search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public toilet"

    • இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களும் இங்கு நடைபெற்று வருகிறது.
    • கோவை மாநகராட்சி விரைந்து செயல்பட்டு உடனே இந்த கழிப்பிடத்தை சுத்தம் செய்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை.

    குனியமுத்தூர்

    கோவை காந்திபார்க் பஸ் நிறுத்தம் அருகே ஒரு பொதுக் கழிப்பிடம் உள்ளது.

    கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்த கழிப்பிடம் பயன்பாட்டிற்கு வரவில்லை என தெரிவிக்கின்றனர் அந்த பகுதி மக்கள்.

    ஒரு நாளைக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் இப்பகுதியில் பஸ்சுக்காக காத்து நின்று பஸ் ஏறி பயணம் செய்கின்றனர்.

    இப்பகுதியில் பொதுக்கழிப்பிடம் என்று வேறு எதுவுமே கிடையாது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னதாக இப்பகுதியில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் இந்த கழிப்பிடத்தை உபயோகப்படுத்தி வந்தனர்.

    ஆனால் தற்போது பல ஆண்டுகளாக இது மூடப்பட்ட நிலையில் உள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.சிவானந்த காலனி, காந்திபுரம், கணபதி, டவுன்ஹால், சுங்கம், ராமநாதபுரம், புலியகுளம் பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் இந்த பஸ் நிறுத்தத்தில் நின்று தான் பஸ் ஏறி செல்கின்றனர்.

    மேலும் இந்த பொதுக்கழிப்பிடத்தில் கதவு இல்லாததால் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் உள்ளே செல்லும் அவல நிலை உள்ளது.

    மேலும் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களும் இங்கு நடைபெற்று வருகிறது. உள்ளே சென்று பார்க்கும் போது குப்பை மேடுகளும், காலி பாட்டில்களும் காணப்படுகிறது.

    இது குறித்து மக்கள் கூறியதாவது:-

    கோவை மாநகராட்சி இந்த பொதுக் கழிப்பிடத்தை சுத்தப்படுத்தி குத்தகைக்கு விட்டால் மாநகராட்சிக்கு வருமானம் வரும்.

    ஆனால் நகரின் மிகவும் முக்கியமான பகுதியாகவும், மையப் பகுதியாகவும் அமைந்துள்ள காந்தி பார்க் பகுதியில் இப்படி ஒரு பொதுக் கழிப்பிடம் பயன்பாட்டிற்கு இல்லாமல் வெறுமனே கிடப்பது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும். அவசரத்துக்கு செல்வதற்கு கூட முடியாமல் பொதுமக்கள் தவித்து வருவதை காண முடிகிறது.

    எனவே கோவை மாநகராட்சி விரைந்து செயல்பட்டு உடனே இந்த கழிப்பிடத்தை சுத்தம் செய்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பது எங்களது கோரிக்கையாகும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனியாக தலா 6 கழிப்பறைகள் கட்டப்பட்டு உள்ளன.
    • கழிப்பறை உள்ள இடத்தில் ‘செப்டிக்டேங்’ அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூரை அடுத்த எண்ணூர், தாழங்குப்பம் பகுதியில் 150 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்கு கடந்த 3 மாதத்துக்கு முன்பு பொதுக்கழிப்பறை கட்டிடம் ரூ.30 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டது. ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனியாக தலா 6 கழிப்பறைகள் கட்டப்பட்டு உள்ளன.

    கழிவறை கட்டிடம் திறக்கப்பட்டு 3 மாதங்களுக்கு மேல் ஆகியும் பயன்படுத்த முடியாமல் மூடியே கிடக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக கழிவறையில் இருந்து செல்லும் குழாயை அருகில் உள்ள கால்வாயில் இணைக்க முடியாததே காரணமாக கூறப்படுகிறது.

    தாழங்குப்பம் அருகே உள்ள நெட்டுக்குப்பம் வழியாக கழிவறை கழிவுநீர் குழாயை கொண்டு சென்று அருகில் உள்ள கால்வாயில் இணைக்கும் சூழல் உள்ளது.

    ஆனால் இதற்கு நெட்டுக்குப்பம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கு சாதிபாகுபாடு காரணம் என்றும் கூறப்படுகிறது. இயற்கையாகவே தாழங்குப்பம் பகுதி உயரமான இடம் ஆகும். இதனால் அங்கிருந்து வெளியேறும் தண்ணீர் நெட்டுக்குப்பம் வழியாக செல்லும்.

    தற்போது கழிவறை பகுதியில் இருந்து குழாயை நெட்டுக்குப்பம் வழியாக கொண்டு செல்ல முடியாத அளவுக்கு வீட்டை ஒட்டி சுவர்கள் எழுப்பப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

    இதனால் வேறு வழியின்றி மாற்றுப்பாதையை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். எனினும் மாற்றுப்பாதையில் குழாய்கள் பதித்தால் மேடான பகுதி வாரியாக கழிவு நீர் பாய்ந்து செல்வதில் சிரமம் ஏற்படும் சிக்கலும் உள்ளது.

    இதனால் கழிவறையை பயன்படுத்த முடியாமல் பூட்டி வைக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே இந்த பிரச்சினை தொடர்பாக ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டு உள்ளது.

    இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளில் ஒருவர் கூறும்போது, 'தாழங்குப்பம் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட கழிவறையில் இருந்து குழாய் பதிப்பதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பணியில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக ஆவடி போலீஸ் கமிஷ்னரிடம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தர கோரி உள்ளோம்.

    விரைவில் குழாய் பதிக்கும் பணி தொடங்கப்படும்' என்றார்.

    இது குறித்து தாழங்குப்பத்தை சேர்ந்த ஒருவர் கூறும்போது, 'நான் பிறந்த முதலே இங்கு தான் வசிக்கிறேன். நெட்டுக்குப்பத்தில் உள்ள சிலர் கழிவுநீர் குழாய் பதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பூமிக்கடியில் குழாய் சென்றாலும் தங்கள் பகுதி வழியாக குழாய் செல்ல எதிர்ப்பு தெரிவித்து சாதிய அவதூறுகளை கூறுகிறார்கள்' என்றனர்.

    மற்றொருவர் கூறும் போது, 'இந்த கழிவறை மிகவும் பழமை யானது. கடந்த 3 ஆண்டு முன்பு இதனை சீரமைக்க தொடங்கியதும் பிரச்சினை ஏற்பட்ட ஆரம்பித்தது. முன்பு கழிவறை அருகே வீடுகள் இல்லாததால் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருந்தது. தற்போது நெட்டுக்குப்பம் அருகே கழிப்பறை பக்கத்தில் ஏராளமான வீடுகள் வந்துவிட்டன. இதனால் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. பொதுக்கழிப்பறை இருந்தாலும் அதனை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணவேண்டும்' என்றார்.

    இதற்கிடையே கழிப்பறை உள்ள இடத்தில் 'செப்டிக்டேங்' அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    • எங்கள் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளனர். எங்கள் பகுதியில் பொது கழிப்பிடம் இல்லை.
    • சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தீக்குளிக்க முயன்றேன்.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மக்கள் தங்களது பிரச்சனை குறித்த மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர்.

    அப்போது ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையம் அடுத்த பி. மேட்டுப்பாளையம், பூ மாண்டக்கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த ஜெயக்கு மார்(35) என்பவர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். கலெக்டர் அலுவலக கேட் முன்பு திடீரென தண்ணீர் பாட்டிலில் தான் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீ குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சூரம்பட்டி போலீசார் உடனடியாக ஓடிவந்து அவரிடம் இருந்து மண்ணெண்ணை பாட்டிலை பறித்து அவர் மீது தண்ணீர் ஊற்றினர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது. அப்போது ஜெயக்குமார் போலீசாரிடம் கூறியதாவது:-

    எங்கள் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளனர். எங்கள் பகுதியில் பொது கழிப்பிடம் இல்லை. இதனால் எங்கள் பகுதியில் பொது கழிப்பிடம் கட்டித் தர வலியுறுத்தி சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கேட்டு வருகிறோம். இதனையடுத்து எங்கள் பகுதியில் பொதுக்கழிப்பிடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் கழிப்பிடம் கட்ட ஒதுக்கப்பட்ட இடத்தில் குடிசைகள் போட்டும், சிமெண்ட் செட்டுகள் போட்டும், ஆடு மாடுகளை கட்டியும், ஆக்கிரமிப்பு செய்துள்ளார். அவருக்கு சில அதிகாரிகள் உடந்தையாக இருந்து வருகின்றனர்.

    இது குறித்து நான் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. கிட்டத்தட்ட 2 வருடமாக கழிப்பிடம் கட்ட போராடி வருகிறேன். நான் ஊர் மக்கள் நன்மைக்காக பாடுப்பட்டு வருகிறேன். இது சம்பந்தமாக பி.மேட்டுப்பாளையம் பேரூராட்சியில் மனு கொடுத்து அவர்கள் சம்பந்த ப்பட்ட நபரிடம் ஆக்கிரமிப்பை அகற்ற சொல்லியும் அவர் அகற்றாமல் உள்ளார். எனவே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அந்த இடத்தை மீட்டு கழிப்பிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தீக்குளிக்க முயன்றேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தினமும் ஏராளமான பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்கு யூனியன் அலுவலகம் வந்து செல்கின்றனர்.
    • யூனியன் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மட்டுமே கழிவறை உள்ளது.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் யூனியன் 32 கிராம பஞ்சாயத்துக்களை யும், 23 ஒன்றிய கவுன்சிலர்களையும் உள்ளடக்கியது. இந்த யூனியனுக்கான அலுவலகம் நெல்லை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் ஆலங்குளம் மத்திய பகுதி யில் அமைந்துள்ளது. இங்கு தினமும் ஏராள மான பொதுமக்கள், கட்டிட ஒப்பந்ததாரார்கள் உள்ளிட்டோர் பல்வேறு தேவைகளுக்கு வந்து செல்கின்றனர்.

    இதுதவிர மாதந்தோறும் இந்த யூனியன் அலுவல கத்தில் ஊராட்சி செயலர்கள் கூட்டம், கவுன்சிலர்கள் கூட்டம், பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டம் நடைபெற்று வரு கிறது. அவ்வாறு வருபவர்களுக்கு கழிவறை வசதிகள் இல்லை என்று புகார்கள் வந்துள்ளது.

    யூனியன் அலுவலக வளாகத்தில் அங்கு பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு மட்டுமே கழிவறை உள்ளது. பொதுமக்கள் உள்ளிட்டோ ருக்கு பொதுவான கழிப்பறைகள் எதுவும் இல்லை.

    இதனால் பெண்கள், வயதானவர்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்ற னர் என்று சமூக ஆர்வ லர்கள் புகார் கூறுகின்றனர்.

    மேலும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் கோரிக்கை விடுத்தாலும், அதனை அவர்கள் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் அதி ருப்தி தெரிவிக்கின்றனர்.

    • ரூ.7 லட்சம் மதீப்பிட்டில் கட்டப்பட்டது.
    • கடந்த 6 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளது.

    அன்னூர்,

    கோவை மாவட்டம் அன்னூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கஞ்சப்பள்ளி ஊராட்சி 5 கிராமங்களுடன் கொண்டு செயல்பட்டு வருகிறது.

    இதில் கஞ்சபள்ளியில் மட்டும் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த குடும்பங்களில் 20 சதவீகதம் அளவிற்கு தனி கழிவறை வசதி உள்ளது. இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அருகாமையில் தோட்டங்களில் உள்ள கழிவறையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மழைக்காலங்களில் குழந்தைகள், பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய விஷ பூச்சிகள், பாம்புகள் போன்றவை தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

    இதனை தொடர்ந்து கஞ்சப்பள்ளி பஞ்சாயத்து அலுவலகத்திற்கு அருகா மையில் அமைந்துள்ள பெண்களுக்கான பொதுசு காதார வளாகம் கடந்த 2017ம் ஆண்டு ரூ.7 லட்சம் மதீப்பிட்டில் கட்டப்பட்டது. ஆனால் கடந்த 6 ஆண்டுகளாக பொது சுகாதார வளாகம் திறக்கப்படாமலே உள்ளது.

    இதனை பொதுமக்கள் பலமுறை கேள்வி எழுப்பியும் உயர் அதிகாரிகள் வந்தவுடன் திறக்கப்படும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதில் கூறி வருகின்றனர். எனவே கட்டி முடிக்கப்பட்ட பொது சுகாதார வளாகத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • தேசிய நெடுஞ்சாலையில் கோபி-தாராபுரம் சாலையும் சந்திக்கும் இடத்தில் பேருந்து நிறுத்தம் உள்ளது.
    • நூற்றுக்கணக்கான வாகன ஓட்டிகள் வந்து செல்லும் மையமாகவும் உள்ளது.

    பெருமாநல்லூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் செங்கப்பள்ளி பகுதி பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது :- திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம், செங்கப்பள்ளி பேருந்து நிறுத்தம் பிரதான தேசிய நெடுஞ்சாலையில் கோபி-தாராபுரம் சாலையும் சந்திக்கும் இடத்தில் உள்ளது. ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்தின் மையப் பகுதியாகவும், கோவை- ஈரோடு- சேலம், கோபி-ஊத்துக்குளி-திருப்பூர், வழித்தடத்தில் பயணிக்கும் நூற்றுக்கணக்கான பேருந்து பயணிகள் ஏறி இறங்கி செல்லும் மையமாக செங்கப்பள்ளி பேருந்து நிறுத்தம் உள்ளது. வாரச்சந்தைக்கு வந்து செல்லும் மக்களுக்கும், நூற்றுக்கணக்கான வாகன ஓட்டிகள் வந்து செல்லும் மையமாகவும் உள்ளது. மணிக்கணக்கில் பயணம் செய்து செங்கப்பள்ளி வரும் பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும், இயற்கை உபாதைகளை கழிக்க ஒரு பொது கழிப்பிடம் இல்லை. ஆகவே செங்கப்பள்ளி பேருந்து நிறுத்த பகுதியில் ஒரு பொது கழிப்பிடம் அமைக்க வேண்டும் என செங்கப்பள்ளி ஊராட்சிக்கும், அரசுக்கும் பொதுமக்களும், பேருந்து பயணிகளும் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்துள்ளனர்.

    இதையடுத்து செங்கப்பள்ளி ஊராட்சி நிர்வாகம் பேருந்து நிறுத்தம் அருகில் அரசு திட்ட பணியில் நிதி ஒதுக்கீடு பெற்று பொதுக் கழிப்பிடம் கட்ட 28.11.22 அன்று ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், கட்டிட ஒப்பந்ததாரர்கள் முன்னிலையில் அஸ்திவாரப் பணிகளை துவக்கி உள்ளனர்.

    அஸ்திவாரப் பணிகளை துவக்கி செய்து கொண்டிருந்தபோது ஒரு சிலர் அந்த பணியை தடுத்து நிறுத்தியதோடு மட்டுமல்லாமல், திட்ட பணியை சீர்குலைக்கும் நோக்கில் எந்திரங்களை வைத்து தோண்டப்பட்ட அஸ்திவாரங்களை அராஜகமான முறையில் மூடி அரசு திட்டப்பணிகளை தடுத்து நிறுத்தி உள்ளார்கள். இதனால் பொதுக்கழிப்பிட பணி தற்போது நின்று போய் உள்ளது. ஆயிரக்கணக்கான மக்களுக்கு பயன்படும் வகையில் ஊராட்சி நிர்வாகத்தால் நல்ல நோக்கத்தோடு செய்யப்பட்ட பணியை சிலர் சுயநல நோக்கோடு தடுத்துள்ள செயல் பொதுநலன் விரும்பும் யாவரும் ஏற்றுக் கொள்ள முடியாது. செங்கப்பள்ளிக்கு வரும் மக்கள் இயற்கை உபாதையை கழிக்க அன்றாடம் படும் சிரமத்தை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    ஆகவே மாவட்ட நிர்வாகம், ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், ஊராட்சி நிர்வாகம், ஏற்கனவே பொதுமக்கள் வைத்து வந்த கோரிக்கையின் அடிப்படையில் செங்கப்பள்ளி ஊராட்சி நிர்வாகத்தால் பொது நலன் கருதி தொடங்கப்பட்ட பொது கழிப்பிட பணியை திட்டமிட்ட அடிப்படையில் செங்கப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகிலேயே விரைவில் முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சுயநல நோக்கோடு பொதுக் கழிப்பிட திட்டப் பணியை தடுக்கின்ற எந்த ஒரு நபர் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • தூய்மை இந்தியா திட்டத்தில் சுத்தம், சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.
    • அடுத்த 6 மணி நேரத்தில் குறை நிவர்த்தி செய்யப்படும் வகையில் இத்திட்டம் வடிமைக்கப்பட்டுள்ளது

    திருப்பூர் : 

    தூய்மை இந்தியா திட்டத்தில் சுத்தம், சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. அதன்படி பிரத்யேக செல்போன் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. சுகாதாரம் சார்ந்து, உள்ளாட்சி நிர்வாகத்தினரின் பணிகள் இணைய தளம் வாயிலாக பதிவேற்றம் செய்யப்படுகிறது.

    இந்நிலையில் பொதுக்கழிப்பிடங்களில் சுகாதாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், க்யூ ஆர் கோடு உதவியுடன் செல்போன் மூலம் புகார் செய்யும் நோக்கில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.அதன்படி தூய்மை இந்தியா திட்ட இணைய தள செயலியுடன் இணைக்கப்பட்ட க்யூ ஆர் கோடு பொதுக் கழிப்பிடங்களில் முகப்பில் வைக்கப்படும்.

    பொதுக்கழிப்பிடங்கள் பராமரிப்பு இல்லாமல் இருப்பது, சுகாதாரம் மற்றும் தண்ணீர், விளக்கு வசதி இல்லாமல் இருப்பது போன்ற குறைகளை, தங்கள் செல்போனில் க்யூ ஆர் கோடு ஸ்கேன் செய்வதன் மூலம், தூய்மை இந்தியா திட்ட இணைய செயலியில் அது பதிவாகிவிடும். அந்த தகவல் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்தின் கவனத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.

    அடுத்த 6 மணி நேரத்தில் குறை நிவர்த்தி செய்யப்படும் வகையில் இத்திட்டம் வடிமைக்கப்பட்டுள்ளது. பேரூராட்சிகள் அளவில் இத்திட்டத்தை வேகப்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு பொதுக் கழிப்பிடத்திலும் தூய்மை இந்தியா திட்டத்துடன் இணைந்த க்யூ ஆர் கோடு வைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது.

    • காட்டுப்புத்தூர் பகுதிகளில் உள்ள பொது கழிப்பிடங்களில் அதிகாரி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • பள்ளிகள் மற்றும் அரசு அலுவவலகங்கள் ஆகியவற்றில் உள்ள கழிப்பிடங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    திருச்சி :

    பேரூராட்சிகளின் ஆணையர் டாக்டர்.ஆர்.செல்வராஜ், ஐ.ஏ.எஸ்.மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.பிரதீப்குமார், ஆகியோரின் அறிவுரைகளின்படி, திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சி வார்டு எண். 15- காமாட்சியம்மன் கோவில் தெருவில் உள்ள சமுதாய கழிப்பிடம் மற்றும் வார்டு எண்.06, தெற்கு அக்ரஹாரத்தில் உள்ள ஆண்கள் கழிப்பிடம் ஆகியவற்றை செயல்அலுவலர் ச.சாகுல் அமீதுஆய்வுமேற்கொண்டார்.

    மேலும், பேருந்துநிலையம் மற்றும் பாரதியார் தெருவில் உள்ள 2பொதுகழிப்பிடங்கள், அனைத்து வார்டுகளிலும் உள்ள 16 -சமுதாய கழிப்பிடங்கள்

    மற்றும் பேருந்து நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பிடம் ஆகியவற்றில் உள்ள கழிவுநீர் சேகரிக்கும் தொட்டிகளை பாதுக்காப்பான முறையில் மூடிவைத்திடவும், கழிவுநீர் சேகரிக்கும் தொட்டிகளை சுற்றி உள்ள இடங்களில் முட்செடிகள் மற்றும் புல்பூண்டுகளை அகற்றி சுத்தமாக வைத்து பராமரித்து பாதுகாத்திட 3 -குழுக்கள் அமைத்து ஆய்வு செய்யப்பட்டது.

    மேலும், காட்டுப்புத்தூர் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட 3000-க்கும் மேற்பட்ட வீடுகள், வணிக நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள், திருமண மண்டபங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் அரசு அலுவவலகங்கள் ஆகியவற்றில் உள்ள கழிப்பிடங்களை தூய்மையாக பராமரித்தும் மற்றும் கழிவுநீர் சேகரிக்கும் தொட்டிகளை (செப்டிக் டேங்க்) உரிமையாளர்கள் மூடி பாதுகாக்காவும், பழுதடைந்த நிலையில் உள்ள கழிவுநீர் தொட்டிகளை ஒரு வார காலத்திற்குள் சீரமைத்து பேரூராட்சி பணியாளர்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளும் போது முறையாக பராமரித்து பேரூராட்சிக்கு ஒத்துழைப்பு நல்க இதன்வழி கேட்டுக்கொள்ளப்பட்டது.

    இந்த ஆய்வின் போது பேரூராட்சி மன்ற தலைவர் சு.சங்கீதா, துணைத்தலைவர் சி.சுதா, இளநிலை உதவியாளர்கள் பாரதியார், இராஜேந்திரன், துப்புரவு மேற்பார்வையாளர் (பொ) கண்ணன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.

    • தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இயங்கி வரும் சுகாதார பொது கழிப்பறை மக்கள் பயன்பாட்டுக்கு இல்லாமல் உள்ளது.
    • இதனால் அப் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் பேரூராட்சி 14-வது வார்டு தச்சமொழி மீன்கடை தெருவில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இயங்கி வரும் சுகாதார பொது கழிப்பறை மக்கள் பயன்பாட்டுக்கு இல்லாமல் கடந்த 2 ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி திறக்க படாமல் பூட்டி காணப்படுகிறது.

    கழிப்பறை பூட்டி காணப்படுவதால் அப்பகுதி மக்கள் அருகில் உள்ள காலி இடத்தில் இயற்கை உபாதையை கழிக்கின்றனர். இதனால் அப் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது கோவில் விழா உள்ளிட்ட திருவிழா காலமாக இருப்பதால் மக்கள் பயன்பாட்டிற்கு மூடி காணப்படும் கழிப்பறையை உடனே திறக்க வேண்டும் என சாத்தான்குளம் ஒன்றிய பா.ஜனதா ஓ.பி.சி. அணி தலைவர் பேராத்துசெல்வம் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×