என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    மத்திய அமைச்சரவையில் அதிமுக எம்பி வைத்திலிங்கத்திற்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று பேசப்பட்ட நிலையில், அவர் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
    சென்னை:

    பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு நாளை பதவி ஏற்கிறது. இதையொட்டி பா.ஜனதா தலைவர் அமித்ஷா பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இன்று இரண்டாவது நாளாக நடைபெற்ற சந்திப்பின்போது, அமைச்சரவை பட்டியலை இறுதி செய்வது தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினர். மத்திய அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கும் இடம் அளிக்க பாஜக முடிவு செய்துள்ளது.

    தமிழகத்தில் தேனி எம்.பி. ப.ரவீந்திரகுமார் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கலாம். அல்லது இருவரில் ஒருவருக்கு கிடைக்கலாம் என கூறப்படுகிறது.

    இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வைத்திலிங்கம் எம்பி இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. 
    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை இன்று மாலை சந்தித்த அக்கட்சியின் மூத்த பிரமுகரும் டெல்லி முன்னாள் முதல் மந்திரியுமான ஷீலா தீட்சித் அவரது ராஜினாமா முடிவை கைவிடுமாறு வற்புறுத்தினார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவில் ராகுல் காந்தி உறுதியாக உள்ளார். அவர் தொடர்ந்து பதவியில் நீடிக்க வேண்டும் என்று நாடு முழுவதிலும் உள்ள மாநில பொறுப்பாளர்கள் உள்ளிட்ட மேலிட தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    எனினும், ராகுல் காந்தி தனது முடிவில் பிடிவாதமாக உள்ளார். அவரை சந்திக்க பல்வேறு மாநிலங்களில் இருந்து டெல்லி வந்துள்ள காங்கிரஸ் பிரமுகர்கள் கடந்த இருநாட்களாக ராகுல் வீட்டின் அருகே முகாமிட்டுள்ளனர். ஆனால், அவர்களை ராகுல் சந்திக்கவில்லை.

    அவரது  தாயார் சோனியா காந்தி, தங்கை பிரியங்கா காந்தி உள்ளிடோரை தவிர கடந்த இருநாட்களாக ராகுல் காந்தியின் வீட்டுக்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த பிரமுகரும் டெல்லி முன்னாள் முதல் மந்திரியும் டெல்லி பிரதேச காங்கிரஸ் தலைவருமான ஷீலா தீட்சித்  தலைவர் ராகுல் காந்தியை இன்று மாலை சந்தித்தார்.

    ராஜினாமா முடிவை கைவிடுமாறு வற்புறுத்திய அவர் இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

    ‘தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்ற எங்களது எண்ணத்தை ராகுல் காந்தியிடம் தெரிவித்து அவரை ராஜினாமா செய்ய வேண்டாம் என்று வற்புறுத்தினேன். 

    நீங்கள் தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிக்காவிட்டால் மிகுந்த வேதனைக்குள்ளாவோம் என்னும் எங்கள் கட்சியினரின் கருத்தையும் அவரிடம் தெரிவித்துவிட்டு வந்திருக்கிறேன்’ என செய்தியாளர்களிடம் ஷீலா தீட்சித் தெரிவித்தார். 

    முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி காலத்தில் இருந்தே டெல்லி காங்கிரஸ் வட்டாரத்தில் மிகுந்த நன்மதிப்பை பெற்றுள்ள ஷீலா தீட்சித் மீது சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மிகுந்த மரியாதையும் நம்பிக்கையும் வைத்துள்ள நிலையில் அவர் இன்று ராகுலை சந்தித்தது காங்கிரசாருக்கு சற்று ஆறுதலை தந்துள்ளது.
    நாங்குநேரி எம்எல்ஏ வசந்தகுமார் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் எச்.வசந்தகுமார், கடந்த சட்டமன்ற தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். இந்த நிலையில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் காங்கிரசும் இடம்பெற்றது. இதில் கன்னியாகுமரி தொகுதியில் எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ. போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    இனி எம்.பி. அடையாளத்துடன் மக்களவைக்கு செல்ல இருப்பதால் எச்.வசந்த குமார் ஏற்கெனவே வகித்து வந்த எம்எல்ஏ பதவியை இன்று ராஜினாமா செய்தார். சென்னை தலைமைச் செயலகத்திற்கு சென்று, சபாநாயகரை சந்தித்து, எம்எல்ஏ பதவியில் இருந்து விலகுவதாக கடிதம் கொடுத்தார். அவரது ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார். 
    மேற்கு வங்காளம் மாநிலத்தின் ஆளும்கட்சியான திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி மேலும் ஒரு எம்.எல்.ஏ. இன்று பாஜகவில் இணைந்தார்.
    புதுடெல்லி:

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆளும்  மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மிகப்பெரிய சரிவை சந்தித்தது. யாரும் எதிர்பாராத வகையில் பாஜக அதிக இடங்களை பிடித்துள்ளது.

    இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சுப்ரான்ஷு ராய், துஷார்காந்தி பட்டாச்சார்ஜீ மற்றும் மா.கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. தேவேந்திர ராய் என மொத்தம் மூன்று மேற்கு வங்காளம் மாநில சட்டசபை உறுப்பினர்கள் நேற்று பாஜகவில் இணைந்தனர்.

    டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள பல்வேறு நகராட்சிகளை சேர்ந்த 50-க்கும் அதிகமான கவுன்சிலர்களும் பாஜகவில் இணைந்தனர். 

    இந்த இணைப்பு நிகழ்ச்சியில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வார்கியா, மேற்கு வங்காளத்தை சேர்ந்த அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முகுல் ராய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கைலாஷ் விஜய்வார்கியா, ‘மேற்கு வங்காளத்துக்கு பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்ததுபோல் பாஜகவில் இணையும் விழாக்களும் 7 கட்டங்களாக நடக்கப் போகிறது. இன்று (நேற்று) வெறும் முதல் கட்டம்தான் முடிந்திருக்கிறது’ என்று குறிப்பிட்டிருந்தார்.

    அதற்கேற்ப, டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மற்றொரு எம்.எல்.ஏ.வான மனிருல் இஸ்லாம் இன்று கைலாஷ் விஜய்வார்கியா இன்று முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். 

    அவருடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் கடாஹர் ஹசாரா, முஹம்மது ஆசிப் இக்பால், நிமாய் தாஸ் ஆகியோரும் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
    பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளதால் சரத்பவார் கட்சியை இணைக்க திட்டமிட்டுள்ளனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு மோசமான தோல்வி ஏற்பட்டது.

    ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநில சட்டசபை தேர்தலில் பெற்ற வெற்றியால் பாராளு மன்ற தேர்தலில் காங்கிரஸ் அதிகமான இடங்களில் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏமாற்றம் தான் மிஞ்சியது.

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கியமுற்போக்கு கூட்டணி 91 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. இதில் காங்கிரசுக்கு வெறும் 52 தொகுதிகள் மட்டுமே கிடைத்தது.

    இதனால் பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற குறைந்தபட்சம் 55 எம்.பி.க்களை பெற்றிருக்க வேண்டும்.

    எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற காங்கிரஸ் கட்சி புதிய முயற்சியில் இறங்கி உள்ளது.


    சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை தங்களுடன் இணைத்தால் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியும் என்று காங்கிரஸ் கருதுகிறது.

    இதுதொடர்பாக காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    ராகுல்காந்தி ராஜினாமா செய்வதில் அடம்பிடிப்பதால் காந்தி குடும்பத்தில் இல்லாத ஒருவர் தலைவர் பதவிக்கு தேடப்பட்டு வருகிறார். இதற்கு ஏற்றவாறு சரத் பவாரின் கட்சியை காங்கிரசுடன் இணைத்து விட்டால் அவர் கட்சியின் தலைவராவதுடன் பாராளு மன்றத்திலும் எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கும் என்ற யோசனை தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது’.


    இவ்வாறு அவர் கூறினார்.

    மராட்டியத்தில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட சரத்பவாருக்கு 4 எம்.பி.க்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சி ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றது.

    தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் இணைந்தால் காங்கிரசின் எண்ணிக்கை பாராளுமன்றத்தில் 57 ஆக அதிகரித்து எதிர்க் கட்சி அந்தஸ்து கிடைக்கும்.

    அத்துடன் சரத்பவாருக்கு காங்கிரசின் தலைவராகும் வாய்ப்பு கிடைக்கும் என கருதப்படுகிறது.

    காங்கிரசின் இந்த யோசனையை சரத்பவார் ஒப்புக்கொள்ள மாட்டார் என்றே கருதப்படுகிறது.

    இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கூறும்போது, ‘மராட்டியத்தில் சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியை நன்கு வளர்த்துள்ளார். இதனால் அவர் காங்கிரசுடன் தனது கட்சியை இணைப்பது கடினம்’ என்றனர்.

    பாராளுமன்றத்தில் நடிகை சுமலதா (கர்நாடகம்), நவ்னீத் ரவிரானா (மராட்டியம்), நம்பாகுமார் சரணியா (அசாம்), மோகன் பாய் டெல்கர் (தத்ரா நாகர் ஹவேலி) ஆகியோர் சுயேச்சை எம்.பி.க்களாக உள்ளனர்.

    இவர்களது ஆதரவை பெறவும் காங்கிரஸ் முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

    பிரதமர் பதவி ஏற்பு விழாவுக்கு அழைப்பு வரவில்லை என்று டி.ஆர்.பாலு நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
    ஆலந்தூர்:

    தி.மு.க. அமைப்பு செயலாளரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு, சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் டி.ஆர்.பாலு கூறியதாவது:-

    மத்திய அமைச்சரவை பதவி ஏற்பு விழாவுக்கு எந்தவித அழைப்பும் வரவில்லை. அப்படி இருக்கும்போது பிரதமர் பதவி ஏற்பு விழாவில் நானும், ஆ.ராசாவும் பங்கேற்பதாக ஆதாரமற்ற தகவலை சொன்னால் எப்படி?.



    ஜனாதிபதி அல்லது பிரதமரிடம் இருந்து இதுவரை எந்தவொரு அழைப்பும் வரவில்லை. அழைப்பு வந்தால் விழாவில் பங்கேற்பது குறித்து தி.மு.க. தலைவர்தான் முடிவு செய்யவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பாராளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட சறுக்கலுக்குப் பின்னர், மேற்கு வங்க மாநில அமைச்சரவையில் மம்தா பானர்ஜி அதிரடி மாற்றங்களை செய்துள்ளார்.
    கொல்கத்தா:

    பாராளுமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டது. திரிணாமுல் காங்கிரசின் கோட்டையான மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 42 பாராளுமன்றத் தொகுதிகளில் 22 இடங்களை மட்டுமே திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றியது. பாஜக 18 தொகுதிகளை கைப்பற்றி 2ம் இடத்தைப் பிடித்தது. அத்துடன், அக்கட்சியின் 2 எம்எல்ஏக்கள் மற்றும் பல்வேறு கவுன்சிலர்கள் இன்று பாஜகவில் சேர்ந்துள்ளனர்.

    இந்நிலையில் மேற்கு வங்க மாநில அமைச்சரவையில் மம்தா அதிரடி மாற்றங்களை செய்துள்ளார். போக்குவரத்து துறை அமைச்சர் சுவெந்து அதிகாரிக்கு நீர்ப்பாசனத் துறை மற்றும் நீர்வள விசாரணை மற்றும் மேம்பாட்டுத் துறை ஆகிய இரண்டு துறைகள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் பயோடெக்னாலஜி துறை அமைச்சர் பிரத்யா பாசுவுக்கு கூடுதல் பொறுப்பாக வனத்துறை வழங்கப்பட்டுள்ளது.

    தீயணைப்புத்துறை அமைச்சர் சுஜித் போஸ், வனத்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். நீர்வள விசாரணை மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சோமன் மகாபத்ரா, சுற்றுச்சூழல், மாசுபாடு மற்றும் பொது சுகாதார பொறியியல் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    மாலே காட்டக், தொழிலாளர் மற்றும் சட்டத்துறையையும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ரஜீப் பானர்ஜி எஸ்சி,எஸ்டி மற்றும் பழங்குடியினர் நலத்துறையையும் கவனிப்பார்கள். திரிணாமுல் காங்கிரசின் மூத்த தலைவர் சுபத்ரா முகர்ஜி, பஞ்சாயத்து துறை அமைச்சராக நீடிக்கிறார்.

    சந்திரமா பட்டாச்சாரியாவுக்கு பஞ்சாயத்து துறை இணை அமைச்சர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. வனத்துறை அமைச்சர் பினய் கிருஷ்ண பர்மான், மேற்கு பிராந்திய வளர்ச்சித் துறை அமைச்சர் சாந்திராம் மகாட்டோ ஆகியோருக்கு துறைகள் எதுவும் ஒதுக்கப்படவில்லை. 
    மோடியின் பதவியேற்பு விழாவில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பங்கேற்பதாக கூறியுள்ளார்.
    கொல்கத்தா:

    பாராளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி 352 தொகுதிகளை கைப்பற்றியது. பாஜக மட்டும் 302 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். வரும் 30-ம் தேதி ஜனாதிபதி மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 

    மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளும்படி பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. பல்வேறு வெளிநாட்டு தலைவர்களும் விழாவில் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தல் களத்தில் மோடியும் மம்தாவும் மோதிக்கொண்ட நிலையில், மோடியின் பதவியேற்பு விழாவில் மம்தா பங்கேற்பது கேள்விக்குறியாகவே இருந்தது.

    இந்நிலையில், மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள உள்ளதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நிருபர்களிடம் தெரிவித்தார். பதவியேற்பு விழா என்பது ஒரு சம்பிரதாய நிகழ்வு என்பதால் கலந்துகொள்வதாகவும், பதவியேற்பு விழாவில் பங்கேற்பது தொடர்பாக பிற மாநில முதல்வர்களுடனும் பேசியிருப்பதாகவும் மம்தா கூறினார்.

    மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் மற்றும் ஏராளமான கவுன்சிலர்கள் இன்று பாஜகவில் இணைந்தது திரிணாமுல் காங்கிரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழ்நிலையிலும் மம்தா, டெல்லி சென்று மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
    கர்நாடக மாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமைக்க ஜேடிஎஸ் கட்சியுடன் இணைந்தது தான் காங்கிரசின் சமீபத்திய தோல்விக்கு முக்கிய காரணம் என வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.
    பெங்களூரு:

    பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று பல்வேறு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளனர். தோல்விக்கான காரணம் குறித்து கட்சி தலைமை ஆராய்ந்து வருகிறது. தோல்வி குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தை கூறி வருகின்றனர்.

    இந்நிலையில், முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவருமான வீரப்ப மொய்லி கூறியதாவது:-


    கர்நாடகாவில் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி சேர்ந்ததுதான், பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பின்னடைவை சந்தித்ததற்கு முக்கிய காரணம். 

    பாராளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி, சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி, இத்தகைய தோல்வியை காங்கிரஸ் சந்தித்தது இல்லை. இந்த கூட்டணிக்கு மக்களிடையே வரவேற்பு இல்லை. இரண்டு கட்சிகளுக்கும் பாடம் புகட்ட வாக்காளர்கள் விரும்பியிருக்கிறார்கள். அதற்கு இந்த தேர்தல் முடிவுகள்தான் சான்று.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாராளுமன்றத் தேர்தலில் சிக்கபல்லபூர் தொகுதியில் போட்டியிட்ட மொய்லி, பாஜக வேட்பாளர் பச்சேகவுடாவிடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
    மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் மா.கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 50 கவுன்சிலர்கள் டெல்லியில் இன்று பாஜகவில் இணைந்தனர்.
    புதுடெல்லி:

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆளும்  மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மிகப்பெரிய சரிவை சந்தித்தது. யாரும் எதிர்பாராத வகையில் பாஜக அதிக இடங்களை பிடித்துள்ளது.

    இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மா.கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ. என மொத்தம் 3 பேர் மேற்கு வங்காளம் மாநில சட்டசபை உறுப்பினர்கள் இன்று பாஜகவில் இணைந்தனர்.

    டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள பல்வேறு நகராட்சிகளை சேர்ந்த 50-க்கும் அதிகமான கவுன்சிலர்களும் பாஜகவில் இணைந்தனர். 

    இந்த இணைப்பு நிகழ்ச்சியில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வார்கியா, மேற்கு வங்காளத்தை சேர்ந்த அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முகுல் ராய், சமீபத்தில் திரிணாமுல் காங்கிரசில் இருந்து நீக்கப்பட்ட அவரது மகன் சுப்ராங்ஷு ராய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கைலாஷ் விஜய்வார்கியா, ‘மேற்கு வங்காளத்துக்கு பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்ததுபோல் பாஜகவில் இணையும் விழாக்களும் 7 கட்டங்களாக நடக்கப் போகிறது. இன்று வெறும் முதல் கட்டம்தான் முடிந்திருக்கிறது’ என்று குறிப்பிட்டார்.
    பணப்பட்டுவாடாவை தவிர்க்க புதிய முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.
    சென்னை:

    சென்னை தலைமை செயலகத்தில்  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பயிற்சிக்கு மேல் பயிற்சி அளித்தால் எந்தத் தவறும் இல்லாமல் தேர்தலை நடத்திவிட முடியும் என்பது தான், நான் கண்ட உண்மை.  பணப்பட்டுவாடாவை தடுப்பது ஒரு சவால் தான். சமுதாயத்தை ஒருவர் மட்டுமே திருத்தி விட முடியாது. சமுதாயத்தில் இருந்து எழும் பிரச்சனைகளுக்கு அந்த சமுதாயமே தீர்வுகாண வேண்டும்.

    தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலை சிறப்பாக நடத்தியதற்கு, தேர்தல் பணியாற்றிய அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் அளித்த பயிற்சி ஒரு காரணமாக இருந்தது.


    பணப்பட்டுவாடாவை தவிர்க்க புதிய முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். பல்கலைக்கழகங்கள், பத்திரிகைகள் போன்றவை விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பாராளுமன்ற தேர்தல் குறித்து விமர்சனம் செய்த எஸ்.ஏ. சந்திரசேகருக்கு பா.ஜ.க.வினர் காவி வேட்டி அனுப்பி வைத்தனர்.

    திருப்பூர்:

    சென்னையில் கடந்த 21-ந் தேதி நடைபெற்ற திரைப்பட நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் பேசும் போது தேர்தல் முடிவுக்கு முன் வெளியான கருத்து கணிப்பை வைத்து தமிழகத்தை பொறுத்தவரை தப்பித்து கொள்வோம்.

    ஆனால் வெளியில் பொறுத்தவரை கண்டிப்பாக தவறு செய்திருப்போம். மக்கள் அனைவரும் காவி வேட்டி கட்டி கொண்டு அலைய போவதாக பாரதீய ஜனதாவை மறைமுகமாக விமர்சித்து இருந்தார்.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா 300 இடங்களுக்கு மேல் கைப்பற்றி வெற்றி பெற்றதை தொடர்ந்து திருப்பூர் தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா இளைஞரணி சார்பில் எஸ்.ஏ. சந்திரசேகரக்கு காவி வேட்டி அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

    இந்த காவி வேட்டி திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திலிருந்து பதிவு தபால் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்து திருப்பூர் தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா இளைஞரணி நிர்வாகிகள் கூறியதாவது-

    ஆன்மீகத்தை அடிப்படையாக கொண்டது பாரதநாடு. இனி வரும் நாட்களில் நாட்டில் காவியே பிரதானமாக இருக்கும்.


    டைரக்டர் எஸ்.ஏ. சந்திரசேகர் காவியை குறிப்பிட்டு பேசியதாலும், பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா பெரும் வெற்றி பெற்றதாலும் அவருக்கு காவி வேட்டியை அனுப்பி உள்ளோம்.

    மாதந்தோறும் தொடர்ந்து அவருக்கு காவி வேட்டி எங்கள் சார்பில் அனுப்பி வைக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    ×