என் மலர்tooltip icon

    விருதுநகர்

    விருதுநகர் அருகே தி.மு.க. பிரமுகர் மீது தாக்குதல் நடத்தியதாக அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
    விருதுநகர்


    விருதுநகர் அருகே உள்ள காரியாபட்டி யூனியனுக்கு உட்பட்டது மாந்தோப்பு கிராமம். இதன் பஞ்சாயத்து தலைவராக காளீஸ்வரி உள்ளார். 

    இந்த நிலையில் மாந்தோப்பு கிராமத்தில் ஆதிதிராவிடருக்கான குளியல் தொட்டி கட்ட முடிவு காரியாபட்டி யூனியன் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து சம்பவத்தன்று காரியாபட்டி யூனியன் 6-வது வார்டு கவுன்சிலரும், மாந்தோப்பு பஞ்சாயத்து தலைவருமான காளீஸ்வரி கணவருமான முத்துக்குமார், தி.மு.க. பிரமுகர் பால்மயில் (59),  யூனியன் தற்காலிக ஊழியர் ஜெயக்குமார் ஆகியோர் குளியல் தொட்டி கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்ய சென்றனர்.

    மாந்தோப்பு கிராமத்தில் இடத்தை  பார்த்துக்கொண்டிருந்தபோது காரியாபட்டி யூனியன் அ.தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன், சின்னவையம்பட்டியைச் சேர்ந்த முத்துராமன் ஆகியோர் அங்கு வந்து இங்கு குளியல் தொட்டி கட்டவேண்டாம் என கூறினர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது சரவணன், முத்துராமன் ஆகியோர் தன்னை தாக்கியதாக மல்லாங்கிணறு போலீசில் பால்மயில் புகார் செய்தார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் 2 பேர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
    விருதுநகர் மாவட்டத்தில் 363 வார்டுகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ளது.
    விருதுநகர்


    தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 19ந்தேதி  நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான மனுதாக்கல் நாளை(28ந்தேதி) தொடங்குகிறது.

    விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டு முதல் முறையாக  தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநகராட்சியில் 48 வார்டுகள் இடம் பெற்றுள்ளன. அதேபோல் மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகளுக்கும் தேர்தல் நடக்க உள்ளது. இதில் அருப்புக்கோட்டை நகராட்சியில் 36 வார்டுகளும், ராஜபாளையம் நகராட்சியில் 42 வார்டு களும், சாத்தூர் நகராட்சியில் 24 வார்டுகளும், ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் 33 வார்டுகளும், விருதுநகர் நகராட்சியில் 36 வார்டுகளும் என 171 வார்டுகள் உள்ளன.

    இதேபோல் மாவட்டத்தில் 9 பேரூராட்சிகள் உள்ளன. இதில் செட்டியார்பட்டி, காரியாபட்டி, மல்லாங் கிணறு, எஸ்.கொடிக்குளம், சுந்தரபாண்டியம், வ.புதுப்  பட்டி   பேருராட்சிகளில் தலா 15 வார்டுகள் உள்ளன. மம்சாபுரம், சேத்தூர், வத்ராயிருப்பு பேரூராட்சிகளில் தலா 18 வார்டுகள் உள்ளன. மொத்தம் உள்ள 144 வார்டுகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. 

    மொத்தத்தில் மாவட்டத்தில் 363 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்க உள்ளது. 
    துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் ராஜபாளையம் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர், ஆலங்குளம் துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை)  மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. 

    எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சேத்தூர் மின் நிலையத்திற்கு உட்பட்ட சேத்தூர், தேவதானம், கோவிலூர், சொக்கநாதன் புத்தூர், சோலை சேரி, கிருஷ்ணாபுரம், சுந்தரராஜபுரம், புத்தூர், புனல்வேலி, மீனாட்சிபுரம், ஜமீன்கொல்லங்கொண்டான், தளவாய்புரம், முகவூர், நல்லங்கலம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும். 

    இதே போல் ஆலங்குளம் மின்நிலையத்திற்கு உட்பட்ட ஆலங்குளம், ஆலங்குளம் முக்குரோடு, முத்துசாமிபுரம், கங்கர்செவல், குண்டாயிருப்பு, எதிர்கோட்டை, உப்பு பட்டி, கல்லமநாயக்கர்பட்டி, கொங்கன்குளம், காக்கி வாடான்பட்டி, நதிக்குடி, மம்சாபுரம், ராமன்பட்டி, கரிசல்குளம், கொம்பன்குளம், சிவலிங்காபுரம், நரிக்குளம், அருணாச்சலபுரம், மேலாண் மறைநாடு, செல்லம்பட்டி, கோட்டைபட்டி, கொருக்கலாம்பட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும். 

    மேற்கண்ட தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.
    ரூ. 7 லட்சம் மோசடி புகார் தொடர்பாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    ராஜபாளையம்

    ராஜபாளையம் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவரிடம் சோழபுரத்தைச் சேர்ந்த செல்லக்கனி (44) என்பவர் நிலம் வாங்கித்தருவதாக ரூ.7 லட்சம் மோசடி செய்தார். 

    இதற்கு உடந்தையாக பஞ்சவர்ணம், ரமேஷ், சாந்தி, மனோகரன் ஆகியோர் இருந்துள்ளனர். 

    இது குறித்து விஜயலட்சுமி ராஜபாளையம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு மோசடி தொடர்பாக வழக்குப்பதிவு செய்யுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டனர். 

    அதன்படி ரூ.7 லட்சம் மோசடி செய்த செல்லக்கனி உள்பட 5 பேர் மீது கீழராஜகுலராமன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 
    ராஜபாளையத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் தேசியக்கொடியை யானை ஏற்றிய சம்பவம் ருசிகரமாக அமைந்தது.
    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சம்மந்தபுரம் சீதக்காதிதெரு பகுதியில் ராவுத்தர் ஜமாத், பரிமளராவுத்தர் ஜமாத் மற்றும் அசனர் ஜமாத் சார்பில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. 

    இதில்  லலிதா என்ற  யானை தேசியக்கொடியுடன் ஊர்வலமாக வலம் வந்தது. மேலப்பள்ளிவாசல் தலைவர் சையது இப்ராகிம் தலைமையில் யானை கொடி ஏற்றி வைக்க, ஜமாத் நிர்வாகிகள் கொடிக்கு மரியாதை செலுத்தினர். 

    மத நல்லிணக்கத்திற்கு முன் உதாரணமாக இந்நிகழ்ச்சி அமைந்திருந்ததாக சமூக ஆர்வலர்கள் பாராட்டினர். 

    இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் முகமது மஸ்தான் உள்பட பலர் செய்திருந்தனர்.
    விருதுநகர் அருகே கூமாபட்டி போலீஸ் நிலையத்தில் தீக்குளிக்க முயன்ற தாய்-மகன் மீது தண்ணீர் ஊற்றி தடுத்து நிறுத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள ராமசாமியாபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி. இவருக்கு சொந்தமான தோட்டம் அதே பகுதியில் உள்ளது. இவரது தோட்டத்து அருகில் ஜோதீஸ்வரி என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது.

    ஜெயலட்சுமி தனது தோட்டத்துக்கு செல்ல ஜோதீஸ்வரிக்கு சொந்தமான இடம் வழியாக செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இது தொடர்பாக 2 பேருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ஜோதீஸ்வரி தனது இடத்தில் மரக்கட்டைகளை போட்டு வழியை மறித்ததாக தெரிகிறது. இதனால் ஜெயலட்சுமி தனது தோட்டத்துக்கு செல்ல முடியவில்லை.

    இதுகுறித்து அவர் கூமாப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணைக்கு இரு தரப்பினரையும் போலீஸ் நிலையத்திற்கு வருமாறு அழைத்தனர்.

    அதன்படி நேற்று ஜெயலட்சுமி, தனது மகன் ராஜாவுடன் (வயது 38) போலீஸ் நிலையத்திற்கு சென்றார். இதேபோல் ஜோதீஸ்வரியும் அங்கு வந்திருந்தார்.

    இரு தரப்பினரிடமும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. ஆனால் இதில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை.

    போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தபோது ராஜா தனது தாய் ஜெயலட்சுமியுடன் போலீஸ் நிலைய வளாகத்துக்கு வந்தார். அங்கு யாரும் எதிர்பாராத நேரத்தில் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தன் மீதும், ஜெயலட்சுமி மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

    இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கூமாபட்டி போலீசார் விரைந்து செயல்பட்டு தாய்-மகன் இருவரையும் தடுத்து நிறுத்தி அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர். இதனால் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து கூமாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூரில் டிரைவர்-விவசாயி தற்கொலை செய்தனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சுந்தரபாண்டியதைச் சேர்ந்தவர் முனியசாமி(வயது 50), விவசாயி. இவருக்கு மூளை நரம்பு பிரச்சினை இருந்தது. இதனால் அடிக்கடி தலைவலி ஏற்பட்டு வந்துள்ளது. இதில் விரக்தி அடைந்த முனியசாமி விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டார்.  

    இதுகுறித்து முனிய சாமி மகன் அஜித்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கூமாபட்டியை சேர்ந்தவர் தங்கபாண்டி(வயது 38) டாட்டா ஏசி வாகனம் வைத்து தொழில் செய்து வந்தார். கடந்த சில வாரங்களாக இவருக்கு தீராத வயிற்று வலி இருந்தது. மருத்துவர்களிடம் காண் பித்தும் குணமாகவில்லை. 

    சம்பவத்தன்று கூமாபட்டி கண்மாயில்  குளிக்க சென்ற தங்கபாண்டி வாழ்க்கையில் விரக்தி அடைந்த விஷம் குடித்தார்.  சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவர் உயிருக்கு போராடிக் கொண்டு  இருந்தார்.

    இதுகுறித்து   தகவலறிந்த விரைந்து வந்து தங்க பாண் டியை  வத்திராயிருப்பு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தங்கபாண்டியனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து சுமதி கொடுத்த புகாரின் பேரில் கூமாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ராஜேந்திர பாலாஜி மீது புகார் கூறிய விஜய நல்லதம்பிக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து விசாரணையில் தொய்வு ஏற்பட்டது.
    விருதுநகர்:

    ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் விஜய நல்ல தம்பி புகார் கூறினார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் விஜய நல்லதம்பியை கட்சியை விட்டு நீக்குவதாக அ.தி.மு.க. தலைமை அறிவித்தது. மேலும் அவர் மூலமே பணம் கொடுக்கப்பட்டதாக பலரும் புகார் தெரிவித்தனர். இதன் பேரில் விஜய நல்லதம்பி மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    ராஜேந்திர பாலாஜி, விஜய நல்லதம்பி ஆகியோர் முன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு தள்ளுபடியானதால் இருவரும் தலைமறைவாகி விட்டனர்.

    அதன் பிறகு தனிப்படை போலீசார் கர்நாடகா மாநிலம் ஹாசனில் ராஜேந்திர பாலாஜியை கைது செய்தனர். பின்னர் அவர் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி ஜாமீனில் விடுதலையானார்.

    இந்த நிலையில் தலைமறைவாக இருந்த விஜய நல்லதம்பியை கோவில்பட்டி அருகே போலீசார் பிடித்தனர். அவரை விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    அதன் பிறகு தினமும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அறிவுறுத்திய போலீசார் அவரை விடுவித்தனர். அதன்படி விஜய நல்லதம்பி தினமும் குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி வந்தார்.

    இந்த நிலையில் விசாரணை நடத்தி வந்த குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கணேஷ்தாஸ், சப்-இன்ஸ்பெக்டர் சந்தான கார்த்திகா ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் விசாரணையில் சிக்கல் ஏற்பட்டது.

    இந்த நிலையில் விஜய நல்லதம்பிக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். இதனால் இந்த வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
    வெள்ள பாதிப்பில் இருந்து பாதுகாக்க ‘மிதக்கும் இல்லம்’ உருவாக்கிய விருதுநகர் சிறுமி விஷாலினிக்கு பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ராஷ்டிரிய பால புரஸ்கார் விருதினை வழங்கியதுடன் ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசையும் அளித்தார்.
    விருதுநகர்:

    ‘பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால புரஸ்கார்’ விருதை நேற்று நாடு முழுவதும் சிறுவர்-சிறுமிகள் 29 பேர் பெற்றனர். அவர்களில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சிறுமி விஷாலினியும் (வயது 8) ஒருவர். இவருடைய தந்தை சாத்தூர் அருகே உள்ள மேட்டமலை கிராமத்தை சேர்ந்த நரேஷ்குமார். இவர் ஐதராபாத் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். தாயார் சித்ரகலா. விருதுநகர் லட்சுமி நகரை சேர்ந்தவர்.

    சாதனை மாணவி விஷாலினி, ஐதராபாத்தில் உள்ள சிறப்பு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    சமீபத்தில் தமிழகத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது அதனைக்கண்ட விஷாலினி, வெள்ள பாதிப்பில் தவிப்பவர்களுக்கு உதவி செய்யும் வகையில் ஏதாவது ஒரு உபகரணத்தை உருவாக்க வேண்டும் என யோசித்துள்ளார்.

    அவர்களது வீட்டில் உள்ள நீச்சல் குளத்தில் ஒரு பலூனை பயன்படுத்தி விஷாலினி அவ்வப்போது நீச்சலடித்துள்ளார்.

    எனவே அதனை அடிப்படையாக கொண்டு, வெள்ளத்தில் மிதக்கும் தானியங்கி வசதியுடன் செயல்படும் உயிர்காக்கும் வீட்டினை உருவாக்குவது குறித்து தனது தந்தையிடம் கூறி இருக்கிறார். அவரும் அதனை உருவாக்க உதவி இருக்கிறார்.

    ராட்சத பலூன் போன்ற அந்த வீட்டில் உணவு, குடிநீர் உள்ளிட்ட ஏற்பாடுகளையும் செய்தனர். இந்த கண்டுபிடிப்பு குறித்து மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. சிறுமி விஷாலியின் இந்த முயற்சியை பாராட்டி அவருக்கு பால புரஸ்கார் விருது கிடைத்துள்ளது.

    பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் ராஷ்டிரிய பால புரஸ்கார் விருதினை விஷாலினிக்கு வழங்கியதுடன் ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசையும் அளித்தார்.
    அருப்புக்கோட்டை அருகே பெண்ணை தாக்கிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர்

    அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆலடிபட்டியை சேர்ந்தவர் கவிதா (24). இவருக்கும், மதுரை அவனியாபுரத்தை  சேர்ந்த ராமர்பாண்டி என்பவருக்கும் 2  வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். 

    இந்த நிலையில் கவிதா திருமணத்தின்போது தனக்கு பெற்றோர் அணிந்த நகைகளை திருப்பி கேட்க கணவர் வீட்டுக்கு சென்றார். 

    அப்போது ஏற்பட்ட பிரச்சினையில் ராமர்பாண்டி, உறவினர்கள் பாண்டிமீனாள், தனபாக்கியலட்சுமி, ஆதி, சத்யா ஆகிய 5 பேர் தன்னை தாக்கி நகைகளை பறித்ததாக  கவிதா   போலீசில் புகார் செய்தார். 

    போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரியாபட்டி அருகே 2 இளம்பெண்கள் மாயமாகினர்.
    விருதுநகர்

    காரியாபட்டி அருகே உள்ள அல்லாலப்பேரியை சேர்ந்த 17 வயது இளம்பெண்  பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். சம்பவத்தன்று அவர் திடீரென மாயமானார். 

    பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சுழி அருகே மேலேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னக்காள். இவரது மகள் காயத்ரி (18). அங்குள்ள வேளாண் பண்ணையில் வேலை பார்த்து வந்தார். 

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் திடீரென மாயமானார். நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மது பழக்கத்தை மனைவி கண்டித்ததால் எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    விருதுநகர்

    விருதுநகர் முத்துராமலிங்கநகரைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 40), எலக்ட்ரீசியன். இவரது மனைவி செல்வி.

    பாலமுருகன் கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லவில்லை. குடி பழக்கத்துக்கும் அடிமையானதாக தெரிகிற-து. அடிக்கடி மது குடித்து விட்டு வந்ததால் கணவன்&மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டது.

    மது பழக்கத்தை கைவிடுமாறு மனைவி கூறியும் பாலமுருகன் கேட்கவில்லை. 2 நாட்களுக்கு முன்பு இதுதொடர்பாக  இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இதில் செல்வி கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

    மனைவி பிரிந்து சென்ற தால் விரக்தி அடைந்த பாலமுருகன் வீட்டின் மாடி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த நிலையில் வீடு திரும்பிய செல்வி வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததால் சந்தேகம் அடைந்தார். உடனே கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மாடி அறையில் பாலமுருகன் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர்
    ×