search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Delhi Congress chief Sheila Dikshit"

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை இன்று மாலை சந்தித்த அக்கட்சியின் மூத்த பிரமுகரும் டெல்லி முன்னாள் முதல் மந்திரியுமான ஷீலா தீட்சித் அவரது ராஜினாமா முடிவை கைவிடுமாறு வற்புறுத்தினார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவில் ராகுல் காந்தி உறுதியாக உள்ளார். அவர் தொடர்ந்து பதவியில் நீடிக்க வேண்டும் என்று நாடு முழுவதிலும் உள்ள மாநில பொறுப்பாளர்கள் உள்ளிட்ட மேலிட தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    எனினும், ராகுல் காந்தி தனது முடிவில் பிடிவாதமாக உள்ளார். அவரை சந்திக்க பல்வேறு மாநிலங்களில் இருந்து டெல்லி வந்துள்ள காங்கிரஸ் பிரமுகர்கள் கடந்த இருநாட்களாக ராகுல் வீட்டின் அருகே முகாமிட்டுள்ளனர். ஆனால், அவர்களை ராகுல் சந்திக்கவில்லை.

    அவரது  தாயார் சோனியா காந்தி, தங்கை பிரியங்கா காந்தி உள்ளிடோரை தவிர கடந்த இருநாட்களாக ராகுல் காந்தியின் வீட்டுக்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த பிரமுகரும் டெல்லி முன்னாள் முதல் மந்திரியும் டெல்லி பிரதேச காங்கிரஸ் தலைவருமான ஷீலா தீட்சித்  தலைவர் ராகுல் காந்தியை இன்று மாலை சந்தித்தார்.

    ராஜினாமா முடிவை கைவிடுமாறு வற்புறுத்திய அவர் இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

    ‘தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்ற எங்களது எண்ணத்தை ராகுல் காந்தியிடம் தெரிவித்து அவரை ராஜினாமா செய்ய வேண்டாம் என்று வற்புறுத்தினேன். 

    நீங்கள் தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிக்காவிட்டால் மிகுந்த வேதனைக்குள்ளாவோம் என்னும் எங்கள் கட்சியினரின் கருத்தையும் அவரிடம் தெரிவித்துவிட்டு வந்திருக்கிறேன்’ என செய்தியாளர்களிடம் ஷீலா தீட்சித் தெரிவித்தார். 

    முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி காலத்தில் இருந்தே டெல்லி காங்கிரஸ் வட்டாரத்தில் மிகுந்த நன்மதிப்பை பெற்றுள்ள ஷீலா தீட்சித் மீது சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மிகுந்த மரியாதையும் நம்பிக்கையும் வைத்துள்ள நிலையில் அவர் இன்று ராகுலை சந்தித்தது காங்கிரசாருக்கு சற்று ஆறுதலை தந்துள்ளது.
    ×