என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மின்கட்டணம் அதிகமாக இருப்பதாக கூறி முத்தியால்பேட்டையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுச்சேரி:

    கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து புதுவையில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதையொட்டி பல மாதங்களாக மின் கணக்கீடு நடைபெறவில்லை. இருப்பினும் மின் நுகர்வோர் குறிப்பிட்ட அளவு தொகையை கட்டணமாக செலுத்தி வந்தனர். இந்தநிலையில் தற்போது மின் கட்டணம் கணக்கிடப்பட்டு வருகிறது.

    ஆனால் அதிக அளவில் கட்டணம் விதித்து இருப்பது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதையடுத்து மின்கட்டணம் தொடர்பாக பொதுமக்கள் நாள்தோறும் மின்துறை அலுவலகங்களுக்கு சென்று விளக்கம் கேட்டு வருகின்றனர். ஆனாலும் அதிகாரிகள் பதில் அளிப்பது இல்லை என்று கூறப்படுகிறது.

    முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் அதிக கட்டணம் தொடர்பாக மின்துறை அலுவலகத்துக்கு சென்று விளக்கம் கேட்டுள்ளனர். வழக்கம்போல் அங்கிருந்த ஊழியர்கள் சரியான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் முத்தியால்பேட்டை மார்க்கெட் அருகே காந்தி வீதியில் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. அங்கு விரைந்து சென்றார். அவர் மின்துறை அதிகாரிகளை தொடர்புகொண்டு பேசினார். இதைத்தொடர்ந்து மின்துறை பொறியாளர் கனியமுதன் மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர்.

    மின்துறை கணக்கீடு தொடர்பாக நாளை (வியாழக்கிழமை) மின்துறை சார்பில் முகாம் அமைத்து தீர்வு காணவேண்டும் என்று வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார். அதை மின்துறை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    வில்லியனூர் அருகே கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    வில்லியனூர்:

    வில்லியனூர் அருகே உளவாய்க்கால் கிராமத்தில் முத்தால வாயம்மன் கோவில் உள்ளது. இங்கு பூசாரியாக வேலை செய்யும் சங்கர், நேற்று முன் தினம் இரவு வழக்கம்போல் பூஜைகளை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை கோவிலை சுத்தம் செய்வதற்காக ஊழியர்கள் வந்தனர். அப்போது கோவிலின் முன்பக்க கதவு திறக்கப்பட்டு கிடந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த காணிக்கை பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    மேலும் கோவிலின் வெளியே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், 2 மர்மநபர்கள் முகமூடி அணிந்து மோட்டார் சைக்கிளில் வருவதும், ஒருவர் மட்டும் கோவிலுக்குள் சென்று உண்டியலை உடைத்து பணத்தை துணியில் முடிந்து கொண்டு அதே மோட்டார் சைக்கிளில் தப்பிச்செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இந்த வீடியோ சமூக வலை தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    நாளை (17-ந் தேதி) மகாளய அமாவாசையொட்டி காசிவிஸ்வநாதர் கோவிலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
    புதுவை அருகே ஒதியம்பட்டில் திருக்காஞ்சி செல்லும் பாதையில் காசிவிஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. காசியை விட புனித தன்மை கொண்டதாக இக்கோவில் கருதப்படுவதால் இங்கு புதுவை மட்டுமின்றி கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவது உண்டு.

    மேலும் ஒவ்வொரு ஆண்டும் மாசிமக தீர்த்தவாரி மற்றும் மகாளய அமாவாசை நாட்களில் இக்கோவிலில் பக்தர்கள் சங்கராபரணி ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கோவிலில்களில் விழாக்களை விமர்சையாக கொண்டாட இந்து அறநிலையத்துறை தடை விதித்துள்ளதால் நாளை (17-ந் தேதி) மகாளய அமாவாசையொட்டி காசிவிஸ்வநாதர் கோவிலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
    கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு செல்வதில் தாமதத்தை குறைக்கவேண்டும் என்று கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார்.
    புதுச்சேரி:

    கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து புதுவை தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், வளர்ச்சி ஆணையர் அன்பரசு, கலெக்டர் அருண் ஆகியோருடன் மத்திய உள்துறை அதிகாரிகள் நேற்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்கள்.

    இதுதொடர்பாக கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா தடுப்பு பணியில் கடந்த ஒரு வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றத்தில் முதுநிலை அதிகாரிகள் திருப்தி அடைந்தாலும் வேகத்தை தக்க வைத்துக்கொள்வதற்கான மேம்பாடுகளுக்கு மேலும் பொறுப்பான வழிகாட்டுதல்களை அவர்கள் வழங்கினர்.

    குறிப்பாக மருத்துவ மனைக்கு செல்லும் நோயாளிகளின் தாமதத்தை எவ்வாறு குறைப்பது? வீடுகளில் ஆய்வை அதிகரிப்பது, கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ளவர்கள் மீது கவனத்தை அதிகரித்தல், கொரோனா பாதிப்பு இல்லாதவர்களின் மீதும் கவனம் செலுத்துதல் குறித்து வழிகாட்டுதல்களை வழங்கினார்கள்.

    இதன்படி செயல்பட அதிகாரிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வரும் காலங்கள் எல்லாம் பண்டிகை காலங்களாக உள்ளது. இதை செய்யாவிட்டால் நமது செயலில் நாம் முன்னேற்றத்தை இழக்கநேரிடும்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
    2-வது திருமணம் செய்த நிலையில் அழகு நிலைய உரிமையாளர் தூக்குப்போட்டு செத்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை ஆனந்தாநகர் கல்யாணசுந்தரம் வீதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 59). இவரது மகன் உதயன் (30). அழகுநிலையம் வைத்து நடத்தி வந்தார். இவருக்கு கடந்த 2011-ம் ஆண்டு சிவசங்கரி என்ற பெண்ணுடன் திருமணம் முடிந்து 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அழகுநிலையத்தில் வேலைபார்க்க வந்த முதலியார்பேட்டையைச் சேர்ந்த 18 வயது இளம்பெண்ணுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து மனைவி, குழந்தைகளை விட்டு பிரிந்து சென்றார்.

    இதைத்தொடர்ந்து தொடர்பில் இருந்த பெண்ணை உதயன் கடந்த 4 மாதங்களுக்கு முன் 2-வது திருமணம் செய்து கொண்டு முத்தியால்பேட்டை செந்தாமரை நகரில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். இந்தநிலையில் முதல் மனைவியுடன் தொடர்பில் இருப்பதாக 2-வது மனைவி சந்தேகமடைந்து உதயனுடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.

    சம்பவத்தன்று குடிபோதையில் வீட்டுக்கு வந்த உதயனுக்கும், 2-வது மனைவிக்கும் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து தனது அறைக்குள் சென்ற உதயன் தூக்குப்போட்டு தொங்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.

    ஆனால் அவரை பரிசோதித்துப் பார்த்த டாக்டர்கள் ஏற்கனவே உதயன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக உதயனின் தந்தை நடராஜன் முத்தியால்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    பாகூரில் கட்டிட தொழிலாளி வீட்டில் இருந்து சுமார் 25-க்கும் மேற்பட்ட பாம்பு குட்டிகளை சமூக ஆர்வலரான விக்னேஷ் லாவகமாக பிடித்தார்.
    பாகூர்:

    பாகூர் பங்களா வீதியைச் சேர்ந்தவர் புவியரசன் (வயது 25) கட்டிட தொழிலாளி. இவர் தனது தாயாருடன் சிமெண்ட் சீட்டால் கூரை வேயப்பட்ட வீட்டில் வசித்து வருகிறார். இவரது வீட்டின் பின்புறத்தில் நேற்று காலை பாம்பு குட்டிகள் ஊர்ந்து சென்றதை பார்த்து அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுபற்றி பாம்பு பிடிக்கும் சமூக ஆர்வலரான விக்னேஷ் என்பவரை அங்கு வரவழைத்தனர். அங்கு அவர் பாம்பு குட்டிகள் இருந்த இடத்தை தோண்டிப் பார்த்தார். அப்போது அங்கு ஏராளமான பாம்பு குட்டிகள் இருந்ததும், அவை நல்ல பாம்பு வகையை சேர்ந்தது என்பதும் தெரியவந்தது. அங்கிருந்து சுமார் 25-க்கும் மேற்பட்ட பாம்பு குட்டிகளை விக்னேஷ் லாவகமாக பிடித்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு முட்டையிட்டு குட்டிகளை ஈன்ற நல்ல பாம்பு இரை தேடி அங்கிருந்து வெளியே சென்று விட்ட நிலையில் பாம்பு குட்டிகள் வெளியே வந்து இருப்பது தெரியவந்தது. குட்டிகளை தேடி தாய் பாம்பு எப்போது வேண்டுமானாலும் அங்கு வரலாம் என அந்த பகுதியில் உள்ளவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

    நல்ல பாம்பு குட்டிகள் பிடிபட்டது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்து 5 மணி நேரமாகியும் அவர்கள் வராததால் பாகூர் பகுதியில் உள்ள வனப்பகுதியில் பாம்பு குட்டிகளை பாதுகாப்பாக விட்டனர்.
    புதுச்சேரியில் தொற்று அதிகம் பாதித்த மேலும் 11 இடங்களில் ஊரடங்கு அமல்படுத்த கலெக்டர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா வைரஸ் தொற்று அதிக பாதிப்பு உள்ள 11 தெருக்களில் ஏற்கனவே ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்தநிலையில் மேலும் 11 இடங்கள் புதிதாக கண்டறியப்பட்டு உள்ளன. அந்த இடங்களில் ஊரடங்கு அமல்படுத்த கலெக்டர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    அதன்படி ரெட்டியார்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய பகுதியான காராமணிக்குப்பம் பாவேந்தர் வீதி, பவளநகரில் முத்துமாரியம்மன்கோவில் வீதி, உழவர்கரை நண்பர்கள் நகர், காட்டேரிக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட காட்டேரிக்குப்பம் மேட்டுத்தெரு, பாகூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருளன்சந்தை வ.உ.சி. நகர், மேட்டுப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் திலாசுப்பேட்டை தேரோடும் வீதி, அபிஷேகப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அபிஷேகப்பாக்கம் அம்பேத்கர் வீதி, மடுகரை மெயின்ரோடு, மாரியம்மன் கோவில் வீதி, கொசப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதுசாரம் ராஜீவ்காந்தி நகர் 2-வது குறுக்கு தெரு, லாஸ்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அசோக் நகர் பாரதிதாசன் வீதி ஆகிய பகுதிகளில் நேற்று முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த தெருக்கள் தடுப்புகளால் மூடப்பட்டன. இந்த ஊரடங்கு வருகிற 20-ந் தேதி வரை அமலில் இருக்கும்.

    காட்டேரிக்குப்பம் சமுதாய நல வழி மைய டாக்டர் சுப்பிரமணி தலைமையில் சுகாதாரத்துறை, காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் காட்டேரிக் குப்பம் மேட்டுத்தெருக்கு நேற்று ‘சீல்’ வைக்கப்பட்டது.

    புதுச்சேரியில் இன்று மேலும் 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,601 ஆக அதிகரித்துள்ளது.
    புதுச்சேரி:

    கொரோனா வைரஸ் இந்தியாவையும் நிலைகுலையச் செய்து வருகிறது. இங்கு தினசரி தொற்று எண்ணிக்கை தொடர்ந்து உச்சம் பெற்று வருகிறது.

    இந்நிலையில், இன்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 83 ஆயிரத்து 809 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரே நாளில் இவ்வளவு அதிகம் பேர் தொற்றுக்கு ஆளாகி இருப்பது இதுவே முதல் முறையாகும்.

    இதனால் நாடு முழுவதும் கொரோனாவிடம் சிக்கியவர்களின் எண்ணிக்கை 43 லட்சத்து 30 ஆயிரத்து 237 ஆக உயர்ந்தது. இது மத்திய, மாநில அரசுகளை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருப்பதுடன், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தி இருக்கிறது.

    கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் நிகழ்ந்த கொரோனா பலி எண்ணிக்கை 1,054 ஆகும். இதன் மூலம் மொத்த பலி  எண்ணிக்கையும் 80,776 ஆக அதிகரித்து இருக்கிறது.

    தொற்று பாதிப்புடன் 9 லட்சத்து 90 ஆயிரத்து 061 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 38 லட்சத்து 59 ஆயிரத்து 400 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

    இந்நிலையில் புதுச்சேரியில் இன்று மேலும் 380 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,601 ஆக அதிகரித்துள்ளது.

    புதுச்சேரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி இதுவரை 405 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
    புதுவையில் கொரோனா பரிசோதனையை 5 ஆயிரமாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக கவர்னர் கிரண்பேடி தெரிவித்தார்.
    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கவர்னர் கிரண்பேடி அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்தில் தற்போது தினந்தோறும் 4 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகிறது. அதுவிரைவில் 5 ஆயிரமாக உயர்த்தப்படும். சோதனைகளில் ஈடுபடும் சுகாதார பணியாளர்களுக்கு சுழற்சிமுறையில் விடுமுறை அளிக்கவேண்டும்.

    அந்த விடுமுறை காலத்தில் ஏற்கனவே தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் குழுவினர் பணியில் ஈடுபட வேண்டும். கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    கிராமப்புறங்களில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு கண்காணிப்பு பணியில் ஈடுபடுவது தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நகரப்பகுதியில் இருக்கும் குழுக்களை சேர்ந்தவர்களுக்கும் பயிற்சி அளிக்கவேண்டும்.

    கட்டுப்பாட்டு பகுதிகள் கோவிட் வார் ரூம் மூலம் கண்காணிக்கப்பட்டு அதுகுறித்த அறிக்கையை தயார் செய்யவேண்டும். வீட்டு கண்காணிப்பில் இருந்து விதிகளை மீறியவர்கள் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட வேண்டும்.

    வீடுதோறும் கண்காணிப்பு பணிக்கு செல்லும் சுகாதார ஊழியர்கள், தன்னார்வலர்கள் கொரோனா அறிகுறி உள்ளவர்களை ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு செல்ல பரிந்துரைத்து சிலிப்புகள் வழங்கவேண்டும். நடமாடும் வாகனங்களின் கொரோனா பரிசோதனை தொடர்பாக 2 அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். சோதனை கருவிகள், மருந்து மாத்திரைகளை கொள்முதல் செய்து இருப்பு வைக்கவேண்டும்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
    புதுவையில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுக்கு பதிலாக இன்று முதல் அரிசி, பணம் வழங்க அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அரசுப் பள்ளிகளில் முந்தைய கல்வியாண்டில் (2019-20) 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புவரை படிக்கும் அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளதால் புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசு சார்பில் மதிய உணவு வழங்க முடியாத நிலை இருந்து வருகிறது.

    இந்தநிலையில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டப்படி 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் சமைக்கப்பட்ட உணவுக்கு பதிலாக உணவு பாதுகாப்பு படியின் உணவு தானியங்கள் மற்றும் சமைப்பதற்குண்டான செலவினம் (மார்ச்-ஆகஸ்டு) முதல் தவணையானது இன்று முதல் அந்தந்த பள்ளிகளில் வழங்கப்படும்.

    எனவே பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கு சென்று அதை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இதன்படி இன்று காலையில் 1-ம் வகுப்பு மாணவர்களுக்கும், மாலையில் 2-ம் வகுப்பு மாணவர்களுக்கும், நாளை (புதன்கிழமை) காலை 3-ம் வகுப்பு மாணவர்களுக்கும், மாலையில் 4-ம் வகுப்பு மாணவர்களுக்கும் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 5-ம் வகுப்பு மாணவர்களுக்கும், மாலையில் 6-ம் வகுப்பு மாணவர்களுக்கும், வருகிற 18-ந்தேதி காலையில் 7-ம் வகுப்பு மாணவர்களுக்கும், மாலையில் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் வழங்கப்படும். அதாவது காலை 10 மணிமுதல் 1 மணி வரைக்கும் மாலை 2 மணி முதல் 5 மணி வரைக்கும் இதை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அரசுப் பள்ளிகளில் முந்தைய கல்வியாண்டில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புவரை படித்த மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் அந்த பள்ளிகளுக்கு அட்டவணைப்படி சென்று உணவு பாதுகாப்பு படியின் முதல் தவணையை உணவு பங்கீட்டு அட்டை, ஆதார் அட்டை போன்ற ஏதேனும் ஒரு அடையாள அட்டையை காண்பித்து பெற்றுக்கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    இந்த உணவு படியானது 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 4 கிலோ அரிசி, ரூ.290 ரொக்கம், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 4 கிலோ அரிசி, ரூ.390 ரொக்கம் வழங்கப்படும்.

    மாணவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தை வளர்க்கும்பொருட்டு பள்ளி நூலகங்களில் உள்ள புத்தகங்கள் வழங்கப்படும். மாணவர்கள் அந்த புத்தகங்களை படித்து அவற்றில் ஒன்று அல்லது இரண்டு பக்க மதிப்புரைகளை தங்கள் பெற்றோர்களின் உதவியுடன் எழுதி பள்ளிகள் திறக்கப்பட்டபின் சமர்ப்பிக்கலாம். ஒவ்வொரு பள்ளியில் சமர்ப்பிக்கப்படும் சிறந்த 3 மதிப்புரைகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    5-வது நாளாக பாசிக்-பாப்ஸ்கோ தொழிலாளர்கள் போராட்டம் தொடர்ந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் சங்கு ஊதி, மணியடித்து நூதனமாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும். பாசிக்- பாப்ஸ்கோ நிறுவனங்களை தொடர்ந்து இயக்க வேண்டும் என வலியுறுத்தி பாசிக், பாப்ஸ்கோ ஏ.ஐ.டி.யூ.சி. தொழிலாளர்கள் சங்கத்தினர் கடந்த 10-ந் தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

    இன்று 5-வது நாளாக போராட்டம் தொடர்ந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் சங்கு ஊதி, மணியடித்து நூதனமாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம், செயல் தலைவர் அபிஷேகம், பாசிக், பாப்ஸ்கோ சங்க பொறுப்பாளர்கள் தரணிராஜன், முருகவேல், அப்துல்லாகான், ஜெய்சங்கர், அமுதா, தமிழ்ஒளி, அன்பழகன், இரிசப்பன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    காலாப்பட்டில் மருமகளுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக வாட்ஸ் அப்பில் பதிவு செய்து விட்டு பெண் மாயமானார்.

    சேதராப்பட்டு:

    புதுவை பெரியகாலாப் பட்டு பாரதியார்நகர் 2-வது குறுக்குதெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி சசிகலா (வயது41). இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செல்வராஜ் இறந்து விட்டார். இந்த நிலையில் கடந்த 2 மாதத்துக்கு முன்பு சசிகலாவின் இளையமகன் காதலித்து ஒரு பெண்ணை திருமணம் செய்தார். அந்த பெண்ணுக்கும் சசிகலாவுக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு இருந்து வந்தது.

    சம்பவத்தன்றும் இதுபோல இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து சசிகலா அதேபகுதியில் உள்ள தனது மகள் வீட்டு சென்று அங்கு தனது மகளிடம் மருமகள் குறித்து குறி வருத்தப்பட்டார்.

    பின்னர் தனது மகளிடம் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். ஆனால், சசிகலா வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் சசிகலா எங்கும் இல்லை.

    அதேவேளையில் தனது மகள் செல்போனில் வாழவிரும்பவில்லை என்று சசிகலா வாட்ஸ்அப்பில் பதிவு செய்து இருந்தார்.

    இதையடுத்து சசிகலாவின் மகன் குணசீலன் தனது தாய் மாயமானது குறித்து காலாப்பட்டு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×