search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாராயணசாமி
    X
    நாராயணசாமி

    உரிய நிதியை தராமல் புதுவையை மத்திய அரசு புறக்கணிக்கிறது- நாராயணசாமி ஆவேசம்

    புதுவை மாநிலத்தை மத்திய அரசு புறக்கணிக்கிறது. மாநிலத்திற்கு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்கவில்லை என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு மாநில அரசுக்கு 2019-20 ரூ.200 கோடி கொடுத்ததாக சிலர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் பெற்றதாக வாட்ஸ் அப்பில் தகவல் பகிர்ந்து வருகின்றனர். மாநில அரசின் கோரிக்கையை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    மத்திய அரசு மாநில அரசுக்கு ரூ.3 ஆயிரம் கோடி மானியம் வழங்க வேண்டும். ஆனால் ரூ ஆயிரத்து 700 கோடி தருவதாக மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. அதிலும் இதுவரை ரூ 520 கோடி மட்டுமே கொடுத்துள்ளனர். மீதி உள்ள நிதி இதுவரை வரவில்லை.

    7-வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்தியதற்காக 4 ஆண்டிற்கு ரூ ஆயிரத்து 800 கோடி நிதி தர வேண்டும். ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகை ரூ.700 கோடி தரவேண்டும். இவை எதையும் மத்திய அரசு கொடுக்க வில்லை

    ஆனால் கடந்த 2019-20-க்கு மத்திய அரசு புதுவை அரசுக்கு ரூ.200 கோடி கொடுத்து விட்டது என்று தம்பட்டம் அடித்துக் கொள்கின்றனர். இப்படி பேசி மக்கள் மத்தியில் பொய்யான தகவல்களை பரப்பி கொண்டிருப்பவர்களுக்கு சொல்கிறேன்.

    புதுவை மாநிலத்தை மத்திய அரசு புறக்கணிக்கிறது. மாநிலத்திற்கு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்கவில்லை ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையை கொடுக்கவில்லை. இதனை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய கடமை. எங்களுக்கு இருக்கிறது ரூ.200 கோடியை வைத்துக்கொண்டு ஒரு மாநில அரசை நடத்த முடியுமா.?

    இதனைப் புரிந்துகொண்டு அவர்கள் பேச வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் நடத்துகின்றனர். கடந்த 8 மாதமாக அவர்களுக்கான ஊதியத்தை கொடுக்க முடியவில்லை.

    இதன்மூலம் அவர்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை கவர்னர் கிரண்பேடி செய்துள்ளார். இதனால் அவர்கள் இன்று தெருவில் இறங்கி போராட்டம் நடத்துகின்றனர்.

    இதே போல் ரோடியர், சுதேசி, பாரதி பஞ்சாலை தொழிலாளர்களுக்கு பிரச்சினையை உருவாக்கு கிறார். மானியத்தில் இருந்து பணம் கொடுக்கக் கூடாது என கிரண்பேடி கூறுகிறார். அப்படியானால் அந்த குடும்பங்களின் நிலை என்ன ஆகும்.

    அதுபோல் கூட்டுறவு நிறுவனங்களுக்கும் கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்கக் கூடாது என்கிறார். இவ்வாறு புதுவை அரசுக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் கிரண்பேடி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். நீதிமன்ற உத்தரவையும் மீறுகிறார், மாநில முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கிறார் அவரால் புதுவைக்கு என்ன பயன் என்பதை மக்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

    Next Story
    ×