என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வாக்காளர் பட்டியலில் இருந்து புலம் பெயர்ந்தவர்களின் பெயர்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    காரைக்கால்:

    காரைக்கால் மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான அர்ஜூன் சர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளின், இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் (ஜனவரி) வெளியிடப்பட்டது.

    இந்த பட்டியலில் புலம்பெயர்ந்த, இறந்த வாக்காளர்கள் பெயர் இடம்பெற்றிருப்பதாக புகார்கள் வந்தது. இதுதொடர்பாக விரிவான களஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

    அதன்பேரில் சில வாக்காளர்கள், வேறு தொகுதிகளுக்கும் மற்றும் பிற மாநிலத்திற்கும் புலம் பெயர்ந்து இருப்பதாகவும், சிலர் இறந்து விட்டதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு புலம்பெயர்ந்த மற்றும் இறந்த வாக்காளர்களின் பெயர்கள் அடங்கிய புதிய பட்டியல், சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் துறையின் இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

    இதற்கு ஆட்சேபனை இருந்தால் 7 நாட்களுக்குள் வாக்காளர் பதிவு அதிகாரியின் முன் தகுந்த ஆதாரத்துடன் ஆஜராகி தெரிவிக்க வேண்டும். ஆட்சேபனை இல்லாவிட்டால் அவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    கொரோனா தடுப்பூசி போட பொதுமக்கள் தயங்க வேண்டாம் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
    காரைக்கால்:

    புதுச்சேரி கவர்னராக பொறுப்பேற்றபின் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பூங்கொத்து கொடுத்து அவரை கலெக்டர் அர்ஜூன்சர்மா வரவேற்றார். சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிகரிகாபட் தலைமையில் போலீசார் அளித்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் கவர்னர் ஆலோசனை நடத்தினார். அங்கிருந்து காரைக்கால் மாவட்ட அரசு பொது மருத்துவமனைக்கு சென்ற கவர்னர், கொரோனா தடுப்பூசி போடும் பணி குறித்து கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து அங்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காரைக்கால் மாவட்ட அரசு பொது மருத்துவமனையில், முதலில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது மிகக் குறைவாக இருந்தது. மாவட்ட கலெக்டர், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு, டாக்டர்கள் தானாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

    இதன் விளைவாக பொதுமக்கள் பலர் தடுப்பூசி போடுவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். இதுவரை 25 சதவீதம் பேருக்கு கொரோனோ தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள யாரும் தயங்க வேண்டாம். இந்தியாவின் கொரோனா தடுப்பூசிக்காக 24 நாடுகள் காத்திருக்கின்றன. 34 நாட்களில், சுமார் 1 கோடி பேர் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர்.

    இன்னும் சில மாதங்களில் கொரோனா தடுப்பூசி இல்லாமல் போகலாம். எனவே பொதுமக்கள் தங்களுக்கான நேரம் வரும்போது, தயக்கம் இன்றி கொரோனா தடுப் பூசியை போட்டுக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து நியமன எம்.எல்.ஏ.க்களை, பா.ஜ.க. என கவர்னர் கூறியுள்ளது வரலாற்று பிழை என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியது குறித்து கேட்டதற்கு, நான் எப்போதும் வரலாற்று சாதனை தான் படைப்பேன். பிழை செய்யமாட்டேன் என்று தமிழிசை சவுந்தர ராஜன் கூறினார்.

    இதையடுத்து காரைக்கால்மேட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், திருமலைராயன்பட்டினத்தில் உள்ள அங்கன்வாடி மையம் ஆகியவற்றை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆய்வு செய்தார். அங்கிருந்து, காரைக்கால் திருநள்ளாறில் உள்ள சனீஸ்வரர் கோவிலுக்கு சென்று எள் விளக்கு ஏற்றி சாமி தரிசனம் செய்தார்.
    குழந்தைகளுடன் விளையாடியபோது கடை ஊழியர் மயங்கி விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    புதுவை சண்முகாபுரம் அண்ணா வீதி விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் தனபால் (வயது 40). அரிசி மாவு கடையில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். இவரது மனைவி பிரபாவதி (30). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் தனது குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென தனபால் மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே தனபால் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    விடுதி முன் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பகுதியில் தனியார் தங்கும் விடுதி உள்ளது. இங்கு சம்பவத்தன்று நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் திருடு போனது. இது குறித்து விடுதி உரிமையாளர் ஆரோவில் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோட்டார் சைக்கிள் திருடர்களை வலைவீசி தேடி வந்தனர்.

    விடுதி பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை கள்ளச்சாவி போட்டு திருடிச்சென்றது தெரியவந்தது. அவர்கள் குறித்து விசாரித்தபோது, சென்னை அயோத்திக்குப்பத்தை சேர்ந்த அருண் (வயது 29), மணிகண்டன் (25) என்பதும், அவர்கள் புதுவைக்கு சுற்றுலா வந்து இந்த விடுதியில் தங்கியிருந்ததும், விடுதியை காலி செய்துவிட்டு செல்லும்போது மோட்டார் சைக்கிளை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
    மொபட்டில் இருந்து தவறி விழுந்த முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் ஓடைவெளி பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் கேசவன் (வயது 68). இவர், தனது மகன் அன்பழகனுடன் மொபட்டில் சென்றார். புதுச்சேரி- கடலூர் சாலையில் முருங்கப்பாக்கம் அருகே சென்றபோது நிலைதடுமாறி மொபட்டில் இருந்து கேசவன் நடுரோட்டில் விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை அரியாங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கேசவன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து புதுவை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நியமன எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா என குறிப்பிட்டது குறித்து கவர்னரிடம் விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளதாக முதல்- அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. உள்ளிட்ட 17 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

    கூட்டத்துக்கு பின் முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:-

    கவர்னர் தமிழிசை மெஜாரிட்டியை நிரூபிக்க அளித்த கடிதத்தில் நியமன எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா என குறிப்பிட்டுள்ளார். சட்டப்பேரவை பதிவேட்டில் நியமன எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா என குறிப்பிடவில்லை.

    நியமன எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா என சபாநாயகர் அங்கீகரிக்கவில்லை. எனக்கு அளித்த கடிதத்தில் மிகப்பெரிய தவறு உள்ளது. இதுபற்றி எனக்கு விளக்கம் தர கவர்னருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன்.

    கட்சி மாறும் தடை சட்டத்திலுள்ள பிரிவொன்றில், நியமன எம்.எல்.ஏ.க்களாகி 6 மாதத்துக்குள் கட்சியின் பெயரை சேர்க்க உரிமை உண்டு. சேராவிட்டால் அவர் கட்சி சாராத நியமன எம்.எல்.ஏ.தான்.

    தமிழிசை மிகப்பெரிய வரலாற்று பிழை செய்துள்ளார். அதனால் விளக்கம் கோரி கடிதம் அனுப்பி உள்ளேன். இது பற்றி சபாநாயகரிடமும் பேசுவேன். நாளை (ஞாயிற்றுக்கிழமை) காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

    இதில், சட்டசபையில் எவ்வாறு செயல்படுவது என முடிவெடுப்போம்.

    சமூக ஊடங்களில் நான் ராகுலிடம் பொய் கூறியதாக தவறான தகவல்களை பரப்புகிறார்கள். இதை காங்கிரசில் இருந்து வெளியேறியவர்களும், பா.ஜனதாவினரும்தான் செய்கிறார்கள்.

    உண்மையில் நிவர் புயலின் போது சோலை நகரில் படகுகளை கிரேன் மூலம் இடம் மாற்றி வைத்தோம். அதற்கான ஆதாரம் உள்ளது. என்னிடம் மோத வேண்டுமானால் நேரடியாக மோத வேண்டும். அதற்கு நான் தயார். முதுகில் குத்தக் கூடாது.

    நான் புயல் சமயத்தில் கூட்டம் நடந்த இடத்துக்கு வந்ததைத்தான் ராகுலிடம் கூறினேன். சமூக வலைத் தளத்தில் என் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்க நினைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ராகுல்காந்தி வரவால் மக்களிடையே எழுச்சி ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் கந்தசாமி கூறினார்.
    பாகூர்:

    ஏம்பலம் தொகுதி சேலியமேடு கிராமத்தில் மேம்படுத்தப்பட்ட புதிய கட்டிடத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சமூக நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை மூலம் பல்நோக்கு கைவினை பயிற்சி மையம் திறப்பு விழா நடைபெற்றது.

    விழாவுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை செயலர் உதயகுமார் தலைமை தாங்கினார். இயக்குனர் யஷ்வந்தையா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கந்தசாமி கலந்துகொண்டு பயிற்சி மையத்தை திறந்து வைத்தார்.

    அப்போது பேசிய அமைச்சர் கந்தசாமி, ‘புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தமிழில் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டது தமிழுக்கு கிடைத்த பெருமை. ராகுல்காந்தி வரவால் கட்சி நிர்வாகிகள், மக்களிடையே பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது. வரும் தேர்தலில் வெற்றி நிச்சயம்’ என்றார்.

    நிகழ்ச்சியில் சமூக நலத்துறை இயக்குனர் பத்மாவதி, சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் சுகந்தி, மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குனர் மலர், கைவினைக் கலைஞர் முனுசாமி, பயிற்சியாளர் அமலாதேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    புதுச்சேரி சட்டசபை சிறப்பு கூட்டம் வருகிற 22-ந்தேதி காலை 10 மணிக்கு கூடும் என பேரவை செயலாளர் முனுசாமி தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி மாநிலத்தில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. திமுக மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.-க்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.

    காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் நான்கு பேர் ராஜினாமா செய்துள்ளனர். ஒருவர் எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால் நாராயணசாமி தலைமையிலான அரசு மெஜாரிட்டியை இழந்துவிட்டது என பொறுப்பு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம் எதிர்க்கட்சிகள் முறையிட்டனர்.

    இதனால் வருகிற 22-ந்தேதி மாலை 5 மணிக்குள் நாராயணசாமி அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் வருகிற 22-ந்தேதி காலை 10 மணிக்கு புதுச்சேரி சட்டசபை சிறப்புக் கூட்டம் கூடும் என பேரவை செயலாளர் முனுசாமி தெரிவித்துள்ளார். அப்போது நாராயணசாமி மெஜாரிட்டியை நிரூபிப்பார்.
    காரைக்கால் அருகே நடுக்கடலில் தத்தளித்த ராமேசுவரத்தை சேர்ந்த 6 மீனவர்களை இந்திய கடல்படையினர் மீட்டனர்.
    காரைக்கால்:

    தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் ஏராளமானோர் விசை படகுகளில் அந்தமான் சென்று மீன்பிடிப்பது வழக்கம். அதன்படி ராமேசுவரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் சின்னசாமி, செல்வநாதன், கோகுல்ராஜ், முனியசாமி, ஜேம்ஸ், சரவணன் ஆகியோர் அந்தமான் பகுதிக்கு சென்ற ராமேசுவரம் மீனவர்களின் ஒரு படகை பழுதுபார்க்க சென்றனர்.

    அந்தமானில் படகினை பழுதுபார்த்துவிட்டு 6 மீனவர்களும் அங்கிருந்து நேற்று முன்தினம் இரவு ராமேசுவரம் நோக்கி படகில் புறப்பட்டனர். இந்த படகு காரைக்கால் அருகே 25 நாட்டிக்கல் தூரத்தில் வந்தபோது திடீரென பழுது ஏற்பட்டது.

    இதனால் ராமேசுவரம் மீனவர்கள் 6 பேரும் நடுக்கடலில் இரவு முழுவதும் தத்தளித்தனர். அப்போது அந்த வழியாக ஒரு சிறிய கப்பல் வந்தது. இதனை பார்த்ததும் கடலில் தத்தளித்த ராமேசுவரம் மீனவர்கள் இந்திய தேசியகொடியை அசைத்து சைகை காட்டினர்.

    உடனடியாக அந்த கப்பல் படகைநோக்கி சென்றது. அப்போது தான் அந்த மீனவர்கள் இந்திய கடலோர காவல்படையினர் என அறிந்தனர். நடுக்கடலில் தத்தளித்த 6 மீனவர்கள் மற்றும் படகினை இந்திய கடலோர காவல்படையினர் மீட்டு காரைக்கால் துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அவர்கள் ராமேசுவரத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
    மேலும் 3 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் இணைகின்றனர் என்று சாமிநாதன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமர் மோடி வரும் 25-ந் தேதி புதுவைக்கு வருகிறார். அன்றைய தினம் அரசு விழாவிலும், பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார்.

    காலை 11 மணிக்கு ரோடியர் மில் திடலில் பொதுக்கூட்டம் நடக்கிறது. பொதுக்கூட்டத்தில் கட்சி வித்தியாசமின்றி புதுவையை சேர்ந்த அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

    நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்குரிமை உண்டு என சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது. வழக்கமாக கட்சி தொண்டர்கள், எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், கட்சித்தலைமை என அனைவரையும் நாராயணசாமி ஏமாற்றியே பழக்கப்பட்டவர்.

    சமீபத்தில்கூட கட்சித் தலைவர் வந்திருந்தபோது, மக்கள் முன்னிலையிலேயே ஏமாற்றினார். இப்படிப்பட்டவர் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்களிக்க தகுதி இல்லை என்கிறார்.

    முதல்-அமைச்சர் நாராயணசாமி சுப்ரீம் கோர்ட்டுக்கு எதிராக பேசுகிறாரா? சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பை எதிர்க்கிறாரா? என தெளிவாக கூற வேண்டும். 15 நாட்களுக்கு முன்பு வந்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர்கூட, நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்களிக்கும் உரிமை உண்டு என தெரிவித்துள்ளார்.

    புதுவை முதல்-அமைச்சர் அரசியல்கட்சி தலைவர்களையும், மக்களையும் முட்டாளாக்க நினைக்கிறார். சட்டமன்றத்தில் நியமன எம்.எல்.ஏ.க்கள் கண்டிப்பாக, நிச்சயமாக வாக்களிப்பார்கள்.

    ஓரிருநாளில் மேலும் 3 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் இணைய உள்ளனர். யாரையும் கட்டாயப் படுத்தியோ, மிரட்டியோ சேர்க்க வில்லை. காங்கிரசுக்கு எதிர்காலம் இல்லை என்பதால் அந்த கட்சியை விட்டு விலகி வருகின்றனர். யாரையாவது மிரட்டி, கட்டாயப்படுத்தியிருந்தால் புகார் தரலாம். நியமன எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா என குறிப்பிட்டது தவறு என காங்கிரசார் கூறி வருகின்றனர்.

    கடந்த 50 ஆண்டாக புதுவை சட்டசபையில் நியமன எம்.எல்.ஏ.க்களாக இருந்தது யார்? நாஜிம், கேசவன், அண்ணாமலை ரெட்டியார், நாரா கலைநாதன், பாத்திமாபீவி என பலரும் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள்தான் எம்.எல்.ஏ.க்களாக இருந்துள்ளனர். அவர்கள் அரசியல் கட்சியிலும் செயல்பட்டனர். சட்டசபையில் நியமன எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவினர் என்றுதான் குறிப்பிட்டுள்ளனர்.

    காங்கிரஸ் ஆட்சியை கவிழ்ப்பதாக நாராயணசாமி குற்றம் சாட்டுகிறார். பா.ஜனதா எந்த ஆட்சியையும் கவிழ்த்து இல்லை. நாடு முழுவதும் 356-வது சட்டப்பிரிவை பயன்படுத்தி பல மாநில ஆட்சிகளை காங்கிரஸ்தான் கவிழ்த்துள்ளது.

    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கட்சியை விட்டு வெளியே வருவதால்தான் ஆட்சி கவிழ்கிறது. தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை தக்க வைக்க முடியாத முதல்- அமைச்சர் மற்றவர் மீது குற்றம்சாட்டி வருகிறார். நாராயணசாமியை பொறுத்தவரை மற்றவர்கள் மீது குற்றம்சாட்டுவதையே வாடிக்கையாக கொண்டவர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    அவர்களிடம் ஆளும் காங்கிரஸ் அரசு பெரும் பான்மையை இழந்தால் பா.ஜனதா ஆட்சி அமைக்குமா? என கேட்ட போது, பா.ஜனதா கட்சி தலைமையும், கூட்டணி கட்சி தலைமையும் இணைந்து முடிவு செய்யும் என பதில் அளித்தனர்.

    புதுவையை சேர்ந்த 3 நியமன எம்.எல்.ஏ.க்களை கட்சி சார்பில் குறிப்பிட்டால் அவர்களை தகுதி நீக்க செய்ய வாய்ப்பு உள்ளது என்று அரசு கொறடா அனந்தராமன் தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியில் இருந்து 4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால் அக்கட்சி பெரும்பான்மையை இழந்தது.

    ஆளும் கட்சியும், எதிர் கட்சிகளும் சமபலத்தில் உள்ளது. இந்த நிலையில் வருகிற 22- ந்தேதி புதுவை சட்டசபையை கூட்டி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.

    சட்டசபையில் பாரதீய ஜனதா சார்பில் 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அவர்களுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்க உரிமை இல்லை என முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்து உள்ளார்.

    இந்த நிலையில் அரசு கொறடா அனந்தராமன் கூறியதாவது:-

    புதுவையை சேர்ந்த 3 நியமன எம்.எல்.ஏ.க்களை கட்சி சார்பில் குறிப்பிட்டால் அவர்களை தகுதி நீக்க செய்ய வாய்ப்பு உள்ளது.

    இதற்கு சட்டத்தில் வழி வகை உள்ளது. 3 நிமயன எம்.எல்.ஏ.க்களையும் பாரதீய ஜனதா என கூற எந்த முகாந்திரமும் இல்லை. 3 பேரும் சட்டரீதியாக கட்சி சார்பில் அங்கீகரிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களும் இல்லை.

    3 நியமன எம்.எல்.ஏ.க் களையும் கட்சி ரீதியாக எடுத்து கொள்வது சட்டத்திற்கு புறம்பானது. மத்திய அரசால் நியமிக்கப்படும் நியமன எம்.எல்.ஏக்களை பாரதீய ஜனதாவினர் என சொல்வது அரசியல் அமைப்புக்கு எதிரானது.

    வாக்களிக்க அதிகாரம் உள்ளது என நீதிமன்றம் கூறினாலும் பாரதீய ஜனதாவை சேர்ந்தவர்கள் என கவர்னர் குறிப்பிடுவது தவறு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புதுச்சேரி நியமன எம்எல்ஏக்களுக்கு ஓட்டுரிமை கிடையாது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த நமச்சிவாயம், மல்லாடிகிருஷ்ணாராவ், எம்.எல்.ஏ.க்கள் தீப்பாய்ந்தான், ஜான்குமார் ஆகியோர் அடுத்தடுத்து தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

    இதையடுத்து புதுவை சட்டசபையில் ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் தலா 14 எம்.எல்.ஏ.க்களுடன் சமபலத்தில் உள்ளது.

    தற்போது சபையில் மொத்தம் உள்ள 28 எம்.எல்.ஏ.க்களில் 15 எம்.எல்.ஏ. பலம் இருந்தால் மட்டுமே மெஜாரிட்டி கிடைக்கும். எதிர்க்கட்சியில் உள்ள 14 எம்.எல்.ஏ.க்களில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் மத்திய அரசால் நேரடியாக நியமிக்கப்பட்டவர்கள்.

    நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்குரிமை உண்டு என்ற அடிப்படையிலேயே மெஜாரிட்டியை இழந்த காங்கிரஸ் அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்கள் 14 பேரும் கையெழுத்திட்டு கவர்னர் மாளிகையில் மனு அளித்தனர்.

    இந்த நிலையில் புதியதாக பதவியேற்ற கவர்னர் தமிழிசை எதிர்கட்சிகளின் மனு மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் முதல்-அமைச்சர் நாராயணசாமியை அழைத்து பேசினார்.

    இதனையடுத்து கவர்னர் தமிழிசை புதுவை காங்கிரஸ் அரசு சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட்டுள்ளார். வருகிற 22-ந் தேதி புதுவை சட்டசபையை கூட்டி ஒரேயொரு நிகழ்ச்சி நிரலாக அரசிற்கு பெரும்பான்மை உள்ளதா என்ற வாக்களிப்பை கைகளை உயர்த்தி காண்பிப்பது மூலம் நடத்த வேண்டும். இந்த நிகழ்வு முழுவதும் விடியோவில் பதிவு செய்ய வேண்டும் என கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும், பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பானது 22-ந்தேதி மாலை 5 மணிக்குள் நிறைவடைய வேண்டும். எக்காரணம் கொண்டும் இதனை தள்ளி வைக்கவோ, தாமதப்படுத்தவோ, நிறுத்தி வைக்கவோ கூடாது. சட்டப்படியும் அமைதியான முறையிலும் வாக்களிப்பு நடப்பதை சட்டபேரவை செயலர் உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமையில் ஆளும் காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களின் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில், அமைச்சர்கள் ஷாஜகான், கமலக்கண்ணன், கந்தசாமி, துணை சபாநாயகர் எம்.என்.ஆர். பாலன், எம்.எல்.ஏ.க்கள் விஜயவேணி, அனந்தராமன், ஜெயமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமிநாராயணன் அவசர கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

    கூட்டத்துக்கு பிறகு முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:-

    பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி கவிழ்ப்பு திட்டத்தை முறியடிப்போம். எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா முயற்சிக்கிறது. ஆளும் கட்சியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 14 பேர் உள்ளோம்.

    நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்குரிமை இல்லை என்பது எனது கருத்து. நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பாக பல தீர்ப்புகள் உள்ளது. இதனால் சட்ட வல்லுனர்களுடன் இது தொடர்பாக கலந்து ஆலோசிப்போம்.

    நியமன எம்.எல். ஏ.க் களுக்கு ஒட்டுரிமை உள்ளது என்றுதான் தலைமை தேர்தல் கமி‌ஷனர் கூறியுள்ளார். ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓட்டுரிமை உண்டு என கூறவில்லை.

    இதுதொடர்பாக சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். புதுவை சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிப்போம். கோர்ட்டுக்கு செல்வது குறித்து சட்ட ஆலோசனைக்கு பிறகு முடிவு செய்வோம். காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் ஆலோசனை மேற் கொள்ளப்படும்.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

    புதுவை சட்டசபையில் கடந்த காலங்களில் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்குரிமை அளிக்கப்படவில்லை. ஆனால், 2017-ல் மத்திய பா.ஜனதா அரசு புதுவை சட்டசபைக்கு நேரடியாக எம்.எல்.ஏ.க்களை நியமித்தது.

    இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க் களுக்கு உரிய அனைத்து உரிமைகளும், வாக்குரிமையும் நியமன எம்.எல்.ஏ.க் களுக்கும் உண்டு என தீர்ப் பளித்துள்ளது.

    சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகளை ஆராய வந்த இந்திய தலைமை தேர்தல் கமி‌ஷனரிடம் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்குரிமை இருப்பதால் மத்தியில் ஆளும் கட்சிக்கும், அதன் ஆதரவு பெற்ற கட்சிக்கும் புதுவையில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கூடுதலாக உள்ளதே என கேள்வி எழுப்பப்பட்டது.

    இதற்கு பதில் அளித்த தலைமை தேர்தல் கமி‌ஷனர் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி புதுவை நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்குரிமை உள்ளது. தேர்தல் கமி‌ஷன் அதில் தலையிட முடியாது என்றும் இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யலாம் என கூறினார்.

    இந்த நிலையில் புதுவை காங்கிரஸ் ஆட்சியாளர்கள் நியமன எம்.எல்.ஏ.வுக்கு வாக்குரிமை இல்லை என கூறியிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்குரிமை இல்லாத பட்சத்தில் புதுவை சட்ட சபையில் ஆளும் கட்சிக்கு 14 எம்.எல்.ஏ.க்கள் பலமும், எதிர்க்கட்சிக்கு 11 எம்.எல்.ஏ.க்கள் பலம் மட்டுமே இருக்கும்.

    இதனால், சபையில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட 25 எம்.எல்.ஏ.க்களில் ஆளும் கட்சிக்கு 13 எம்.எல்.ஏ.க்கள் பலம் இருந்தாலே மெஜாரிட்டி கிடைக்கும். ஆளும் கட்சிக்கு 14 எம்.எல்.ஏ. பலம் இருப்பதால் காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை நிரூபிக்கும்.

    சட்டமன்றத்தை பொறுத்த வரையில் சபாநாயகர் எடுக்கும் முடிவே இறுதியானது என்பதால் புதுவை காங்கிரஸ் அரசு தப்புமா? என்பது வருகிற 22-ந் தேதி தெரியவரும்.

    ×