என் மலர்tooltip icon

    வேலூர்

    தெலுங்கானாவில் இருந்து தமிழகத்திற்கு 2600 மெட்ரிக் டன் ரேசன் அரிசி ரெயில் மூலம் காட்பாடிக்கு வந்து சேர்ந்தது.
    வேலூர்:

    தெலுங்கானா மாநிலம் வாரங்கால் மாவட்டத்தில் இருந்து 2600 மெட்ரிக் டன் ரேசன் அரிசி ரெயில் மூலம் இன்று காட்பாடி கொண்டு வரப்பட்டது.

    அங்கிருந்து ரேசன் அரிசி மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு ராணிப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு வளாகத்திற்கு கொண்டு சென்றனர்.

    இந்த அரிசி மூட்டைகள் அங்கு பாதுகாப்பாக வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தமிழகத்திற்கு வந்துள்ள இந்த ரேசன் அரிசி மூட்டைகள் மாவட்ட வாரியாக லாரிகளில் பிரித்து அனுப்பப்படுகிறது.

    வேலூரில் நிவாரணம் கேட்டு ஊர்வலமாக சென்ற நாட்டுப்புற கலைஞர்கள் 94 பேரை போலீசார் கைது செய்தனர்.
    வேலூர்:

    ஊரடங்கு காரணமாக கோவில் திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டுப்புறக் கலைஞர்கள் வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இன்று வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்கள் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள கிரீன் சர்க்கிளில் திரண்டனர். அங்கிருந்து மேளதாளத்துடன் கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

    ஊரடங்கால் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வருமானம் இல்லாததால் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அரசு 4 மாதங்களுக்கு ஒவ்வொரு நாட்டுப்புறக் கலைஞருக்கு ரூ 4 ஆயிரம் வழங்க வேண்டும்.

    அரசு நிகழ்ச்சிகளுக்கு நாட்டுப்புறக் கலைஞர்களை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியபடி அவர்கள் சென்றனர்.

    வேலூர் வடக்கு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி தடையை மீறி ஊர்வலம் சென்றதாக 94 பேரை கைது செய்தனர்.
    செயின் பறிப்பு கொள்ளையர்கள் 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 16 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.
    வேலூர்:

    பள்ளிகொண்டா சாவடி தெருவை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த மாதம் 15-ந்தேதி தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பைக்கில் வந்த 2 வாலிபர்கள் அவர் அணிந்திருந்த 5 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

    இதேபோல் கடந்த 19-ந்தேதி அணைக்கட்டு அடுத்த கெங்கநல்லூர் பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் பைக்கில் வந்தவர்கள் செயினை பறித்து சென்றனர்.

    இதுகுறித்து பெண்கள் 2 பேரும் பள்ளிகொண்டா போலீசில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் மனோன்மணி வழக்குப்பதிவு செய்து செயின் பறிப்பு கொள்ளையர்களை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வகுமார், ரவி, ஜெயகாந்தன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.பழைய குற்றவாளிகளின் பட்டியலை வைத்து விசாரணை நடத்தினர்.

    அப்போது செயின் பறிப்பு வழக்கில் ஏற்கனவே கைதான வேலூர் முத்துமண்டபம் பகுதியை சேர்ந்த லோகேஷ் கடந்த மாதம் ஜெயிலில் இருந்து வெளியே வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் வேலூர் முத்து மண்டபத்தை சேர்ந்த லோகேஷ், சேண்பாக்கத்தை சேர்ந்த யாசிப், இருவரும் சேர்ந்து வேலூர், சத்துவாச்சாரி, பாகாயம், பள்ளிகொண்டா உள்ளிட்ட பகுதியில் பெண்களிடம் செயின் பறித்தை ஒப்புக்கொண்டனர்.

    போலீசார் 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 16 பவுன் நகைகளை பறிமுதல் செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    யாசிப் சேண்பாக்கத்தில் உடற்பயிற்சி நிலையம் நடத்தி வருகிறார். உடற்பயிற்சி நிலையத்திற்கு லோகேஷ் சென்று வந்தபோது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் பைக்கில் சென்று சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து தொடர்ந்து செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
    7 காட்டு யானைகள் கொண்ட கூட்டம் குடியாத்தம் அடுத்த தன கொண்டபள்ளி பகுதியில் உள்ள விளை நிலங்கள் மற்றும் மாந்தோப்புக்குள் புகுந்து ஏராளமான மா மரங்களை சேதப்படுத்தியது.

    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த ஆந்திர மாநில எல்லையோர கிராமங்களை ஒட்டியபடி உள்ள வனப் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் அடிக்கடி தமிழக எல்லைப் பகுதியில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்கதையாக உள்ளது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 காட்டு யானைகள் கொண்ட கூட்டம் குடியாத்தம் அடுத்த தன கொண்டபள்ளி பகுதியில் உள்ள விளை நிலங்கள் மற்றும் மாந்தோப்புக்குள் புகுந்து ஏராளமான மா மரங்களை சேதப்படுத்தியது. மேலும் மாங்காய்களை சாப்பிட்டு சேதப்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் வனத்துறையினர், விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் உதவியுடன் பட்டாசுகள் மற்றும் மேளங்கள் அடித்து பல மணிநேரம் போராடி காட்டு யானைகளை ஆந்திர மாநில வனப்பகுதிக்குள் விரட்டி விட்டனர்.

    ஆனாலும் இரவு நேரங்களில் மீண்டும் தமிழக எல்லையோர கிராமங்களுக்குள் புகுந்து விளை நிலங்களில் இருக்கும் பயிர்களை சேதப்படுத்துகிறது.

    இதற்கு மாவட்ட நிர்வாகம் நிரந்தர தீர்வு காண வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த தாய்-மகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இருவரும் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    வேலூர்:

    வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த ஒருவர் அரபுநாட்டில் பணிபுரிந்து வருகிறார். அவருடைய மனைவிக்கு 52 வயதாகிறது. இந்த தம்பதிக்கு 27 வயதில் மகன் உள்ளார். இவர், வேலூர்-ஆற்காடு சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை கார் நிறுத்துமிடத்தில் டோக்கன் கொடுக்கும் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தாய்-மகன் இருவருக்கும் சளி, இருமல் இருந்துள்ளது.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து கணவர் செல்போனில் மனைவியுடன் பேசி உள்ளார். அப்போது அவர் அடிக்கடி இருமியபடி பேசி உள்ளார். அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும்படி மனைவியிடம் தெரிவித்துள்ளார். ஆனால் தாயும், மகனும் பரிசோதனை செய்வதற்கு மருத்துவமனைக்கு செல்லவில்லை.

    அதனால் கணவர் வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் கொரோனா கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து சுகாதாரத்துறையினர் மற்றும் மருத்துவக்குழுவினர் அவர்களின் வீட்டுக்கு சென்று இருவரின் சளிமாதிரியையும் சேகரித்து சென்றனர்.

    இந்த நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியானது. அதில், தாய்-மகனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதைத்தொடர்ந்து மாநகராட்சி 2-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் அலுவலர்கள் 2 பேரிடமும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து தெரிவித்தனர். தொடர்ந்து அவர்கள் ஆம்புலன்சில் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டுக்கு அழைத்து செல்லப்பட்டனர். மேலும் அவர்களின் வீட்டு மாடியில் தங்கியிருந்த 2 பேரும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர் பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

    அதன்பின்னர் அந்த வீடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அந்த தெருவில் வசிக்கும் மக்கள் பிற பகுதிக்கு செல்லாதவாறு தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட தெருவாக அறிவிக்கப்பட்டது. மேலும் அங்கு பாதுகாப்பு பணிக்காக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், வாலிபர் தனியார் மருத்துவமனையில் கார் நிறுத்துமிடத்தில் டோக்கன் கொடுத்து வாங்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணிபுரியும் நபர்கள் அல்லது கொரோனா சிகிச்சைக்கு வந்தவர்களுக்கு டோக்கன் கொடுத்து, வாங்கும்போது கொரோனா தொற்று பரவி இருக்கலாம். மேலும் அங்கு பணிபுரிந்த வேறு யாருக்காவது கொரோனா தொற்று உள்ளதா? என்று பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது என்று தெரிவித்தனர்.

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் இதுவரை 38 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். அதில் ஒருவர் உயிரிழந்து விட்டார். 31 பேர் சிகிக்சைக்கு பின்னர் வீடு திரும்பினர். மீதமுள்ள 6 பேருக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை மற்றும் சி.எம்.சி. மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது தாய்-மகன் இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதால் அவர்களையும் சேர்த்து 8 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    வாகன சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட வெல்லத்தை சாராய வியாபாரிக்கு விற்பனை செய்த புகாரில் வேலூர் தெற்கு போலீஸ் பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேரை பணியிடை நீக்கம் செய்து டிஐஜி காமினி உத்தரவிட்டார்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டம் வேப்பங்குப்பம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பாலசுப்பிரமணியம் பணியாற்றி வந்தார். இவர் கடந்த மாதம் உடல்நிலை பாதிப்பு காரணமாக மருத்துவ விடுப்பில் சென்றார். அதையடுத்து அந்த போலீஸ் நிலையத்துக்கு வேலூர் தெற்கு குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த லட்சுமி கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டார்.

    வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சாராயம் காய்ச்சுவது, விற்பனை செய்வதை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் தீவிர ரோந்து மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஒடுகத்தூரை அடுத்த முத்துகுமரன் மலையடிவாரத்தில் கடந்த 4-ந் தேதி இரவு இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேனில் சாராயம் காய்ச்சுவதற்காக கொண்டு செல்லப்பட்ட 3 டன் வெல்லம் சிக்கியது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 டன் வெல்லமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    அந்த வெல்லத்தை சாராயம் காய்ச்சும் வியாபாரியிடம் போலீசார் விற்பனை செய்ததாக புகார்கள் வந்தன. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி உத்தரவிட்டார். அதன்பேரில் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அதில், இன்ஸ்பெக்டர் லட்சுமி வேப்பங்குப்பம் பகுதி சாராய வியாபாரிகளிடம் பணம் வாங்கி கொண்டு சாராய விற்பனையை அனுமதித்து உள்ளார். வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட 3 டன் வெல்லத்தை தமிழக அரசின் வாணிப கிடங்கில் ஒப்படைக்காததும், அதனை சாராயம் காய்ச்சும் வியாபாரியிடம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு விற்பனை செய்ததும் தெரிய வந்தது. மேலும் இதில், இன்ஸ்பெக்டர் லட்சுமி, வேப்பங்குப்பத்தில் பணிபுரியும் போலீஸ்காரர் முனுசாமி ஆகியோருக்கு தொடர்பு இருப்பதும் உறுதியானது.

    அதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, முனுசாமி ஆகியோரை நேற்று முன்தினம் இரவு பணியிடை நீக்கம் செய்து டி.ஐ.ஜி.காமினி உத்தரவிட்டார். மேலும் சாராய கும்பலுடன் தொடர்புடைய போலீசாரின் விபரங்கள் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. அவர்களின் மீதும் விரைவில் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    நெமிலி அருகே புதுமாப்பிள்ளை கொலையில் நண்பர்கள் 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பனப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே உள்ள கீழ்வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தனஞ்செழியன் மகன் பாரதி என்கிற பாரதிதாசன் (வயது23). இவர் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த படாளம் கிராமத்தில் கோழிப்பண்ணை நடத்தி வந்தார்.

    அங்கம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சங்கீதா (20) என்பவரை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். தம்பதியினர் படாளம் கிராமத்தில் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் பாரதிதாசன் அவரது மனைவியை அழைத்துக் கொண்டு அவரது சொந்த ஊரான கீழ் வெங்கடாபுரம் கிராமத்திற்கு பைக்கில் வந்தார்.

    இரவு 10 மணிக்கு வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு பைக்கில் சென்றார். அதே பகுதியில் உள்ள தனசேகர் என்பவருக்கு சொந்தமான ரைஸ் மில் வளாகத்தில் பாரதிதாசன் வெட்டிக் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

    இந்த கொலை சம்பவம் தொடர்பாக நெமிலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குற்றவாளிகளை பிடிக்க டி.எஸ்.பி. மனோகரன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

    சம்பவத்தன்று பாரதிதாசன் அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து மது குடித்துள்ளார்.

    அப்போது ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் பிடித்து போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜோலார்பேட்டை அருகே கணவன் மனைவி இடையே தகராறு காரணமாக இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    ஜோலார்பேட்டை:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் செல்வம். ஜோலார்பேட்டையில் கார் வாட்டர் சர்வீஸ் கடையில் வேலை செய்து வருகிறார்.

    இவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு ஜோலார்பேட்டையை அடுத்த இடையன் பட்டியை சேர்ந்த லாவண்யாவை (வயது 27) காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை வாட்டர் சர்வீஸ் கடையில் இருந்து வீட்டிற்கு வந்த செல்வம், மனைவியிடம் உணவுகேட்டுள்ளார். அதற்கு லாவண்யா சமையல் செய்யவில்லை என கூறியுள்ளார்.

    இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து செல்வம் ஹோட்டலில் சாப்பிடுவதற்காக வீட்டிலிருந்து வந்துள்ளார்.

    பின்னர் சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டில் உள்ள மின்விசிறியில் லாவண்யா தூக்கில் தொங்கினார்.

    இதனைக்கண்ட செல்வம் அதிர்ச்சியடைந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி லாவண்யா பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிமுத்து மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாவண்யா தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூரில் சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய சமூகநல அலுவலர்கள், அவர்களின் பெற்றோரை எச்சரித்தனர்.
    வேலூர்:

    வேலூர் மக்கான் பகுதியில் 18 வயது நிரம்பாத சிறுமிக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக சமூக நலத்துறை அலுவலகத்துக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் சமூகநல அலுவலர்கள் அங்கு சென்று விசாரித்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், ரேஷன் கடையில் பணிபுரியும் 30 வயது வாலிபருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமண நிச்சயம் செய்யப்பட்டதும், சில நாட்களில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததும் தெரிய வந்தது.

    அதைத்தொடர்ந்து அலுவலர்கள், சிறுமி மற்றும் வாலிபரின் பெற்றோரை அழைத்து பேசி திருமணத்தை தடுத்து நிறுத்தினர். பெண்ணிற்கு 18 வயது நிரம்பிய பின்னரே திருமணம் செய்து வைக்க வேண்டும். இதனைமீறி திருமணம் செய்து வைத்தால் அனைவரும் கைது செய்யப்படுவீர்கள் என்று அலுவலர்கள் எச்சரித்தனர். மேலும் சிறுமிக்கும், வாலிபருக்கும் திருமணம் செய்து வைக்க மாட்டோம் என்று அவர்களின் பெற்றோரிடம் எழுதி வாங்கி கொண்டனர். கொரோனா தொற்று காரணமாக சிறுமி அரசு பிற்காப்பு இல்லத்தில் ஒப்படைக்கப்படவில்லை.


    விருதம்பட்டு அருகே மோட்டார் சைக்கிள்களில் மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காட்பாடி:

    விருதம்பட்டு அடுத்த தண்டலம்கிருஷ்ணாபுரம் பகுதியில் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிள்களில் மணல் கடத்தப்படுவதாக விருதம்பட்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு அந்தப் பகுதியில் தீவிர ரோந்துச் சென்றனர்.

    அப்போது 3 பேர் மூட்டைகளில் மணலை அள்ளி மோட்டார் சைக்கிள்களில் கடத்தி வந்தது தெரிய வந்தது. அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் கழிஞ்சூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (வயது 22), விருதம்பட்டு முல்லை நகரைச் சேர்ந்த மகேஷ் (21), அஜய் அரவிந்த (20) எனத் தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 மோட்டார் சைக்கிள்கள், மணல் மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊரடங்கு காலத்தில் வேலூர் மாவட்டத்தில் குடும்ப வன்முறை தொடர்பாக 15 பேருக்கு ஆன்லைன் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டு குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
    வேலூர்:

    ஊரடங்கு அமலில் உள்ள சமயத்தில் வீடுகளில் பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்களுக்கு ஏற்படும் குடும்ப வன்முறை தொடர்பாக ஆன்லைன் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.

    வேலூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்களுக்கான ஆலோசனை, சட்ட உதவிகள், குடும்ப வன்முறைக்கு எதிராக பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்களை பாதுகாக்க இலவச ஆன்லைன் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    கொரோனா பரவுவதை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குக்கு மத்தியில் பெண்கள், குழந்தைகள் மூத்த குடிமக்களுக்கு எதிராக நடைபெறும் குடும்ப வன்முறைகளை கருத்தில் கொண்டு இந்த இலவச சேவை அளிக்கப்பட்டு வருகிறது.

    பாதிக்கப்பட்ட நபர் அவரை சார்ந்தோர் ஆன்லைனில் அனுப்பும் தகவலின் மூலம் இச்சேவையை செயல்படுத்த முடியும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 19-ந்தேதி முதல் இதுவரை குடும்ப வன்முறை தொடர்பாக 15 பேருக்கு ஆன்லைன் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டு குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும் வாடகைக்கு குடியிருக்கும் 70 வயது முதியவருக்கு வீட்டு உரிமையாளர் தண்ணீர தர மறுப்பதாக வந்த புகாரின் பேரில் உடனடியாக வீட்டு உரிமையாளரிடம் பேசி அவருக்கு தண்ணீர் தர ஏற்பாடு செய்யப்பட்டது.

    இந்த சேவை தொடர்ந்து நடைமுறையில் உள்ளதாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
    வேலூர் வந்து சென்ற தம்பதிக்கு கொரோனா உறுதியானதை அடுத்து அவர்களது உறவினர்கள் 8 பேர் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் பாகாயம் அருகே உள்ள சஞ்சீவிபுரத்தை சேர்ந்தவர் 30 வயது வாலிபர். பிசியோதெரபிஸ்ட் படித்து விட்டு பணி செய்து வந்தார். இவர் பெங்களூருவில் மனைவியுடன் வசித்து வருகிறார்.

    கடந்த மார்ச் மாதம் மனைவியுடன் வேலூருக்கு வந்தார். சுமார் 40 நாட்களுக்கு மேலாக தங்கியிருந்த அவர்கள் கடந்த 20 நாட்களுக்கு முன்பு இ-பாஸ் பெற்று பெங்களூருவுக்கு சென்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் பிசியோதெரபிஸ்ட்க்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

    இதையடுத்து அங்குள்ள ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் இறந்த பிசியோதெரபிஸ்ட் கொரோனாவால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

    அவரது மனைவிக்கும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.

    இதையடுத்து அவர் சிகிச்சைக்காக அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து வேலூர் மாவட்ட சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சுகாதார குழுவினர் வேலூர் சஞ்சீவிபுரத்தி லுள்ள பிசியோ தெரபிஸ்ட் குடும்பத்தினர் உறவினர்கள் 8 பேருக்கு கொரோனா பரிசோதனைக்காக ரத்தம் சளி மாதிரி சேகரிக்கப்பட்டது. 8 பேரும் வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

    மேலும் அந்த பகுதி முழுவதும் தடுப்புகள் அமைத்து அடைக்கப்பட்டது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. மேலும் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர்.

    இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில் பெங்களூருவில் இறந்த பிசியோதெரபிஸ்ட் வேலூரில் தங்கி இருந்துவிட்டு 20 நாட்களுக்கு முன்பு பெங்களூர் சென்றார்.

    மேலும் பெங்களூருவில் சிலருக்கு பிசியோதெரபிஸ்ட் சிகிச்சை அளித்துள்ளார். அதன் மூலம் அவருக்கு கொரோனா பரவியதா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    அவரது குடும்பத்தினர் உறவினர்கள் 8 பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. அவர்களுடைய பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு பிசியோதெரபிஸ்டுக்கு எங்கிருந்து கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்பது தெரியவரும் என்றனர்.
    ×