என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • கல்விக்கடன் முகாமில் வங்கிகள் பங்கேற்றன.
    • பேராசிரியர் அருண்ராஜா நன்றி கூறினார்.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து ''கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு கல்விக்கடன் முகாமை'' சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடத்தியது.

    கல்லூரி தாளாளர் ஆர்.சோலைசாமி தலைமை தாங்கினார். கல்லூரி இயக்குநர் விக்னேசுவரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் செந்தில் குமார், டீன் மாரிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முதலாமாண்டு துறைத் தலைவர் ஸ்ரீராம் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வெம்பக்கோட்டை கிளை மேலாளர் ராஜகுமாரி, ஆலங்குளம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் தணிகைநாதன், தாயில்பட்டி கிளை மேலாளர் ஆனந்த், பேங்க் ஆப் இந்தியாவின் செவல்பட்டி கிளை மேலாளர் சீனிவாசராவ், சல்வார்பட்டி கிளை மேலாளர் பிரபு, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மம்சாபுரம் கிளை மேலாளர் மணிகண்டன், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் ஏழாயிரம்பண்ணை கிளை மோலாளர் ரகுநாத் ஆகியோர் முகாமில் கலந்து கொண்டனர்.

    வெம்பக்கோட்டை கிளைமேலாளர் ராஜகுமாரி பேசுகையில், விருதுநகர் மாவட்ட கலெக்டரின் பரிந்துரையின்படி இந்த சிறப்பு முகாம் நடை பெறுகிறது. தமிழக அரசின் ''வித்யாலட்சுமி'' என்ற திட்டத்தின் மூலமாக உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கவிக்கடன் வழங்கும் திட்டத்தை மாணவர்களுக்கு அறிமுகப் படுத்தினார். இந்த திட்டத்தின் கீழ் எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்? அதற்குரிய ஆவணங்கள் சமர்பிப்பது பற்றிய வழிமுறைகள் எடுத்துரைக்கப்பட்டது. விண்ணப்பிக்கும் போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

    ஏழை, எளிய மாண வர்களும் பயன்பெறும் வகையில் குறைந்த வட்டி விகிதத்தில் கல்வி கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார். இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், ஒருங்கிணைப்பாளர்கள் சாகுல் ஹமீது, பேராசிரியர் ராதாகிருஷ்ணன் மற்றும் பேராசிரியர்கள் அலுவலக உதவியாளர் களுடன் இணைந்து செய்திருந்தனர். பேராசிரியர் அருண்ராஜா நன்றி கூறினார்.

    • ராஜபாளையத்தில் புறவழிசாலை அமைக்க தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தார்.
    • அமைச்சர் எ.வ.வேலு இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் புறவழிசாலை அமைக்க தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறையின் ஆய்வுக்கூட்டத்திற்காக விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை புரிந்த பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவிடம் ராஜபாளையம் நகரில் நிறைவேற்றப்பட வேண்டிய வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்து தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. மனு கொடுத்தார்.

    அதில் ராஜபாளையம் நேரு சிலை முதல் சொக்கர் கோவில் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தோண்டப்பட்டு திட்டப்பணி மேற்கொள்ளப்பட்டு குண்டும் குழியுமாக காணப்பட்ட சாலையை தற்காலிகமாக (பேட்ச்ஒர்க்) சீரமைக்கப்பட்டது .

    இந்த சாலையில் விரை வில் புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும்.ராஜபாளையம் தொகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க எம்.பி.கே.புதுப்பட்டி விலக்கில் இருந்து கோதை நாச்சியார்புரம் வழியாக அமிழ் ஓட்டல் வரை புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருந்தது.மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் எ.வ.வேலு இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை கோவில் கிரிவலப்பாதையை ரூ.5 கோடியில் சீரமைக்கும் பணி தொடங்கும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
    • அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வு செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் அரசு முதன்மைச் செயலாளர் (நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை) பிரதீப் யாதவ் தலைமையில் கலெக்டர் மேகநாதரெட்டி, எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், தங்கப்பாண்டியன், அசோகன், ரகுராமன், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம் ஆகியோர் முன்னி லையில் அமைச்சர்கள் எ.வ.வேலு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வு செய்தனர்.பின்னர் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:-

    இருக்கன்குடி கோவி லுக்கு பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகிறார்கள். இதை கருத்தில் கொண்டு, நடைபாதையும், சாலைகளும் அமைக்க வேண்டும் என்று அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் கேட்டுக்கொண்டதற் கிணங்க, ரூ.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் சில நாட்களில் தொடங்க உள்ளது.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள திருவண்ணாமலை கோவி லின் கிரிவலப்பாதையை 2.50 கி.மீ. மேம்படுத்தும் பணி ரூ.5 கோடி மதிப்பில் பணிகள் தொடங்க உள்ளது.

    விருதுநகர் மாவட்டத்தில் 2022-23-ம் நிதியாண்டில் 17 தரைப்பாலங்களை உயர்மட்ட பாலங்களாக மாற்ற ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடக்கப்பட்டு, இந்த ஆண்டே பணிகள் முடிவ டைவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து விருதுநகர் செல்லும் சாலைகளை இணைத்து வட்டப்பாதையாக 33.5 கி.மீட்டருக்கு தேவையான நிலம் எடுக்கும் பணி நடந்து வருகிறது. ராஜபாளையம்- வெம்பக்கோட்டை சாலையில் ராஜபாளையம் ரெயில் நிலையம் அருகில் ரூ.46 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.

    தமிழ்நாட்டில் கட்டப்ப டவுள்ள தொழிற்ப யிற்சி நிலையங்களில் 3 தொழிற்பயிற்சி நிலை யங்கள் விருதுநகர்,

    அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகிய பகுதிகளில் புதிய தொழிற்நுட்ப பிரிவுகளுடன் கட்டப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    • கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது.
    • பேராசிரியை முருகேசுவரி வரவேற்றார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில், "ஏ.கே.சி.இ.-கே.எல்.யூ. முன்னாள் மாணவர் சங்கம்'' சார்பில் முன்னாள் மாணவர் சந்திப்பு விழா, பல்கலைக்கழக துணைத்தலைவர் எஸ்.அர்ஜூன் கலசலிங்கம் தலைமையில் நடந்தது. பதிவாளர் வாசுதேவன் வாழ்த்துரை வழங்கினார். சங்கதலைவர், பேராசிரியை முருகேசுவரி வரவேற்றார். முன்னாள் மாணவர்கள் 300-க்கும் மேற்பட்டோர், குடும்பத்தினரோடு கலந்து கொண்டு பல்கலைக்கழக வளாகத்தை சுற்றிப்பார்த்து பேராசிரியர்கள், அலுவலர்கள், அதிகாரிகளுடன் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

    அவர்களை இன்னாள் மாணவர்கள் இன்னிசை மழையில் வரவேற்றனர். பேராசிரியர்கள் முத்துக்கண்ணன், கைலாசம், பாலமுருகன், கார்த்திகாதேவி ஆகியோர் ஏற்பாடு செய்தனர். பேராசிரியை தனலட்சுமி நன்றி கூறினார்.

    • அஷ்டவரத ஆஞ்சநேயருக்கு ஜெயந்தி விழா நடந்தது.
    • நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம்

    இந்து சமய அறநிலை யத்துறைக்கு உட்பட்ட ராஜபாளையம்-மதுரை ரோட்டில் உள்ள மாயூர நாத சுவாமி கோவிலுக்கு பாத்தியப்பட்ட ஆதி வழிவிடும் விநாயகர் கோவிலில் அமைந்துள்ள அஷ்டவரத ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தி விழா நடந்தது.

    2 நாட்கள் நடந்த விழாவில் முதல் நாள் பாண்டுரங்கன் பஜனை மண்டலி குழுவினரின் பஜனைகளுடன் விழா தொடங்கியது. அதிகாலை கும்ப ஜெயம் அபிஷேகம், வெள்ளி கவசஅலங்காரம் நடந்தது. 2-ம் நாள் காலை தீபாராதனையும், பஜம் கோவிந்தம் சாதனா குழுவினரின் ஆன்மீக பக்தி பஜனையும் நடந்தது.

    அனுமன் சுவாமிக்கு 108 வடை மாலை, 108 அதிரச மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தன. பூசாரி கண்ணன்சுவாமி, தியாேனஸ், ராம்சிங் பூஜைகளை நடத்தினர். குழந்தைகள், பெண்கள் உள்பட திரளான பக்தர்கள் கூடி நின்று சுவாமியை வழிபட்டனர்.

    ஹரி நாம சங்கீர்த்தனம் நந்தலாலா பஜன்ஸ் குழுவினரின் இன்னிசை கச்சேரி சந்திரசேகர் குழுவினரால் நடத்தப்பட்டது .

    அனுமன் ஜெயந்தி முன்னிட்டு அன்னதானம் நடந்தது. விழாவில் ராஜுக்கள் மகிமைப்பட்டு தலைவர் என்.ஆர்.கிருஷ்ண மூர்த்தி ராஜா, தொழிலதிபர் டாக்டர் குவைத்ராஜா, ராஜபாளையம் நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் கோவில் நண்பர்கள் நற்பணி மன்ற தலைவரும், சமூக சேவகருமான ராமராஜ் செய்திருந்தார்.

    • நர்சிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
    • உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள எஸ்.தோப்பூரை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகள் கீர்த்தனா (வயது 20). இவர் அருப்புக்கோட்டையில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். அப்போது பெருநாழியை சேர்ந்த அப்துல்ரகுமான் என்பவரும், கீர்த்தனாவும் காதலித்ததாக கூறப்படு கிறது. இதனை பெற்றோர் கண்டித்தனர்.

    இதனால் விரக்தி அடைந்த கீர்த்தனா தூக்க மாத்திரைகளை சாப்பிட்டார். குடும்பத்தினர் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து காப்பாற்றினர். பின்னர் அருப்பு க்கோட்டை போலீசார் கீர்த்தனா-அப்துல்ரகுமானை அழைத்து அறிவுரை கூறி னர். ஆனாலும் 2 பேரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்துல்ரகுமான் தனது வாட்ஸ்-அப் ஸ்டேட்டசில் வேறொரு பெண்ணை காதலிப்பதாக தெரிவித்திருந்தார்.

    இதனால் கீர்த்தனா யாருடனும் பேசாமல் விரக்தி யுடன் காணப்பட்டார். பெற்றோரும் மகளை சமரசம் செய்தனர். ஆனா லும் வாழ்க்கையில் விரக்தி அடைந்த கீர்த்தனா சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்த காரியா பட்டி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக சுந்தரமூர்த்தி போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில் தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில் காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார்.
    • சிவலிங்ககணேஷ் காரியா பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை காமராஜர் நகரை சேர்ந்தவர் செல்லப்பாண்டியன். இவரது மகன் தனசேகர பாண்டியன் (வயது 20). அதே பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கணேஷ் (18). இவர்கள் 2 பேரும் அங்குள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர்.

    நேற்று காரியாபட்டியில் உள்ள நண்பர்களை சந்திப்பதற்காக மோட்டார் சைக்கிளில் 2 பேரும் புறப்பட்டு சென்றனர். தனசேகரபாண்டியன் மோட்டார் சைக்கிளை ஓட்டினார்.

    மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கரியனேந்தல் பகுதியில் வந்தபோது முன்னால்சென்ற லாரியை முந்திசெல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது மோட்டார் சைக்கிள் சாலையின் நடுவே இருந்த தடுப்பில்மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த தனசேகர பாண்டி யன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சிவலிங்ககணேஷ் காரியா பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அ.தி.மு.க. போஸ்டர்களால் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    • அன்வர்ராஜா அ.தி.மு.க.-வில் இருந்து கடந்த ஓராண்டுக்கு மேலாக நீக்கி வைக்கப்பட்டுள்ளார்.

    ராமநாதபுரம்

    முன்னாள் அமைச்சரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அன்வர்ராஜா அ.தி.மு.க.-வில் இருந்து கடந்த ஓராண்டுக்கு மேலாக நீக்கி வைக்கப்பட்டுள்ளார். அவர் மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாட்களில் போஸ்டர் ஒட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

    இன்று (24-ந்தேதி) எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரத்தில் அன்வர்ராஜா ஒட்டி யுள்ள போஸ்டரில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் ''தலைவா ஏழை மக்களுக்காக நீங்கள் துவங்கிய கட்சி, சிதறி கிடக்கிறது-நாங்கள் பதறி துடிக்கிறோம் காப்பாற்றுங்கள்" என குறிப்பிட்டுள்ளார்.

    மாவட்ட அ.தி.மு.க, செயலாளர் எம்.ஏ. முனிய சாமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் சரவணகுமார் ஆகியோர் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் ''தலைவா நீங்கள் துவக்கிய கட்சியை அழிக்க நினைத்த களைகளை காணாமல் போகச் செய்தாய். உங்கள் வழியில் ஒட்டுமொத்த தொண்டர்களால் ஒற்றைத் தலைமையை உருவாக்கி கழகத்தை தலைநிமிரச் செய்து எங்களை காப்பாற்றிய தங்க தலைவா'' என குறிப்பிட்டுள்ளனர்.

    இந்த 2 போஸ்டர்களும் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

    • காரியாபட்டி அருகே லாரி மோதி மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
    • விபத்தை ஏற்படுத்திய லாரியை பொதுமக்கள் முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர்.

    காரியாபட்டி

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள கீழஉப்பிலிகுண்டு கிராமத்தை சேர்ந்தவர் ஆதிநாராயணன். இவரது மகன் வர்கீஸ் நவீன் (16). அதே பகுதியை சேர்ந்த லட்சுமணன் மகன் லாவண்யா (15).

    இவர்கள் இருவரும் காரியாபட்டி அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். இன்று காலை பள்ளிக்கு செல்வதற்காக 2 பேரும் ஆவியூர் பஸ் ஸ்டாப்பிற்கு வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக கிரஷர் ஜல்லிக்கற்களை ஏற்றி வந்த லாரி எதிர்பாராத விதமாக 2 பேர் மீது மோதியது. இதில் வர்கீஸ்நவீன், லாவண்யா ஆகியோருக்கு கால் முறிவு ஏற்பட்டது.

    இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அவர்கள் விபத்தை ஏற்படுத்திய லாரியை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவலறிந்த காரியாபட்டி வட்டாட்சியர் விஜயலட்சுமி, அருப்புக்கோட்டை ஏ.எஸ்.பி., போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டுமனை பட்டா கேட்டு காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
    • அந்த பட்டாவை புதுப்பித்து நில அளவை செய்து தர வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடந்தது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு வீட்டு மனை பட்டா கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் சசிக்குமார் தலைமை வகித்தார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியனில் உள்ள கோபாலபுரம், ராமகிருஷ்ணாபுரம், வைத்திலிங்காபுரம், மம்சாபுரம், ஆராய்ச்சிபட்டி உள்ளிட்ட கிராமங்களில் வீடற்ற ஏழைகளுக்கு கடந்த 2003-ம் ஆண்டு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.

    அந்த பட்டாவை புதுப்பித்து நில அளவை செய்து தர வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடந்தது.

    மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் அர்ஜுனன், மாவட்ட குழு உறுப்பினர் திருமலை, நகர செயலாளர் ஜெயக்குமார், மாதர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் ரேணுகாதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    வட்டாட்சியர் ரெங்கசாமி பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை அடுத்து தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • அரசு ஊழியர்கள்-ஓய்வூதியதாரர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் விருதுநகரில், நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    புதிய மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான மருத்துவ செலவினத் தொகையை திரும்பக்கோரும் இனங்களின் மீது தீர்வு காணும் வகையில், மனுக்கள் மற்றும் அசல் ஆவணங்கள் விடுபட்ட மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவக்காப்பீட்டுத் திட்டம் குறித்த குறைதீர்க்கும் கூட்டம் விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற அரங்கத்தில் வருகிற 29-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 4.30 மணியளவில் நடைபெற உள்ளது.

    அரசு ஊழியர்கள் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து அதன் மீது மாவட்ட மருத்துவம் ஊரகநலப்பணிகள் மற்றும் குடும்ப நலம் இணை இயக்குநர் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனத்தால் ஆவணங்கள் கோரப்பட்டிருக்கும் பட்சத்தில் இந்த கூட்டத்தில் தகுந்த ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

    • கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் வருகிற 10-ந் தேதி வேலைநிறுத்தம் நடத்தினர்.
    • கடந்த 1.12.2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய விகித மாற்றத்தினை உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

    விருதுநகர்

    தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் மாநில பொதுச்செயலாளர் சேக்கிழார் விருதுநகரில் நிருபர்களுக்கு பேட்டி யளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    விவசாயிகளையும், சாமானிய மக்களையும் பாதிக்கக்கூடிய மின்சார சட்ட திருத்தம் 2022-ஐ திரும்ப பெற வேண்டும். மேலும் கடந்த 1.12.2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய விகித மாற்றத்தினை உடனடியாக வழங்க வேண்டும். வாரியத்தில் உள்ள 58 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    கேங்மேன் பணி யிடத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 5,000 பேரை பணியமர்த்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்தியும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் ஜனவரி 10-ந் தேதியன்று அனைத்து தொழிற்சங்கத்தினரும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

    தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தவும் வாய்ப்புள்ளது. எனவே தமிழக அரசும், மின்வாரியமும் கோரிக்கை களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனை தொடர்ந்து தமிழ்நாடு விருதுநகர் மின் பகிர்மான வட்டக்கிளையின் பொதுக்குழு கூட்டம் திட்ட தலைவர் இளங்கோவன் தலைமையில் நடந்தது. மாநில நிர்வாகிகள் துரைப்பா ண்டியன், ஞானகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ராதா கிருஷ்ணன் செயல் அறிக்கை சமர்ப்பித்தார்.

    பொருளாளர் பாலசுப்பி ரமணியன் வரவு, செலவு அறிக்கை வாசித்தார். மாநில நிர்வாகிகள் சேக்கிழார், மணிகண்டன், பாண்டியராஜ் ஆகியோர் அருப்புக்கோட்டை, ராஜபாளையம், விருதுநகர் கோட்ட நிர்வாகிகள் இளங்கோவன், மாயாண்டி, ராஜ்குமார் ஆகியோரை பாராட்டி பேசினர்.

    இதனை தொடர்ந்து 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தலை வராக இளங்கோவனும், செயலா ளராக ஞான குருவும், செயல் தலை வராக தங்கவேலும், அமைப்பு செயலாளராக ராதாகிருஷ்ணனும், பொருளாளராக பாலசுப்பி ரமணியமும் தேர்வு செய்யப்பட்டனர்.

    ×