை.

    மாநில அரசுக்கான நிதியை மத்திய அரசுதான் வழங்க வேண்டும். ஏனெனில் எல்லா மாநிலங்களிலும் நிதிப்பற்றாக்குறை உள்ளது. இதுதொடர்பாக அடுத்த சரக்கு மற்றும் சேவைவரி கவுன்சில் கூட்டத்தில் மீண்டும் வலியுறுத்தப்படும்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
    கொரோனா தொடர்பாக தனிமையில் முடிவுகள் எடுக்கவேண்டாம் என்று கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசு மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவை அனுப்பி உள்ளது. இந்த குழு ஐ.சி.எம்.ஆர். மற்றும் ஜிப்மரிலிருந்து வந்து தற்போது ஒரு வாரத்துக்கும் மேலாகியுள்ளது. அவர்கள் நமக்கான பணிகளை மதிப்பீடு செய்து நமக்கு வழிகாட்டுவது மற்றும் பயிற்சி அளிக்கிற துறையில் உள்ளனர். கொரோனா சிக்கல்களில் நாம் அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். இது அவர்களுடைய வேலையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

    அந்த குழு தினசரி நேரடியாக இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்திற்கும், சுகாதார அமைச்சகத்திற்கும் அறிக்கை அளிக்கிறது. எனவே தயவுசெய்து தனிமையில் முடிவுகளை எடுக்கவேண்டாம். மேலும் அத்தகைய செயல்களை புறக்கணிக்கவும், இந்த அறிக்கைகள் அனைவருடைய பார்வைக்கும், பின்னூட்டங்களுக்கும் முன் வைக்கப்படும். அவர்கள் இப்போது தினசரி சுகாதார செயலாளரை சந்தித்து வருவதால் நிவாரண மற்றும் மறுவாழ்வு ஆணையர் அவர்களுடனான அனைத்து சந்திப்புகளும் முறையாக பகிரப்பட வேண்டும். அவர்களைப்பற்றி எந்த ரகசியமும் இல்லை.

    கொரோனா கட்டுப்பாட்டு பணி ஒருங்கிணைப்பாளராக அன்பரசு செயல்படுகிறார். அவருக்கு எந்த ஒரு தாமதமும் இல்லாமல் உதவுவதை உறுதி செய்யவேண்டும். கவர்னர் அலுவலகம் உங்களை அனைத்து வகையிலும் பலப்படுத்த முயற்சிக்கிறது. நிலைமையை மறுமதிப்பீடு செய்ததன் அடிப்படையில் இந்திய அரசுக்கும், புதுச்சேரி நிர்வாகத்திற்கும் அதன் மக்களுக்கும் இடையில் ஒரு பாலமாக இருக்கவேண்டும்.

    இத்தகைய நெருக்கடியில் வெற்றிக்கான திறவுகோல் என்பது சுய உந்துதல் மற்றும் முன்னோக்கி சிந்திப்பதுதான். உங்கள் தனிப்பட்ட மற்றும் ஒருங்கிணைந்த ஆற்றல், பொறுப்பு இன்றியமையாதது.

    இவ்வாறு அந்த பதிவில் கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார்.
    கொரோனா தொற்று பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரி மக்கள் நீதி மய்ய தலைவர் சுப்பிரமணியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    புதுச்சேரி:

    பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகளும், தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார், தீயணைப்புத்துறையினர் என பலதரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் புதுச்சேரி மக்கள் நீதி மய்ய தலைவர் சுப்பிரமணியன் (70) கொரோனா தொற்று பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.

    உயிரிழந்த சுப்பிரமணியன் 3 முறை உருளையன்பேட்டை, முதலியார்பேட்டை திமுக எம்எல்ஏவாக இருந்துள்ளார்.
    ×