என் மலர்
செய்திகள்

அன்பழகன் எம்எல்ஏ
கொரோனா தடுப்பில் புதுவை அரசு தோல்வி- அன்பழகன் எம்எல்ஏ குற்றச்சாட்டு
கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் புதுவை அரசு தோல்வி கண்டுள்ளது என்று அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றஞ்சாட்டினார்.
புதுச்சேரி:
புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தடுப்பு விஷயத்தில் புதுவை காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி அரசு முழுமையாக தோல்வியை கண்டுள்ளது. இந்த தோல்விக்கு கவர்னர் மற்றும் ஆளும் அரசுக்கு இடையேயான மோதல் போக்கும் ஒரு காரணமாக அமைந்தது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பே மருத்துவம் சார்ந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், உபகரணங்கள் வாங்கவும், போதுமான டாக்டர்கள், நர்சுகள் நியமனம் செய்யவும் அரசால் அனுப்பப்பட்ட கோப்புகளுக்கு இப்போதுதான் அனுமதி கிடைத்து ஒரு சில நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பே கவர்னர் அனுமதி வழங்கியிருந்தால் கொரோனா தொற்றை புதுச்சேரியில் ஓராளவு கட்டுக்குள் கொண்டு வந்திருக்கலாம்.
தற்போது தினசரி செய்யப்படும் 1,800 பரிசோதனைகளை 3 ஆயிரமாக உயர்த்த முதல்-அமைச்சர் அறிவித்து இருந்தார். ஆனால் அவரது அறிவிப்புக்கு பின்னர் அந்த எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டு இப்போது 1,300 நபர்களுக்கு மட்டுமே பரிசோதனை செய்யும் நிலையை சுகாதாரத்துறை இயக்குனர் வாய்மொழி உத்தரவு மூலம் செய்துள்ளார்.
முதல்-அமைச்சரின் உத்தரவையே மீறும் அதிகாரத்தை சுகாதாரத்துறை இயக்குனருக்கு யார் அளித்தது? இதில் உள்ள உண்மை நிலையை கவர்னரும், முதல்-அமைச்சரும் உணர்ந்து சுகாதாரத்துறை இயக்குனரை மாற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story