என் மலர்
செய்திகள்

நெமிலி அருகே புதுமாப்பிள்ளை கொலையில் நண்பர்கள் 3 பேரிடம் விசாரணை
பனப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே உள்ள கீழ்வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தனஞ்செழியன் மகன் பாரதி என்கிற பாரதிதாசன் (வயது23). இவர் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த படாளம் கிராமத்தில் கோழிப்பண்ணை நடத்தி வந்தார்.
அங்கம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சங்கீதா (20) என்பவரை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். தம்பதியினர் படாளம் கிராமத்தில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பாரதிதாசன் அவரது மனைவியை அழைத்துக் கொண்டு அவரது சொந்த ஊரான கீழ் வெங்கடாபுரம் கிராமத்திற்கு பைக்கில் வந்தார்.
இரவு 10 மணிக்கு வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு பைக்கில் சென்றார். அதே பகுதியில் உள்ள தனசேகர் என்பவருக்கு சொந்தமான ரைஸ் மில் வளாகத்தில் பாரதிதாசன் வெட்டிக் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக நெமிலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குற்றவாளிகளை பிடிக்க டி.எஸ்.பி. மனோகரன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
சம்பவத்தன்று பாரதிதாசன் அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து மது குடித்துள்ளார்.
அப்போது ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் பிடித்து போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






