என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கடும் எதிர்ப்பு காரணமாக புதுவையில் உள்ளூர் ஊரடங்கு அமல்படுத்தப்படவில்லை.
    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா வைரஸ் தொற்று பரவும் வேகம் அதிகரித்துள்ளது. நாள்தோறும் 300-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல் உயிரிழப்பும் அதிகரித்துள்ளது. கொரோனா பரவல் தொடர்பாக மத்திய மருத்துவக்குழு மற்றும் விஞ்ஞானிகள் குழுவும் ஆய்வு நடத்தியுள்ளது. அவர்கள் சில பரிந்துரைகளையும் அரசுக்கு கொடுத்துள்ளனர்.

    இதற்கிடையே புதுவையில் ஒரு சில இடங்களில் மட்டும் கொரோனா வேகமாக பரவி வருவதாக கண்டறியப்பட்டது. இந்த இடங்களில் மட்டும் உள்ளூர் ஊரடங்கினை அமல்படுத்த புதுவை அரசு முடிவு செய்தது. இதன்படி புதுவை பகுதியில் 32 இடங்களில் உள்ளூர் ஊரடங்கை நேற்று முதல் வருகிற 6-ந்தேதி அமல்படுத்த கலெக்டர் அருண் உத்தரவிட்டார். இதற்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பினை தெரிவித்தனர்.

    மேலும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பகுதிகளில் தடுப்புகட்டைகளை அமைக்கும் பணியும் நடந்தது. முத்தியால்பேட்டையில் நடந்த பணிகளை அத்தொகுதி எம்.எல்.ஏ.வான வையாபுரி மணிகண்டன் தடுத்து நிறுத்தி, தடுப்புகளை அகற்றினார். இந்த உள்ளூர் ஊரடங்கிற்கு அப்பகுதியில் வசிக்கும் மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக உள்ளூர் ஊரடங்கு மறுபரிசீலனை செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

    இதன்படி நேற்று முதல் தொடங்குவதாக இருந்த உள்ளூர் ஊரடங்கு அமல்படுத்தப்படவில்லை. தங்கள் பகுதிகளில் அமைக்கப்பட்டு இருந்த தடுப்புகட்டைகளை சில இடங்களில் பொதுமக்களே அகற்றிவிட்டு சென்றனர். அப்பகுதிகளில் கடைகளும் திறக்கப்பட்டு வழக்கம்போல் இயங்கின. மக்களும் அப்பகுதியில் இருந்து வெளியே சென்று அன்றாட பணிகளை மேற்கொண்டனர்.

    ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் பொதுமக்களின் நடமாட்டத்தை தடுக்கவில்லை. அறிவிப்போடு உள்ளூர் ஊரடங்கு நின்று போனது.
    செப்டம்பர் 15-ந் தேதிக்குபிறகு கொரோனா தொற்றின் பாதிப்பு 2 மடங்காகி விடும் என்று கவர்னர் கிரண்பெடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் சிலர் தலைமறைவாகி விடுவதாக மருத்துவர்கள் மூலம் புகார்கள் வந்துள்ளன. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் மதுக்கடைக்கு சென்று மதுகுடித்து விட்டு மாலையில் தனியாக வார்டுக்கு வந்துள்ளார். இந்த சூழலை எவ்வாறு கையாளுவது என்று மருத்துவர் கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா சிகிச்சையில் இருக்கும் போது மதுகுடித்து விட்டு வருவோரின் சுயஒழுக்கம் மோசமானது.

    நேற்று புதிதாக 571 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். புதுச்சேரியில் மொத்த இறப்பு எண்ணிக்கை 221 ஆக உள்ளது. மக்கள் தொடர்ந்து சமூக இடைவெளியை கடைபிடித்தல், முக கவசம் அணிவது, பொது இடங்களில் ஒன்று கூடாமல் இருப்பது ஆகியவற்றில் அரசின் உத்தரவை தொடர்ந்து மீறினால் செப்டம்பர் மாதம் 15-ந் தேதிக்கு பிறகு நாள் ஒன்றுக்கு ஆயிரம் பேர் பாதிக்கப்படுவார்கள். தற்போது இருக்கும் கொரோனா தொற்றின் பாதிப்பு 2 மடங்காகி விடும்.

    புதுவையில் 90 சதவீதம் இறப்புகள் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் சுகாதார நோய் உள்ளவர்களை கொரோனா பாதிக்கும் போது ஏற்பட்டுள்ளது. மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இன்னும் பல இடங்களில் கூட்டமாக கூடுகிறார்கள். எதற்காக பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கிறோம் என்பதை கூட புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள்.

    சிகிச்சைக்கான செலவு அத்தியாவசிய சேவை நிதியில் இருந்தும், கடன் தொகையில் இருந்தும் செலவிடப்படுகிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். உண்மையில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தான் முற்றிலும் பாதுகாப்பானது. இதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் நமக்கு பாதுகாப்பை தரும் என்பதை உணர்வது அவசியம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    புதுச்சேரியில் ஒவ்வொரு செவ்வாய் அன்று அமல்படுத்தப்படும் முழு முடக்கம் இனி இல்லை என்று முதல்-மந்திரி நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

    புதுச்சேரியில் பொதுமுடக்க கட்டுப்பாடுகளில் தற்போதைய நடைமுறையே அமலில் இருக்கும். ஒவ்வொரு செவ்வாய் அன்று அமல்படுத்தப்படும் முழு முடக்கம் இனி இல்லை. 

    மத்திய அரசு அறிவித்த 4 ஆம் கட்ட தளர்வுகளை அமல்படுத்துவது குறித்து நாளை முடிவு செய்யப்படும்.

    மக்களின் ஒத்துழைப்பு இல்லாததால் அரசின் நடவடிக்கைகள் பயனளிப்பதில்லை. வீடு வீடாக சென்று பரிசோதனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரியில் 32 பகுதிகள் தனிமைப்படுத்தப்படும் என்ற உத்தரவு மாற்றம். கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள தெருக்களை தவிர மற்ற பகுதிகளை தனிமைப்படுத்த கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    புதுவையில் உள்ளூர் ஊரடங்கிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன.
    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்துள்ளது. நாள்தோறும் 500-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. குறிப்பிட்ட சில பகுதிகளில் தொற்று பரவும் வேகம் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அந்த பகுதிகளில் மட்டும் ஒரு வாரம் ஊரடங்கை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

    இதற்காக புதுவை நகர பகுதியில் 32 இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. இந்த பகுதிகளில் நாளை (திங்கட்கிழமை) முதல் செப்டம்பர் 6-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இதற்காக இந்த பகுதிகளில் தடுப்புகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் மேற்பார்வையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    தற்போது உள்ளூர் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள பகுதிகளில் அனைத்து கடைகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தனியார் அலுவலகங்கள் மூடப்பட வேண்டும். பொதுமக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்காக காய்கறி மற்றும் மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 12 மணிவரை திறந்திருக்கும்.

    ஊரடங்கு பகுதியில் அத்தியாவசிய சேவைகள் (அவசர மருத்துவ சேவை உள்பட) மற்றும் அரசாங்க அலுவல்களை தவிர மற்ற மக்கள் நடமாட்டம் சோதனை நடத்தப்படாமல் அனுமதிக்கப்படாது. அத்தியாவசிய தேவைக்கு அனுமதிக்கப்பட்ட நடவடிக்கைகள் தவிர ஊரடங்கு மண்டலங்களுக்குள் போக்குவரத்து அனுமதிக்கப்படமாட்டாது.

    அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், கிளினிக்குகள், மருந்தகங்கள் மற்றும் பாலகங்கள் ஆகியவை இந்த கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இவைகளை தவிர்த்து வெளியில் இருந்து மக்கள் ஊரடங்கு மண்டலங்களுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
    வீட்டு தனிமையில் இருப்பவர்கள் விதிகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் அருண் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரியில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை திடீரென உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் உள்ள நபர்களின் எண்ணிக்கை மற்றும் வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் இருக்கும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளன. இவர்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேறுவதாக புகார்கள் வந்துள்ளன. இது கொரோனா நோய் தொற்று மேலும் பரவுவதற்கான கடுமையான அச்சுறுத்தலாக உள்ளது.

    வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் இருப்பவர்கள் விதிமீறல்களில் ஈடுபட்டால் வருவாய்த்துறை, காவல்துறை, சுகாதாரத்துறையினர் கண்காணித்து புகார் பதிவு செய்ய நடவடிக்கை எடுப்பார்கள். எனவே பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 மற்றும் தொற்று நோய் சட்டம் 1897 ஆகியவற்றின் கீழ் மாவட்ட ஆட்சித்துறை நடுவருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில் கீழ்கண்ட உத்தரவுகள் நடைமுறைக்கு வருகின்றன.

    இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரியை மத்திய அரசு கண்காணிக்கிறது என்று கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா தொற்று பரவல் குறித்து மத்திய விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவ குழு ஆய்வு செய்து தனது பரிந்துரையை வழங்கியுள்ளது. இந்தநிலையில் கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா பரிசோதனைகளை அதிகரிப்பதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறையும். வீடுவீடாக ஆய்வுகள் நடத்தப்பட்டு பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய வேண்டும். வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.

    தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் சோதனை வசதிகளை செய்யவேண்டும். உள்ளூர் ஊரடங்கினை சரியாக அமல்படுத்தவேண்டும். மத்திய உள்துறை அமைச்சகமானது புதுவை கொரோனா பாதிப்புகளை நாள்தோறும் தீவிரமாக கண்காணித்து வருகிறது.

    இவ்வாறு கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார்.
    கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட சோரியாங்குப்பம் பாலம் 5 மாதங்களுக்கு பிறகு தற்போது திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    பாகூர்:

    கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து மாநிலம் விட்டு மாநிலம் செல்ல தடை விதிக்கப்பட்டதால், புதுச்சேரி - கடலூர் எல்லை பகுதியில் உள்ள முள்ளோடை, சோரியாங்குப்பம், மணமேடு ஆகிய சாலைகள் தடுப்பு கட்டைகளால் மூடி சீல் வைக்கப்பட்டது.

    இதேபோல் புதுச்சேரி - கடலூருக்கு இணைப்பாக விளங்கும் சோரியாங்குப்பம் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள பாலமும் மூடப்பட்டது. இதனால் பாகூர், கடலூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த நெல், காய்கறி உள்ளிட்ட விளைபொருட்களை கடலூர் மாவட்டத்திற்கு விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர்.

    ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த பாலத்தை திறக்க பாகூர் மற்றும் கடலூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் புதுச்சேரி வருவாய்த்துறை உத்தரவின்பேரில் பாகூர் போலீசார் நேற்று காலை சோரியாங்குப்பம் பாலத்தில் இருந்த தடுப்புகளை அகற்றினர். இதையடுத்து போக்குவரத்துக்காக பாலம் மீண்டும் திறக்கப்பட்டது.

    இதன் வழியாக பாகூர், கடலூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் வாகனங்களில் சென்று வருகின்றனர். சுமார் 5 மாதங்களுக்கு பிறகு பாலம் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சோரியாங்குப்பம் பகுதியில் உள்ள மதுக்கடைகளுக்கு கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எளிதாக வந்து செல்லக்கூடிய வகையில் இந்த பாலம் இருப்பதால் மது பிரியர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடந்தது.
    புதுச்சேரி:

    கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், முதல்-அமைச்சரின் செயலாளர் விக்ராந்த் ராஜா, சுகாதாரத்துறை செயலாளரும் கலெக்டருமான அருண், இயக்குனர் மோகன்குமார், இந்திய மருத்துவமுறை இயக்குனர் ஸ்ரீராமுலு, டாக்டர் ரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் தனியார் மற்றும் ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஒதுக்கப்பட்டுள்ள படுக்கைகள் மற்றும் அங்கு சிகிச்சைக்கு அனுப்பப்படும் நோயாளிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
    புதுச்சேரியில் அரசு மருத்துவமனைக்குச் சென்ற சுகாதார மந்திரி மல்லாடி கிருஷ்ண ராவ், கொரோனா வார்டில் கழிவறையை சுத்தம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகளில் முதல் மந்திரி நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு மேற்கொண்டு வருகிறது. அவரது அமைச்சரவையில் சுகாதாரத்துறை மந்திரியாக இருப்பவர் மல்லாடி கிருஷ்ண ராவ்.

    புதுச்சேரியில் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற வசதியாக தனி வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    இதில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளைக் காண்பதற்காகவும், மருத்துவமனையில் செய்து தரப்பட்டு இருக்கும் வசதிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்வதற்காகவும் புதுச்சேரி சுகாதாரத்துறை மந்திரி நேற்று சென்றார். அவருடன் அதிகாரிகளும் உடன் சென்றனர். 

    கொரோனா வார்டில் செல்வதற்கான பாதுகாப்பு கவச உடைகளை அணிந்து கொண்டு சென்ற அவர், கொரோனா வார்டில் இருந்த கழிவறை ஒன்றை சுத்தம் செய்துள்ளார். அதன்பின் அவர் அங்கிருந்து சென்றார். இதனால் அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    கலால் துறையால் சீல் வைக்கப்பட்ட மதுபான கடையில் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வில்லியனூர்:

    ஏம்பலம் அருகே உள்ள மணக்குப்பம் கிராமம் மடுகரை சாலையில் தனியாருக்கு சொந்தமான மதுபான கடை உள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் மதுபானங்களை விற்பனை செய்ததாக கலால்துறையினர் இந்த மதுபானக் கடையை மூடி சீல் வைத்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலை கலால் துறையினர் கடையின் உரிமையாளர் முன்னிலையில் மதுபான இருப்பை கணக்கெடுப்பு நடத்த சென்றனர். அப்போது கடையில் கலால்துறையினர் வைத்திருந்த சீல் உடைக்கப்பட்டு இருந்தது.

    மேலும் கடையில் இருந்த மதுபானங்கள் திருடு போயிருந்தது. இது குறித்து கடையின் உரிமையாளர் மங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவரும், எம்.பி.யுமான வசந்தகுமார் மறைவுக்கு புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது-

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவரும், எம்.பி.யுமான வசந்தகுமார் மறைவை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். என்னுடன் நெருங்கி பழகியவர். எப்போதும் சுறுசுறுப்பானவர். தனது உழைப்பால் உயர்ந்தவர். உழைப்புக்கு உதாரணமாக இருந்தவர்.

    தமிழகத்தில் சிறந்த வர்த்தகராக இருந்தவர். அரசியலில் வர்த்தகத்தை ஒருபோதும் அவர் கலந்ததில்லை. தனது உழைப்பால் எம்.எல்.ஏ., எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர். அவரது இழப்பு மிகப்பெரிய பேரிழப்பு.

    தமிழகத்தில் தென்மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியை வலுவாக வளர்த்தவர். அவர் கொரோனா தொற்றால் பலியாகியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு நாராயணசாமி கூறியுள்ளார்.
    புதுவையில் இன்னும் 20 நாட்களுக்குள் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வரும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறினார்.
    புதுச்சேரி:

    புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்  நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதுவை மாநிலத்தில் தற்போது கொரோனா பரிசோதனைகளை அதிகரித்து உள்ளோம். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இன்னும் பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க உள்ளோம். அதற்கான வசதிகள் நம்மிடம் உள்ளது.

    மத்திய அரசு அமைத்த 2 குழுக்களும் புதுவையில் ஆய்வு செய்து தனது பரிந்துரைகளை வழங்கி உள்ளன. அந்த குழுக்கள் வழங்கிய பரிந்துரைக்கு முன்பாகவே நாம் அவர்களது பரிந்துரை தொடர்பான நடவடிக்கைகளை தொடங்கி உள்ளோம். சிலவற்றை அமல்படுத்தியும் உள்ளோம்.

    புதுவையில் கொரோனா பாதிப்பு இன்னும் 15 அல்லது 20 நாட்களுக்குள் கட்டுக்குள் வரும். நாம் முதலில் ஆகஸ்டு மாதத்தில் நாள் ஒன்றுக்கு 400 முதல் 450 பேர் வரை பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அதைவிட இப்போது பாதிப்பு அதிகமாக உள்ளது.

    மத்திய குழு பரிந்துரைகளை அமல்படுத்த போதிய ஊழியர்கள் இல்லை. இதற்கு டாக்டர்கள், நர்சுகள் மற்றும் சுகாதார பணியாளர்கள் என 458 பேர் தேவைப்படுவார்கள். அவர்களை தற்காலிகமாக நியமிக்க கவர்னருக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு கவர்னர் ஒப்புதல் அளித்தால் உடனடியாக பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

    நோய் தடுப்பு பணியில் ஈடுபடும் பணியாளர்களை நியமிக்க காலதாமதம் ஆனால் பாதிப்பு கூடுதலாக இருக்கும். எனவே இந்த விஷயத்தில் கவர்னர், தலைமை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோர் கூடுதல் கவனம் செலுத்தி கோப்பிற்கு ஒப்புதல் அளிக்கவேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறினார்.
    ×