என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    • பணிகளை போக்குவரத்து போலீசார் மேற்கொண்டனர்.
    • ரிப்ளெக்டர் தடுப்பு தூண்கள் அமைக்கப்பட்டிருந்தன.

    விழுப்புரம்:

    விழுப்புரம் நகரப் பகுதி யில் விழுப்புரம் -புதுவை சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில், சாலை விதிகளை முறைப் படுத்தும் வகையில் பல்வேறு பணிகளை போக்குவரத்து போலீசார் மேற்கொண்டனர். அதில் ஒரு பகுதியாக சாலையின் நடுவே வாகனங்கள் சீராகவும், முறையாகவும் ,சென்றிட சாலை நடுவே பிளாஸ்டிக் ரிப்ளெக்டர் தடுப்பு தூண்கள் அமைக்கப்பட்டிருந்தன.

    இதனால் வாகனங்கள் அதிவேகமாக செல்வது தடுக்கப்பட்டது. போக்குவரத்து முறையாகவும் செல்ல வழி வகுத்தது. அப்படி அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் ரிப்ளெக்டர் தடுப்புகள் தற்பொழுது சிதிலமடைந்த நிலையில் சில இடங்களில் உடைந்து காணப்பட்டது. இவற்றை சரி செய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். விழுப்புரம் மாவட்ட புதிதாக பொறுப்பேற்ற போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவின் பேரில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்த் தலைமையிலான போக்குவரத்து போலீசார்கள் விழுப்புரம் எஸ்.ஏ.டி. திரையரங்கம் முதல் விழுப்புரம் சிக்னல் வரை உள்ள ரிப்ளெக்ஸ் தடுப்புகளை பழுது பார்த்து ஒழுங்குப்படுத்தி விரைவில் ஒலிக்கும் பிரதிபலிப்பான்கள் ஒட்டப்பட்டு முறைப்படுத்தப்பட்டது. இப்பணியில் இரவு பகல் பாராமல் போக்குவரத்துக் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.நாளை பள்ளிகள் திறக்க இருப்பதால் அதற்கு முன்பாகவே ஒழுங்குபடுத்தும் விதமாக தற்பொழுது பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணி நடைபெறுவதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • திருவிழாவின் இறுதி நிகழ்ச்சியான மஞ்சல் நீராட்டு விழா நடைபெற்றது.
    • கோவில் பேனரையும் கிழித்து எரிந்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே பழ முக்கல் கிராமத்தில் உள்ள ஸ்ரீஆயியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் (கூழ் ஊற்றுதல்) நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று இக்கோவில் திருவிழாவின் இறுதி நிகழ்ச்சியான மஞ்சல் நீராட்டு விழா நடை பெற்றது. விழாவை முன்னிட்டு பழமுக்கல் கிராமத்தில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக அம்மன் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது நல்லாளம் கிராமத்தை சேர்ந்த ஆஷிக் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றார். சாமி ஊர்வலத்தில் சென்றவர்களிடம் வழி விட்டு ஓரமாக செல்லுமாறு கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பழமுக்கல் இளைஞர்கள் ஆஷிக்கை தாக்கியதாக தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த ஆஷிக், நல்லா ளம் கிராமத்திற்கு சென்று நண்பர்களிடம் இதனை தெரிவித்தார்.

    உடனடியாக ஆஷிக்கை, அவரது நண்பர்கள் பழ முக்கல் கிராமத்திற்கு அழைத்து வந்தனர். ஆஷிக்கை தாக்கியவர் களிடம் நியாயம் கேட்டனர். இதில் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றி தகரா றாக மாறியது. அங்கிருந்த செங்கல், சவுக்கு தடி போன்ற வைகளால் ஒரு வரை ஒருவர் தாக்கி கொண்டனர். மேலும், கோவில் பேனரையும் கிழித்து எரிந்தனர். இதில் 10-க்கும் மேற்பட் டோர் காயமடைந்தனர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பிரம்ம தேசம் போலீசார் காய மடைந்தவர்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் பழமுக்கல், நல்லாளம் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் மீது பிரம்மதேசம் இன்ஸ் பெக்டர் அன்பரசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்நிலையில் இருதரப் பைச் சேர்ந்த அன்பரசன் (வயது 25), அருள் (23), பிரசாந்த் (23), கிஷோர் (18), மணிகண்டன் (30), சோமசுந்தரம் (25) ஆகி யோரை பிரம்மதேசம் போலீசார் கைது செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மரக்காணம் அருகே கோவில் திருவிழாவில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு கிராம இளைஞர்களிடையே தகராறு நடந்தது அப்பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ராஜேந்திரன் மனைவி மலர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    • கைது செய்யப்பட்ட மலர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுக்காகிளியனூர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட ய சித்தாமூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் தொடர்ந்து சாராயம் விற்று வந்த திண்டிவனம் அரியன் குப்பம் கிராமம் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி மலர் (42) தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் பரிந்துரையின் பேரில் கலெக்டர் பழனி இதற்கான உத்தரவை பிறப்பித்தார். கைது செய்யப்பட்ட மலர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    • 17 வயது இளம் சிறாரை மதுரையில் இருந்து செங்கல்பட்டிற்க்கு அழைத்து சென்றனர்.
    • இளம் சிறார் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிஓட முயற்சித்தார்.

    விழுப்புரம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கேயன் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயதுடைய இளம் சிறார். இவர் மீது பழனி கோவிலுக்கு வந்த பக்தர்களிடம் திருட்டு உள்பட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. அவரை ேபாலீசார் கைது செய்தனர்.பின்னர் திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். நீதிபதி 18 வயது பூர்த்தியாகும் வரை செங்கல்பட்டு இளம் சிறார் மையத்தில் வைத்து பாதுகாக்குமாறு உத்தரவிட்டார். இதனால் மதுரை இளம் சிறார் மையத்திலிருந்து செங்கல்பட்டு இளம் சிறார் மையத்திற்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் போலீசார் கார்த்திக் ஆகியோர் நேற்று இரவு அரசு பஸ்சில் 17 வயது இளம் சிறாரை மதுரையில் இருந்து செங்கல்பட்டிற்க்கு அழைத்து சென்றனர்.

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே தனியார் ஓட்டலில் அரசு பஸ் நின்றது. அப்போது பஸ்சில் இருந்து இருந்து சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீஸ்காரர் கார்த்திக் 17 வயதுடைய இளம் சிறாருடன் சாப்பிட சென்றனர். பின்னர் சாப்பிட்டுவிட்டு ஓட்டலில் இருந்து வெளியே வந்த போது 17 வயதுடைய இளம் சிறார் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிஓட முயற்சித்தார். இதில் சுதாரித்துக் கொண்ட போலீசார் இளம் சிறாரை பிடிக்க முற்பட்டனர். ஆனால் இளம் சிறார் அவர்களிடமிருந்து தப்பி ஓடிவிட்டார். இரவு நேரம் என்பதால் இளம் சிறார் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. இது குறித்து சப்- இன்ஸ்பெக்டர் சிவக்குமார் விக்கிரவாண்டி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று தனியார் ஓட்டல் இருந்த இடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தப்பி ஓடிய இளம் சிறாரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • கொலை செய்யப்பட்ட வாலிபர்கள் 2 பேரும் புதுவை மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
    • புதுவை மாநிலத்தில் கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்த திருவக்கரை உள்ளது. இங்குள்ள மெயின்ரோட்டில் இருந்து விவசாய நிலத்திற்கு செல்லும் வழியில், ரத்த வெள்ளத்தில் 2 வாலிபர்களின் உடல் கிடந்ததை அவ்வழியே சென்ற விவசாயத் தொழிலாளர்கள் இன்று காலை 10.30 மணியளவில் பார்த்தனர்.

    இது குறித்த தகவலின் பேரில் வானூர் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த 2 வாலிபர்களின் உடலை மீட்டனர்.

    இதில் ஒரு வாலிபர் உடலில் ஒரு கையும், காலும் வெட்டப்பட்ட நிலையில் முட்புதர் அருகே கிடந்தது. மற்றொருவருக்கு தலை மற்றும் மார்பு, கழுத்தில் கத்தியால் வெட்டப்பட்டிருந்தது.

    உடலை கைப்பற்றிய போலீசார் புதுவையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட வாலிபர்கள் 2 பேரும் புதுவை மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து போலீசாரின் விசாரணையில் இறந்த வாலிபர்கள் புதுவை மாநிலம் வில்லியனூர் அடுத்த பிள்ளையார்குப்பம் பகுதியை சேர்ந்த அருண் (வயது 23), கோர்க்காடு அன்பரசன் (35) என்பது தெரியவந்தது. இந்த 2 பேரும் புதுவை மாநிலத்தில் கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது கூட்டாளிகளே இவர்களை கொலை செய்து வீசி சென்றுள்ளனரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தையும் பரபரப்பையும் உருவாக்கியுள்ளது.

    • ஒரே இடத்தில் கலந்து கொண்டு தொழிற்பழகுநர் பயிற்சிக்கு 1000க்கும் மேற்பட்ட இடங்களை நிரப்ப உள்ளனர்.
    • 1 முதல் 2 ஆண்டுகள் வரை அப்ரண்டிஸ் பயிற்சியும் பெற்று தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெறலாம்.

    விழுப்புரம்:

    தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தொழிற்பழகுநராக சேர்க்கை செய்திட மாவட்ட அளவிலான பிரதம மந்திரியின் தொழிற்பழகுநர் பயிற்சி (அப்ரண்டிஸ்) சேர்க்கை முகாம் விழுப்புரம் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் 12.06.2023 (திங்கள்கிழமை) காலை 9மணி முதல் மாலை 4 மணிவரை நடைபெறவுள்ளது. இம்முகாமில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மற்றும் ஆவின் போன்ற அரசு பொதுத்துறை நிறுவனங்கள், சர்க்கரை உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முன்னனி நிறுவனங்கள் ஒரே இடத்தில் கலந்து கொண்டு தொழிற்பழகுநர் பயிற்சிக்கு 1000க்கும் மேற்பட்ட இடங்களை நிரப்ப உள்ளனர்.

    ஐ.டி.ஐ முடித்தவர்கள் தொழிற்பழகுநர் பயிற்சியில் சேர்ந்து தொழிற்பழகுநர் சான்றிதழ் பெறலாம். மேலும் ஐ.டி.ஐ சேர்ந்து பயிற்சி பெற முடியாத 10-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேலும் கல்வி தகுதியுடையவர்கள் நேரடியாக தொழிற் சாலைகளில் பிரஸ்ஸர் அப்ரண்டிஸ்ஸாக சேர்ந்து 3 முதல் 6 மாத கால அடிப்படை பயிற்சியும், 1 முதல் 2 ஆண்டுகள் வரை அப்ரண்டிஸ் பயிற்சியும் பெற்று தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெறலாம். இப்பயிற்சிக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ. 8500 முதல் ரூ.10,000 வரை வழங்கப்படும். எனவே, இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

    • நித்தியநாதன் நேற்று இரவு வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் ஓபிபேர் கிராமத்திற்கு சென்றுள்ளார் .
    • 2 மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி விட்டு நித்திய நாதனிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே ஓமிபேர் கிராமத்தைச் சேர்ந்தவர் நித்திய நாதன் (வயது23). இவர் புதுவை மாநிலம் காலாப்பட்டு பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் ஓபிபேர் கிராமத்திற்கு சென்றுள்ளார் .

    அப்போது இவரது கிராமத்தின் அருகில் உள்ள கோட்டி குப்பம் சாலையில் 2 மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி விட்டு நித்திய நாதனிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். நித்தியநாதன் மரக்காணம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். மரக்காணம் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்போனை பறித்து சென்ற மர்ம நபர்கள் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திண்டிவனத்திற்கு பஸ்ஸில் வந்து மளிகை பொருட்கள் வாங்கி உள்ளார்.
    • சப்-இன்ஸ்பெக்டர் எனக் கூறி போலீஸ் தோ ரணையில் ராதாகிருஷ்ணன் வைத்திருந்த பையில் கஞ்சா மது பாட்டல் உள்ளதா என சோதனை செய்தார்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் அருகே தாதாபுரம் கிராமம் மேட்டு தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் விவசாயி. இவர் திண்டிவனத்திற்கு பஸ்ஸில் வந்து மளிகை பொருட்கள் வாங்கி உள்ளார்.பின்பு பஸ்ஸில் வெள்ளிமேடு பேட்டைக்கு வந்தார். அங்குள்ள ஒரு வங்கியில் நெல் விற்ற பணம் 51 ஆயிரத்தை பெற்று பையில் வைத்துக்கொண்டு வெள்ளி மேடை ப்பேட்டையில் உள்ள நிலத்திற்கு மண் பாதையில் நடந்து சென்றார்.

    அப்பொழுது மோட்டார் சைக்கிளில் வந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் ராதாகிருஷ்ணன் யிடம் தான் சப்-இன்ஸ்பெக்டர் எனக் கூறி போலீஸ் தோ ரணையில் ராதாகிருஷ்ணன் வைத்திருந்த பையில் கஞ்சா மது பாட்டல் உள்ளதா என சோதனை செய்தார். சோதனையில் போது அவரின் கவனத்தை திசை திருப்பி பையில் வைத்திருந்த பணத்தை திருடிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டார். மர்ம நபர் சென்ற பின் பையைப் பார்த்தபோது ரூ. 51 ஆயிரம் பணம் காணவில்லை.

    இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ராதாகிருஷ்ணன் போலீசில் புகார் செய்தார். ராதாகிருஷ்ணன் புகாரின் பேரில் வெளிமேடு பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சுற்றுப்புற பகுதிகளில் தொடர்ந்து வழிப்பறி திருட்டு போன்ற சம்பவங்கள்கடந்த சில தினங்களாக அதிக அளவில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இரு சமூகத்தை சேர்ந்த 80 பேருக்கு விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் மூலம் சம்மன் வழங்கப்பட்டு இருந்தது.
    • இரு தரப்புக்கும் சமரசம் ஏற்படாத சூழ்நிலையில் மீண்டும் இரு தரப்பினரிடையேயும் விசாரணை நடத்தப்படும்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் தர்மராஜா, திரவுபதியம்மன் கோவில் உள்ளது.

    இங்கு பட்டியலின மக்கள் வழிபடக் கூடாது என மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு சமூக மக்களிடையே மோதல் நிலவி வருகிறது.

    இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சமரச பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.

    இதையடுத்து சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் திரவுபதியம்மன் கோவில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

    இக்கோவில் பிரச்சினை தொடர்பாக இரு சமூகத்தை சேர்ந்த முக்கியஸ்தர்களும் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பு விளக்கத்தை எழுத்துப் பூர்வமாக அளிக்க நேற்று அழைக்கப்பட்டனர்.

    அதன்படி இரு சமூகத்தை சேர்ந்த 80 பேருக்கு விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் மூலம் சம்மன் வழங்கப்பட்டு இருந்தது.

    இந்த 80 பேரில் பட்டியலினத்தை சேர்ந்த 24 பேரும், மற்றொரு சமூகத்தை சேர்ந்த 38 பேரும் என 62 பேர் விழுப்புரத்தில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் முன்னிலையில் நேரில் ஆஜர் ஆனார்கள்.

    இரு தரப்பினரையும் தனித்தனியாக அழைத்து கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் விசாரணை நடத்தி எழுத்துப் பூர்வமான விளக்கத்தை பெற்றுக் கொண்டார். சுமார் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது.

    அப்போது தனி நபருக்கு சொந்தமான கோவில் என்பதால் பட்டியலின மக்களை கோவிலுக்குள் அனுமதிப்பது என்பது எங்களது தனிப்பட்ட விருப்பம். இது தொடர்பாக நாங்கள் நீதி மன்றத்தை நாட உள்ளதாக ஒரு தரப்பில் ஆஜரானவர்கள் விளக்கம் அளித்தனர்.

    இதே போல் கோவிலுக்குள் எங்களை அழைத்து செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்கவும், எங்கள் உயிரை காப்பாற்றி கொள்ளவும் நாங்கள் ஊரை விட்டு வெளியேற தயாராக இருப்பதாக மறு தரப்பில் ஆஜரானவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

    இதனால் பேச்சு வார்த்தையில் இழுபறி நிலவியது. இரு தரப்புக்கும் சமரசம் ஏற்படாத சூழ்நிலையில் மீண்டும் இரு தரப்பினரிடையேயும் விசாரணை நடத்தப்படும். விசாரணை நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளர்.

    • ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 3 ஷிப்டுகளில் பணி செய்து வருகின்றனர்.
    • தொழிலாளர்கள் யாரும் உள்ளேயும் செல்ல முடியவில்லை. வெளியேயும் வரமுடியவில்லை.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே புளிச்சப்பள்ளம் பகுதியில் தனியார் பிஸ்கட் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 3 ஷிப்டுகளில் பணி செய்து வருகின்றனர். தொழிலாளர்களுக்காக பல்வேறு தொழிற்சங்கங்கள் இயங்கி வருகிறது. இதில் தே.மு.தி.க. தொழிற்சங்கமும் இயங்கி வருகிறது. இச்சங்கத்தில் உறுப்பினர்களாகவும், நிர்வாகிகளாகவும் உள்ளவர்களுக்கு அடிக்கடி ஷிப்ட் மாற்றுவது, செக்ஷன் மாற்றுவது போன்ற நடவடிக்கையில் நிர்வாகம் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தே.மு.தி.க. நிர்வாகிகள் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், இதே நிலை தொடர்வதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று மதியம் 2 மணியளிவில் தே.மு.தி.க. தொழிற்சங்க தலைவர் ஜெய்சங்கர் தலைமையில் ஊழியர்கள் தொழிற்சாலை வாயிலில் கூடினர். தங்களின் பிரச்னைக்கு தீர்வு கிடைத்தால் மட்டுமே, மற்ற ஊழியர்கள் வேலைக்கு செல்லவேண்டுமென கூறி மறியலில் ஈடுபட்டனர். இதனால் தொழிலாளர்கள் யாரும் உள்ளேயும் செல்ல முடியவில்லை. வெளியேயும் வரமுடியவில்லை. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. தகவலறிந்த தே.மு.தி.க. மாவட்ட தொழிற்சங்க செயலாளர் அருள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். அதேபோல வானூர் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, நிர்வாகத்துடனும், தே.மு.தி.க. நிர்வாகிகளிடமும் பேச்சு வார்த்தை நடத்தினர். இது தொடர்பாக விரைந்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க நிர்வாகம் ஏற்றுக் கொண்டது. இதனை அடுத்து தே.மு.தி.க. தொழிற்சங்கத்தினர் மறியலை கைவிட்டு வேலைக்கு சென்றனர். இந்த போராட்டத்தால் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • நேற்று இரவு இடி, மின்னலுடன் கூடிய சூறாவளி காற்று வீசியது.
    • 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் விழுப்புரத்தை அடுத்த சாலமேடு பகுதியில் வேரோடு சாய்ந்தது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் பகுதிகளில் கடந்த மார்ச் மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இதனைத் தொடர்ந்து மே மாதம் முதல் கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. குறிப்பாக அக்னி நட்சத்திர நாட்களில் வெயிலின் அளவு 105 டிகிரியை தாண்டியது. இதனால் விழுப்புரம் நகர பகுதி பகல் 12 மணிமுதல் மாலை 4 மணி வரை வெறிச்சோடிக் கிடந்தது. மே மாதம் இறுதியில் அக்னி நட்சத்திர வெயில் முடிந்த நிலையிலும், ஜூன் மாதத்திலும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. இதனை அடுத்து தமிழ்நாடு அரசு பள்ளிகள் திறப்பு தேதியை தள்ளிவைத்தது குறிப்பிடத்தக்கதாகும்.

    இந்நிலையில் கடந்த சில தினங்களாக சென்னை, புதுச்சேரி, கடலூர், கள்ளக்குறிச்சி பகுதியில் லேசானது முதல், சூறாவளி காற்றுடன் கூடிய மழை பெய்தது. இந்த மழை விழுப்புரத்தில் பெய்யாதா? வெயிலின் தாக்கம் குறையாதா? என்று பொதுமக்கள் ஏங்கி வந்தனர். இந்நிலையில், நேற்று இரவு 9 மணியளவில் விழுப்புரத்தில் லேசான குளிர்ந்த காற்று வீசியது. இதனைத் தொடர்ந்து இடி, மின்னலுடன் கூடிய சூறாவளி காற்று வீசியது. தொடர்ந்து சுமார் 2 மணிநேரம் பலத்த மழை பெய்தது. இதனால் விழுப்புரம் நகரப் பகுதியில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. விழுப்புரம் நகரமே குளிர்ந்தது என்றால் மிகையாகாது. இதனால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    அதேசமயம் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் விழுப்புரத்தை அடுத்த சாலமேடு பகுதியில் வேரோடு சாய்ந்தது. இதே போல விழுப்புரம் நகர சாலைகளில் இருந்த பல்வேறு மரங்கள் சாலையில் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழை விட்டவுடன், நகராட்சி நிர்வாகம், பொதுப் பணித்துறை, வனத் துறையினர் மற்றும் போலீசார் விரைந்து சென்று, சாலையில் முறிந்து விழுந்து கிடந்த மரக்கிளைகளை அப்புறப்படுத்தி போக்கு வரத்தை சீர்செய்தனர்.

    • விக்கிரவாண்டி அருகே சீல் வைக்கப்பட்ட ஆசிரமத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • மினி லாரியில் மோட்டார் சைக்கிள் ஒன்று எடுத்து செல்லப்பட்டது.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி அருகே குண்டலப்புலியூரில் அன்பு ஜோதி ஆசிரமம் இயங்கி வந்தது. இங்கு தங்கியிருந்த மனநலம் குன்றியவர்களை துன்புறுத்தியது, பாலியல் சீண்டலில் ஈடுபட்டது போன்ற புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து ஆசிரம நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். மேலும், ஆசிரமத்திற்கு சீல் வைக்கப்பட்டிருந்தது. நேற்று மதியம் ஆசிரமத்தின் பின்பக்க கேட் வழியாக மர்ம நபர்கள் உள்ளே சென்றனர். அங்கு நின்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றனர். ஆசிரமத்தின் அருகில் இருந்தவர்கள் இது குறித்து ஆசிரம நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தனர். இது குறித்து ஆசிரம நிர்வாகி அளித்த புகாரின் பேரில் கெடார் போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று இரவு கஞ்சனூர் இன்ஸ்பெ க்டர் சேகர், கெடார் சப்-இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மற்றும் போலீசார் சூரப்பட்டு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த மினி லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். மினி லாரியில் மோட்டார் சைக்கிள் ஒன்று எடுத்து செல்லப்பட்டது. இது அன்பு ஜோதி ஆசிரமத்தில் இருந்து திருடப்பட்டது என்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதனை அடுத்து மோட்டார் சைக்கிளையும், அதனை எடுத்து செல்ல பயன்படுத்தப்பட்ட மினி லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மோட்டார் சைக்கிளை திருடிய குண்டலப்புலியூரை அடுத்த பூங்குணம் தர்மலிங்கம் மகன் ராமன் (வயது 28), உலகலாம்பூண்டி ராமலிங்கம் மகன் முத்து (36) ஆகியோரை கைது செய்தனர். இது தவிர வேறு எங்கேனும் இவர்கள் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×