search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிற்சங்கத்தினர் போராட்டம்"

    • அனைத்து தொழிற்சங்கத்தினர் உடன் இணைந்து வண்ணாரப்பேட்டையில் உள்ள மத்திய அரசு அலுவலகமான பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தினர் சுமார் 700-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

    நெல்லை:

    நாடு முழுவதும் விவசாய விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை நிர்ணயம் செய்ய வேண்டும், தொழிலாளர் விரோத சட்டத்தொகுப்புகளை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    நெல்லையில் வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் நடந்த மறியல் போராட்டத்தில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம், சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி., ஏ.ஐ.சி.சி.டி.யு., எச்.எம்.எஸ். உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினரும், அனைத்திந்திய கிராமப்புற விவசாயிகளும் திரளாக கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

    இந்த மறியல் போராட்டத்தில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் தர்மன், காங்கிரஸ் சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன், ஏ.ஐ.டி.யு.சி. மாநில தலைவர் காசி விஸ்வநாதன், மாவட்ட பொதுச்செயலாளர் சடையப்பன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சுந்தர்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அவர்கள் மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெறக்கோரியும், 100 நாள் வேலைத்திட்டத்தை 200 நாட்களாக உயர்த்தி ரூ.600 ஊதியமாக வழங்க வேண்டும் என்று கூறியும், மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.

    முன்னதாக காங்கிரஸ் சார்பில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் ஏராளமானோர் பச்சை நிற துண்டு தோளில் போட்டபடி கொக்கிரக்குளத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது அவர்கள் கழுத்தில் கத்தரிக்காய், வெண்டைக்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் அடங்கிய தொகுப்பை மாலையாக கட்டி அணிந்திருந்தனர். மேலும் கையில் மோடி என்ற வாசகம் அடங்கிய தடியங்காயை ஏந்தியபடி ஊர்வலமாக வந்தனர்.

    பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தொழிற்சங்கத்தினர் உடன் இணைந்து வண்ணாரப்பேட்டையில் உள்ள மத்திய அரசு அலுவலகமான பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். தொடர்ந்து கையில் வைத்திருந்த தடியங்காயை சாலையில் போட்டு உடைத்தனர். இதையடுத்து அங்கு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தினர் சுமார் 700-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

    • காளை மாட்டு சிலை அருகில் இருந்து ரெயில் நிலையம் நோக்கி மறியலுக்கு ஊர்வலமாக செல்ல முயன்ற போராட்ட குழுவினரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
    • ரெயில் மறியல் போராட்டம் அறிவிப்பு காரணமாக ஈரோடு ரெயில் நிலையத்தில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    ஈரோடு:

    உணவு, மருந்துகள், வேளாண் இடுபொருட்கள் உள்ளிட்டவற்றின் மீதான ஜி.எஸ்.டி வரியை நீக்க வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும்.

    குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். போராடி பெற்ற 44 தொழிலாளர் சட்டங்களை 4 தொகுப்பு களாக மாற்றியதைக் கைவிட வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை நிறுத்த வேண்டும்.

    விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை எம்.எஸ்.சுவாமி நாதன் பரிந்துரைப்படி நிறைவேற்ற வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்தி நாளொன்றுக்கு ரூ.600 ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நடைபெற்றது.



    அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டத்தில் வேலை நிறுத்தமும், காளை மாடு சிலை அருகில் சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, ஹெச்.எம்.எஸ், எல்.பி.எப், ஐ.என்.டி.யு.சி, எம்.எல்.எப், ஐக்கிய விவசாயிகள் முன்னணி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் ஈரோடு காளைமாடு சிலை அருகே ரெயில் மறியலுக்காக திரண்டு நின்றனர்.

    இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சுப்ரமணியன் தலைமையில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில பொது செயலாளர் அமிர்லிங்கம், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், தொ.மு.ச. கவுன்சில் பேரவை மாவட்ட செயலாளர் கோபால், தலைவர் தங்கமுத்து, ஏ.ஐ.டி.யுசி. சின்னுசாமி, எச்.எம்.எஸ். சண்முகம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து கோஷமிட்டனர். பின்னர் காளை மாட்டு சிலை அருகில் இருந்து ரெயில் நிலையம் நோக்கி மறியலுக்கு ஊர்வலமாக செல்ல முயன்ற போராட்ட குழுவினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். டி.எஸ்.பி. சேகர் தலைமையிலான போலீசார் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அழைத்து சென்றனர்.

    இதில் 200-க்கும் மேற்பட்ட ஆண்கள், 50 பெண்கள் என 250-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். முன்னதாக ரெயில் மறியல் போராட்டம் அறிவிப்பு காரணமாக ஈரோடு ரெயில் நிலையத்தில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    ×