என் மலர்
புதுச்சேரி
புதுவையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் சிலர் தலைமறைவாகி விடுவதாக டாக்டர்கள் மூலம் புகார்கள் வந்துள்ளதாக கவர்னர் கிரண்பேடி குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும், அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஒரு கொரோனா நோயாளி வெளியே சென்று மதுகுடித்து வந்ததை கவர்னர் கிரண்பேடி வாட்ஸ் அப்பில் பதிவிட்டு வேதனை தெரிவித்திருந்தார்.
அதோடு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுவோர் வெளியே நடமாடுவதால் தொற்று பரவுவதாகவும் புகார்கள் எழுந்தது.
இதனையடுத்து வீடுகளில் சிகிச்சை பெறுவோரை அதிகளவில் கண்காணிக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட லாஸ்ப்பேட்டை, கல்பனா சாவ்லா நகரைச் சேர்ந்த நபர் ஒருவர் லட்சுமிநாராயணா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அவர் கடந்த 27-ந் தேதி அனுமதிக்கப்பட்டார்.
அவர் மருத்துவ அதிகாரிகளிடம் எந்த தகவலும் தெரிவிக்காமல் மருத்துவமனையில் இருந்து 29-ந்தேதி காலை வெளியே சென்று மாலை 5 மணிக்கு திரும்பி உள்ளார்.
அவருடைய நடவடிக்கை கொரோனா தொற்று பரவ காரணமாக இருந்ததால் பேரிடர் மேலாண்மைச் சட்டம் மற்றும் தொற்று நோய் சட்டம் ஆகியவற்றின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படுகிறது.
இவர் மீது லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி அளித்த புகாரின்பேரில் வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதேபோல் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய புதுவை திருமுடி நகரைச் சேர்ந்த வியாபாரியின் குடும்பத்தை சேர்ந்த 2 நபர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஒருவாரத்திற்கு வீட்டுத் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
ஆனால் அந்த குடும்பத்தின் தலைவர் வீட்டுத் தனிமையில் இருக்காமல் அரசு உத்தரவை மீறி கடையைத் திறந்து வியாபாரம் செய்துள்ளார்.
இதுகுறித்து புதுவை வருவாய் கிராமத்தைச் சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரி முத்துக்குமார் அளித்த புகாரின் பேரில் அவர் மீது பெரியக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுவையில் நேற்று ஆயிரத்து 323 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதிதாக 363 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்களில் புதுவையில் 316, காரைக்காலில் 4, ஏனாமில் 43 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவையில் தற்போது 2 ஆயிரத்து 326, காரைக்காலில் 84, ஏனாமில் 160, மாகியில் 17 பேர் நோய் தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் புதுவையில் 264, காரைக்காலில் 36, ஏனாமில் 36 பேர் என மொத்தம் 341 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 14 ஆயிரத்து 766 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 2 ஆயிரத்து 587 பேர் தொற்றுடன் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். 9 ஆயிரத்து 675 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
புதுவையில் 2 ஆயிரத்து 38, காரைக்காலில் 107, ஏனாமில் 119 பேர் என 2 ஆயிரத்து 264 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 228 பேர் கொரோனாவுக்கு பலியாகியிருந்தனர். இந்நிலையில் நேற்று காலை முதல் இன்று காலை வரை ஒரே நாளில் 12 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
புதுவையில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 8 ஆண்கள், 2 பெண்கள், ஏனாமில் 2 ஆண்களும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் புதுவையில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 240 ஆக உயர்ந்துள்ளது.
இத்தகவலை புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
திருபுவனை:
திருபுவனை அருகே நல்லூர் காலனி ஈஸ்வரன் நகரை சேர்ந்தவர் முருகன் (வயது42). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவியுடன் அதேபகுதியை சேர்ந்த விஜயன் என்பவர் பழகி வந்ததாக கூறப்படுகிறது.
இதையறிந்த முருகன் இதுபற்றி விஜயனிடம் கேட்டு கண்டித்தார்.
இதில் இவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த விஜயன் தனது நண்பர் சுரேஷ் என்பவருடன் சேர்ந்து முருகனை மரக்கட்டையால் சரமாரியாக தாக்கினார். இதில் காயமடைந்த முருகன் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
பின்னர் இதுகுறித்து திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அஜய்குமார், உதவி சப்-இன்ஸ்பெக்டர் புருசோத்தமன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள விஞ்ஞானிகள் கமிட்டி அறிவுறுத்தியது.
இதனை தொடர்ந்து தனியார் கல்லூரி டாக்டர்கள் அடங்கிய 2 குழுவை புதுவை அரசு நியமித்துள்ளது. இந்த குழுவினர் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உமிழ்நீர் பரிசோதனை செய்ய உள்ளனர்.
லட்சுமி நாராயணா மருத்துவக்கல்லூரி குழுவினர் இன்று (செவ்வாய்க்கிழமை) மேட்டுப்பாளையம், ரெட்டியார்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திலும், அறுபடை வீடு மருத்துவக்கல்லூரி குழுவினர் லாஸ்பேட்டை, குயவர்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் பரிசோதனை நடத்துகின்றனர்.
நாளை (2-ம் தேதி) லட்சுமி நாராயணா மருத்துவக்கல்லூரி குழுவினர் திருக்கனூர், கூடப்பாக்த்திலும், 3-ந் தேதி திருபுவனை, நெட்டப்பாக்கத்திலும் பரிசோதனை மாதிரிகளை சேகரிக்கின்றனர்.
அறுபடை வீடு மருத்துவக் கல்லூரி குழுவினர் நாளை (2-ந் தேதி) பாகூர், அரியாங்குப்பத்திலும், 3-ந் தேதி அபிஷேகப்பாக்கம், கிருமாம்பாக்கத்திலும் பரிசோதனை நடத்தவுள்ளனர். இந்த மாதிரிகளை ஜிப்மரில் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சேதராப்பட்டு:
திருச்சி மணப்பாறை தாலுக்கா செங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் முகமது அனிபா (வயது56). பழைய இரும்பு வியாபாரி. இவர் பெரிய காலாப்பட்டு மாத்தூர் சாலையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பழைய இரும்பு பொருட்களை வாங்கி செல்வது வழக்கம்.
அதுபோல் நேற்று பழைய இரும்பு பொருட்கள் வாங்க முகமது அனிபா அந்த நிறுவனத்துக்கு வந்திருந்தார். அப்போது பெரிய காலாப்பட்டு குப்பத்தை சேர்ந்த சந்திரன், மூர்த்தி மற்றும் சக்திவேல் ஆகிய 3 பேர் முகமது அனிபாவை பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டினர்.
இதனை முகமது அனிபா தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரமடைந்த சந்திரன் உள்பட 3 பேரும் சேர்ந்து அவரை கையாலும், செருப்பாலும் தாக்கினர். மேலும் மரக்கட்டையால் தாக்கி கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர்.
இதில் காயமடைந்த முகமது அனிபா அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் இதுகுறித்து காலாப்பட்டு போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் வழக்கு பதிவு செய்து சந்திரன் உள்பட 3 பேரையும் தேடி வருகிறார்.
புதுச்சேரி:
புதுவை கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
ஊரடங்கில் மத்திய அரசு வெளியிட்டுள்ள கூடுதல் தளர்வுகள் புதுவையிலும் அமல்படுத்தப்படும். புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனைத்து கடைகள், ஒட்டல்கள், தனியார் அலுவலகங்கள் காலை 6 முதல் இரவு 8 மணி வரை செயல்படலாம்.
மருந்தகங்கள், பால் பூத்கள் ஆகியவற்றுக்கு கட்டுப்பாடு இல்லை. இரவு 9 முதல் காலை 5 வரை அவசர தேவைகளை தவிர்த்து யாரும் வெளியே வரக்கூடாது. வாகனங்களும் இயக்கக்கூடாது.
கடற்கரை சாலை காலை 5 முதல் மதியம் 12 வரை திறந்து இருக்கும். பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் வருகிற 30-ந் தேதி வரை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் பயிற்சி அளிக்கும் ஆசிரியர்கள் (50 சதவீதம் மட்டும்) அது தொடர்பான பணிகளுக்காக பள்ளிகளுக்கு 21-ந் தேதிக்கு பிறகு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
ஐ.டி.ஐ. உள்ளிட்ட திறன் தொழிலாளர்களை உருவாக்கும் கல்வி நிறுவனங்களுக்கு வருகிற 21-ந் தேதிக்கு பின்னர் அனுமதி அளிக்கப்படும். முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள், முதுநிலை தொழில்படிப்பு மாணவர்கள் ஆய்வகப் பயிற்சிகளுக்காக 21-ந் தேதிக்கு பிறகு அனுதிக்கப்படுவார்கள்.
அரசியல் நிகழ்ச்சிகள், சமூக, கல்வி, கலாசார நிகழ்ச்சிகள் 100 பேருடன் நடத்த 21-ந் தேதிக்கு பிறகு அனுமதி அளிக்கப்படும். திருமணம், துக்க நிகழ்வுகளில் 100 பேர் வரை பங்கேற்பதற்கும் 21-ந் தேதிக்கு பிறகு அனுமதி அளிக்கப்படும்.
திரையரங்குகள், பூங்காக்கள், கலையரங்குகள் திறக்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு வருகிற 30-ந் தேதி வரை தொடரும்.
புதுவையில் கொரோனா அதிகமுள்ள கட்டுப்பாட்டு பகுதிகளில் எல்லை மறுநிர்ணயம் மாவட்ட அதிகாரிகளால் செய்யப்பட உள்ளது. அப்பகுதி விவரங்கள் இணையத்தில் வெளியிடுவோம்.
இந்த பகுதிகளில் கொரோனா தொற்று பரவலை தடுக்க கடுமையான முறையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். அத்தியாவசிய பொருட்கள், மருத்துவ அவசிய தேவைக்கு மட்டுமே அனுமதி உண்டு. இங்கு வீடு வீடாக கண்காணிக்க உள்ளோம்.
இவ்வாறு கலெக்டர் அருண் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை முருங்கப்பாக்கம் அரவிந்தர்நகர் 4-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் அழகானந்தம். இவரது மகள் இந்துமதி (வயது30). ஆயுர்வேத டாக்டர்.
சம்பவத்தன்று இரவு இந்துமதி வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் இந்துமதி இல்லை.
இதற்கிடையே இந்துமதி வீட்டில் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அந்த கடிதத்தில் ஒரு இடத்தில் வேலைக்கு சேரபோகிறேன் என்று மட்டும் அதில் குறிப்பிட்டு இருந்தார்.
இதையடுத்து இந்துமதி மாயமானது குறித்து முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபத்ரசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படடவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. உலகளவில் தினந்தோறும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் தற்போது இந்தியாதான் முதல் இடத்தில் உள்ளது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 69,921 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 819 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் இதுவரை 36,91,167 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 28,39,883 பேர் குணமடைந்துள்ள நிலையில், 7,85,996 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 65,288 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று 65,081 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் 28,39,882 பேருடன் 76.63 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். 21.59 சதவீதம் பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 1.78 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் புதுச்சேரியில் இன்று மேலும் 363 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,766 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் இதுவரை 9,675 பேர் குணமடைந்த நிலையில் கொரோனாவால் 240 பேர் உயிரிழந்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் ஆரம்பகட்டத்தில் குறைந்த எண்ணிக்கையில் பரவிய கொரோனா தொற்று கடந்த ஜூலை மாதம் முதல் அதிவேகமெடுத்து பரவி வருகிறது.
கடந்த ஆகஸ்டு மாதம் நாளுக்கு சராசரியாக 350 முதல் 500 வரை தொற்று பரவி வருகிறது. கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் கதிர்காமம், ஜிப்மர் மருத்துவ மனைகளின் படுக்கைகள் நிரம்பி வழிகிறது.
இதனால் இந்த மருத்துவ மனைகளில் படுக்கைகள் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதே நேரத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க படுக்கைகளை ஒதுக்க கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
லேசான அறிகுறிகளுடன் உள்ளவர்கள் வீடுகளில் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப் படுகின்றனர். இதுவரை 225-க்கும் மேற்பட்டோர் மாநிலம் முழுவதும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
கொரோனா பரவலை தடுக்க அரசு இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஊரடங்கு பிறப்பித்தது.
கடந்த 2 வாரமாக செவ்வாய்க்கிழமைகளில் தளர்வில்லா முழு ஊரடங்கும் அமுல்படுத்தப்பட்டது. தொடர்ந்து அதிவேகமாக கொரோனா பரவும் 32 பகுதிகளை கண்டறிந்து அங்கு உள்ளூர் ஊரடங்கை அமல்படுத்த அரசு திட்டமிட்டது.
இதற்கு பொதுமக்களும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நேற்று முதல் அமலாக வேண்டிய உள்ளூர் ஊரடங்கு கைவிடப்பட்டது. இதனிடையே மத்திய அரசு ஊரடங்கில் மேலும் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது.
இதில் ஊரடங்கு பிறப்பிக்க மத்திய அரசு அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் கொரோனா அதிகம் பரவும் பகுதிகளில் மட்டும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
அதேநேரத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வில்லா முழு ஊரடங்கை புதுவையில் அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மத்திய அரசின் அனுமதி கேட்டு புதுவை அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
மத்திய அரசு அனுமதித்தால் இம்மாதம் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமலுக்கு வரும்.






