என் மலர்
உண்மை எது
வகுப்பறையில் பள்ளி மாணவர் கடுமையாக தாக்கப்பட இதுதான் காரணம் என கூறி வைரலாகும் பகீர் தகவல் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
ருத்ராட்சம் அணிந்து இருந்ததால் அரசு பள்ளி மாணவர் தாக்கப்பட்டதாக கூறி வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. வைரல் வீடியோவில் தாக்கப்படும் மாணவர் இந்து மதத்தை சேர்ந்தவர் என்றும், அவரை தாக்கிய ஆசிரியர் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் என்றும் வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இந்த வீடியோ சுதர்சன் நியூஸ் எனும் தனியார் செய்தி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டு இருக்கிறது. அதில், 'தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளியில் இந்து மாணவர் ருத்ராட்சம் அணிந்து இருந்ததால் தாக்கப்பட்டார். கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த ஆசிரியர் மாணவர் கடுமையாக தாக்கியதோடு பள்ளியில் இருந்தும் வெளியேற்றினார்,' என குறிப்பிடப்பட்டு உள்ளது.
வைரல் வீடியோவை ஆய்வு செய்ததில், அது சிதம்பரம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. உண்மையில் இந்த வீடியோ கடந்த வாரம் முதல் வைரலாகி வருகிறது. இதுபற்றிய செய்திகளும் வெளியாகி இருக்கிறது. அதன்படி, சிதம்பரம் நந்தனார் அரசு ஆண்கள் பள்ளியில் பயின்று வரும் 12 ஆம் வகுப்பு மாணவர்களில் சிலர், வகுப்புகளை புறக்கணித்து வந்ததுள்ளனர்.

இதையடுத்து வகுப்புகளை புறக்கணித்த மாணவர்களை அந்த பள்ளியின் இற்பியல் ஆசிரியர் சுப்பிரமணியன் கண்டித்தார். அப்போது மாணவர்களை முட்டி போட வைத்து பிரம்பால் தாக்கி, காலால் எட்டி உதைத்தார். இந்த சம்பவத்தை அதே வகுப்பை சேர்ந்த மாணவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். பின் அந்த வீடியோ வைரலானது.
மேலும், வீடியோவில் தாக்கப்பட்ட மாணவர் கொடுத்த புகாரின் பேரில், ஆசிரியர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றிய செய்தியும் மாலைமலர் வலைதளத்தில் அக்டோபர் 15 ஆம் தேதி வெளியானது. அந்த வகையில் வைரல் பதிவுகளில் உள்ளதை போன்று ருத்ராட்சம் அணிந்திருந்ததால் மாணவர் தாக்கப்படவில்லை என்பதும், ஆசிரியர் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் இல்லை என்பதும் தெளிவாகிவிட்டது.
வாட்ஸ்அப் செயலியை இரவு நேரங்களில் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.
இந்தியா முழுக்க இரவு நேரம் வாட்ஸ்அப் செயலியை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறும் தகவல் வாட்ஸ்அப் செயலியில் வலம்வருகிறது. பேஸ்புக்கின் வாட்ஸ்அப் செயலி இரவு 11.30 மணி முதல் காலை 6.00 மணி வரை முடக்கப்படுவதாக வைரல் தகவலில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இந்த தகவலை மற்றவர்களுக்கு பார்வேர்டு செய்யவில்லை எனில், பயனர்களின் அக்கவுண்ட்கள் டி-ஆக்டிவேட் செய்யப்படும். டி-ஆக்டிவேட் ஆன வாட்ஸ்அப் அக்கவுண்ட்-ஐ இயக்க மாதம் ரூ. 500 கட்டணம் செலுத்த வேண்டும். இந்த தகவலை சரியாக மற்றவர்களுக்கு பார்வேர்டு செய்வோருக்கு புதிதாக பாதுகாப்பான அக்கவுண்ட் ஆக்டிவேட் செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

வைரல் தகவல் குறித்த இணைய தேடல்களில் மத்திய அரசு இதுபோன்று எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை என தெரியவந்துள்ளது. மேலும் வாட்ஸ்அப் சார்பிலும் இதுகுறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. அந்த வகையில் வைரல் தகவலில் உள்ளது போன்று வாட்ஸ்அப் இரவு நேரங்களில் முடக்கப்படாது என்பது உறுதியாகிவிட்டது.
பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களின் கணக்குகளை முடக்கி இருப்பதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.
சமூக வலைதளங்களில் நாளுக்கு நாள் போலி செய்திகள் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது வைரலாகும் தகவலில் பாரத ஸ்டேட் வங்கி, ஆவணங்களை சரியாக இணைக்காத வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளை முடக்குவதாக கூறப்பட்டுள்ளது.
எஸ்.எம்.எஸ். மூலம் வலம்வரும் இந்த குறுந்தகவலில், வங்கி கணக்கு முடக்கப்பட்டு இருப்பதால் நெட் பேங்கிங் மூலம் ஆவணங்களை இணைக்க வலியுறுத்தும் தகவல் இடம்பெற்று இருக்கிறது. வைரல் குறுந்தகவல் பற்றிய இணைய தேடல்களில், இவ்வாறு எந்த நடவடிக்கையையும் பாரத ஸ்டேட் வங்கி எடுக்கவில்லை என தெரியவந்துள்ளது.

மேலும் மத்திய அரசு நிறுவனமான பிரஸ் இன்பர்மேஷன் பியூரோ அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்டிலும் வைரல் குறுந்தகவலை யாரும் நம்ப வேண்டாம் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் கணக்கை முடக்கவில்லை என உறுதியாகிவிட்டது.
ஆர்யன் கான் கைதுக்கு பின் ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி ஷாருக் கானை சந்தித்ததாக கூறி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
ஷார்க் கான் மகன் ஆர்யன் கான் போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் கைதாகி இருக்கும் சம்பவம் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி இருக்கிறது. பலர் ஷாருக் கானுக்கு ஆதரவாகவும், மற்றவர்கள் அவரை புறக்கணிக்க வேண்டும் என்றும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ட்விட்டரில் பக்த்கள் ஷாருக் கானை புறக்கணிக்க வலியுறுத்தி வரும் நிலையில், ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி ஜாக் டார்சி சூப்பர்ஸ்டாருடன் இருக்கிறார் எனும் தலைப்புடன் இரண்டு புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

இரு புகைப்படங்களில் ஒன்று, ஷாருக் கானின் மும்பை வீட்டிலும் மற்றொரு புகைப்படம் இருவரும் தியானம் செய்யும் போதும் எடுக்கப்பட்டு இருக்கிறது. இதே புகைப்படத்தை ஜாக் டார்சி தனது ட்விட்டரிலும் பதிவிட்டு இருக்கிறார்.
வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், ஜாக் டார்சியின் பழைய ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வருவது தெரியவந்துள்ளது. இந்த புகைப்படங்களுக்கும் சமீபத்திய ஆர்யன் கான் கைதுக்கும் எந்த தொடர்பும் இல்லை. உண்மையில் இந்த புகைப்படங்கள் நவம்பர் 14, 2018 அன்று எடுக்கப்பட்டவை ஆகும்.
இந்த மாநிலத்தில் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக கூறி வைரலாகும் தகவல் குறித்து தொடர்ந்து பார்ப்போம்.
இந்தியாவில் 18-வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிகத்தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலகளவில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை அந்தந்த அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில், இந்தியாவில் 100 சதவீத தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாநிலங்கள் பட்டியலில் சிக்கிம் முதலிடம் பிடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சிக்கிம் மாநில செய்தி நிறுவனங்கள் இதுபற்றிய செய்திகளை பரவலாக வெளியிட்டு வருகின்றன.

இதுகுறித்த இணைய தேடல்களில் சிக்கிம் மாநிலத்தில் இதுவரை 5,19,996 பேர் தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக் கொண்டுள்ளனர். இரு டோஸ்களையும் 4,16,372 பேர் செலுத்திக் கொண்டனர். அம்மாநில மக்கள் தொகையில் சுமார் 99 சதவீதம் பேர் முதல் டோஸ், சுமார் 78 சதவீதம் பேர் இரு டோஸ்களை செலுத்திக் கொண்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.
இதுபற்றிய விவரங்களை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் சிக்கிம் மாநிலத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் எண்ணிக்கை 100 சதவீதத்தை எட்டவில்லை என உறுதியாகிவிட்டது.
பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் பதிவிட்டதாக பகீர் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அக்டோபர் 4 ஆம் தேதி உலகம் முழுக்க பேஸ்புக் உள்பட அந்நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற செயலிகள் முடங்கி போயின. இந்த நிலையில், பேஸ்புக் சேவை ஏழு நாட்களுக்கு முடக்கப்படுவதாக கூறும் தகவல் அடங்கிய பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரல் பதிவில் 'பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் மெசஞ்சர் சேவைகள் 168 மணி நேரம் (7 நாட்கள்) முடங்க போகிறது. இந்த இடையூறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் அக்கறை செலுத்துவோரிடம் தொடர்பில் இருக்க எங்கள் சேவையை எவ்வாறு சார்ந்து இருக்கிறீர்கள் என தெரியும். நாங்கள் மேம்பாட்டு பணிகளை அக்டோபர் 6, 2021 1300 மணிக்கு துவங்க இருக்கிறோம்' என மார்க் ஜூக்கர்பர்க் பதிவிட்டதாக ஸ்கிரீன்ஷாட் இடம்பெற்று இருக்கிறது.

வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், அது மார்பிங் செய்யப்பட்ட ஒன்று என தெரியவந்துள்ளது. உண்மையில் மார்க் ஜூக்கர்பர்க் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் ஏழு நாட்களுக்கு சேவைகள் நிறுத்தப்படுவதாக கூறும் தகவல் எதுவும் பதிவாகவில்லை. மேலும் வைரல் ஸ்கிரீன்ஷாட்களில் எழுத்துப்பிழை இடம்பெற்று இருக்கிறது.
அந்த வகையில் பேஸ்புக் மற்றும் அந்நிறுவன சேவைகள் நிறுத்தப்படுவதாக கூறி வைரலாகும் தகவல்களில் உண்மையில்லை என்றும் மார்க் ஜூக்கர்பர்க் இவ்வாறு எந்த பதிவையும் மேற்கொள்ளவில்லை என்பதும் உறுதியாகிவிட்டது.
பேஸ்புக் நிறுவன சேவைகள் பல மணி நேரம் முடங்கி போக இவர் தான் காரணம் என கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவைகள் அக்டோபர் 4 ஆம் தேதி திடீரென முடங்கி போயின. சேவைகள் முடங்கியதால், பேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர் இந்திய மதிப்பில் ரூ. 52 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்தார்.
பேஸ்புக் முடங்கியதற்கான காரணம் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், சீனாவை சேர்ந்த 13 வயது சிறுவன் தான் இந்த சேவைகள் முடங்க காரணம் என கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை முன்னணி செய்தி நிறுவனம் வெளியிட்டதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

வைரல் தகவல் குறித்த இணைய தேடல்களில், முன்னணி செய்தி நிறுவனம் இவ்வாறு எந்த செய்தியையும் வெளியிடவில்லை என தெரியவந்துள்ளது. பேஸ்புக் சேவைகள் முடங்க 13 வயது சீன ஹேக்கர் தான் காரணம் என வேறு எந்த தகவலும் இணையத்தில் கிடைக்கப் பெறவில்லை.
'பேஸ்புக் நெட்வொர்க்கின் வன்பொருள் மற்றும் மென்பொருள் அமைப்புகளை மாற்றியமைக்கும் போது ஏற்பட்ட பிழை காரணமாகவே சேவைகள் முடங்கியது,' என பேஸ்புக் தனது வலைதளத்தில் குறிப்பிட்டு இருக்கிறது. அந்த வகையில் பேஸ்புக் நிறுவன சேவைகள் முடக்கத்திற்கு 13 வயது சீன ஹேக்கர் காரணம் இல்லை என உறுதியாகிவிட்டது.
கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா சாதனை படைத்ததை ஒட்டி பயனர்களுக்கு இலவச ரீசார்ஜ் வழங்கப்படுவதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மூன்று கோடியை கடந்தது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 18,833 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் நாடு முழுக்க 4 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
அரசு மட்டுமின்றி பல்வேறு தொண்டு நிறுவனங்களும் மக்களுக்கு தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றன. இந்த நிலையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக மோடி தலைமையிலான அரசாங்கம் இந்திய பயனர்களுக்கு மூன்று மாதங்களுக்கு இலவச ரீசார்ஜ் வழங்குவதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.

வாட்ஸ்அப் செயலியில் வலம்வரும் தகவலில், தடுப்பூசி செலுத்துவதில் வரலாறு படைக்கப்பட்டு இருப்பதை ஒட்டி இந்திய அரசு அனைவருக்கும் மூன்று மாதங்களுக்கு இலவச ரீசார்ஜ் வழங்குகிறது என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இதுகுறித்த இணைய தேடல்களில், மத்திய அரசு நிறுவனமான பிரஸ் இன்பர்மேஷன் பியூரோ வைரல் தகவலில் துளியும் உண்மையில்லை என தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறது. மேலும் அரசு சார்பில் இதுபோன்று எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
உத்திர பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அண்ணன் என கூறி நபர் ஒருவரின் புகைப்படம் வைரலாகி வருகிறது.
உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் போன்றே காட்சியளிக்கும் நபரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தில் இருப்பது முதல்வர் யோகி ஆதித்யநாத் அண்ணன் என வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
'முதல்வரின் அண்ணன் இன்றும் சிறிய தேநீர் கடை வருமானம் கொண்டு வாழ்ந்து வருகிறார்,' எனும் தலைப்பில் புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது. இதே புகைப்படம் பேஸ்புக்கிலும் வைரலாகி வருகிறது. இது குறித்து ஆய்வு செய்ததில், வைரல் புகைப்படத்தில் இருப்பது முதல்வர் யோகி ஆத்தியநாத் அண்ணன் இல்லை என தெரியவந்தது.

உண்மையில், யோகி ஆதித்யநாத்-க்கு மூன்று சகோதரர்கள், மூன்று சகோதரிகள் உள்ளனர். ஆனால், இவர்களில் யாரும் தோற்றத்தில் யோகி ஆதித்யநாத் போன்று காட்சியளிக்கவில்லை. வைரல் புகைப்படத்தில் இருப்பது யார் என்ற விவரமும் மர்மாகவே உள்ளது.
டாடா குழுமம் சார்பில் இலவசமாக கார் வழங்கப்படுவதாக கூறும் தகவல் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
டாடா குழுமம் தனது 150-வது ஆண்டு விழாவை முன்னிட்டு கார்களை இலவசமாக வழங்குவதாக கூறும் தகவல் அடங்கிய வலைதளத்தின் இணைய முகவரி வாட்ஸ்அப் செயலியில் பகிரப்பட்டு வருகிறது. வைரலாகும் இணைய முகவரியை க்ளிக் செய்ததும், டாடா குழுமத்தின் பெயர் அடங்கிய வலைப்பக்கம் திறக்கிறது.
முற்றிலும் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் வலைப்பக்கத்தில் டாடா குழுமம் பற்றிய நான்கு கேள்விகள், நெக்சான் இ.வி. மாடலின் புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது. சரியான கேள்விகளுக்கு பதில் அளிப்பவர்கள் நெக்சான் இ.வி. காரை வெல்ல முடியும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

வலைதள முகவரியிலேயே அது டாடா குழுமத்திற்கானது இல்லை என தெரிகிறது. மேலும், வலைதளத்தில் டாடாவின் அதிகாரப்பூர்வ லோகோ காணப்படவில்லை. 'வைரலாகும் தகவலை யாரும் நம்ப வேண்டாம், டாடா குழுமத்திற்கும் வைரல் விளம்பரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை,' என டாடா மோட்டர்ஸ் தனது ட்விட்டரில் தெரிவித்து உள்ளது.
அந்த வகையில், டாடா குழுமம் இலவசமாக கார் வழங்குவதாக வைரலான தகவலில் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது.
பிரதமர் நரேந்திர மோடி முகக்கவசம் சரியாக அணியாத புகைப்படம் கொண்ட செய்தி தொகுப்பு வைரலாகி வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடிக்கு கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பயிற்றுவிக்க வாஷிங்டன் நீதிமன்றம் உத்தரவு எனும் தலைப்பு கொண்ட செய்தி குறிப்பு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் செய்தி தொகுப்பு தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டதாக கூறி ஸ்கிரீன்ஷாட் வடிவில் பகிரப்பட்டு வருகிறது.
செய்தி குறிப்பு ஸ்கிரீன்ஷாட்டில், பிரதமர் மோடி முகக்கவசத்தை சரியாக அணியாமல் இருக்கும் புகைப்படம் காணப்படுகிறது. கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இந்த நிலையில், இந்த செய்தி குறிப்பு வைரலாகி வருகிறது.

செய்தி குறிப்பு குறித்த இணைய தேடல்களில், வாஷிங்டன் நீதிமன்றம் பிரதமர் மோடிக்கு கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பயிற்றுவிக்க உத்தரவிடவில்லை என தெரியவந்துள்ளது. மேலும், அமெரிக்க அரசு மற்றும் நீதிமன்றங்கள் இதுபோன்ற உத்தரவை பிறப்பிக்கவில்லை என உறுதியாகிறது.
உண்மையில் இதுபோன்ற அறிவிப்பு வெளியாகி இருப்பின், அதுபற்றிய செய்திகள் பரவலாக வெளியாகி இருக்கும். எனினும், இணைய தேடல்களில் இவ்வாறு எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை. அந்த வகையில், பிரதமர் மோடி குறித்து வைரலான செய்தி தொகுப்பு போலியான ஒன்று என உறுதியாகிவிட்டது.
பிரதமர் நரேந்திர மோடி கட்டுமான பணிகளை ஆய்வு செய்த போது எடுக்கப்பட்டதாக கூறி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
இந்தியாவுக்கான புதிய பாராளுமன்ற கட்டிடம் டெல்லியில் உருவாகி வருகிறது. இதற்கான கட்டுமான பணிகளை பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 26 ஆம் தேதி நேரில் சென்று பார்வையிட்டார். சுமார் ஒரு மணி நேரம் அங்கிருந்த பிரதமர் கட்டுமான பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
அமெரிக்க சுற்று பயணத்தை தொடர்ந்து அவசர அவசரமாக கட்டுமான பணிகளை பார்வையிட்ட பிரதமர் மோடியின் செயலை எதிர்கட்சிகள் கடுமையாக சாடின. இதனிடையே இயக்குனர் அவினாஷ் தாஸ் 'நாளைய புகைப்படம்' எனும் தலைப்பில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை பதிவிட்டார்.

புகைப்படத்தில் பிரதமர் மோடி உயரமாக நிற்பதும், அவரின் எதிரே புகைப்பட கலைஞர் தரையில் படுத்துக் கொண்டு புகைப்படம் எடுக்கும் காட்சி இடம்பெற்று இருக்கிறது. இதே புகைப்படத்தை பலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், அது எடிட் செய்யப்பட்ட ஒன்று என தெரியவந்தது. சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படங்களை செப்டம்பர் 26 ஆம் தேதி தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இதே புகைப்படங்களை மத்திய மந்திரி பியூஷ் கோயலும் பதிவிட்டார்.
இவற்றில் பிரதமர் மோடி மட்டுமே காணப்படுகிறார். அந்த வகையில் வைரல் புகைப்படங்கள் இணைய விஷமிகளால் மாற்றப்பட்டு இருப்பது உறுதியாகி விட்டது.






