என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • கள்ள நோட்டு வழக்கில் 29 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • கடந்த 29 ஆண்டுகளாக கர்நாடகா போலீசார் அவர்களை தேடி வந்தனர்.

    விருதுநகர்

    கடந்த 1994-ம் ஆண்டு கர்நாடகா மாநிலம் பசவேஸ்வர் சவுக் பகுதியில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டது தொடர்பாக விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்லைச் சேர்ந்த ரவி(வயது51), சிவகாசியை சேர்ந்த பாண்டியன்(60), விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்த மூவேந்திரன் என்ற மகேந்திரன்(61) ஆகிய 3 பேரை நிப்பானி போலீசார் கைது செய்தனர்.

    இவர்கள் 3 பேரும் அங்குள்ள சிக்கோடி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர். அதன்பின் 3பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

    அப்போது வழக்கு விசாரணைக்கு வரும்போது கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என மாஜிஸ்தி ரேட்டு உத்தரவிட்டிருந்தார். ஆனால் 3 பேரும் கோர்ட்டின் விதிகளை பின்பற்றாமல் தலைமறை வானார்கள். கடந்த 29 ஆண்டுகளாக கர்நாடகா போலீசார் அவர்களை தேடி வந்தனர்.

    இந்தநிலையில் 3 பேரும் தங்கள் சொந்த மாவட்டங் களில் தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கர்நா டகா போலீசார் இதுகுறித்து தமிழக போலீசாரிடம் தெரிவித்தனர்.

    தென் மண்டல ஐ.ஜி.அஸ்ராகார்க் உத்தரவின் பேரில் சிவகாசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுபகுமார் தலைமையிலான தனிப்படை அமைக்கப் பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி விருதுநகரில் தலைமறைவாக இருந்த ரவி, பாண்டியன், மூவேந்திரன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். பின்னர் உரிய விதிமுறைகளை பின்பற்றி கர்நாடக போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    29 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட சம்ப வம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 2 மாணவிகள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
    • இதுகுறித்து விருதுநகர் கிழக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள பனிக்கநேந்தலை சேர்ந்தவர் சரவணன். இவரது மகள் கார்த்திகைசெல்வி (வயது16). இவர் அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    தேர்வில் மதிப்பெண் குறைந்தததால் நன்றாக படிக்குமாறு குடும்பத்தினர் அடிக்கடி கூறியுள்ளனர். ஆனால் கார்த்திகைசெல்வி தனக்கு படிப்பு வரவில்லை என கூறினார்.

    கடந்த சில நாட்களாக விரக்தியில் இருந்த அவர் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாத்தூர் அருகே உள்ள ஜெகவீரன்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மகள் அக்ஷயா(21). கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்த இவர், குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை தொடர முடியவில்லை. இதன் காரணமாக அவர் வீட்டில் இருந்து தொலை நிலைக் கல்வி மூலம் பயிற்று வந்தார். ஆனால் இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை.

    இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அக்ஷயா வீட்டில் விஷம் குடித்து மயங்கினர். உறவினர்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அக்ஷயா இறந்தார். இதுகுறித்து ஏழாயிரம் பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர் ரோசல்பட்டி ரோட்டை சேர்ந்தவர் வேல் முருகன்(50), பெயிண்டர். சம்பவத்தன்று குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி பிரிந்து சென்றார். இதனால் விரக்தியடைந்த வேல்முருகன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து விருதுநகர் கிழக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • ராகுல் காந்தியை எம்.பி. பதவியில் இருந்து நீக்கிய பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசைக் கண்டித்து நடந்தது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ராகுல் காந்தியை எம்.பி. பதவியில் இருந்து நீக்கிய பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசைக் கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணாபுரம் காமராஜர் சிலை முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். காங்கிரஸ் கட்சியின் மேற்கு மாவட்டத் தலைவர் ரங்கசாமி தலைமை தாங்கினார். சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் ராஜ் மோகன், நகரத் தலைவர் பட்சிராஜா, வன்னியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் ரெங்கசாமி பேசுகையில், ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை தற்காலிகமாக நிறைவேற்றமால், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம் நீதிமன்றம் வழங்கியுள்ள நிலையில், உடனடியாக, பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்து, வயநாடு பாராளுமன்ற தொகுதி காலியாக உள்ளது என பாராளுமன்ற செயலகம் அறிவித்துள்ளது ஜனநாயக படுகொலையாகும்.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் சக்திமோகன், மாவட்ட துணைத்தலைவர் பெரியசாமி, மாவட்டச் செயலாளர் முருகேசன், சுந்தரம், ஜெயக்குமார், ராஜபாளையம் நகர்மன்ற உறுப்பினர் சங்கர் கணேஷ், வட்டாரத் தலைவர்கள் பால குருநாதன், முருகராஜ், லட்சுமணன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டுத்திட்டம் குறித்த குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
    • மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    புதிய மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான மருத்துவ செலவினத் தொகையை திரும்பக்கோரும் இனங்களின் மீது தீர்வு காணும் வகையில் மனுக்கள் மற்றும் அசல் ஆவணங்கள் விடுபட்ட மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவக்காப்பீட்டுத்திட்டம் குறித்த குறைதீர்க்கும் கூட்டம் விருதுநகர் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் வருகிற 30-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 4.30 மணியளவில் நடைபெற உள்ளது.

    அரசு ஊழியர்கள் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து அதன் மீது மாவட்ட மருத்துவம் ஊரகநலப்பணிகள் மற்றும் குடும்ப நலம் இணை இயக்குநர் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனத்தால் ஆவணங்கள் கோரப்பட்டிருக்கும் பட்சத்தில் இந்த கூட்டத்தில் தகுந்த ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

    • விருதுநகரில் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • இந்த பேரணியை கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் அ.ச.ப.சி.சி நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:-

    பூமியில் உள்ள புல், தாவரங்கள், பறவைகள், விலங்குகள், மனிதர்கள் என அனைத்து உயிரி னங்களுக்கும் தண்ணீர் அவசியம். தண்ணீர் அவசியம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22-ந் தேதி உலக தண்ணீர் தினமாக கடைபிடிக்கப் படுகிறது.

    உலகில் 3-ல் 2 பங்கு நீராலானது. இதில் பெரும் பங்கு கடலாகவும், பனிக்கட்டி களாகவும் உள்ளது. நாம் குடிக்கக்கூடிய நன்னீரின் அளவு ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. எனவே தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்ந்து சிக்கனமாக உபயோகிக்க வேண்டும். நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டும். குளங்கள், ஏரிகள், கண்மாய், குட்டைகளை உள்ளிட்ட நீர்நிலைகளை பாதுகாப்பதன் மூலம் நிலத்தடி நீரை பாதுகாக்க முடியும்.

    நீர்நிலைகளில் குப்பைகள் கொட்டுவதால், நீர்நிலைகள் மாசடைகின்றன. திடக்கழிவு மேலாண்மையில் அரசு செய்துவரும் நடவடிக்கை களோடு, பொதுமக்களின் பங்களிப்பும் மிக அவசியம். பல உலக நாடுகளில் உள்ள மக்கள் தண்ணீருக்காக ஒரு நாளில் 2 முதல் 3 மணி நேரம் வரை கணிசமான நேரத்தை செலவிடுகிறார்கள். எனவே பொதுமக்களும், எதிர்கால சந்ததிகளான மாணவர்களும் நீர் ஆதாரங்களை பெருக்குவதிலும், சிக்கன நடவடிக்கையில் அரசு எடுக்கும் நீர் பாதுகாப்பு சார்ந்த எந்த ஒரு நடவடிக்கைக்கும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும், நீர்நிலைகளை பாதுகாத்தும், தண்ணீரை மிக சிக்கன மாகவும் செலவழிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதனைதொடர்ந்து உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, தண்ணீரின் முக்கியத்துவம் குறித்த பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

    இந்த பேரணியில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு தண்ணீரின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியபடி நகரின் முக்கிய வீதிகளில் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி மற்றும் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • ஏப்ரல் 1-ந் தேதி சிவகாசி, ராஜபாளையம் கல்லூரி நிகழ்ச்சிகளில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்கிறார்.
    • ஆண்டாள் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியின் 50-வது ஆண்டு பொன் விழா மற்றும் சிவகாசி அய்யநாடார் கல்லூரியின் 60-வது ஆண்டு தொடக்க விழா ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக கவர்னர் ஆர்.என். ரவி வருகிற 31-ந் தேதி ராஜபாளையம் வருகிறார்.

    ஏப்ரல் 1-ந்தேதி (சனிக்கிழமை) காலை 8மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்கிறார். காலை 11மணிக்கு ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி பொன்விழா நிகழ்ச்சியிலும், மாலை 4மணிக்கு சிவகாசி அய்யநாடார்-ஜானகி அம்மாள் கல்லூரி 60-வது ஆண்டு விழா நிகழ்ச்சியிலும் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம் செய்து வருகிறது.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் உலக நுகர்வோர் உரிமை தினம் கொண்டாடப்பட்டது.
    • திருத்தங்கல் காவல்துறை ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் நுகர்வோர் சங்கத்தின் சார்பில் உலக நுகர்வோர் உரிமை தினம் கொண்டாடப்பட்டது. முதுகலை வணிகவியல் துறை இணைப்பேராசிரியர்-கல்லூரி நுகர்வோர் சங்க ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் வரவேற்றார். முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். திருத்தங்கல் காவல்துறை ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையத்தின் மாநிலத் தலைவர் சுப்பிரமணியம் பேசுகையில், நுகர்வோர் பொருட்களை வாங்கும் போது காலாவதியான தேதி மற்றும் அதிகபட்ச விலையை சரிபார்த்து வாங்க வேண்டும் என்றார்.இதில் 210 மாணவ-மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர். நுகர்வோர் சங்கத்தை சேர்ந்த மாணவி பிஸ்மி பாத்திமா நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை இணைப்பேராசிரியர் மற்றும் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் செய்திருந்தார்.

    • விருதுநகர் மாவட்டத்தில் கரும்பு சாகுபடி அழியும் நிலையில் உள்ளது.
    • மத்திய-மாநில அரசுகள் கவனம் செலுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள வத்திராயிருப்பு, கான்சாபுரம், மம்சாபுரம், ஸ்ரீவில்லி புத்தூர், ராஜபாளையம், தேவதானம், சேத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    30 ஆண்டுகளுக்கு முன்பு தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியில் தனியார் சர்க்கரை ஆலை தனியார் நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த பகுதியில் ஏராளமானோர் கரும்பு சாகுபடி செய்து வந்தனர். வீரிய ரகங்கள் உட்பட பல ரகங்கள் பயிரிடப்பட்டு அதிகமாக விளைச்சல் பெற்று கரும்பாலைக்கு கரும்பை அனுப்பி வைத்தனர்.

    கடைசி 3 வருடங்களுக்கு முன்பு அனுப்பிவைத்த கரும்புக்கு ஆலையில் இருந்து விவசாயிகளுக்கு பணம் வராத நிலை இருந்து வருகிறது. இதுகுறித்து விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கரும்பு விவசாயிகள் முறையிட்டும் எந்தவித பயனுமில்லாத நிலையில் பேச்சு வார்த்தை மட்டுமே நீடித்து வருகிறது.

    கரும்பு விவசாயிகளுக்கு பணம் கிடைத்த பாடில்லை. கடந்த 3 ஆண்டுகளாக தனியார் சர்க்கரை ஆலை மூடப்பட்டு கரும்பு பதிவும் நிறுத்தப்பட்டது. இந்த ஆலையை நம்பி கரும்பு பயிரிட்ட விவசாயிகள் சிவகங்கை, ஆண்டிபட்டி உள்பட பல்வேறு சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு அனுப்பி வைத்து வருகின்றனர்.

    25 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் கரும்பு சாகுபடி செய்து வந்தனர். தற்போது சர்க்கரை ஆலை குளறுபடி மற்றும் பணம் வராத நிலை போன்ற வற்றால் மனம் மாறிய கரும்பு விவசாயிகள் கரும்பு பயிரிடுவதற்கு பதிலாக நெல், வாழை, தென்னை போன்ற பயிர்களுக்கு மாறிவிட்டனர்.

    தற்போது இந்த பகுதியில் மொத்தத்தில் 5 ஆயிரம் ஏக்கர் கரும்பு மட்டுமே பயிரிடப்பட்டுள்ளது. அதுவும் பாதிக்கு மேல் சொந்த ஆலை அமைத்து வெல்லம் உற்பத்தி செய்து வருகின்றனர். இன்னும் சிலர் பக்கத்து கரும்பாலை களுக்கு அனுப்பி வைத்து குறைந்த லாபத்தை ஈட்டி வருகின்றனர்.

    மத்திய-மாநில அரசுகள் உடனடியாக இந்த சர்க்கரை ஆலை விஷயத்தில் தலையிட்டு உரிய தீர்வு காணப்பட்டால் மட்டுமே கரும்பு விவசாயம் இந்த பகுதியில் நடக்கும். இல்லாவிட்டால் கரும்பு விவசாயம் முற்றிலும் அழிந்து விடும் நிலைக்கு தள்ளப்பட்டு விடும் என விவசாயிகள் அஞ்சுகின்றனர்.

    • கொங்கேஸ்வரர்-ஏழுமுக காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அய்யா "ஆ"சிரமம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீகொங்கேஸ்வரர், ஸ்ரீ ஏழு முக காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 23-ந்தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. 24-ந்தேதி காலை 8.30 மணிக்கு முதற்கால யாஜ பூஜைகள், பூர்ணாகுதி, தீபாராதனை யும், 25-ந் தேதி 2-ம், 3-ம் கால யாக பூஜைகள், 26-ந் தேதி 4-ம், 5-ம் கால யாக பூஜைகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. காலை 6.35 மணிக்கு 6-ம் கால யாக பூஜை, கோ பூஜையும், 8.45 மணிக்கு மஹா பூர்ணாகுதி, தீபாராத னையும், காலை 9 மணிக்கு கடம் புறப்பாடும் நடந்தது. அதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா அபிஷேகம் நடைபெற்றது.



    கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள். 

    கும்பாபிேஷகத்தில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அன்னதானம் நடந்தது. இதில் சிவகங்கை, காளையார்கோவில் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலரும், செட்டிநாடு பப்ளிக் பள்ளி தாளாருமான சுப.குமரேசன், சாந்திகுமரேசன், அருண் மற்றும் கொங்கேஸ்வரர் கோவில் டிரஸ்டிகள், மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • மாற்றுத்திறனாளிக்கு இலவச வீட்டுமனை பட்டா கலெக்டர் வழங்கினார்.
    • மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது. இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம், விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டன. விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் கூரைக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்ற மாற்றுத்திறனாளி இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு கடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுத்தார். அவரது கோரிக்கையை பரிசீலனை செய்து நேற்று நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வ ீட்டுமனை பட்டாவுக்கான ஆணையை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்பு திட்டம்) வித்யா, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(நிலம்) முத்துக்கழுவன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சரியான நேரத்தில் பஸ் இயக்காததால் பள்ளி மாணவிகள் அவதியடைந்துள்ளனர்.
    • மாணவ-மாணவிகள் 10 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் சென்று படிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள கெருக்கான்பட்டி கிராமம் சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ளது. இந்த பகுதியில் 1995-ம் ஆண்டு முதல் காலை 7. 40 மணியளவில் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்களை கருத்தில் கொண்டு பஸ் இயக்கப்பட்டுள்ளது. தற்போது பஸ் இயக்கும் நேரம் மாற்றப்பட்டு காலை 6.15 மணியளவில் இயக்கப்படுவதால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் 10 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் சென்று படிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கபாண்டியன், சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன், பணிமனை கிளை மேலாளர் மாரியப்பனிடம் பஸ்சை சரியான நேரத்தில் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும், பஸ் சரியான நேரத்தில் இயக்கப்படாமல் இருக்கிறது. காலை 6.15 மணிக்கு வரும் பஸ் இந்த பகுதியில் பெயருக்காக இயக்கப்படுவதால் எந்த பயனும் இல்லை. ஆகையால் சரியான நேரத்தில் பஸ் இயக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • தி.மு.க. பூத் கமிட்டி உறுப்பினர் சேர்க்கைக்காக பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
    • பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடனடியாக தொடங்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.

    விருதுநகர்

    பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடனடியாக தொடங்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் சென்னையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தியிருந்தார். அதன்படி தமிழ்நாட்டில் உள்ள 236 சட்டமன்ற தொகுதிகளிலும் பூத் கமிட்டி உறுப்பினர்களை சேர்ப்பதற்கான பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிக்கு மகளிரணி துணை செயலாளர் பவானி ராஜேந்திரன், அருப்புக்கோட்டை தொகுதிக்கு நியமனக்குழு உறுப்பினர் சரவணன், சாத்தூர் தொகுதிக்கு விவசாய தொழிலாளர் அணி துணை செயலாளர் கொடி சந்திரசேகர், சிவகாசி தொகுதிக்கு ஐ.டி.அணி துணை செயலாளர் மதுரை எஸ்.பாலா, விருதுநகர் தொகுதிக்கு ஐ.டி.அணி துணை செயலாளர் விஜய கதிரவன், திருச்சுழி தொகுதிக்கு இளைஞரணி துணை செயலாளர் ராஜா என்ற பிரதீப்ராஜா, ராஜபாளையம் தொகுதிக்கு வர்த்தக அணி இணை செயலாளர் முத்துலட்சுமி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    ×