என் மலர்tooltip icon

    விருதுநகர்

    உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் முதல்-அமைச்சரின் வேட்பாளர்கள் என விருதுநகரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட கனிமொழி எம்.பி. பேசினார்.
    விருதுநகர்:

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கனிமொழி எம்.பி. பிரசாரம் செய்து வருகிறார்.

    அவர் இன்று விருதுநகர் முத்துராமன்பட்டி, காளியம்மன் கோவில் தெரு, சந்திமரத் தெரு, தெப்பம், இந்திராநகர் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வேனில் சென்று பிரசாரம் செய் தார். அப்போது அவர் பேசியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    உள்ளாட்சி அமைப்புகளில் தி.மு.க. நல்லாட்சி தரும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு நீங்கள் வாக்களித்ததால் தற்போது நல்லாட்சி நடக்கிறது. இதே நல்லாட்சி தொடர உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெற செய்யுங்கள்.

    தி.மு.க. சட்டமன்ற தேர்தலின்போது அளித்த வாக்குறுதியின்படி பெண்களுக்கு இலவச பஸ் பயணம், அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை போன்றவற்றை அளித்து வருகிறது. படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெற ஒரு லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தொழில் தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விரைவில் அந்த தொழிற்சாலைகள் அமையும் பட்சத்தில் வேலைவாய்ப்பு பெருகும்.

    அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கினர். அதனை ரூ. 5 ஆயிரமாக வழங்க வேண்டும் என்று தி.மு.க. அப்போது சொன்னது. அதை இப்போது வழங்கி வருகிறது. அதேபோல் தடுப்பூசி முகாம்கள் நடத்தி சாதனை படைத்துள்ளோம்.

    உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் முதல்-அமைச்சரின் வேட்பாளர்கள். அவர்கள் உள்ளாட்சி அமைப்புக்கும், மக்களுக்கும் பாலமாக இருந்து தேவையான வசதிகள் கிடைக்க பாடுபடுவார்கள்.

    நீட் ரத்து செய்யப்படும் வரை தி.மு.க. அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும். இந்த வி‌ஷயத்தில் முதல்-அமைச்சரின் கருத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தார். நீட் தேர்வு ரத்து செய்யப்படும் வரை தி.மு.க. தொடர்ந்து போராடும். உள்ளாட்சியில் நல்லாட்சி ஏற்பட தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு அனைவரும் வாக்களியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    சிவகாசி அருகே மருமகளை தீ வைத்து எரித்த மாமியார் கைது செய்யப்பட்டார்.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் போலீஸ் சரகத்துக்குட்பட்ட செங்க  மலநாச்சியார்புரத்தை சேர்ந்தவர் ஜோதிமணி. இவரது மனைவி கார்த்தீஸ்வரி. இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது.  தற்போது கார்த்தீஸ்வரி கர்ப்பிணியாக உள்ளார்.

    ஜோதிமணியின் தாயார் சின்னத்தாய்(45) புதுப்பட்டியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் வேலைக்கு செல்லும்போது மருமகள் கார்த்தீஸ்வரியை வீட்டுக்குள் வைத்து கதவை பூட்டி சென்று விடுவாராம்.

    மேலும் அடிக்கடி கார்த்தீஸ்வரியை சித்ரவதை செய்ததாகவும் தெரிகிறது. இதுகுறித்து தனது சகோதரி மாரீஸ்வரியிடம் தெரிவித்த கார்த்தீஸ்வரி தன்னை வீட்டுக்கு அழைத்து செல்லும்படியும் கூறி உள்ளார்.

    இந்தநிலையில் சம்பவத்தன்று அவர் கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பினார். அப்போது சின்னத்தாய் எங்கு சென்று வருகிறாய் என அவதூறாக பேசி உள்ளார். இதனால் மனவேதனை அடைந்த கார்த்தீஸ்வரி மாடிக்கு சென்றார்.

    அப்போது பின்னால் வந்த சின்னத்தாய் அவரை தாக்கியதோடு மண்எண்ணை ஊற்றி தீ வைத்ததாகவும் கூறப்படுகிறது. கார்த்தீஸ்வரியின் அலறல் சத்தம் கேட்டு  அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்சு மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து மாரீஸ்வரி கொடுத்த புகாரின்பேரில் திருத்தங்கல் போலீசார் சின்னத்தாய், ஜோதிமணி மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் சின்னத்தாய் கைது செய்யப்பட்டார்.
    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அரசு பள்ளியில் பாலியல் வன்முறைக்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டது.
    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற மாணவர் மனசு பெட்டி திறப்பு விழாவில், மாணவ&மாணவிகள் பாலியல் வன்முறைக்கு எதிரான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 

    பள்ளிகளில் மாணவிகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்முறைகளை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 

    இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் படிக்கும் மாணவிகள் தங்களது குறைகளை தெரிவிப்பதற்காக “மாணவர் மனசு” என்ற பெட்டியை அமைக்கவும், இது குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை அமைக்கவும் உத்தரவிட்டது.

    அதன்படி ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மேலாண்மைக்குழு தலைவி ஆனந்தஜோதி முன்னிலையில், தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ், மாணவர் மனசு பெட்டியை திறந்துவைத்தார். 

    பின்னர் அனைவரும் பாலியல் வன்முறைகளுக்கு எதிரான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஆசிரியைகள் ரோஸ்லினாராஜ்,  சிவகாமி, “இல்லம் தேடி கல்வி” திட்ட தன்னார்வலர்கள் வசந்தி, காயத்திரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


    விருதுநகர் அருகே திருமணமான இளம்பெண் மாயமானார்.
    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள பட்டம்புதூர் வ.உ.சி.நகரை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ். இவரது மனைவி சங்கீதா (வயது 21). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகின்றன. இந்த தம்பதியருக்கு குழந்தை இல்லாததால் கணவன்&மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. 

    கடந்த 10 நாட்களுக்கு முன்பு சங்கீதாவை அவரது தந்தை  கல்லூரணியை சேர்ந்த அன்புதம்பி மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அதன்பிறகு மகளை கணவர் வீட்டில் அவர் விட்டுச்சென்றார். இந்தநிலையில் வீட்டில் இருந்த சங்கீதா திடீரென மாயமாகிவிட்டதாக  சுபாஷ்சந்திரபோஸ் போன் மூலம் அன்புதம்பிக்கு தகவல் கொடுத்தார். 

    அவர் மகளை பல்வேறு இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.  இதுகுறித்து வச்சக்காரப்பட்டி போலீசில் அன்பு தம்பி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி ஈஸ்வரன் காலனியை சேர்ந்த ராமலட்சுமி மகள் மாரியம்மாள்(16) மாயமாகிவிட்டதாக மாரனேரி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாத்தூர் அருகே நகராட்சி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    விருதுநகர்

    சாத்தூர் அமீர்பாளையத்தை சேர்ந்தவர் கவிராஜ்(வயது 39). இவர் திருத்தங்கல் நகராட்சி அலுவலகத்தில் (தற்போது சிவகாசி மாநகராட்சி)பில் கலெக்டராக பணியாற்றி வந்தார். கவிராஜ் அடிக்கடி மதுகுடித்து வந்ததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. 

    இந்தநிலையில் கடந்த 3 நாட்களாக கவிராஜ் பணிக்கு செல்லவில்லை. இதுகுறித்து மனைவி மாரியம்மாள் கண்டித்தார். இதனால் மனவேதனை அடைந்த கவிராஜ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். இது குறித்த புகாரின் பேரில் சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி ரிசர்வ் லைன் காலனியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவரது மனைவி விஜயா(57). இவர் குடும்ப பிரச்சினை காரணமாக விஷம் குடித்து மயங்கினார். மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஜயா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 
    செல்போன் பேசியதை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவிகள் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பெருமாள்பட்டியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மகள் சுகந்தி(வயது 18). கல்லூரி மாணவியான இவர் தற்போது விடுமுறை  என்பதால் வீட்டில் இருந்து வந்தார். அப்போது அடிக்கடி செல்போன் பார்த்துக் கொண்டிருந்தார். 

    இதனை சுகந்தியின் தாயார் கண்டித்தார். இதனால் மனவேதனையடைந்த சுகந்தி விஷம் குடித்து மயங் கினார். அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி சுகந்தி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிப்புத்தூர் ரெங்கநாதபுரத்தை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மகள் சந்தனமாரி(19) சிவகாசியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் வீட்டில் இருந்தபோது செல்போன் பார்த்ததை பெற்றோர் கண்டித்துள்ளனர்.

    இதனால் மனவேதனையடைந்த சந்தனமாரி திடீரென மாயமாகி விட்டார். அவரை பல இடங்களில் தேடியும் தகவல் கிடைக்கவில்லை. இந்தநிலையில் அந்தபகுதியில் உள்ள பரமன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் சந்தனமாரி பிணமாக மிதப்பதாக தகவல் கிடைத்தது.

    இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் விரைந்துவந்து சந்தானலட்சுமி உடலை மீட்டனர். அவரது தாயார் மாரியம்மாள் புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    செல்போன் பார்த்ததை பெற்றோர் கண்டித்ததால் மனவேதனை அடைந்த சந்தனமாரி கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
    ராஜபாளையத்தில் நடந்த வாகன சோதனையில் வெங்காயம் வாங்க சென்ற வியாபாரியிடம் ரூ.1 லட்சம் கைப்பற்றப்பட்டது
    ராஜபாளையம்

    உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ராஜபாளையம் புதிய பஸ் நிலையம் அருகே  குடிமை பொருள் வழங்கல் துறை வட்டாட்சியர் ராமநாதன், சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணிராஜ் ஆகியோர் கொண்ட பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போதுஅந்த வழியாக வாகனத்தில் வந்த திருச்சி முசிறியை சேர்ந்த ஆனந்தராஜை மறித்து சோதனை செய்தனர். அப்போது அவர் ஆவணமின்றி ரூ. 1 லட்சத்து 24 ஆயிரத்து 260-ஐ கொண்டு சென்றதாக கூறி அதனை பறிமுதல் செய்தனர். 

    விசாரணையில் ஆனந்தராஜ் நாமக்கல்லில் இருந்து தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதிக்கு வெங்காயம் வாங்க பணம் கொண்டு செல்வது தெரியவந்தது. 

    தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தமிழகம் முழுவதும் பறக்கும்படையினர் நடத்தும் சோதனையில் அத்தியாவசிய தேவைக்காக வியாபாரிகள், பொதுமக்கள் எடுத்துச்செல்லும் பணத்தை மட்டும் பறிமுதல் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
    உள்ளாட்சி தேர்தலையொட்டி ராஜபாளையத்தில் போலீஸ் அணிவகுப்பு நடந்தது.
    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் பயமின்றி வாக்களிக்கவும், அச்சத்தை போக்கும் வகையிலும், காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. 

    ராஜபாளையத்தில் வருகிற 19&ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. பொதுமக்களுக்கு வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தியும், அச்சமின்றி வாக்களிக்கவும் காவல் துறையினரின் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. 

    ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் பகுதியில் இருந்து துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் அணிவகுப்பை தொடங்கி வைத்தார். இதில் ராஜபாளையம் காவல்துறை உட்கோட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள், சப்&இன்ஸ்பெக்டர்கள், போலீஸ்காரர்கள் மற்றும் விருதுநகர் ஆயுதப்படை காவலர்கள் உள்பட 300&க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 

    போலீசாரின் கொடி அணிவகுப்பு போலீஸ் பேண்டு வாத்தியம் இசைக்க மதுரை சாலை, பழைய பஸ் நிலையம், காந்திசிலை ரவுண்டானா, காந்தி கலைமன்றம் வழியாக புதுப்பாளையம் மாரியம்மன் கோவிலை சென்றடைந்தது.
    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தேர்தல் அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து குடிபோதையில் தகராறு செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு பேரூராட்சி பகுதியில் தேர்தல்பணி நடைபெறுகிறது. வத்திராயிருப்பு பேரூராட்சி அலுவலகத்தில் வத்திராயிருப்பு வடக்கு தெருவை சேர்ந்த குருசாமி மகன் சங்கரமூர்த்தி தேர்தல் அலுவலகத்திற்கு வந்து அத்துமீறி நுழைந்து குடிபோதையில் தகராறு செய்தார்.  

    பேரூராட்சி செயல் அலுவலரும், தேர்தல் அலுவலருமான  ரவிசங்கர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரமூர்த்தியை கைது செய்தனர்.
    விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
    விருதுநகர்

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.


    வாக்குப்பதிவு முடிந்ததும் அனைத்து வாக்கு பெட்டிகள்  வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. 22ந்தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் முதல்முறையாக சிவகாசி மாநகராட்சியாக தேர்தலை சந்திக்கிறது. 

    இங்கு பதிவாகும் வாக்குகள் சிவகாசி அவுசிங்போர்டு பகுதியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைத்து எண்ணப்படுகின்றன. இதேபோல் நகராட்சிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

    அருப்புக்கோட்டை நகராட்சி வார்டுகளுக்கு உட்பட்ட வாக்குகள் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியிலும், சாத்தூர் நகராட்சிக்கான வாக்குகள்  எத்தல் ஆர்.வி.மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும், ராஜபாளையம் நகராட்சி வாக்குகள் பி.ஏ.சி.ராமசாமிராஜா பாலிடெக்னிக்கிலும் வைத்து எண்ணப்படுகின்றன. 

    ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி வாக்குகள் வி.பி.எம். மகளிர் கல்லூரியிலும், விருதுநகர் நகராட்சி வாக்குகள் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியிலும் எண்ணப்படுகின்றன.

    இதேபோல் மாவட்டத்தில் உள்ள செட்டியார்பட்டி, மம்சாபுரம், சாத்தூர் பேரூராட்சிகளின் வாக்கு எண் ணிக்கை ராஜபாளையம் எஸ்.எஸ்.அரசு மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. காரியாபட்டி, மல்லாங்கிணறு பேரூராட்சிகளின் வாக்கு எண்ணிக்கை மல்லாங்கிணறு அரசு மேல் நிலைப்பள்ளியில் நடக்கிறது-. 

    எஸ்.கொடிக்குளம், சுந்தரபாண்டியம், வ.புதுப்பட்டி, வத்ராயிருப்பு பேரூராட்சிகளுக்கான வாக்குகள் கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் கலைக்கல்லூரியில் வைத்து எண்ணப்படுகிறது. 

    இந்த தகவலை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.
    பட்டாசு கடைக்கு வரைபட அனுமதி வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலரை போலீசார் கைது செய்தனர்.
    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெங்கடாசலபுரத்தை சேர்ந்தவர் திருமலைராஜ் (வயது 50). இவர் பட்டாசு கடை கட்ட திட்டமிட்டார்.

    இதற்காக சாத்தூர் யூனியனுக்குட்பட்ட மேட்டமலை பஞ்சாயத்து அலுவலகத்தில் விண்ணப்பித்தார். தொடர்ந்து வரைபட அனுமதிக்காக ஊராட்சி செயலர் கதிரேசன் (52) என்பவரை தொடர்பு கொண்டார்.

    வரைபட அனுமதி கட்டணமாக ரூ.31 ஆயிரம் செலுத்த வேண்டிய நிலையில் கதிரேசன் கூடுதலாக ரூ.20 ஆயிரம் சேர்த்து ரூ.51 ஆயிரம் கேட்டாராம். அந்த பணம் எதற்கு என திருமலைராஜ் கேட்டபோது, மொத்தமாக கொடுத்தால்தான் வரைபட அனுமதி வழங்க முடியும் என கதிரேசன் தெரிவித்துள்ளார்.

    வரைபட அனுமதிபெற ரூ.20 ஆயிரம் லஞ்சம் கொடுக்க திருமலைராஜ் விரும்பவில்லை. இதுதொடர்பாக அவர் விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதனை தொடர்ந்து போலீசார் திருமலைராஜிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர்.

    அதனை வாங்கி கொண்டு திருமலைராஜ், மேட்டமலை பஞ்சாயத்து அலுவலகம் சென்றார். அங்கு செயலர் கதிரேசனை சந்தித்து பணத்தை கொடுத்தார். அவர் பணத்தை பெற்றுக் கொண்ட சிறிது நேரத்தில் விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் பூமிநாதன், பாரதிபிரியா தலைமையிலான போலீஸ் படையினர் அதிரடியாக வந்து சோதனை நடத்தினர்.

    ஊராட்சி செயலர் கதிரேசனிடம் விசாரணை நடத்தினர். அவரிடம் வரைபட அனுமதிக்கான ரசீது பணம் ரூ.31 ஆயிரம் மட்டுமே இருந்தது. லஞ்ச பணம் ரூ.20 ஆயிரம் மாயமாகி இருந்தது. இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

    கதிரேசனின் கைகளில் ரசாயனபொடி இருந்ததால் அவர் பணத்தை பெற்றது உறுதியாக தெரிந்தது. ஆனால் பணம் எங்கே போனது? என்பதில் குழப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில் அலுவலகம் அருகே உள்ள டீக்கடை மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    அங்கு சோதனை நடத்தியதில் ரூ.20 ஆயிரம் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் ஊராட்சி செயலர் கதிரேசனை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஈஞ்ஞாறு கிராமத்தில் நியோ பயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

    இன்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதற்கிடையில் பட்டாசு ஆலையில் மராமத்து பணியும் நடந்து வந்தது.

    ராஜபாளையத்தை சேர்ந்த மாரீஸ்வரன் இந்த பணியில் ஈடுபட்டார். அவர் கட்டிட மேற்கூரை பகுதியில் மின்சார வெல்டிங் கொண்டு பணி செய்து கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட தீப்பொறி அந்த அறையில் இருந்த பட்டாசுகளில் பட்டதால் தீ விபத்து ஏற்பட்டது.

    இதனை பார்த்ததும் பட்டாசு ஆலையில் பணியில் இருந்த தொழிலாளர்கள் அவசர அவசரமாக வெளியேறினர். சிலர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் மாரீஸ்வரன் லேசான காயம் அடைந்தார்.

    தீ விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர்.

    சிறிய அளவில் விபத்து நடந்ததாலும் அதனை ஊழியர்கள் உடனடியாக பார்த்து விட்டதாலும் அதிர்ஷ்டவசமாக தொழிலாளர்கள் உயிர் தப்பினர்.

    விபத்து குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×