என் மலர்
வேலூர்
வேலூர்:
தமிழகம் முழுவதும் ஆந்திரா, கர்நாடகம், கேரளா உள்ளிட்ட மாநில எல்லைகளில் செயல்படும் வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச் சாவடிகளில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் கடந்த 12ம் தேதி அதிகாலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்டத்தில் ஆந்திர மாநில எல்லையோரத்தில் உள்ள காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டை, சேர்க்காடு சோதனைச் சாவடிகளில் ஆய்வு நடைபெற்றது.
இதில், சேர்க்காட்டில் நடைபெற்ற சோதனையில் மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயமேகலாவின் பர்ஸில் இருந்து ரூ.4,725, மேஜை டிராயரில் இருந்து ரூ.22,850 கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
சோதனைச் சாவடியில் வாகனங்களை நிறுத்தும் பணியில் 2 தனி நபர்கள் ஈடுபட்டிருந்தனர்.
விசாரணையில், அவர்கள் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பொம்மசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த தினகரன் என்ற ஷியாம் (40) என்றும், சேர்க்காடு பகுதியை சேர்ந்த தேசிய நெடுஞ்சாலை துறையின் சாலைப் பணியாளர் லோலன்தாஸ் (50) என்பது தெரியவந்தது.
இதில், லோலன்தாஸ் சாலைப் பணியாளராக இருந்தாலும் அவ்வப்போது வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச் சாவடியில் விதிகளை மீறி பணியாற்றி வந்துள்ளார். தினகரனிடம் இருந்து ரூ.10 ஆயிரம் பணம், லோலன்தாஸிடம் இருந்து ரூ.1,300 பணம் என பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.38 ஆயிரத்து 875 பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயமேகலா, தினகரன், லோலன்தாஸ் ஆகியோர் மீது வாகன ஓட்டிகளிடம் இருந்து லஞ்சப் பணம் பெற்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடியில் நடைபெற்ற சோதனையில் மோட்டார் வாகன ஆய்வாளர் ராம்கண்ணன் பாக்கெட்டில் இருந்து ரூ.3 ஆயிரம் பணம், அவரது மேஜை டிராயரில் இருந்து கணக்கில் வராத பணம் ரூ.88 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
அங்கு விதிகளை மீறி பணியாற்றி வந்த தனிநபர் பாபு என்பவரிடம் இருந்து கணக்கில் வராத பணம் ரூ.3 ஆயிரம் என மொத்தம் 94 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், மோட்டார் வாகன ஆய்வாளர் ராம்கண்ணன், பாபு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
2 செக்போஸ்ட்டில் நடந்த திடீர் சோதனையில் 5 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள், 5 பேரையும் விசாரணைக்கு விரைவில் அழைக்கப்பட உள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.
வேலூர்:
வேலூர் காட்பாடி அடுத்த ஜாப்ராபேட்டையை சேர்ந்தவர் சங்கர் மகன் யோகராஜ் (வயது 23). அதே ஊரை சேர்ந்தவர் தீபக் (23), இருவரும் ராணுவ வீரர்கள். சீன எல்லையில் உள்ள லடாக் பகுதியில் பணியாற்றி வந்தனர்.
யோகராஜ் சொந்தமாக ஜாப்ராபேட்டையில் வீடு கட்டி வருகிறார். இதற்காக அவரும் தீபக்கும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்தனர்.
யோகராஜின் பிறந்த நாளையொட்டி தீபக் அவரது நண்பர் நேதாஜி மற்றும் யோகராஜ் நேற்று முன்தினம் மது குடித்தனர். கழிஞ்சூர் ரெயில்வே கேட் அருகே கூடுதலாக மது வாங்க சென்றபோது ஏற்பட்ட தகராறில் யோகராஜ் குத்திக்கொலை செய்யப்பட்டார். மற்ற 2 பேரும் படுகாயமடைந்தனர். அவர்கள் வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் காட்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
கழிஞ்ஞர் ரெயில்வேகேட் அருகே 3 பேர் கத்தியால் குத்தப்பட்ட இடத்தை போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
அந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்த பெண் உள்பட 2 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர்களிடம் இரவு நடந்த தகராறு குறித்து கேட்டறிந்தனர்.
மேலும் சம்பவம் நடந்த இடத்தில் அருகே ஒரு பைக் ஒன்று கிடந்தது. அதனை மீட்டு விருதம்பட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
அது கொலையாளிகள் வந்த பைக்காக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. அந்த பைக் பழுதடைந்துள்ளது இதனால்தான் போட்டு விட்டுச் சென்றுள்ளனர்.
பைக் பதிவு எண் மூலம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அந்த பைக்கில் நேற்று முன்தினம் சத்துவாச்சாரி தென்றல் நகரை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகன் அக்ஷய்குமார் (வயது 24). வ.உ.சி நகரை சேர்ந்த வினோத் என்கிற வின்ராஜ்(21), விஜய் (26)ஆகியோர் வந்து சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து தனிப்படை போலீசார் 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
நேற்று முன்தினம் இரவு அக்ஷய்குமார், வினோத், விஜய் ஆகியோர் சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள மதுக்கடையில் மது வாங்கி குடித்தனர். 3 பேரும் சேர்ந்து மது குடித்துள்ளனர்.
அப்போது இரவு 10.30 மணி ஆகிவிட்டது. மது தீர்ந்து விட்டதால் கூடுதலாக மது குடிக்க அவர்கள் முடிவு செய்தனர். இதனால் ஒரே பைக்கில் 3 பேரும் கழிஞ்சூர் ரெயில்வே கேட் பகுதிக்கு சென்றனர்.
அங்கு மது விற்பனை செய்து கொண்டிருந்த நிர்மலா என்ற பெண்ணிடம் மது வாங்கி விட்டு மீண்டும் பைக்கில் புறப்படத் தயாராகினர். அப்போது பைக் ஸ்டார்ட் ஆகவில்லை. அதனை ஸ்டார்ட் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில் ராணுவ வீரர்கள் யோகராஜ், தீபக் தரப்பினர் அங்கு மது வாங்க வந்தனர். அவர்கள் பைக் ஸ்டார்ட் ஆகாமல் நின்று கொண்டிருந்த அக்ஷய்குமாரிடம் தகராறு செய்துள்ளனர். இதனால் இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டது.
அப்போது அக்ஷய்குமார், வினோத், விஜய் ஆகியோர் பேனா கத்தியால் யோகராஜின் கழுத்தில் குத்தினர். தீபக்கிற்கு வயிற்றில் கத்திக்குத்து விழுந்தது. நேதாஜிக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. 3 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்ததால் பைக்கை அங்கேயே போட்டுவிட்டு அக்ஷய்குமார் தரப்பினர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
போதையில் இருந்ததால் என்ன நடந்தது என்று எங்களுக்கு தெரியவில்லை. அது சம்பந்தமான நினைவும் இல்லை. இந்த தகராறில் யாரும் இறந்திருக்க மாட்டார்கள் என நினைத்தோம்.
ஆனால் விபரீதமாகி விட்டது என அவர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சித்தூர் மாவட்டம் முலகலசெருவு மண்டலம் கட்டுகிந்தபள்ளேரு பஞ்சாயத்து சோம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கதிரி சிவன். இவருக்கு 3 மகள்கள் உண்டு. அதில் முதல் 2 மகளுக்கு திருமணம் ஆகி விட்டது. இளைய மகள் சுமதி (வயது 24). இவர், மதனப்பள்ளியில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. சுமதிக்கும், வாலிபர் ஒருவருக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு வருகிற 25-ந்தேதி திருமணம் நடக்க இருந்தது.
இந்தநிலையில் கதிரி சிவனின் 2-வது மகள் மாதவியை வெங்கடேசன் என்பவர் திருமணம் செய்துள்ளார். வெங்கடேசனுக்கும், சுமதிக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்தது. அவர், தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி சுமதியை வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் அவர் திருமணத்துக்கு மறுத்து வந்தார். ஆத்திரம் அடைந்த வெங்கடேசன், சுமதியை உணவில் விஷம் வைத்து கொலை செய்யவும், இல்லையேல் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்துக் கொலை செய்யவும் சதித்திட்டம் தீட்டியிருந்தார்.
அந்த சதித்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக நேற்று முன்தினம் இரவு கதிரி சிவன் வீட்டுக்கு வந்த வெங்கடேசன், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சுமதியை கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுக்கவே ஆத்திரம் அடைந்த வெங்கடேசன் தான் ஏற்கனவே விஷத்தை கலந்து வைத்திருந்த உணவை சுமதியிடம் சாப்பிட கொடுத்துள்ளார். அந்த உணவை வாங்கி சாப்பிட அவர் மறுத்துள்ளார். விஷம் கலந்த உணவை வெங்கடேசன் எடுத்துச் சென்று கிராமத்தில் ஓரிடத்தில் வீசி உள்ளார்.
முதல் கொலை முயற்சி தோல்வியில் முடிந்ததால், 2-வது முயற்சியாக வெங்கடேசன் சுமதி மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். எரியும் தீயில் துடித்த சுமதி கூச்சலிட்டு அலறினார். அந்த நேரத்தில் வெங்கடேசன் அங்கிருந்து தப்பியோடி விட்டார். சுமதி மீது எரிந்த தீயை குடும்பத்தினரும், அக்கம் பக்கத்தினரும் அணைத்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக தம்பலப்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளித்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பதி ருயா ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, இரவில் கிராமத்தில் ஓரிடத்தில் வீசப்பட்ட விஷம் கலந்த உணவை சாப்பிட்ட 2 நாய்கள், 20 கோழிகள், ஒரு பூனை ஆகியவை நேற்று காலை இறந்து கிடந்ததைப் பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து முலகலசெருவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய வெங்கடேசனை போலீசார் தேடி வருகின்றனர்.
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட நடமாடும் தெரு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக கடன் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தின்படி, நடமாடும் தெரு வியாபாரிகள் மாத தவணையாக ஓராண்டில் திருப்பி அளிக்கக்கூடிய வகையில் அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் வரை வர்த்தக மானிய கடனைப் பெற முடியும்.
இதற்காக வேலூர் மாநகர பகுதியில் உள்ள நடைபாதை மற்றும் சிறு வியாபாரிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. வேலூர் மாநகராட்சியில் சுமார் 4,500 சிறு வியாபாரிகள் உள்ளனர். அவர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர். வேலூர் நேதாஜி மார்க்கெட், மண்டி தெரு பகுதியில் கடை வைத்துள்ள சிறு வியாபாரிகள் குறித்து கணக்கெடுப்பு 2-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் நடந்தது. இதில் சிறு வியாபாரிகள் பெயர், ஆதார் எண் உள்ளிட்ட தகவல்களை சேகரித்தனர்.
வேலூரில் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதைத்தொடர்ந்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
லாரிகளில் வேகக்கட்டுப்பாட்டு கருவிகளை 12 கம்பெனிகளில் மட்டுமே வாங்க வேண்டும் என தமிழக அரசு நிர்பந்தம் செய்கிறது. அங்கு வாங்கினால் தான் தரச்சான்று வழங்கபடும் என வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
லாரிகளில் பொருத்தும் ஜி.பி.எஸ்.கருவிகளையும் அவர்கள் கூறும் 8 கம்பெனிகளில் தான் வாங்க வேண்டும் என்கின்றனர்.
இதனால் எங்களுக்கு 5 முதல் 10 மடங்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது. இதுதவிர ஒளி பிரதிபலிப்பு ஸ்டிக்கர்களும் குறிப்பிட்ட 2 கம்பெனிகளில் தான் வாங்கவேண்டும் என்ற கட்டாயப்படுத்துகின்றனர்.
இதை கண்டித்து தமிழகத்தில் வருகிற 27-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட உள்ளது. எனவே முதல் அமைச்சர் எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணவேண்டும்.
நாங்கள் போராட்டம் நடத்தினால் ரூ.5 ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிப்பு ஏற்படும். பால், தண்ணீர், மருந்து பொருட்கள் கொண்டு செல்லும் லாரிகள் தவிர பிற லாரிகள் ஓடாது. பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் லாரிகள் இயங்காது. இதற்கு பிற மாநில உரிமையாளர்கள் ஒத்துழைப்பு அளிக்கின்றனர்.
இந்த போராட்டத்தால் தமிழகத்தில் 27-ந்தேதி முதல் மினி, கனரகம் என 12 லட்சம் லாரிகள் ஓடாது.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 15 ஆயிரம் லாரிகள் ஓடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
வேலூர் காட்பாடி அடுத்த ஜாப்ரா பேட்டையை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் யோகராஜ் (வயது 23). அதே ஊரை சேர்ந்தவர் தீபக் (23) இருவரும் ராணுவ வீரர்கள். சீன எல்லையில் உள்ள லடாக் பகுதியில் பணியாற்றி வந்தனர்.
யோகராஜ் சொந்தமாக ஜாப்ராபேட்டையில் வீடு கட்டி வருகிறார். இதற்காக அவரும் தீபக்கும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்தனர்.
இன்று யோகராஜின் பிறந்தநாள் என்பதால் அவரிடம் தீபக் மற்றும் அதே பகுதியை சேர்ந்த அவருடைய நண்பர் நேதாஜி (23) மதுவிருந்து கேட்டுள்ளனர்.
நேற்று இரவு காட்பாடி கழிஞ்சூர் ரெயில்வே கேட் அருகே யோகராஜ் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 3 பேரும் மது குடித்தனர். இரவு 10 மணிக்கு மேல் மது தீர்ந்து விட்டதால் மேலும் மது வாங்குவதற்காக கழிஞ்சூர் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிரே 3 பேர் கொண்ட கும்பல் பைக்கில் வந்தனர். மது போதையில் இருந்த யோகராஜ் தரப்பினருக்கும் அந்த கும்பலுக்கும் திடீரென தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த கும்பல் யோகராஜ், தீபக், நேதாஜி, ஆகியோரை கத்தியால் வெட்டினர். யோகராஜிக்கு பல இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த விருதம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த 3 பேரையும் மீட்டு வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி யோகராஜ் இறந்தார்.
தீபக், நேதாஜி ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கொலையாளிகள் யார்? எதற்காக கொலை செய்தார்கள் என்ற விபரம் எதுவும் தெரியவில்லை.
அவர்கள் குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கழிஞ்சூர் பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்பவர்கள் யார்? அங்கு வந்து நேற்று இரவு மது வாங்கி குடித்தவர்கள் பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
இதன்மூலம் கொலையாளிகளை பிடிக்க திட்டமிட்டுள்ளனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட ராணுவ வீரருக்கு முன்விரோதம் எதுவும் உள்ளதா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.
வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் பிரசவ வார்டு அருகே காத்திருப்பு அறை ஒன்று உள்ளது. இதில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்படும் பெண்களின் உறவினர்கள் இரவு நேரங்களில் தங்கி வருகின்றனர்.
நேற்று நள்ளிரவு சுடிதார் அணிந்து மிடுக்காக இருந்த ஒரு பெண் குழந்தை பிரிவு பகுதியில் சுற்றி கொண்டு இருந்தார். காத்திருப்பு அறை அருகே சென்றார்.
அங்கிருந்த பொதுமக்களுக்கு அந்த பெண்ணை பார்த்ததும் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவரிடம் விசாரணை செய்தனர்.
அப்போது அந்த பெண்ணின் குரல் ஆண் குரல் போல் இருந்தது. சந்தேகமடைந்த பொதுமக்கள் அவரது தலைமுடியை சோதனை செய்தனர்.
அப்போது அவர் தலையில் அணிந்து இருந்த டோப்பா கீழே விழுந்தது. அவர் பெண் வேடமிட்ட ஆண் என்று தெரிய வந்தது. பெண் வேடமிட்டு குழந்தையை கடத்த அல்லது செல்போன் திருட வந்திருக்கலாம் என நினைத்த பொதுமக்கள் அவரை அடித்து உதைத்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த புறக்காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபரை மீட்டு விசாரித்தனர்.
இதில் வாலிபர் ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவர் திருநங்கையாக மாறி வருவதால் சுடிதார் அணிந்து டோப்பா முடி வைத்தது தெரியவந்தது.
அவருடைய உறவினர் ஒருவர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பார்க்க வந்ததாகவும் இரவில் அந்த பகுதியில் சுற்றிய போது பொதுமக்கள் தாக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
இது பற்றி தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






