என் மலர்
செய்திகள்

காங்கிரஸ் அரசு நிர்வாகத்தில் தோல்வியை தழுவியுள்ளது- தி.மு.க. குற்றச்சாட்டு
புதுச்சேரி:
புதுவை தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2016-ல் தேர்தலை சந்திக்கும்போது காங்கிரஸ் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்கும் என்று வாக்குறுதி அளித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு நடந்து கொண்டிருப்பதோ வேறாக உள்ளது.
அரசுத்துறைகளில் காலியாக உள்ள சுமார் 10 ஆயிரம் இடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கடந்த 2018-ல் காவல்துறையில் 412 இடங்களை நிரப்ப உள்ளதாக அறிவித்ததும், அறிவிப்போடு நின்றுவிட்டது.
இது ஒரு புறம் இருக்க அரசு நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருகிறது. அதில் பணிபுரியும் சுமார் 10 ஆயிரம் ஊழியர்களுக்கு பல ஆண்டுகளாக சம்பளமும் வழங்கப்படவில்லை.
பாசிக், பாப்ஸ்கோ ஊழியர்களின் காத்திருப்பு போராட்டம் அரசுக்கு இழுக்கு என்பதோடு, கடந்த 4½ ஆண்டு கால ஆட்சி நிர்வாகத்தின் தோல்வியையே காட்டுகிறது.
எனவே பாசிக், பாப்ஸ்கோ நிறுவனத்தை திறந்து, நிலுவை ஊதியத்தை அரசு விரைந்து வழங்கி போராட்டத்தை முடிவிற்கு கொண்டுவர வேண்டும். இல்லையென்றால் இந்த ஆட்சி காலத்தில் மூடப்பட்ட கூட்டுறவு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் தொழிலாளர்களும் பாசிக், பாப்ஸ்கோ ஊழியர்களோடு இணைந்து போராடுவார்கள். இது அடுத்த ஆண்டு தேர்தலை சந்திக்க காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சவாலாக இருக்கும்.
கவர்னருக்கு நோட்டீஸ் அனுப்புவதோ, கவர்னரை எதிர்த்து போராட்டம் நடத்துவதோ பசியால் வாடிக்கிடக்கும் ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்காது. இதனை உணர்ந்து ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்கவும், நிறுவனங்களை திறந்து இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதுபோல் அரசுத்துறை காலி இடங்களில் 50 சதவீதத்தையாவது 2 மாதங்களுக்குள் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தேர்தல் அறிவிக்கப்பட்டு, நிரப்ப முடியாத சூழல் உருவாகும். இதுவும் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தேர்தல் பிரசாரம் செய்யவே வழிவகுக்கும்.
இவ்வாறு சிவா எம்.எல்.ஏ. அறிக்கையில் கூறியுள்ளார்.