என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை தவறிவிட்டது என்று புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி குற்றம் சாட்டியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் கொரோனாவால் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்படுவது கவலைக்குரியது. 1 லட்சம் மக்கள் தொகையை எடுத்து பார்த்தோம் என்றால் அதில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ள மாநிலமாக புதுவை உள்ளது.

    பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை தவறிவிட்டது. இது யாரையும் குறை கூறுவது அல்ல. ஆனால் நாம் சில கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்தால் தான் இந்த சூழ்நிலைகளை கட்டுப்படுத்த முடியும். அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் கூட குறைந்த எண்ணிக்கையிலான போலீசார் கட்டுப்படுத்துகின்றனர். ஆனால் அதனை புதுவையில் கடைபிடிக்க முடிவதில்லை. இந்த கேள்வியை நாம் ஒவ்வொருவரும் கேட்டு பதில் தேட வேண்டிய நேரம் இது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்க அரசும், கவர்னரும் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்பி உள்ளது.
    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநில மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் டாக்டர் எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா தொற்று பரவலுக்கு பொதுமக்கள் அரசின் விதிமுறைகளை பின்பற்றாததே காரணம் என கவர்னர் கிரண்பெடி குற்றஞ்சாட்டி உள்ளார். மக்கள் அரசின் விதிமுறைகளை கடைப்பிடிக்க அரசும், கவர்னரும் என்ன நடவடிக்கை எடுத்தார்கள். மக்கள் பின்பற்றக்கூடிய சட்ட விதிமுறைகள் தான் வகுக்கப்பட்டதா? அவற்றை முழுமையாக பின்பற்றும் மக்களை அரசு கவுரவிக்கிறதா? அல்லது அதனை பின்பற்றாதவர்கள் அனைவரும் தண்டிக்கப்படுகிறார்களா?

    கொரோனா தொற்று பரவலை தடுக்க அரசே விதிகளை தன் இஷ்டத்திற்கு மாற்றிக்கொள்கிறது. ஆனால் மக்கள் மட்டும் எப்படி அனைத்து விதிகளையும் முழுமையாக கடைப்பிடிக்க முடியும். இக்கட்டான இந்த சூழ்நிலையில் கூட அரசுடன் இணைந்து செயல்பட கவர்னர் முன்வரவில்லை. மக்களை விமர்சனம் செய்வதற்கு முன்பு அதிகாரத்தில் இருப்பவர்கள் அதற்கு தாம் தகுதியானவர்களா? என்பதையும் பார்க்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழு ஊரடங்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக பேரிடர் மேலாண்மைக்குழு கூட்டம் காணொலி காட்சி மூலமாக நேற்று மாலை நடந்தது. புதுச்சேரி சட்டசபையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி அவரது அலுவலகத்தில் இருந்தபடி கலந்துகொண்டார். அவருடன் அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், ஷாஜகான், தலைமை செயலர் அஸ்வனி குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    கூட்டத்தில் புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு அதிகாரிகள் தங்களது அலுவலகத்தில் இருந்தபடி கணொலிக்காட்சியில் பங்கேற்று, கொரோனா தடுப்பு குறித்து தற்போது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினர்.

    கூட்டத்தின் முடிவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதுவையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்த 15 நாட்களாக உயர்ந்து வருகிறது. இதற்கு பொதுமக்கள் முககவசம் அணியாமல் வெளியே சுற்றுவது, சமூக இடைவெளி கடைபிடிக்காமல் கடைகளுக்கு செல்வது, திருமணம் மற்றும் இறப்பு நிகழ்ச்சிக்கு குறிப்பிட்ட நபர்களுக்கு மேல் பங்கேற்பது போன்றவை காரணமாகும்.

    நமது மாநிலத்தில் நாள்தோறும் 1,200-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று பரிசோதனைகள் செய்யப்படுகிறது. அதிகபடியான மருத்துவ பரிசோதனை செய்ய மாநில அரசு சார்பில் ரூ.1.4 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ கருவிகள் மட்டும் ரூ.1.2 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அரை மணி நேரத்தில் பரிசோதனை முடிவு தெரிந்துகொள்ள முடியும்.

    இந்த சூழ்நிலையில் மக்களின் வாழ்வாதாரத்தையும் பார்க்க வேண்டியதுள்ளது. எந்த பகுதியில் தொற்று அதிகம் பாதிப்பு உள்ளதோ அந்த பகுதியில் மட்டும் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பகுதிகள் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. நாளை (இன்று செவ்வாய்க்கிழமை) தளர்வில்லா முழு ஊரடங்கு அமலில் இருக்கும். வெளியே சுற்றித்திரிபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    வருகிற 31-ந் தேதி வரை தினமும் இரவு 7 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். சமூக வலைதளங்களில் உண்மைக்கு புறம்பான தகவலை பரப்பி வருகிறார்கள். கடந்த மார்ச் மாதம் நான் அளித்த பேட்டியை சில விஷமிகள் தற்போது சமூக வலைதளத்தில் பரப்பி வருகிறார்கள். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு 4-வது முறையாக கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமியின் உதவியாளர் பிரபு. இவருக்கு நேற்று முன்தினம் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் முதல்-அமைச்சர் நாராயணசாமியுடனே எப்போதும் இருப்பார். எனவே முதல்-அமைச்சர் நாராயணசாமியையும் தொற்று பரிசோதனை மேற்கொள்ள டாக்டர்கள் அறிவுறுத்தினர். இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அவரது அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் என 20 பேர் நேற்று புதுவை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனோ வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொண்டனர்.

    முதல்-அமைச்சர் நாராயணசாமி ஏற்கனவே 3 முறை தொற்று பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அதாவது தொடக்கத்தில் தொற்று பரவ தொடங்கியபோது சட்டமன்ற வளாகத்தில் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது முதல் முறையாக அவர் பரிசோதனை மேற்கொண்டார்.

    அதன்பின் முதல்-அமைச்சர் அலுவலக ஊழியர் ஒருவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டபோதும், கடந்த சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. என்.எஸ்.ஜே.ஜெயபாலுக்கு தொற்று ஏற்பட்டபோதும் முதல்-அமைச்சர் நாராயணசாமி பரிசோதனை மேற்கொண்டார். தற்போது 4-வது முறையாக பரிசோதனை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுச்சேரியில் மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட கொரோனா வரி மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் மூடப்பட்ட மதுக்கடைகள் மே மாதம் 25-ந்தேதி திறக்கப்பட்டது. அப்போது தமிழகத்துக்கு இணையாக வரிகள் இருந்தால்தான் தமிழக பகுதியில் இருந்து மதுபானம் வாங்க புதுச்சேரிக்கு வரமாட்டார்கள் என்ற அடிப்படையில் கூடுதல் வரி விதிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து தமிழக மதுபானங்களுக்கு நிகராக விலை இருக்குமாறு புதுவை மதுபானங்களுக்கும் கோவிட் வரி விதிக்கப்பட்டது. இந்த விலை உயர்வு புதுவை மதுபிரியர்களின் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வரி விதிப்பு இன்றுடன் (திங்கட்கிழமை) நிறைவடைகிறது.

    இந்த நிலையில் கொரோனா தொற்று தொடர்ந்து வருவதால் கோவிட் வரி மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அரசு அனுப்பிய கோப்பிற்கு கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார். அதேபோல் மின்துறை, காவல்துறை, நிதித்துறை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த 28 கோப்புகளுக்கும் கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார்.
    புதுச்சேரியில் இன்று மேலும் 345 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,859 ஆக அதிகரித்துள்ளது.
    புதுச்சேரி:

    மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கொரோனா பாதிப்புகளுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 61,408 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 31 லட்சத்து 06 ஆயிரத்து 349 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பாதிப்புகளுக்கு 7 லட்சத்து 10 ஆயிரத்து 771 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 57,468 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 23 லட்சத்து 38 ஆயிரத்து 036 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். ஒரே நாளில் 836 பேர் பலியாகி உள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 57,542 ஆக உயர்வடைந்து உள்ளது என்று தெரிவித்து உள்ளது.

    இந்தியாவில் கொரோனா பரிசோதனைகளும் அதிக அளவில் நடத்தப்படுகின்றன. நேற்று 6,09,917 கொரோனா பரிசோதனைகள் நடந்தன.  இதன்மூலம் இது வரையில் 3 கோடியே 59 லட்சத்து 02 ஆயிரத்து 137 பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன.

    இந்நிலையில் புதுச்சேரியில் இன்று மேலும் 345 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,859 ஆக அதிகரித்துள்ளது.

    புதுச்சேரியில் இதுவரை 164 பேர் உயிரிழந்த நிலையில் 6,942 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

    தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் முழு ஊரடங்கை மீண்டும் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், ஜிப்மர் மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா அறிகுறி மட்டும் உள்ளவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவதன் மூலம் கொரோனா அதிகரித்து வருவதாக பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் புகார் தெரிவித்து வந்தனர். இதனை தொடர்ந்து வீட்டில் இருப்பவர்களை கண்காணிக்க அரசு சார்பில் 12 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் சுகாதார ஊழியர்கள் இடம்பெற்றிருப்பார்கள்.

    வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர் மருத்துவ ஆலோசனைகள் பெற தனியார் நிறுவன பங்களிப்புடன் ஒரு புதிய திட்டத்தை அரசு தொடங்கி உள்ளது. இதன்தொடக்க விழா நேற்று காலை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு அறையில் நடந்தது.


    நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கி, புதிய திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதுவை மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், ஜிப்மர் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா அறிகுறி இருந்து மற்ற பிரச்சினைகள் இல்லாதவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

    புதுவையில் தற்போது 2,097 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இவர்களை கண்காணிக்க 12 மருத்துவ குழுவினர் அமைக்கப்பட்டுள்ளனர். தற்போது கொரோனா கட்டுப்பாட்டு அறையில் இருந்து ஊழியர்கள் நாள்தோறும் வீடுகளில் தனிமை படுத்தப்பட்டவர்களிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உங்களுக்கு காய்ச்சல் உள்ளதா? சளி தொந்தரவு இருக்கிறதா? தொண்டை வறட்சி உள்ளதா? வயிற்று போக்கு உள்ளதா? என்று கேள்விகள் எழுப்புவார்கள்.

    அவர்கள் அளிக்கும் தகவலின்படி உதவி தேவைப்பட்டால் மருத்துவ குழுவிற்கு தகவல் கொடுப்பார்கள். அவர்கள் அடுத்த 1 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்டவர் வீட்டிற்கு சென்று அவர்களுக்கு சிகிச்சை அளிப்பார்கள். அப்போது அவர்களுக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்வார்கள். அங்கு அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்படும்.

    வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. சிலர் எதையும் பற்றி கவலைப்படாமல் வீடுகளில் இருந்து வெளியே வந்து திருமணம், துக்க நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு விழாக்களில் கலந்து கொள்வதாக புகார்கள் வந்துள்ளது.

    தனிமைப்படுத்தப்பட்ட நபர் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது 5 நாட்களில் 100 பேருக்கு கொரோனா தொற்றை பரப்புகிறார். இவ்வாறு தான் புதுவையில் தொற்று அதிகமாக பரவுகிறது. எனவே தனிமைபடுத்தப்பட்டவர்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது. நானும், அமைச்சர்களும், அதிகாரிகளும் கொரோனாவை கட்டுப்படுத்த தொடர்ந்து பாடுபட்டு வருகிறோம்.

    எங்களையும், அதிகாரிகளையும் குறைகூறுவதை பொதுமக்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். தனிமைபடுத்தப்பட்டவர்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தால் புதுவையில் முழு ஊரடங்கை மீண்டும் கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளரும், மாவட்ட கலெக்டருமான அருண், சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
    புதுவை காவல் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும் போலீசார் 12 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. இந்த தொற்றுக்கு முன்கள பணியாளர்களான சுகாதாரம், காவல்துறை, வருவாய்த்துறையினர் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுவை காவல் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும் போலீசார் 12 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களுடன் தொடர்பில் இருந்த 10 பேருக்கு தொற்று பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அவர்களுக்கான சோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. சுமார் 70 பேர் பணிபுரியும் இந்த கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும் போலீசார் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர்.

    கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றும் போலீசார் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் போலீசாருக்கு விடுமுறை அனுமதிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
    நாட்டில் கொரோனா பரவலுக்கு மக்களே காரணம் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி குற்றம் சாட்டியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-

    மக்கள் சட்டத்தை பின்பற்றவில்லை. ஊரடங்கு தளர்வு அளித்தவுடன் பல இடங்களில் ஒரு மைல் தூரத்திற்கு மக்கள் முண்டியடித்து கொண்டு நின்று மதுபாட்டிலை வாங்கி சென்றனர். அரசு கோரிக்கை விடுத்த பின்னரும் சமூக இடைவெளி இன்றி விநாயகர் சதுர்த்தி அன்று ஊர்வலம் செல்வதுமாக உள்ளனர் என்று மக்களின் நடவடிக்கைகளை கிரண்பேடி குற்றம் சாட்டியுள்ளார். 

    மேலும் விநாயகர் சதுர்த்திக்கு பொருள்களை வாங்குவதற்காக பல இடங்களில் கூட்டமாக மக்கள் அலைமோதினார்கள். வெளியே வராமல் வீட்டிலேயே விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட அறிவுறுத்தியும் யாரும் மதிக்கவில்லை. அனைவரும் வெளியே கடைக்கு சென்று கும்பலாக கலந்து பொருட்களை வாங்கி கொண்டாடினார்கள். இதனால் நோய் தொற்று அதிகமாகும் என சுட்டிகாட்டினார்.

    கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு ஆயிரக்கணக்கில் செலவு செய்வதாகவும், வரியே கட்டாமல் பலர் அரசு இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும் என எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். 

    இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியுள்ளார்.
    புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 412 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,522 ஆக உயர்ந்துள்ளது.
    புதுச்சேரி:

    உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 69,239 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 912 பேர் உயிரிழந்துள்ளனர்.   

    இந்நிலையில், புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லா அளவுக்கு 412 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,522ஆக உயர்ந்துள்ளது.
    அரியாங்குப்பம், ரெட்டியார்பாளையம் பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுவதாக மின்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி மரப்பாலம் துணை மின்நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை ஆனந்தாநகர், திருமால்நகர், வேல்ராம்பட்டு, துலுக்கானத்தம்மன் நகர், அரவிந்தர் நகர், சுதானா நகர், அங்காளம்மன் நகர், முருங்கப்பாக்கம் பேட், ஒட்டன்பாளையம், ஆசிரியர் காலனி, பாப்பாஞ்சாவடி குப்பம் மற்றும் கொம்பாக்கம் பேட் ஆகிய இடங்களில் மின்சார நிறுத்தம் செய்யப்படும்.

    மதியம் 1 மணி முதல் மாலை 4.30 மணி வரை முருங்கப்பாக்கம், நைனார்மண்டபம், சுதானாநகர் (ஒரு பகுதி), மூகாம்பிகை நகர், கிழக்கு வாசல் நகர், கணபதி நகர், சேத்திலால் நகர், பள்ளத்தெரு, மகாலட்சுமி நகர், அரியாங்குப்பம், மணவெளி, ஒடவெளி, நோணாங்குப்பம், காக்காயந்தோப்பு, வீராம்பட்டினம், சின்னவீராம்பட்டினம் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படும்.

    வில்லியனூர் -சேதராப்பட்டு மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை காலை 10 மணி முதல் 1 மணி வரை கோபாலன்கடை, முத்துபிள்ளைபாளையம், பிச்சவீரன்பட்டு, ராதாகிருஷ்னன் நகர், பாவேந்தர் நகர், சுப்பிரமணியபாரதி நகர், காரைகோவிந்தன் நகர், ரெட்டியார்பாளையம், அஜீஸ் நகர், அரவிந்தர் நகர், சின்னசாமி நகர், சத்திய சாய் நகர், பாரிஸ் நகர், பூமியான்பேட், ஜவகர் நகர், சிவா நகர், சுதாகர் நகர், பவழக்காரன்சாவடி பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

    இதேபோல் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை வம்பாகீரப்பாளையம் முழுவதும் மின்சார நிறுத்தம் செய்யப்படும்.

    மேற்கண்ட தகவல் மின்துறை செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    மத்திய அரசின் உத்தரவுப்படி புதுச்சேரியில் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
    மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மார்ச் 25-ம் தேதி பொது ஊரடங்கை அறிவித்தது. இதனால் மக்கள் போக்குவரத்தை கட்டுப்படுத்த இ-பாஸ் நடைமுறை கொண்டு வரப்பட்டது.

    இந்த சூழலில் மாநிலங்களுக்கு உள்ளேயும் மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கும் பல்வேறு மாநில அரசுகள் கெடுபிடிகள் விதித்து வருவதாக புகார்கள் எழுந்ததைத்தொடர்ந்து அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலர்களுக்கும் மத்திய உள்துறை செயலர், அஜய் பல்லா, கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். 

    அதில், “மாநிலங்களுக்கு உள்ளும் மாநிலம் விட்டு மாநிலம் பயணிக்கவும் தடைகள் கூடாது என மத்திய அரசின் தளர்வு வழிகாட்டுதல்களில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. சரக்கு மற்றும் மக்கள் போக்குவரத்தில் கட்டுப்பாடுகள் விதிப்பதால் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் வேலை வாய்ப்புகளில் பாதிப்பு ஏற்படுகின்றன.

    எனவே மாநிலம் விட்டு மாநிலம் பயணிக்க சிறப்பு அனுமதி, இ-பாஸ் போன்றவை தேவையில்லை. மாநில அரசின் கட்டுப்பாடுகள், மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு முரணானது” என்று தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் மத்திய அரசின் உத்தரவுப்படி புதுச்சேரியில் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் புதுச்சேரிக்குள்ளேயும், வெளிமாநிலங்களுக்கும் செல்ல இனி இ-பாஸ் தேவையில்லை என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.
    ×