என் மலர்
உண்மை எது
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தொடர் தோல்வி அடைந்ததை தொடர்ந்து இளைஞர் ஒருவரின் புகைப்படம் வைரலாகி வருகிறது.
பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுடனான தொடர் தோல்வி காரணமாக டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேறும் நிலையில் இந்திய அணி உள்ளது. இதன் காரணமாக இந்திய கிரிக்கெட் அணி ரசிகர்கள் கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மீது ஏமாற்றத்தில் உள்ளனர்.
இந்த நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தொலைக்காட்சி பெட்டியை தூக்கி வீசியதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 17 வயதான இளைஞர் தனது வீட்டில் இருந்த 4 டிவிக்களை தூக்கி வீசியதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், புகைப்படம் 2017 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. இந்த புகைப்படம் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பாகிஸ்தானிடம் தோல்வியுற்றதை தொடர்ந்து இளைஞர் தொலைக்காட்சியை தூக்கி வீசிய போது எடுக்கப்பட்டது ஆகும்.
அந்த வகையில் வைரல் புகைப்படத்திற்கும் சமீபத்திய டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கும் எந்த தொடர்பும் இல்லை என உறுதியாகிவிட்டது.
கன்னட சூப்பர்ஸ்டார் புனித் ராஜ்குமார் உயிரிழக்க இதுதான் காரணம் என மருத்துவர் கூறியதாக வைரலாகும் தகவல் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
கன்னட சூப்பர்ஸ்டார் புனித் ராஜ்குமார் அக்டோபர் 29 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது மரணம் திரையுலகினர் மட்டுமின்றி அனைவர் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. புனித் ராஜ்குமார் உயிரிழக்க இரண்டு மணி நேர கடுமையான உடற்பயிற்சி தான் காரணம் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், பிரபல இதயவியல் நிபுணர் மருத்துவர் தேவி ஷெட்டி கூறியதாக பகீர் தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் பதிவுகளில், கட்டுக்கோப்பாக இருக்க அதிகளவு மெனக்கெடுதல் தான் புனித் ராஜ்குமார் உயிரிழக்க காரணம் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. வைரல் தகவல் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது.

இதுகுறித்த இணைய தேடல்களில், வைரல் தகவலை மருத்துவர் தேவி ஷெட்டி வெளியிடவில்லை என தெரியவந்துள்ளது. வைரல் பதிவுகளை தொடர்ந்து நாரயணா ஹெல்த் குழுமம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் மருத்துவர் தேவி ஷெட்டி நடிகர் புனித் ராஜ்குமார் மறைவு குறித்து இதுபோன்ற தகவலை பதிவிடவில்லை என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
முன்னதாக மருத்துவர் தேவி ஷெட்டி தொலைகாட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் ராஜ்குமார் மறைவு குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்க மாட்டேன் என தெரிவித்துவிட்டார். அந்த வகையில் மருத்துவர் தேவி ஷெட்டி வெளியிட்டதாக வைரலாகும் தகவலை அவர் வெளியிடவில்லை என்பது உறுதியாகிவிட்டது.
இத்தாலி சென்று இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு டாக்சியில் பயணிக்க வைக்கப்பட்டதாக கூறி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
பிரதமர் நரேந்திர மோடி ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள இத்தாலியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். ஐந்து நாள் பயணமாக இத்தாலி சென்று இருக்கும் பிரதமர் மோடி அக்டோபர் 30 ஆம் தேதி போப் பிரான்சிஸ்-ஐ சந்தித்து பேசினார்.
இதனிடையே பிரதமர் நரேந்திர மோடியை டாக்சியில் பயணிக்க வைத்ததாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தில் பிரதமர் மோடி டாக்சி லோகோ இடம்பெற்று இருக்கும் கார்களின் அருகில் நிற்கிறார்.

வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், அது எடிட் செய்யப்பட்ட ஒன்று என தெரியவந்துள்ளது. இதே புகைப்படங்கள் முன்னணி செய்தி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் வெளியாகி இருக்கிறது. அதன்படி வைரல் புகைப்படங்கள் எடிட் செய்யப்பட்டவை என உறுதியாகிவிட்டது.
உலகின் பல்வேறு பகுதிகளில் முழு நீல நிற நிலவு தோன்றுவது பற்றி இணையத்தில் வைரலாகும் தகவல் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
அக்டோபர் 31 ஆம் தேதி முழு நீல நிலவு தோன்ற இருப்பதாக கூறும் தகவல் அடங்கிய நியூஸ் கார்டுகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதுபோன்ற நிகழ்வு 76 ஆண்டுகளில் முதல்முறையாக நடைபெற இருப்பதாகவும் வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இதுகுறித்த இணைய தேடல்களில் அக்டோபர் 31, 2021 அன்று முழு நீல நிலவு தோன்றாது என தெரியவந்துள்ளது. உண்மையில் முழு நீல நிற நிலவு ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும்.

கடந்த ஆண்டு உலகின் சில பகுதிகளில் முழு நீல நிற நிலவு தோன்றியது. இந்த ஆண்டிற்கான முழு நீல நிற நிலவு அக்டோபர் 20, 2021 ஆம் தேதி தோன்றியது. பின் நவம்பர் 19, 2021 ஆம் ஆண்டு முழு நீல நில நிலவு தோன்றும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் அக்டோபர் 31 ஆம் தேதி முழு நீல நில நிற நிலவு தோன்றாது என்பது உறுதியாகிறது.
கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுடனான வெற்றியை பாகிஸ்தான் இப்படி கொண்டாடியது என கூறி வைரலாகும் பகீர் தகவல் குறித்து தொடர்ந்து பார்ப்போம்.
இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி எப்போதும் இரு நாட்டு ரசிகர்களின் உணர்ச்சிகளால் நிறைந்து இருக்கும். அக்டோபர் 24 ஆம் தேதி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. துபாயில் நடைபெற்ற இந்த போட்டியில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது.
இதையொட்டி பாகிஸ்தான் முழுக்க கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இந்த நிலையில், குண்டுவெடிப்பு போன்ற காட்சி அடங்கிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக அந்நாட்டின் சில பகுதிகளில் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், அது 2013 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. இந்த புகைப்படம் பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதலின் போது எடுக்கப்பட்டது ஆகும். இதுபற்றிய செய்தி தொகுப்புகளும் இணையத்தில் கிடைக்கின்றன.
உண்மையில் சமீபத்திய கிரிக்கெட் வெற்றியை கொண்டாட பாகிஸ்தானில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் சிலர் காயமுற்றனர். எனினும், குண்டு வெடிப்போ அல்லது உயிரிழப்பு குறித்தோ இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. அந்த வகையில் பாகிஸ்தானியர்கள் கிரிக்கெட் போட்டி வெற்றியை குண்டுவெடிப்பு நடத்தி கொண்டாடவில்லை என்பது உறுதியாகிவிட்டது.
மத்திய ரெயில்வே துறை அமைச்சகம் வெளியிட்டு இருப்பதாக கூறி வேலை வாய்ப்பு சுற்றறிக்கை வைரலாகி வருகிறது.
மத்திய ரெயில்வே துறை அமைச்சகம் சார்பில் வேலைவாய்ப்பு பற்றிய விளம்பரம் வெளியிடப்பட்டு இருப்பதாக கூறும் பதிவு வைரலாகி வருகிறது. மத்திய ரெயில்வே துறை சார்பில் வெளியிடப்பட்டதை போன்றே காட்சியளிக்கும் சுற்றறிக்கை வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
அதில், 'கிளார்க் பணியில் சேர நீங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளீர்கள். இந்த பணியில் சேர ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கையொப்பமிட்டு, மருத்துவ சான்று, கல்வி சான்று உள்ளிட்டவைகளை அனுப்பவும்,' என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்த இணைய தேடல்களில், வைரலாகும் வேலைவாய்ப்பு தகவல் போலியானது என தெரியவந்துள்ளது. உண்மையில் ரெயில்வே துறை சார்பில் இதுபோன்ற எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை. இதே தகவல் மத்திய அரசின் பிரஸ் இன்பர்மேஷன் பியூரோ அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் வெளியிடப்பட்டு இருக்கிறது.
மத்திய ரெயில்வேயில் பணியில் சேர ரெயில்வே துறை நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெறுவதோடு, நேர்முக தேர்வு போன்ற பலகட்ட வழிமுறைகளில் தேர்ச்சி பெற வேண்டும். இத்தகைய வழிமுறைகள் இன்றி ரெயில்வேயில் பணியில் சேர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல நடிகர் ஷாருக் கானின் புகைப்படம் சமீபத்திய போதை பொருள் விகாரத்துடன் ஒப்பிட்டு வைரலாகி வருகிறது.
ஷாருக் கானின் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் புகைப்படத்தில் ஷாருக் கான் முகம் முழுக்க கவலையுடன் காணப்படுகிறார். ஆர்யன் கான் கைது செய்யப்பட்டது, பின் மும்பையில் உள்ள ஷாருக் கானின் வீட்டை போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தது உள்ளிட்ட சம்பவங்களால் ஷாருக் கான் இப்படி காணப்படுகிறார் என வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், அது 2017 ஆண்டு எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. உண்மையில் இந்த புகைப்படம் ஷாருக் கான் அலியா பட் பிறந்த நாள் நிகழ்வுக்கு வந்த போது எடுக்கப்பட்டது ஆகும். இதே புகைப்படம் அடங்கிய செய்தி தொகுப்புகளும் இணையத்தில் கிடைக்கின்றன.

ஆர்யன் கான் போதை பொருள் வழக்கில் கைதானதை தொடர்ந்து போதை பொருள் தடுப்பு பிரிவை சேர்ந்த மூத்த அதிகாரிகள் அக்டோபர் 22 ஆம் தேதி மும்பையில் உள்ள ஷாருக் கான் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். 'மன்னட் வீட்டில் சோதனை நடைபெற்றதைத் தொடர்ந்து ஷாருக் கானின் முகம்,' எனும் தலைப்பில் புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது.
அந்த வகையில் வைரல் புகைப்படத்திற்கும் சமீபத்திய போதை பொருள் விகராத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என உறுதியாகிவிட்டது.
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஒருவருக்கு மரண தண்டனை வழங்கும் போது எடுக்கப்பட்டதாக கூறி வீடியோ வைரலாகி வருகிறது.
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அதிகாரி ஒருவருக்கு மரண தண்டனை வழங்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் வீடியோ, 'லஞ்சம் வாங்கிய அதிகாரியை மீடியா முன்னிலையில் மரணதண்டனை வழங்கிய வடகொரியா அதிபர்' எனும் தலைப்பில் பகிரப்பட்டு வருகிறது.
இத்துடன் வீடியோ கார்டு வடிவிலும் இதே காட்சிகள் வைரலாகி வருகின்றன. வீடியோ கார்டின் கீழ் 'தலைவா கொஞ்சம் தமிழ்நாடு வரையும் வந்துட்டு போக முடியுமா' எனும் வாசகமும் இடம்பெற்று இருக்கிறது.

12 நொடிகள் ஓடும் வீடியோவில், கிம் ஜாங் உன் ஒருவரை தன்னுடன் அழைத்து செல்கிறார். சிறு தூரம் சென்றதும் அவருடன் வந்த நபர் தரை தளத்தில் திறந்த கதவு வழியே திடீரெ கீழே வீழ்கிறார். உடனடியாக அந்த தளம் மூடிக்கொண்டது. பின் அங்கிருந்து கிம் ஜாங் உன் நடந்து வருகிறார். இந்த சம்பவங்கள் அனைத்தையும் ஊடகத்தினர் படம்பிடிக்கின்றனர்.
வைரல் வீடியோ பற்றிய இணைய தேடல்களில், அது போலியான வீடியோ என தெரியவந்தது. மேலும் வீடியோவின் முழு பதிப்பு யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. வீடியோவில் கிம் ஜாங் உன் அருகில் நடந்து வந்தவர் லஞ்சம் வாங்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
இதே வீடியோ ஏற்கனவே இணையத்தில் வைரலாகி இருக்கிறது. இது பற்றிய உண்மை விவரங்கள் அடங்கிய செய்தி தொகுப்புகளும் இணையத்தில் கிடைக்கின்றன. அந்த வகையில் வைரல் வீடியோவுடன் வலம்வரும் தகவலில் துளியும் உண்மையில்லை என்பது உறுதியாகிறது.
பெட்ரோல் பங்க் ஊழியர் கடத்தப்படும் சம்பவம் சமீபத்தில் அரங்கேறியதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
உத்தர பிரதேச மாநிலத்தின் படாவுன் பகுதியில் பெட்ரோல் பங்க் ஊழியர் கடத்தப்பட்ட போது பதிவான காட்சிகள் என கூறி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் தினந்தோரும் எரிபொருள் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதை ஒட்டி இந்த வீடியோ பகிரப்பட்டு வருகிறது.
24 நொடிகள் ஓடும் வீடியோவில் பெட்ரோல் பங்க் ஊழியரை ஒருவர் வலுக்கட்டாயமாக காரினுள் தள்ளுகிறார். பின் அந்த கார் மின்னல் வேகத்தில் அங்கிருந்து செல்லும் பரபர காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன. இந்த வீடியோவை பலர் பேஸ்புக்கில் பகிர்ந்து வருகின்றனர்.

வைரல் வீடியோவை இணையத்தில் தேடியபோது, இந்த சம்பவம் 2021, செப்டம்பர் 28 ஆம் தேதி நடந்தது என தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் சவுதி அரேபியாவில் எடுக்கப்பட்டது ஆகும். வீடியோவின் முழு தொகுப்பு ஆர்.டி. அரேபிக் யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் வைரல் வீடியோ உத்தர பிரதேச மாநிலத்தில் எடுக்கப்படவில்லை என்பது உறுதியாகிவிட்டது.
அந்தமான் நிகோபார் தீவுகளின் பெயர் மாற்றப்பட்டதாக கூறி வைரலாகும் தகவல் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் பெயரை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தீவுகள் என மாற்றி இருப்பதாக கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், அமித் ஷா இதுபோன்று எந்த அறிவிப்பையும் மேற்கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது. எனினும், பிரதமர் நரேந்திர மோடி அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள ஆர்கிபலேகோ தீவுகளின் பெயரை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தீவுகள் என மாற்றினார்.

சமீபத்தில் மூன்று நாள் பயணமாக அமித் ஷா அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு சென்றிருந்தார். எனினும், தீவுகளின் பெயர் மாற்றம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. மேலும் இதுபற்றிய செய்திகளும் வெளியாகவில்லை.
இதுபற்றிய இணைய தேடல்களில், டிசம்பர் 2018 வாக்கில் பிரதமர் நரேந்திர மோடி ரோஸ் தீவுகளின் பெயரை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் டுவீப் என பெயர் மாற்றியது பற்றிய செய்தி குறிப்புகள் கிடைத்தன. அந்த வகையில் அந்தமான் நிகோபார் தீவுகளின் பெயரை அமித் ஷா மாற்றவில்லை என உறுதியாகி விட்டது.
நவராத்திரி பண்டிகையின் போது அகிலேஷ் யாதவ் இந்து மத நம்பிக்கைகளை அவமதித்ததாக கூறி புகைப்படம் வைரலாகி வருகிறது.
உத்தர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவர் இந்துக்களின் மத நம்பிக்கையை அவமதித்ததாக கூறி புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது. நவராத்திரியின் போது காலணி அணிந்த நிலையில், பெண்களுக்கு உணவு வழங்கியதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இத்துடன் அகிலேஷ் யாதவ் கருப்பு நிற காலணி அணிந்து கொண்டு உணவு வழங்கும் புகைப்படமும் இணைக்கப்பட்டு உள்ளது. புகைப்படத்தில் இவருடன் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளனர். வைரல் புகைப்படத்தை இணையத்தில் தேடியபோது அது ஜூலை 2015 வாக்கில் எடுக்கப்பட்டது என தெரியவந்தது.

உண்மையில், இந்த புகைப்படம் அகிலேஷ் யாதவ் முதல்வராக இருந்த போது ஔசாலா போஷன் திட்டத்தை துவக்கி வைத்த போது எடுக்கப்பட்டது ஆகும். இந்த புகைப்படம் நவராத்திரியின் போது எடுக்கப்படவில்லை. அந்த வகையில் வைரல் புகைப்படம் நவராத்திரி சமயத்தில் எடுக்கப்படவில்லை என்பதும் தெளிவாகிவிட்டது.
அமுல் நிறுவனம் 75-வது ஆண்டு விழாவை ஒட்டி பயனர்களுக்கு சிறப்பு திட்டத்தை அறிவித்து இருப்பதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.
அமுல் நிறுவனம் தனது 75 ஆவது ஆண்டு விழாவை ஒட்டி வலைதள முகவரி ஒன்றை வெளியிட்டு, அதில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதில் அளிப்பவர்களுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்குவதாக கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரல் தகவலுடன் இணைக்கப்பட்டு இருக்கும் இணைய முகவரியை க்ளிக் செய்ததும், சில கேள்விகள் இடம்பெற்று இருக்கின்றன. இவற்றுக்கு பதில் அளித்துவிட்டு, பின் அந்த இணைய முகவரியை வாட்ஸ்அப் காண்டாக்ட்களுக்கு பகிர வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்த இணைய தேடல்களில் அமுல் சார்பில் இதுபோன்று எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என தெரியவந்துள்ளது. மேலும் இந்த தகவலை நம்ப வேண்டாம் என அமுல் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் குறிப்பிட்டு இருக்கிறது. அமுல் நிறுவன அதிகாரி ஒருவரும் இந்த தகவலில் உண்மையில்லை என தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்து இருக்கிறார்.
அந்த வகையில் அமுல் 75 ஆவது ஆண்டு விழாவை ஒட்டி வைரலான தகவலில் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது. வாட்ஸ்அப் மற்றும் இதர சமூக வலைதளங்களில் இதுபோன்று வைரலாகும் தகவல்களை நம்ப வேண்டாம். பெரும்பாலும் இதுபோன்ற இணைய முகவரிகளில் மால்வேர் நிறைந்திருக்கும். இவை பயனர் விவரங்களை அபகரித்துவிடும்.






