என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்துள்ள தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுச்சேரி:

    கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரம் இழந்துள்ள தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.7 ஆயிரத்து 500 வழங்கவேண்டும், ஆட்டோ தொழிலாளர் நலவாரியம் அமைக்கவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் புதுவை ரோடியர் மில் திடலில் நேற்று காலை காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்காக புதுவையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆட்டோ உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தொழிலாளர்கள் ரோடியர் மில் திடலுக்கு வந்தனர். அங்கு தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்றனர்.

    இந்த காத்திருப்பு போராட்டத்துக்கு சி.ஐ.டி.யு. செயலாளர் சீனுவாசன் தலைமை தாங்கினார். போராட்டத்தை தலைவர் முருகன் தொடங்கிவைத்தார். சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் பிரபுராஜ், ராஜ்குமார், கொளஞ்சியப்பன், மதிவாணன், ஆட்டோ சங்க செயலாளர் ரவிக்குமார், பொருளாளர் விஜயகுமார், சாலையோர வியாபாரிகள் சங்க செயலாளர் வடிவேல், பொருளாளர் வீரமணிகண்டன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    பிற்பகலில் அவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக சட்டசபை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலம் கடலூர் சாலை, மறைமலையடிகள் சாலை, அண்ணசாலை, நேரு வீதி வழியாக மிஷன் வீதியை அடைந்தது. அதற்கு மேல் செல்ல அவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை. இதைத்தொடர்ந்து அவர்கள் தங்கள் வாகனங்களை நடு ரோட்டிலேயே நிறுத்திவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நேருவீதி-மிஷன் வீதியில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அவர்கள் அனைவரும் அங்கேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்க முக்கிய நிர்வாகிகள் சிலரை மட்டும் முதல்-அமைச்சரை சந்திக்கும் விதமாக போலீசார் அழைத்து சென்றனர். அவர்கள் சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து பேசினார்கள்.

    அப்போது நலவாரியம், போக்குவரத்து வாகனங்களுக்கான வரி உள்ளிட்ட பிரச்சினைகளை தொடர்பாக வருகிற 31-ந்தேதி அமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கலாம் என்றும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி தரும் என்றும் முதல்-அமைச்சர் நாராயணசாமி உறுதி அளித்தார்.

    இதைத்தொடர்ந்து சி.ஐ.டி.யு. நிர்வாகிகள், தொழிலாளர்களிடம் முதல்-அமைச்சரின் உறுதி தொடர்பாக எடுத்துக்கூறினார்கள். மேலும் போக்குவரத்து அதிகாரிகளும் அங்கு வந்து தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பாக உறுதி அளித்தனர். அதன்பின் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக தள்ளிவைப்பதாக கூறிவிட்டு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    புதுவை அருகே பிரபல ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேதராப்பட்டு:

    புதுவை தர்மாபுரி கல்மேடுபேட் பகுதியை சேர்ந்தவர் கோபால்தாஸ் (வயது 45). பிரபல ரவுடியான இவர் மீது பல வழக்குகள் உள்ளன. தற்போது தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இவருக்கு மாலதி, ஜெயந்தி ஆகிய மனைவிகள் உள்ளனர். மாலதி புதுவையை சேர்ந்தவர். ஜெயந்தி புதுவை அருகே தமிழக பகுதியான பூத்துறை கிராமத்தை சேர்ந்தவர்.

    ஜெயந்திக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர் தற்போது வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். எனவே 2 மகள்களும் பூத்துறையில் உள்ள உறவினர் வீட்டில் உள்ளனர். பூத்துறைக்கு கோபால்தாஸ் தனது மகள்களை பார்ப்பதற்காக புதுவையில் இருந்து அடிக்கடி வருவது உண்டு.

    அதன்படி நேற்று இரவு கோபால்தாஸ் பூத்துறை வந்தார். தனது மகள்களை பார்த்துவிட்டு புதுவை புறப்படும்போது திடீரென பலத்த மழை பெய்தது. எனவே கோபால்தாஸ் தனது மகள்கள் தங்கியிருந்த வீட்டுக்கு எதிரே உள்ள ஒரு கட்டிடத்தில் கட்டில்போட்டு படுத்திருந்தார்.

    அப்போது 4 மர்மநபர்கள் வந்தனர். அவர்கள் கையில் கத்தி மற்றும் அரிவாள்கள் வைத்திருந்தனர். இவர்களை பார்த்ததும் கோபால்தாஸ் அங்கிருந்து ஓட முயன்றார்.

    கண் இமைக்கும்நேரத்தில் அந்த கும்பல் கோபால்தாசை சரமாரியாக வெட்டியது. அதன் பின்னர் அந்த கும்பல் கோபால்தாஸ் தலைமீது கற்களை தூக்கி போட்டது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் அலறி துடித்தவாறு பிணமானார்.

    மழைநீருடன் சேர்ந்து ரத்தமும் கலந்து ஓடியது. தங்களது திட்டம் நிறைவேறியதும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. சத்தம் கேட்டு எதிர் வீட்டில் இருந்த கோபால்தாசின் மகள்கள் ஓடிவந்தனர். தனது தந்தை பிணமாக கிடப்பதை பார்த்து கதறி துடித்தனர்.

    இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

    தகவல் அறிந்த கோட்டக்குப்பம் டி.எஸ்.பி. அஜய்தங்கம், வானூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கோபால்தாஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம் பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

    கொலையாளிகள் பற்றி துப்புதுலக்க மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது பூத்துறையில் இருந்து புதுவை செல்லும் சாலையில் ஓடி நின்றது. எனவே கொலை யாளிகள் அந்த வழியாக தப்பி சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளது.

    கடந்த சில ஆண்டுக்கு முன்பு கூடப்பாக்கத்தை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் மாயவன் என்பவரை கோபால்தாஸ் வெட்டி கொலை செய்துள்ளார். எனவே மாயவன் கூட்டாளி கள்தான் பழிக்குபழியாக இந்த கொலையை செய்தி ருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோபால்தாஸ் அய்யங்குட்டி பாளையத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது அவருக்கும் அப்பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது இரு தரப்பினரும் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொள்ளும் சூழல் ஏற்பட்டது.

    எனவே இந்த சம்பவத்தின் காரணமாக கோபால் தாசை வெட்டி கொலை செய்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் பூத்துறை மற்றும் கல்மேடுபேட் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பாகூர் அருகே மஞ்சள் காமாலை நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த அரசு பள்ளி ஆசிரியை திடீரென இறந்து போனார்.

    பாகூர்:

    பாகூர் அருகே சேலியமேடு காலனியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி சிவசங்கரி (வயது35). இவர் பாகூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

    கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து சிவசங்கரி புதுவை அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்த போது அவருக்கு மஞ்சள் காமாலை நோய் இருப்பது தெரியவந்தது. அங்கு சிகிச்சை பெற்று வந்த சிவசங்கரி பின்னர் வீட்டில் நாட்டு மருந்து சாப்பிட்டு வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு சிவசங்கரி திடீரென இறந்து போனார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் பாகூர் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் சவுரி வழக்குபதிவு செய்து சிவசங்கரி மஞ்சள் காமாலை நோய் தாக்கத்தால் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    பாகூர் தாசில்தார் அலுவலக ஊழியர் கொரோனா தொற்றுக்கு இறந்து போனார். அவர் பலியானது மற்ற ஊழியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பாகூர்:

    பாகூர் அருகே குருவிநத்தம் பெரியார் நகரை சேர்ந்தவர் செங்கதிர் (வயது41). இவர் ஊர்காவல் படையில் பணிபுரிந்து பின்னர் பாகூர் தாசில்தார் அலுவலகத்தில் பல்நோக்கு ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு செங்கதிர் உடல்நிலை பாதிக்கப்பட்டார். கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதித்த போது செங்கதிருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து அவர் கதிர்காமம் ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி செங்கதிர் நேற்று இறந்து போனார்.

    கொரோனாவுக்கு பலியான செங்கதிருக்கு ஷீலா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தாசில்தார் அலுவலக ஊழியர் செங்கதிர் கொரோனாவால் இறந்து போனதால் மற்ற ஊழியர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

    மேலும் பாகூர் பகுதியில் ஏற்கனவே ஒரு பெண் கொரோனாவுக்கு பலியாகி இருந்த நிலையில் தற்போது தாசில்தார் அலுவலக ஊழியர் இறந்து போனதால் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    புதுச்சேரியில் 32 பகுதிகளில் வரும் 31ம் தேதி முதல் செப்டம்பர் 6 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தபடும் என்று மாவட்ட ஆட்சியர் அருண் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கொரோனா படுவேகமாக அதிகரித்துள்ள 32 பகுதிகளில் மட்டும் வரும் 31-ம் தேதி முதல் செப்டம்பர் 6-ம் தேதி வரை ஒரு வாரத்துக்கு முழு ஊரடங்கு அமலாகிறது.

    புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரிப்பால் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. தொற்று 12 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. படுக்கை வசதிகள் இல்லாததால் பலர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் கட்டுப்பாடு இல்லாமல் வெளியே சுற்றும் போக்கு உள்ளது. தற்போது படுக்கை வசதிகளை அதிகரிக்கும் முயற்சிகளில் அரசு இறங்கியுள்ளது. வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் முழு ஊரடங்கு புதுச்சேரியில் அமலில் உள்ளது.

    இந்நிலையில் புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிவேகமாகப் பரவும் 32 பகுதிகளில் வரும் 31ம் தேதி முதல் செப்டம்பர் 6 வரை முழு ஊரடங்கை அமல்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அருண் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:-

    ''புதுச்சேரியில் கொரோனா தொற்று இரண்டு மடங்காக அதிகரிக்கும் பகுதிகள், பரவுதல் விகிதம் ஆகியவை கண்காணிக்கப்பட்டன. அதில் கொரோனா தொற்று படுவேகமாகப் பரவும் 32 பகுதிகளை அடையாளம் கண்டுள்ளோம்.

    இங்கு வரும் 31-ம் தேதி முதல் செப்டம்பர் 6-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும். இங்குள்ள கடைகள், தொழில் நிறுவனங்கள், தனியார் அலுவலங்கள் மூடப்பட்டிருக்கும். இப்பகுதி மக்களின் வசதிக்காக அங்குள்ள காய்கறி மற்றும் மளிகைக் கடைகள் காலை 6 முதல் 12 மணி வரை திறந்திருக்கும். மருத்துவத் தேவையைத் தவிர வேறு எதற்கும் வெளியே வரக்கூடாது. முழு ஊரடங்கு பகுதிகளில் வாகனங்கள் அனுமதிக்கப்படாது. மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், மருந்தகங்கள் மற்றும் பால் பூத் ஆகியவற்றுக்கு விதிவிலக்கு உண்டு.

    இப்பகுதியைச் சாராதோர் ஊரடங்கு பகுதிகளில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இப்பகுதிகளில் மருத்துவக் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்படும். வாகனங்கள் அனுமதிக்கப்படாது. இப்பகுதி எல்லையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். விதிகளை மீறுவோர் மீது பேரிடர் மேலாண்மைச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்''.

    இவ்வாறு மாவட்ட ஆட்சியர் அருண் தெரிவித்துள்ளார்.

    முழு ஊரடங்கு பகுதிகள் பின்வருமாறு:-

    புதுச்சேரி சண்முகாபுரம், தட்டாஞ்சாவடி, குண்டுபாளையம், திலாசுபேட், தென்றல் நகர், ஐய்யப்பன் நகர், சக்தி நகர், அனிதா நகர், ஓ.கே.பாளையம் அய்யனார் கோயில் தெரு, தியாகமுதலியார் நகர், முல்லை நகர், பெரியார் நகர், கங்கையம்மன் கோயில் தெரு, குறிஞ்சி நகர், மடுவுபேட், பெத்துசெட்டிபேட், தில்லைநகர் முதல் வசந்தம் நகர் வரை, கணுவாபேட் சாலை ஜங்ஷனிலுள்ள புதுநகர், ஆர்.கே. நகர், பிச்சவீராம்பேட் 1,2,3,4 வாய்க்கால் தெரு, ஜெ.ஜெ. நகர், ரெயின்போ நகர், குமரகுருபள்ளம், கோவிந்தசாலை, செந்தாமரை நகர், சோலை நகர், வைத்திக்குப்பம், முத்தியால்பேட்டில் முத்தைய முதலியார் தெரு, செயின் ரொசாரியோ தெரு, காட்டாமணிக்குப்பம் தெரு, உளவாய்க்கால், தருமபுரி தெரு மற்றும் பெருமாள் கோவில் தெரு, பொறையூர்பேட் -புதுநகர், பங்கார்பேட்.
    புதுவையில் உச்சபட்சமாக நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் நேற்று ஆயிரத்து 486 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதிதாக 511 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்களில் புதுவையில் 461, காரைக்காலில் 31, ஏனாமில் 13, மாகேவில் 6 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    புதுவையில் தற்போது ஆயிரத்து 952, காரைக்காலில் 100, ஏனாமில் 62, மாகேயில்13 பேர் நோய் தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் புதுவையில் 264, காரைக்காலில் 8, ஏனாமில் 3 பேர் என மொத்தம் 275 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 12 ஆயிரத்து 434 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதில் 2 ஆயிரத்து 127 பேர் தொற்றுடன் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். 7 ஆயிரத்து 761 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதுவையில் 2 ஆயிரத்து 167, காரைக்காலில் 129, ஏனாமில் 60 பேர் என 2 ஆயிரத்து 356 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.

    புதுவை மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக இதுவரை 180 பேர் கொரோனாவுக்கு பலியாகியிருந்தனர். இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 10 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதுவே ஒரேநாளில் அதிகபட்சமான இறப்பு எண்ணிக்கையாகம். இதனால் புதுவையில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 190 ஆக உயர்ந்துள்ளது. இத்தகவலை புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

    வீட்டில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளுக்கு அரசு நிதி வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் கொரோனா தொற்றை தடுக்க முடியாமல் அரசு முழுமையாக தோல்வி கண்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தொலை நோக்கு சிந்தனையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் முழுமையான ஈடுபாடும் இல்லாததால் நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.

    புதுவையில் தினந்தோறும் சுமார் 1200 பேருக்கு நடத்தப்படும் பரிசோதனைகளில் 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு நோய் தொற்று கண்டறியப்படுகிறது.

    இது பரிசோதனை செய்யப்படுவதில் 42 சதவீதம், அதாவது பரிசோதனை செய்யப்படுபவர்கள் 2 பேரில் ஒருவருக்கு தொற்று ஏற்படுகிறது.

    தினந்தோறும் 500-க்கும் மேற்பட்டவர்கள் நோய்த் தொற்றால் பாதிக்கப்படும் நிலையில் அவர்களுக்கு படுக்கை வசதிகளை ஏற்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

    ஆயிரத்து 800 பேர்கள் மருத்துவமனைகளில் படுக்கை வசதியுடன் உள்ள நிலையில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவ மனைகளில் படுக்கை வசதி இல்லாததால் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு எவ்வித சிறு உதவியும் அரசின் சார்பில் வழங்காததால், அவர்கள் சாப்பாடு மற்றும் சத்தான உணவின்றி வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். ஆஸ்பத்திரியில் தங்க வைக்கப்படும் நோயாளிகளுக்கு தினந்தோறும் அரசு சுமார் ரூ.500 செலவு செய்கிறது.

    எனவே, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும் உரிய நிதி உதவியை அரசு வழங்க வேண்டும்.

    நோயாளிகளின் குடும்பத்திற்கு மளிகை பொருட்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பின்படி தற்போது ஏன் உணவுப் பொருட்களை வழங்க வில்லை? நடமாடும் கொரோனா பரிசோதனையை அரசு நிறுத்தியுள்ளது ஏன்.?

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    புதுச்சேரியில் இன்று மேலும் 511 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,434 ஆக அதிகரித்துள்ளது.
    புதுச்சேரி:

    உலக அளவில் அதிவேகமாக கொரோனா வைரஸ் பரவும் நாடுகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

    இந்நிலையில் இன்று வெளியிடப்பட்ட சுகாதாரத்துறை அமைச்சகத்தின் தகவலின்படி கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு 75,760 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 33,10,235 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 1023 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கடந்த 24 மணி நேரத்தில் 56,013 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் இதுவரை 25,23,772 பேர் குணமடைந்தள்ளனர். 7,25,991 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 60,472 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் 9,24,998 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

    இந்தியாவில் குணமடைந்தவர்களின் சதவீதம் 76.24 ஆகவும், உயிரிழந்தவர்களின் சதவீதம் 1.83 ஆகவும், சிகிச்சை பெற்ற வருபவர்களின் சதவீதம் 21.93 ஆகவும் உள்ளது.

    இந்நிலையில் புதுச்சேரியில் இன்று மேலும் 511 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,434 ஆக அதிகரித்துள்ளது.

    புதுச்சேரியில் இதுவரை 7,761 பேர் குணமடைந்த நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக 190 பேர் உயிரிழந்துள்ளனர்.
    புதுவையில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய குழுவினர் புதுவை வந்து ஆலோசனை நடத்தினார்கள்.
    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா வைரஸ் தொற்று பரவும் வேகம் அதிகரித்து வருகிறது. இதுவரை சுமார் 12 ஆயிரம் பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 180 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதற்கிடையே கொரோனா தொற்று பரவல் தொடர்பாக கவர்னர் கிரண்பேடி மத்திய அரசுக்கு தகவல் தெரிவித்தார். மத்திய அரசு குழு அமைத்து உதவிடவும் கோரிக்கை வைத்தார்.

    இதைத்தொடர்ந்து மத்திய அரசு ஜிப்மர் டாக்டர்கள் 3 பேரை கொண்ட குழுவை அமைத்தது. மேலும் 3 விஞ்ஞானிகளையும் அனுப்பி வைப்பதாக தெரிவித்தது.

    இதன்படி இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஓர் அங்கமான சென்னை தேசிய தொற்று நோயியல் நிலையத்தின் இயக்குனர் விஞ்ஞானி மனோஜ் மர்க்கேகர் தலைமையிலான விஞ்ஞானிகள் கணேஷ்குமார், நேசன் ஆகியோரை கொண்ட குழுவினர் நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவை நேற்று சந்தித்து பேசினார்கள்.

    அவர்கள் புதுவையில் கொரோனா தொற்று குறித்து ஆலோசனை நடத்தினார்கள். இந்த ஆலோசனை கூட்டத்தில் புதுவை சுகாதாரத்துறை செயலாளரும், கலெக்டருமான அருண், இயக்குனர் மோகன்குமார், இந்திய மருத்துவமுறை இயக்குனர் ஸ்ரீராமுலு ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது புதுவையில் தொற்று பரவும் வேகம் குறித்து விஞ்ஞானிகள் கேட்டறிந்தனர். அதை தடுக்க வேண்டிய நடைமுறைகள் குறித்தும் அவர்கள் எடுத்துரைத்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை மத்திய சுகாதார குழுவினர் சட்டசபை வளாகத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினர். அப்போது, புதுவை மாநிலத்தில் கொரோனா பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. அப்போது சுகாதாரத்துறை செயலாளரும், மாவட்ட கலெக்டருமான அருண், சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
    புதுச்சேரியில் இன்று மேலும் 511 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,930 ஆக அதிகரித்துள்ளது.
    புதுச்சேரி:

    இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் 60 ஆயிரத்தை தாண்டிய நிலையில் உள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 67,151 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 32,34,474 ஆக உயர்ந்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் 63,173 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் இதுவரை 24,67,759 பேர் குணடைந்துள்ளனர். 1,059 பேர் பலியாகியுள்ளதால் மொத்த உயிரிழப்பு 59,449 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பாதிப்பில் இது 1.84 சதவீதம் ஆகும்.

    இந்நிலையில் புதுச்சேரியில் இன்று மேலும் 511 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,930 ஆக அதிகரித்துள்ளது.

    கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதலாக 400 படுக்கைகள் அமைக்க அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உத்தரவிட்டார்.
    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இதன் காரணமாக பலர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்தநிலையில் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கூடுதலாக படுக்கைகள் அமைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனையில் கூடுதலாக 100 படுக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    மேலும் அவர் அங்குள்ள கல்லூரியின் மாணவர் விடுதியையும் பார்வையிட்டார். அங்கும் 300 படுக்கைகள் அமைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் இடத்தில் ஆய்வு நடத்திய அமைச்சர், மக்களை காத்திருக்க வைக்காமல் உடனடியாக பரிசோதனை நடத்தி சோதனை முடிவுகளை தெரிவிக்குமாறு அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கொரோனா பரிசோதனை மேற்கொள்பவர்களுக்கு மறுநாளே பரிசோதனை முடிவுகள் தெரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த சில நாட்களில் 2 ஆயிரத்து 500 முதல் 3 ஆயிரம் பேர் வரை சோதனை நடத்த ஏற்பாடு செய்துள்ளோம். சோதனை அதிகரிக்கும்போது தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    அதாவது நாள் ஒன்றுக்கு 1,000 பேர் வரை பாதிப்பு கண்டறியப்படலாம். அதற்கு தேவையான அளவுக்கு படுக்கை வசதி செய்யவேண்டி உள்ளது. இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் பேசி உள்ளேன்.

    தற்போது மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் விடுமுறையில் இருப்பதால் அவர்கள் தங்கியிருக்கும் அறையை பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். பிற பள்ளி, கல்லூரிகளில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைக்க போதிய கழிப்பறை வசதியில்லை. ஆனால் இங்கு போதுமான வசதி உள்ளது.

    இப்போது நமக்கு தேவை சுகாதார பணியாளர்கள்தான். ஏற்கனவே வேலையை விட்டு நிறுத்தப்பட்ட துப்புரவு பணியாளர்களை மீண்டும் பணிக்கு அழைக்க கூறி உள்ளேன்.

    இவ்வாறு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறினார்.
    புதுவையில் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் பிற மாநிலங்களுக்கு செல்ல சம்பந்தப்பட்ட மாநிலங்களிடம் விண்ணப்பித்து செல்ல வேண்டும்.
    புதுச்சேரி:

    நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் சில தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு காரணமாக தமிழகம் உள்ளிட்ட சில மாநில அரசுகள் தங்கள் மாநிலத்துக்குள்ளும், மாவட்டங்களுக்குள்ளும் செல்ல இ-பாஸ் முறையை அமல்படுத்தி வருகின்றன.

    இந்தநிலையில் இ-பாஸ் நடைமுறையை ஏற்கனவே மத்திய அரசு அறிவித்ததுபோல் ரத்துசெய்யவேண்டும் என்று மத்திய அரசு மாநில அரசுகளை வலியுறுத்தியது. இதைத்தொடர்ந்து புதுச்சேரியில் கடந்த 23-ந்தேதி முதல் இ-பாஸ் வழங்குவது கைவிடப்பட்டது. அதற்கான இணையதளத்தின் முகப்பிலேயே மத்திய அரசின் உத்தரவு வெளியிடப்பட்டிருந்தது.

    ஆனால் தமிழகம் போன்ற மாநிலங்களில் இன்னும் இ-பாஸ் நடைமுறை உள்ளது. புதுவையில் இ-பாஸ் வழங்கப்படாததன் காரணமாக புதுச்சேரியை சேர்ந்தவர்கள் வெளிமாநிலங்களுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:-

    புதுவையில் மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. வெளிமாநிலத்தவர் புதுச்சேரிக்கு வரலாம். அவர்களுக்கு புதுவை எல்லையில் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

    புதுவை மாநிலத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்ல விரும்புவோர் சம்பந்தப்பட்ட மாநிலங்களிடம் விண்ணப்பித்து அவர்கள் வழங்கும் இ-பாஸ் மூலம் அந்த மாநிலங்களுக்கு செல்லலாம்.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார். 
    ×