என் மலர்
விருதுநகர்
- அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.16 கோடி நிதி உதவி அளிப்பதாக தொழிலாளர் உதவி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.
- கடந்த மாத இறுதிவரை 9,151 பேருக்கு ரூ.3 கோடியே 9 லட்சத்து 58 ஆயிரத்து 390 நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்த கண்காணிப்பு குழு கூ ட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 11 மாதங்களில் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் 21,739 நபர்கள் புதிதாக உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளனர். 15,629 பேரின் பதிவு புதுப்பிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியம் 455 நபர்களுக்கும், கல்வி உதவித்தொகை 27,253 நபர்களுக்கும், இயற்கை மரண நிதி உதவி 579 நபர்களுக்கும் மற்றும் இதர நலத்திட்ட உதவிகள் சேர்த்து மொத்தம் 31,890 நபர்களுக்கு ரூ.16 கோடியே 40 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்து குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் உறுப்பினராக உள்ள சொந்த வீடு இல்லாத கட்டுமான தொழிலாளயர்களுக்கு தாமாக சொந்தமாக வீடு கட்ட அல்லது அரசின் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு பெற ரூ.4 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
6 கட்டுமான தொழிலாளர்களுக்கு நிதி உதவி அளிக்க சென்னை தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தால் இறுதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் முதன்மையாக நடைபெறும் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலில் ஈடுபட்டுள்ள இ.எஸ்.ஐ. மற்றும் சேமநலநிதி பிடித்தம் செய்யப்படாத அமைப்பு சாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பிற்கு தமிழக அரசால் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை உத்தரவின் பேரில் தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர் நல வாரியம் கடந்த 2021-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. கடந்த மாத இறுதிவரை 9,151 பேருக்கு ரூ.3 கோடியே 9 லட்சத்து 58 ஆயிரத்து 390 நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவலை தொழிலாளர் உதவி ஆணையர் காளிதாஸ் தெரிவித்தார்.
- அபராதம் விதிப்பதில் மும்முரம் காட்டும் போலீசார் ராஜபாளையம் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
- ஆனால் போலீசார் அபராதம் விதிப்பது மட்டும் எந்த விதத்தில் நியாயம்? என்று தெரிவித்தனர்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகராட்சியான ராஜபாளையத்தில் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப வாகன எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ராஜ பாளையம் நகராட்சி சார்பில் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை, தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக பெரும்பாலான சாலைகளில் பள்ளம் தோண்டப்பட்டு அதனை சரியாக மூடாமல் குண்டும், குழியுமாக காட்சிய ளிக்கிறது.
இதுதவிர சத்திரப்பட்டி ரோடு ரெயில்வே மேம்பால கட்டுமான பணிகளும் பல ஆண்டுகளாக நடந்து வருகின்றன. இதனால் ராஜ பாளையம் பொது மக்கள் நாள்தோறும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி படும் அவஸ்தை சொல்லி மாளாது.
ராஜபாளையம்-தென்காசி மெயின் ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் அந்தப்பகுதியை கடக்க குறைந்தது 30 நிமிடங்கள் ஆகிறது. ராஜபாளையத்தில் இருந்து வேறொரு பகுதிக்கு செல்ல எந்த சாலையை பயன்படுத்தினாலும் அங்கு ஏதாவது திட்டப்பணிகள் என்ற பெயரில் பள்ளம் தோண்டி வைத்துள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைவது தொடர்ந்து நடந்து வருகிறது.
ராஜபாளையத்தில் போக்குவரத்து நெரிசலை சீர்படுத்த போதிய போலீசார் நியமிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதன் காரணமாக வாகனங்கள் இஷ்டத்திற்கு சென்று மேலும் மேலும் போக்குவரத்து நெரிசலை சிக்கலாக்குகின்றன.
ஆனால் இதை யெல்லாம் கண்டு கொள்ளாமல் தற்போது ராஜபாளையம் போலீசார் ஹெல்மெட் அணியாமல் மற்றும் விதிமுறைகளை பின்பற்றவில்லை என கூறி மோட்டார் சைக்கிள்களை மறித்து அபராதம் போடும் பணியில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.
கண் எதிரே போக்குவரத்து நெரிசல் இருந்தாலும் அதனை கண்டுகொள்ளாமல் சாலையின் நடுவில் வாகனங்களை மறித்து போலீசார் அபராதம் விதிப்பது ராஜபாளையம் பகுதி மக்களை கடும் அதிருப்பதியடைய செய்துள்ளது. போலீசார் வாகனத்தின் எண்களை பதிவு செய்து அபராத தொகையை செலுத்துமாறும் உரிமையாளரின் செல்போனுக்கு தகவல் அனுப்புகிறார்கள். போலீசாரின் இந்த நடவடிக்கையால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ராஜபாளையம் நகரில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவித சாலைப்பணிகளும் நடைபெறவில்லை. அதற்கு மாறாக நன்றாக இருக்கும் சாலைகளையும் பள்ளம் தோண்டி வைத்துள்ளனர். மழை காலங்களில் சேறும், சகதியுமாகவும் மற்ற நேரங்களில் குண்டும், குழியுமாக காணப்படும் சாலையை சரி செய்ய எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால் போலீசார் அபராதம் விதிப்பது மட்டும் எந்த விதத்தில் நியாயம்? என்று தெரிவித்தனர்.
- சங்கரலிங்கம் பயணித்த அரசு பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது.
- சங்கரலிங்கம் அருகில் கைக்குழந்தையுடன் இளம்பெண் அமர்ந்திருந்தார்.
விருதுநகர்:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலம் காந்தி நகரை சேர்ந்தவர் சங்கரலிங்கம் (வயது 42).
இவர் சம்பவத்தன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்துக்கு சென்று விட்டு அரசு பஸ்சில் ஊருக்கு புறப்பட்டார். அப்போது அவர், கொண்டு வந்திருந்த பையில் ரூ.1 லட்சத்து 53 ஆயிரம் ரொக்கம் வைத்திருந்தார்.
சங்கரலிங்கம் பயணித்த அரசு பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர் அருகில் கைக்குழந்தையுடன் இளம்பெண் அமர்ந்திருந்தார். பஸ் அருப்புக்கோட்டை அருகே சென்றபோது அருகில் அமர்ந்திருந்த இளம்பெண் சில்லரையை கீழே தவறி விட்டார். அருகில் அமர்ந்திருந்த சங்கரலிங்கம் அதனை எடுக்க முற்பட்டார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட இளம்பெண் சங்கரலிங்கம் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 53 ஆயிரத்தை நைசாக எடுத்து கொண்டு அடுத்த பஸ் நிறுத்தத்தில் அவசர அவசரமாக குழந்தையுடன் இளம்பெண் இறங்கி தப்பினார்.
பணம் திருட்டுபோனதை கூட அறியாத சங்கரலிங்கம் ஊருக்கு வந்தார். வீட்டுக்கு சென்று பையை பார்த்தபோது அதிலிருந்து பணம் திருடுபோனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பஸ்சில் தன் அருகில் அமர்ந்து பயணித்த இளம்பெண் திருடியிருக்கலாம் என்ற அடிப்படையில் அருப்புக்கோட்டை டவுன் போலீசில் சங்கரலிங்கம் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் திருடிய பெண்ணை தேடி வருகின்றனர்.
- இமானுவேல் சேகரன் சிலையை அகற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- இதையடுத்து போலீசார் அந்த சிலையை வைக்க அனுமதி இல்லை எனக்கூறி துணி மற்றும் தகரத்தால் மறைத்தனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள அமச்சியார்பட்டியில் அனுமதியின்றி இமானு வேல் சேகரன் சிலை வைக்கப்பட்டது. இதை யடுத்து போலீசார் அந்த சிலையை வைக்க அனுமதி இல்லை எனக்கூறி துணி மற்றும் தகரத்தால் மறைத்தனர்.
இந்தநிலையில் அதே ஊரைச் சேர்ந்த பாலசுப்பிரமணி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் குறிப்பிட்ட பகுதியில் இமானுவேல் சேகரன் சிலை வைப்பதால் ஜாதி பிரச்சினை ஏற்படாது. கடந்த ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி சிலை வைக்க மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டு மனு அளித்தோம். செப்டம்பர் 10-ந் தேதி வெண்கல சிலை திறக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சிலையை மூடி மறைத்து வைத்துள்ளனர். எனவே சிலையை திறக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி பவானி சுப்பராயன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் குறிப்பிட்ட பகுதியில் பிற சமூகத்தினர் செல்லும் பாதையில் சிலை வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அந்தப்ப குதியில் ஜாதி பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. எனவே முறையாக அனுமதி பெற்று சிலையை வைக்க அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
பின்னர் நீதிபதி தனது உத்தரவில், சிலையை வைக்க மாவட்ட கலெக்டரிடம் கொடுத்த மனு நிலுவையில் உள்ளது. எனவே முதல்-அமைச்சர்,மாவட்ட கலெக்டரிடம் முறையான அனுமதி பெற்று சிலையை வைக்க வேண்டும். வருகிற 19-ந் தேதிக்குள் அங்கு வைக்கப்பட்டுள்ள இமானுவேல் சேகரன் சிலையை அகற்றி பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
- லயன்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியில் கலை விழா நடந்தது.
- மேல்நிலை இரண்டாமாண்டு மாணவி மதுமிதா நன்றி கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்துர் லயன்ஸ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியின் 44-வது கலைச் சங்கம ஆண்டு விழா பள்ளித் தாளாளர் லயன் வெங்கடாசலபதி தலைமையில் நடந்தது.
மேல்நிலை முதலாமா ண்டு மாணவர் கோகுல்பிரசாத் வரவேற்றார். முதல்வர் எம்.பி.முருகன் ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக லயன்ஸ் சங்க ஆளுநர் விசுவநாதனும், லயன்ஸ் சங்க மகளிர் முதல் பெண் இயக்குநர் கலையரசி சிறப்பு அழைப்பாளராகவும் கலந்து கொண்டனர்.
சிறப்பு அழைப்பா ளர்களை துணை முதல்வர் ஜெயராமகிருஷ்ணன் அறிமுகம் செய்தார். மாணவ, மாணவிகளுக்கு தனித்திறமைக்கான பரிசு மற்றும் கல்வியாண்டிற்கான பரிசுகளை சிறப்பு அழை ப்பாளர்கள் வழங்கினர்.
லயன்ஸ் பள்ளியின் மாணவ-மாணவிகளின் கலைத்திறனை மேம்படுத்தும் வகையில் பரதம், நாட்டுப்புற நடனம், வரவேற்பு நடனம், பல்சுவை நடனம், மைம் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
பள்ளி நிர்வாகக் குழுத் தலைவர் லயன் ரெங்கராஜா, பள்ளிச் செயலாளர்-தாளாளர் வெங்கடாசலபதி, பொருளாளர் குணசேகரன் மற்றும் அரிமா சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மேல்நிலை இரண்டாமாண்டு மாணவி மதுமிதா நன்றி கூறினார்.
- சாத்தூர் அருகே இளம்பெண் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
- போலீசார் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கோட்டநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகள் பானுமதி (வயது 25). இவருக்கும் குண்டலகுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வழிவிட்ட அய்யனார் என்ற சதீஷ் என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
சதீஷ் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் பானுமதி கணவருடன் செல்போனில் பேசியபோது பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் 2 பேரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பானுமதி தனது தாயிடம் கூறி அழுதுள்ளார்.
இந்த நிலையில் பானுமதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பானுமதியின் குடும்பத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இதுதொடர்பாக அப்பநாயக்கன்பட்டி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்தபின் பானுமதியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆஸ்பத்திரி முன்பு உறவினர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடலையும் வாங்க மறுத்துவிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தூர் டி.எஸ்.பி. வினோஜ், கோட்டாட்சியர் அனிதா ஆகியோர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் போராட்டம் கைவிடப்பட்டது.
மகளின் சாவு குறித்து அவரது தாயார் கனகலட்சுமி, மருமகன் சதீஷ், அவரது தம்பி தமிழ்செல்வன், மாமனார் சூரியவேல், மாமியார் முருகேஸ்வரி ஆகியோர் மீது புகார் அளித்துள்ளர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விருதுநகரில் 2-ம் நிலை காவலர் தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு 20-ந் தேதி நடக்கிறது.
- மேலும் தொடர்புக்கு 04562-293613 மற்றும் onlineclassvnr@gmail.com.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் காலிபணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இரண்டாம் நிலைக் காவலர் 3 ஆயிரத்து 552 பதவிகளுக்கான தேர்வு வருகிற 27-ந்தேதி நடக்கிறது.
இந்த தேர்வுக்கு விண்ண ப்பித்துள்ள விருதுநகர் மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் வகையில் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து, மாவட்ட அளவிலான இலவச மாதிரி தேர்வை நடத்துகிறது. இந்த தேர்வு வருகிற 20-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை)விருதுநகர் செந்தில் குமார நாடார் கல்லூரியில் காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது. மாதிரி தேர்வு எழுத விரும்பும் தேர்வர்கள் விவரங்களை முன்பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் ஆகும். அதனடிப்படையில், தேர்வர்கள் www.vnrjobfair.com என்ற இணையதளத்தில் விவரங்களை வருகிற 17-ந் தேதி மாலை 4 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
பதிவு செய்த தேர்வர்கள் மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதி க்கப்படுவார்கள். தங்களது TNUSRB PC தேர்விற்கான விண்ணப்ப படிவத்தின் நகல், பாஸ்போர்ட் புகைப்படம், கருப்பு பால் பேனா ஆகிவற்றுடன் தேர்வு மையத்திற்கு வர வேண்டும்.
தேர்வை பயமின்றி எளிதில் எதிர்கொள்ள இந்த இலவச மாதிரி தேர்வை எழுதி தேர்வர்கள் பயன்பெறலாம். மேலும் தொடர்புக்கு 04562-293613 மற்றும் onlineclassvnr@gmail.com.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விருதுநகர் மாவட்டத்தில் ஒரே ஆண்டில் காணாமல் போன 628 பேர் மாயமான 95 பேர் நிலைமை என்ன வென்று தெரியவில்லை.
- அவர்கள் எங்குசென்றார்கள்? என்ன ஆனார்கள்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் அண்மைக்காலமாக பள்ளி- கல்லூரி மாணவிகள், இளம் பெண்கள், வயதானவர்கள் மாயமாகி வருவது தொடர் கதையாக உள்ளது.
குடும்பத்தில் விரக்தி, காதல் தோல்வி, தொழில் நஷ்டம், தேர்வு பயம், தனிமை போன்ற பல்வேறு காரணங்களால் பெண்கள் உள்பட பலர் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். இது தொடர்பாக மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் நாள்தோறும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
குறிப்பாக இளம் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் மாயமாவது அதிக அளவில் நடந்து வருகிறது. இது தொடர்பாக போலீசார் தீவிர கவனம் செலுத்தி போலீசார் விசா ரணை நடத்தினர்.
கடந்த ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் சிறுவர்-சிறுமி கள்,பெண்கள், மாணவிகள் என 628 பேர் மாயமாகி இருப்பதாக போலீஸ் நிலையத்தில் புகார்கள் வந்தன. இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் எடுத்த நடவடிக்கையின் காரணமாக இதுவரை 533 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் வெளியூர் மற்றும் உறவினர்கள் மற்றும் பழக்கமான நபர்களின் வீடுகளில் இருந்ததை கண்டறிந்து மீட்கப்பட்டனர். பின்னர் அவர்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.ஆனால் இதில் இன்னும் 95 பேர் நிலைமை என்ன வென்று தெரிய வில்லை. அவர்கள் எங்குசென்றா ர்கள்? என்ன ஆனார்கள்? என போலீ சார் தீவிர விசா ரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் கூறுகையில், சமுதாயத்தில் தற்போது எல்லோருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகள் இருக்கின்றன. அதனை எதிர்கொள்ள முடியாமல் சிலர் குடும்பத்தை விட்டு செல்வது தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே குடும்பத்தில் யாரேனும் இது போன்ற நிலைமையில் இருந்தால் உடனே அவர்களுக்கு தகுந்த கவுன்சிலிங் வழங்கி பிரச்சினைகளை எதிர்கொள்ளும் வகையில் அவர்கள் வாழ்க்கையை எதிர்நோக்க கற்றுக் கொடுக்க வேண்டும் என்றனர்.
- தலைமறைவாக இருந்த சதீஸை அருப்புக்கோட்டை பாலவனத்தம் பகுதியில் போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.
- சதீஸ் மீது குழந்தை திருமண தடுப்புச்சட்டம், போக்சோ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
அருப்புக்கோட்டை:
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள பொதிகுழத்தை சேர்ந்தவர் சதீஸ்(38). இவர் விறகு கரி மூட்டம் போடும் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ரேகா, லதா, முருகலட்சுமி ஆகிய 3 மனைவிகள் உள்னர்.
கருத்து வேறுபாடு காரணமாக ரேகா, லதா பிரிந்து சென்று விட்டனர். கடந்த சில ஆண்டுகளாக முருகலட்சுமியுடன் அருப்புக்கோட்டை அருகே சின்னகட்டங்குடியில் சதீஸ் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் சதீஸ் அதே பகுதியை சேர்ந்த 17 வயதுடைய பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்போது திருமணம் செய்து கொள்வதாக அந்த பெண்ணிடம் ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய மைனர் பெண்ணை சம்பவத்தன்று சதீஸ் கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர்கள் வெளியூருக்கு சென்றுவிட்டனர்.
இந்த நிலையில் மைனர் பெண் மாயமானது தொடர்பாக அவரது தந்தை அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி உளுந்தூர்பேட்டையில் தங்கியிருந்த அந்த பெண்ணை மீட்டனர்.
தொடர்ந்து தலைமறைவாக இருந்த சதீஸை அருப்புக்கோட்டை பாலவனத்தம் பகுதியில் போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். அவர்மீது குழந்தை திருமண தடுப்புச்சட்டம், போக்சோ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மீட்கப்பட்ட மைனர் பெண் விருதுநகர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
- விருதுநகரில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய செவிலியருக்கு தேசிய விருதை ஜனாதிபதி வழங்கினார்.
- இவரது சேவையை பாராட்டி இந்திய செவிலிய குழுமம் மங்கம்மாளுக்கு தேசிய விருது அளிக்க பரிந்துரை செய்தது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் மங்கம்மாள் (வயது55). அரசு செவிலியராக பணியில் சேர்ந்த இவர் கடந்த 37 வருடங்களாக கன்னிசேரி புதூர், எம்.ரெட்டியபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம உதவி செவிலியராக பணியாற்றி உள்ளார். பணியில் இருந்த போது அர்ப்பணிப்பு சேவையுடன் நோயாளிகளுக்கு மங்கம்மாள் சேவை செய்தார். தற்போது இவர் ஆர்.ரெட்டியபட்டியில் உதவி செவிலியராக உள்ளார்.
இவரது சேவையை பாராட்டி இந்திய செவிலிய குழுமம் மங்கம்மாளுக்கு தேசிய விருது அளிக்க பரிந்துரை செய்தது. அதன்படி மத்திய அரசு அவருக்கு தேசிய விருது அளித்தது. இதனை டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பாராட்டு சான்றிதழை வழங்கி மங்காம்மாவை பாராட்டினார்.
அர்ப்பணிப்புடன் பணியாற்றிய மங்கம்மாள் தேசிய விருது பெற்று விருதுநகர் மாவட்டத்தை பெருமை அடைய செய்துள்ளார்.
- வீட்டுக்கு வந்த சிறிது நேரத்தில் கண்ணன் பாபுவுக்கு மூச்சு திணறல் ஏற்பட உடனே மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
- அருப்புக்கோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது.
அருப்புக்கோட்டை:
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ரெயில்வே பீடர் ரோட்டை சேர்ந்தவர் கண்ணன் பாபு (வயது 53). இவர் கருவாட்டுப்பேட்டை பகுதியில் மருந்து கடை நடத்தி வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் அதே பகுதியைச் சேர்ந்த சாந்தகுமார் என்பவரிடம் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார்.
இதற்காக கண்ணன் பாபு லட்சக்கணக்கில் வட்டியும், அசலும் கொடுத்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கொடுத்த கடனுக்கு சாந்தகுமார் அதிக வட்டி கேட்டு மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 7-ந் தேதி வீட்டில் இருந்த கண்ணன் பாபுவை சாந்த குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அடித்து உதைத்து கடத்திச் சென்று ஒரு அறையில் அடைத்து வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் அவர் படுகாயம் அடைந்தார்.இதுதொடர்பாக அருப்புக்கோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது.இதை அறிந்த சாந்தகுமார் கும்பல் கண்ணன் பாபுவை விடுவித்தனர். கொலை வெறி தாக்குதல் நடத்தியதில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. வீட்டுக்கு வந்த சிறிது நேரத்தில் கண்ணன் பாபுவுக்கு மூச்சு திணறல் ஏற்பட உடனே மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் சாந்தகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ராமதாசன், பாண்டியராஜன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் அவர்கள் கண்ணன் பாபுவிடம் ரூ. 98 லட்சத்திற்கும் மேல் எழுதி வாங்கி இருந்த புரோ நோட்டுக்களையும், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
- சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் 24-ம் ஆண்டு விழா நடந்தது.
- இந்த விழாவில் 2 ஆயிரத்தும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
சிவகாசி
சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் 24-ம் ஆண்டிற்கான முதலா மாண்டு மாணவர்கள் தொடக்க விழா மற்றும் பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் தொடக்க விழா கல்லூரி கலையரங்கத்தில் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு பி.எஸ்.ஆர். கல்விக்குழுமங்களின் தாளாளர் ஆர். சோலைசாமி தலைமை தாங்கினார். கல்லூரியின் இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் செந்தில்குமார் தொடக்கவுரை ஆற்றினார். டீன் மாரிச்சாமி வர வேற்றார். பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் முதல்வர் பாலசுப்பிரமணியன் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரியின் முதலாமாண்டு துறைத்தலைவர் ஸ்ரீராம் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக சென்னை உளவியலாளர் ரகுநாத் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-
இன்றைய மாணவர்கள் சமூக வலைதளங்களுக்கும், மொபைல் போன்களுக்கும் அடிமையாகி நேரத்தையும், ஆரோக்கியத்தையும் வீணாக்குகின்றனர். இதனால் மாணவர்களின் கவனம் சிதறி எளிதில் உணர்ச்சிவசப்பட்டு படிப்பில் முழுமையான கவனம் செலுத்த முடியாமல் மனமுடைந்து தவறான முடிவை எடுக்கின்றனர்.
பெற்றோர்கள் மாண வர்களை அரவணைத்து அறிவுரை வழங்கி அவர்களுக்கு அன்பான முறையில் அறிவுரையை கூற வேண்டும். இன்றைய இளம் தலைமுறையினரின் உணவு பழக்க வழக்கங்கள் முறையாக இருக்க வேண்டும்.
மேலும் பெண் குழந்தைகள் இந்த சமூகத்தில் தன்னம்பிக்கையுடனும், உற்சாகத்துடனும், வாழ சமுதாயத்தில் உயர் இடம் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதலாமாண்டு மாண வர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், இரு கல்லூ ரிகளின் பேராசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்த னர். பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் சயின்ஸ் அண்டு ஹிமானிட்டிஸ் துறைத்தலைவர் பேரா சிரியர் சக்திஸ்ரீ நன்றி கூறினார்.






