என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 20 ஆயிரத்து 226 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவையில் நேற்று 3 ஆயிரத்து 742 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது.

    புதிதாக 414 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் புதுவையில் 308, காரைக்காலில் 74, ஏனாமில் 29, மாகியில் 3 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    புதுவையில் தற்போது ஆயிரத்து 411, காரைக்காலில் 88, ஏனாமில் 203, மாகியில் 19 பேர் நோய் தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    நேற்று ஒரே நாளில் புதுவையில் 423, காரைக்காலில் 20, மாகியில் 4 பேர் என மொத்தம் 447 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 20 ஆயிரத்து 226 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், ஆயிரத்து 721 பேர் தொற்றுடன் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். 15 ஆயிரத்து 27 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    புதுவையில் 2 ஆயிரத்து 665, காரைக்காலில் 290, ஏனாமில் 120 பேர், மாகியில் 9 பேர் என 3 ஆயிரத்து 84 பேர் அவரவர் வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.

    புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 385 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலை முதல் இன்று காலை வரை ஒரே நாளில் 9 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

    புதுவை கதிர்காமம் மருத்துவமனை, ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 8 பேர், காரைக்காலில் ஒருவர் கொரோனா சிகிச்சை பலினின்றி இறந்தனர். இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 394 ஆக உயர்ந்துள்ளது.

    இத்தகவலை புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
    கொரோனா தொற்று அறிகுறி தெரிந்தவுடன் சிகிச்சைக்கு வர தவறுவதுதான் உயிரிழப்பு அதிகரிக்க முக்கிய காரணம் என்று புதுவை கவர்னர் கிரண்பேடி கூறி உள்ளார்.
    புதுச்சேரி:

    கவர்னர் கிரண்பேடி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசு நியமித்த குழு வழிகாட்டுதலின் அடிப்படையில் புதுவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை செயல்படத் தொடங்கி உள்ளோம்.

    அதே நேரத்தில் கொரோனா தொற்றால் இறப்போர் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. இந்திய அளவு சதவீதத்தை விட புதுவையில் அதிகம்.

    இதற்கு தொற்று அறிகுறி தெரிந்தவுடன் சிகிச்சைக்கு வர தவறுவதுதான் முக்கிய காரணம். தொடக்க நிலையிலேயே பரிசோதிப்பது அவசியம். இதுவே இறப்பு எண்ணிக்கையை குறைக்கும்.

    தற்போது புதுவையில் பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது. நாள்தோறும் 3 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. இதை மக்கள் பயன்படுத்துவது அவசியம்.

    தொற்று பாதித்தவர்களை வெகு விரைவில் கண்டறிந்து சிகிச்சை தரும் நடவடிக்கையில் அரசு இறங்கி உள்ளது.

    இது இறப்பு எண்ணிக்கையை குறைக்கும். அத்துடன் முகக்கவசம் அணிய தவறாதீர். சமூக இடைவெளியும் அவசியம். கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.

    விழாக்களில் பங்கேற்பதை தவிர்த்து விடுங்கள். மக்களும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் ஒத்துழைப்பது அவசியம்.

    இவ்வாறு கிரண்பேடி பதிவில் கூறியுள்ளார்.

    புதுச்சேரியில் மத்திய பாரதிய ஜனதா அரசை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    தொழிலாளர் சட்டங்களை திருத்தம் செய்யக்கூடாது. புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தக்கூடாது. ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.7 ஆயிரத்து 500 நிவாரணம் வழங்க வேண்டும்.

    பாராளுமன்றத்தில் மக்கள் விரோத சட்டங்களை நிறைவேற்றக்கூடாது என வலியுறுத்தி நாடு முழுவதும் பாராளுமன்றம் கூடும் இன்றைய தினம் கம்யூனிஸ்டு கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    புதுவையில் சுதேசி மில் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்தியகம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்டு செயலாளர் ராஜாங்கம், கம்யூனிஸ்டு (எம்.எல்.) சோ.பாலசுப்பிரமணியன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலை நாதன், அபிஷேகம், தினேஷ் பொன்னையா, சேது செல்வம், கீதநாதன், சுப்பையா, மாதர் சங்கம் சரளா, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பெருமாள், சீனுவாசன், பிரபுராஜ், கம்யூனிஸ்டு (எம்.எல்.) மோதிலால், சங்கரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினர்.

    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக புதுவை கலெக்டர் அருண் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா வைரசை கட்டுப்படுத்த புதுச்சேரி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு அரசு கொரோனா மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அதேபோல் வீடுகளில் தனிமைப்படுத்தவர்களுக்கு ஐ.வி.ஆர்.எஸ். குரல்வழி மருத்துவமும், தொடர் கண்காணிப்பும் வழங்கப்படுகிறது. மேலும் சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பும் நோயாளிகள் வீட்டிற்கு சென்றபின் மருத்துவ அதிகாரிகளால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு ஆலோசனை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கொரோனா தொற்று நோயாளிகளில் நீரிழிவு நோய் பாதித்து டயாலிசிஸ் செய்ய வேண்டிய அவசியத்தில் உள்ளவர்களுக்கு அந்த வசதியை ஏற்படுத்தித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அரசு பொது மருத்துவமனையில் இருந்து கொண்டு வந்து கதிர்காமத்தில் உள்ள இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி நிறுவனத்தில் 2 டயாலிசிஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் கொரோனா நோயாளிகளில் தேவையானவர்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படும்.

    அறுபடைவீடு மருத்துவக் கல்லூரி, மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் பிம்ஸ் மருத்துவக் கல்லூரி ஆகிய 3 தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் இந்த வசதியை ஏற்படுத்தித் தருமாறு அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் காய்ச்சல், சளி, இருமல், போன்ற கொரோனா அறிகுறிகளை உணர்ந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது துணை சுகாதார மையங்களுக்கு சென்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அல்லது 104 கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
    ராகுல்காந்தி பிரதமராகி அவரது தலைமையில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என புதுச்சேரி முதல் மந்திரி நாராயணசாமி தெரிவித்தார்.
    புதுச்சேரி:
     
    எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ இளநிலை படிப்புகளுக்கு தேசிய அளவில் மாணவர்களை தேர்வு செய்ய தேசிய தகுதி நுழைவுத்தேர்வு எனப்படும் ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான ’நீட்’ தேர்வு நாடு முழுவதும் இன்று பெற்றது. நாடு முழுவதும் 3 ஆயிரத்து 842 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு தேர்வு நடைபெற்றது.

    இதற்கிடையில், ’நீட்’ தேர்வு அச்சம் காரணமாக தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இந்த தற்கொலை சம்பங்கள் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

    இந்த நிகழ்வை தொடர்ந்து ’நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழகத்தில் இன்று பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

    நடிகர் சூர்யா உள்ளிட்ட பல்வேறு பிரபல நபர்கள் ’நீட்’ தேர்வுக்கு எதிரான தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர். மேலும், மத்தியில் ஆளும் பாஜக அரசு ’நீட்’ தேர்வை ரத்து செய்யவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் புதுச்சேரி மாநில முதல்மந்திரி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,’ராகுல் காந்தி பிரதமராகி அவரது தலைமையில் காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் நாங்கள் ’நீட்’ தேர்வை ரத்து செய்வோம்’ என்றார்.

    புதுப்பேட்டை அருகே ஆசைவார்த்தை கூறி பள்ளி மாணவியை திருமணம் செய்த கொத்தனார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
    புதுப்பேட்டை:

    புதுச்சேரி மாநிலம் கரையாம்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் மகன் பார்த்திபன் (வயது 37). கொத்தனார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் பார்த்திபன் புதுப்பேட்டை அருகே உள்ள கயப்பாக்கம் கிராமத்தில் உள்ள தனது சகோதரி வீட்டில் கடந்த 20 நாட்களாக தங்கி இருந்தார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு படித்து வரும் 15 வயதுள்ள மாணவியை சந்தித்து பேசி பழகி வந்தார். சம்பவத்தன்று திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பார்த்திபன், அந்த மாணவியை அழைத்து சென்று விட்டார். இதற்கிடையில் மகளை காணாமல் அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

    பின்னர் இது பற்றி அவரது தாய் புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மாணவியை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று புதுப்பேட்டை போலீசார் கண்டரக்கோட்டை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக மாணவியுடன் பார்த்திபன் வந்தார். அவரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் அந்த மாணவியை ஆசை வார்த்தை கூறி ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது.

    இதையடுத்து அந்த மாணவி பெற்றோருடன் செல்ல விருப்பம் தெரிவித்ததால் அவரை பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் ஆசை வார்த்தை கூறி மாணவியை ஏமாற்றி திருமணம் செய்த கொத்தனார் பார்த்திபன் மீது போக்சோ சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
    முத்திரையர்பாளையத்தில் குடிப்பழக்கம் உள்ள டீ வியாபாரி வீட்டில் இறந்து கிடந்தார். அவரது மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மூலக்குளம்:

    முத்திரையர்பாளையம் காந்தி திருநல்லூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 51). இவர் இருசக்கர வாகனத்தில் கேனில் டீ வைத்து விற்பனை செய்து வந்தார். அவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இந்த நிலையில் முருகேசன் அவரது வீட்டில் திடீரென்று இறந்து கிடந்தார்.

    இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து முருகேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேசன் அளவுக்கு அதிகமாக மதுகுடித்து இறந்தாரா? அல்லது வேறு எதுவும் காரணமாக என விசாரித்து வருகின்றனர்.
    புதுச்சேரியில் மேலும் 419 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,439 ஆக அதிகரித்துள்ளது.
    புதுச்சேரி:

    இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்படும் நிலையில், கடந்த சில வாரங்களாக பாதிப்பு எண்ணிக்கை மிக அதிக அளவில் உள்ளது. தினசரி நோய்த்தொற்று 90 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

    இந்நிலையில், புதுச்சேரியில் மேலும் 419 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,026 ஆக அதிகரித்துள்ளது.

    தற்போது 4831 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 14 ஆயிரத்து 238 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவுக்கு 5 பேர் பலியானதை அடுத்து அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 370 ஆக உயர்ந்துள்ளது.
    கடந்த 4½ ஆண்டு கால ஆட்சியில் காங்கிரஸ் அரசு நிர்வாகத்தில் தோல்வியை தழுவியுள்ளது என்று தி.மு.க. குற்றம் சாட்டியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2016-ல் தேர்தலை சந்திக்கும்போது காங்கிரஸ் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்கும் என்று வாக்குறுதி அளித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு நடந்து கொண்டிருப்பதோ வேறாக உள்ளது.

    அரசுத்துறைகளில் காலியாக உள்ள சுமார் 10 ஆயிரம் இடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கடந்த 2018-ல் காவல்துறையில் 412 இடங்களை நிரப்ப உள்ளதாக அறிவித்ததும், அறிவிப்போடு நின்றுவிட்டது.

    இது ஒரு புறம் இருக்க அரசு நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருகிறது. அதில் பணிபுரியும் சுமார் 10 ஆயிரம் ஊழியர்களுக்கு பல ஆண்டுகளாக சம்பளமும் வழங்கப்படவில்லை.

    பாசிக், பாப்ஸ்கோ ஊழியர்களின் காத்திருப்பு போராட்டம் அரசுக்கு இழுக்கு என்பதோடு, கடந்த 4½ ஆண்டு கால ஆட்சி நிர்வாகத்தின் தோல்வியையே காட்டுகிறது.

    எனவே பாசிக், பாப்ஸ்கோ நிறுவனத்தை திறந்து, நிலுவை ஊதியத்தை அரசு விரைந்து வழங்கி போராட்டத்தை முடிவிற்கு கொண்டுவர வேண்டும். இல்லையென்றால் இந்த ஆட்சி காலத்தில் மூடப்பட்ட கூட்டுறவு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் தொழிலாளர்களும் பாசிக், பாப்ஸ்கோ ஊழியர்களோடு இணைந்து போராடுவார்கள். இது அடுத்த ஆண்டு தேர்தலை சந்திக்க காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சவாலாக இருக்கும்.

    கவர்னருக்கு நோட்டீஸ் அனுப்புவதோ, கவர்னரை எதிர்த்து போராட்டம் நடத்துவதோ பசியால் வாடிக்கிடக்கும் ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்காது. இதனை உணர்ந்து ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்கவும், நிறுவனங்களை திறந்து இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அதுபோல் அரசுத்துறை காலி இடங்களில் 50 சதவீதத்தையாவது 2 மாதங்களுக்குள் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தேர்தல் அறிவிக்கப்பட்டு, நிரப்ப முடியாத சூழல் உருவாகும். இதுவும் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தேர்தல் பிரசாரம் செய்யவே வழிவகுக்கும்.

    இவ்வாறு சிவா எம்.எல்.ஏ. அறிக்கையில் கூறியுள்ளார்.

    நீட் தேர்வை வைத்து மாநிலங்களை மத்திய அரசு பழிவாங்க கூடாது என்று புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி கூறியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

    நீட் தேர்வால் ஏற்பட்ட மரணங்கள் தற்கொலை அல்ல, கொலை. நீட் தேர்வால் ஏற்பட்ட மரணங்களுக்கு மத்திய அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும்.

    நீட் தேர்வை வைத்து மாநிலங்களை மத்திய அரசு பழிவாங்க கூடாது. நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு பிரதமர் பொறுப்பேற்க வேண்டும்.

    மாணவர்களின் நலனை மத்திய அரசும், பிரதமரும் காக்க வேண்டும். புதுச்சேரி காவல்துறையினர் அரசுக்கு அவப்பெயர் ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    வில்லியனூர் கொலை குற்றவாளிக்கு கொரோனா விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார் அச்சம்
    வில்லியனூர்:

    வில்லியனூர் கணுவாய்ப்பேட்டை கப்பக்கார வீதியை சேர்ந்தவர் ராம்குமார் (வயது25) கடை ஊழியர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு இவரும் உத்திவாகினி பேட்டை சேர்ந்த இவரது நண்பர் முல்லைவளவன்(25) என்பவரும் ஒதியம்பட்டு- திருக்காஞ்சி சாலையில் மது குடித்தபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது ராம்குமாரின் தலையில் கல்லைப்போட்டு முல்லைவளவன் கொலை செய்தார்.

    இதையடுத்து தலைமறைவாக இருந்த முல்லைவளவனை வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார், உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபிகாஷ், போலீஸ்காரர் அய்யனார் ஆகிய 3 பேரும் பிடிக்க முயன்றனர். அப்போது முல்லைவளவன் தப்பியோடினார். ஆனாலும் போலீசார் விரட்டி சென்று முல்லைவளவனை மடக்கி பிடித்து வில்லியனூர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரிடம் விசாரித்து விட்டு கொரோனா பரிசோதனைக்காக கதிர்காமம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அப்போது முல்லைவளவனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதனால் முல்லை வளவனை பிடித்து சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார், உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபிகாஷ், போலீஸ்காரர் அய்யனார் ஆகிய 3 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது.

    இதையடுத்து வில்லியனூர் போலீஸ் நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. ஏற்கனவே இந்த போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த 3 போலீசாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டபோது போலீஸ் நிலையத்தை மூடுமாறு டாக்டர் பரிந்துரை செய்து இருந்தார். ஆனால், இதனை ஏற்காமல் தொடர்ந்து போலீஸ் நிலையம் அங்கேயே செயல்பட்டு வந்தது.

    தற்போது கொலை குற்றவாளிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவரை பிடித்து சென்ற போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸ்காரருக்கும் தொற்று பரவி இருக்கலாம் என கருதப்படுவதால் மற்ற போலீசாரிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

    மேலும் போலீஸ் நிலையத்துக்கு புகார் தெரிவிக்க வரும் பொதுமக்களிடையேயும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    தவளக்குப்பத்தில் சிறுவர்களுக்கு கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    பாகூர்:

    புதுவையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொடிகட்டி பறந்த கஞ்சா விற்பனையை போலீசார் கட்டுப்படுத்தி இருந்தனர். ஆனால் தற்போது கஞ்சா விற்பனை மீண்டும் தலைதூக்க தொடங்கி விட்டது.

    கஞ்சா விற்பனை செய்யும் சமூக விரோதிகள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை கஞ்சா பழக்கத்துக்கு ஆளாக்கி அவர்களின் எதிர்கால வாழ்க்கையை சீரழித்து வருகின்றனர்.

    தற்போது மதுபாட்டில் விலை 2 மடங்கு விலை உயர்ந்து விட்டதை சாதகமாக்கி மது பிரியர்களை கஞ்சா போதைக்கு மாற்றி வருகின்றனர். குறிப்பாக கல்லூரி மாணவர்களை குறிவைத்து அவர்களுக்கு ஒரு கும்பல் கஞ்சா விற்பனை செய்து வருகிறது.

    மேலும், தற்போது கொரோனாவால் பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்களையும் இந்த பழக்கத்துக்கு ஆளாக்கு கின்றனர்.

    இதுகுறித்து அரசியல் கட்சியினர் மற்றும் சமூக இயக்கங்களை சேர்ந்தவர்கள் அரசிடம் எடுத்துக்கூறி கஞ்சா விற்பனையை முற்றிலுமாக ஒழிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    இதனை ஏற்று அரசு உத்தரவின்பேரில் போலீசார் அவ்வப்போது அதிரடி சோதனை நடத்தி கஞ்சா கும்பலை கைது செய்தாலும் தொடர்ந்து கஞ்சா விற்பனை குறையவில்லை.

    இந்த நிலையில் சுண்ணாம்பாறு அருகே இடையார்பாளையம் என்.ஆர்.நகரில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தவளக்குப்பம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசெல்வம், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் என்.ஆர்.நகரில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் 2 வாலிபர்கள் மறைத்து வைத்து கஞ்சா விற்பனை செய்ததை கண்டுபிடித்தனர்.

    இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த பரத் என்ற தமிழரசன் (வயது20), பூரணாங்குப்பம் நடுத்தெருவை சேர்ந்த அரவிந்தன்(19) என்பதும் இவர்கள் புதுவையை சேர்ந்த ஒருவரிடம் மொத்தமாக கஞ்சாவை வாங்கி வந்து சிறுசிறு பொட்டலங்களாக கட்டி சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விற்று வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 130 கிராம் கஞ்சா, செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த புதுவையை சேர்ந்த முக்கிய குற்றவாளியை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
    ×