search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சஸ்பெண்டு
    X
    சஸ்பெண்டு

    பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம்

    வாகன சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட வெல்லத்தை சாராய வியாபாரிக்கு விற்பனை செய்த புகாரில் வேலூர் தெற்கு போலீஸ் பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேரை பணியிடை நீக்கம் செய்து டிஐஜி காமினி உத்தரவிட்டார்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டம் வேப்பங்குப்பம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பாலசுப்பிரமணியம் பணியாற்றி வந்தார். இவர் கடந்த மாதம் உடல்நிலை பாதிப்பு காரணமாக மருத்துவ விடுப்பில் சென்றார். அதையடுத்து அந்த போலீஸ் நிலையத்துக்கு வேலூர் தெற்கு குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த லட்சுமி கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டார்.

    வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சாராயம் காய்ச்சுவது, விற்பனை செய்வதை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் தீவிர ரோந்து மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஒடுகத்தூரை அடுத்த முத்துகுமரன் மலையடிவாரத்தில் கடந்த 4-ந் தேதி இரவு இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேனில் சாராயம் காய்ச்சுவதற்காக கொண்டு செல்லப்பட்ட 3 டன் வெல்லம் சிக்கியது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 டன் வெல்லமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    அந்த வெல்லத்தை சாராயம் காய்ச்சும் வியாபாரியிடம் போலீசார் விற்பனை செய்ததாக புகார்கள் வந்தன. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி உத்தரவிட்டார். அதன்பேரில் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அதில், இன்ஸ்பெக்டர் லட்சுமி வேப்பங்குப்பம் பகுதி சாராய வியாபாரிகளிடம் பணம் வாங்கி கொண்டு சாராய விற்பனையை அனுமதித்து உள்ளார். வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட 3 டன் வெல்லத்தை தமிழக அரசின் வாணிப கிடங்கில் ஒப்படைக்காததும், அதனை சாராயம் காய்ச்சும் வியாபாரியிடம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு விற்பனை செய்ததும் தெரிய வந்தது. மேலும் இதில், இன்ஸ்பெக்டர் லட்சுமி, வேப்பங்குப்பத்தில் பணிபுரியும் போலீஸ்காரர் முனுசாமி ஆகியோருக்கு தொடர்பு இருப்பதும் உறுதியானது.

    அதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, முனுசாமி ஆகியோரை நேற்று முன்தினம் இரவு பணியிடை நீக்கம் செய்து டி.ஐ.ஜி.காமினி உத்தரவிட்டார். மேலும் சாராய கும்பலுடன் தொடர்புடைய போலீசாரின் விபரங்கள் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. அவர்களின் மீதும் விரைவில் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×