என் மலர்tooltip icon

    வேலூர்

    சோழவரம் கிராமத்தில் மாடுவிடும் விழாவில் பங்கேற்கும் காளைகளுக்கு பயிற்சி அளிக்கப்படுவதை கலெக்டர் சண்முகசுந்தரம் பார்வையிட்டார்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியப் பகுதியில் வேளாண்மைத்துறை, தோட்டக் கலைத்துறை, பட்டு வளர்ச்சித்துறை, வேளாண்மை பொறியியல் துறை சார்பில் பயிரிடப்பட்டுள்ள நெல், வாழை, வேர்க்கடலை, பப்பாளி மற்றும் பட்டு வளர்ச்சி கூடம், பண்ணை குட்டைகளை கலெக்டர் சண்முகசுந்தரம் நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் தேசிய மானாவாரி மேம்பாட்டு இயக்கம் சார்பில் மானியத்தில் பண்ணை குட்டை அமைத்து மீன்கள் வளர்த்து வருவதை பார்வையிட்டார்.

    ஆண்டிற்கு 2 முறை மீன்களை பிடித்து வேலூர் மீன் அங்காடிக்கு அனுப்புவதன் மூலம் ரூ.2 லட்சம் வரை லாபம் கிடைப்பதாக மீன் வளர்ப்பு உரிமையாளர் தெரிவித்தார்.

    சோழவரம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு போட்டிகளில் பங்கேற்க உள்ள 11 நாட்டு இன காளைகளுக்கு பயிற்சி அளிக்கப்படுவதை கலெக்டர் பார்வையிட்டார். பின்னர் காளைகளுக்கு வழங்கப்படும் பயிற்சி மற்றும் தீவன வகைகள் குறித்து அதன் உரிமையாளர்களிடம் கேட்டறிந்தார்.

    கணியம்பாடி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு வழங்க வைக்கப்பட்டுள்ள கடலை, உளுந்து நெல் போன்ற விதைகள் இருப்பு குறித்தும், நுண்ணுயிர் ஊட்டச்சத்து இருப்பு குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் உழவர் உற்பத்தியாளர்களுடன் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு இயற்கை விவசாயம் செய்வது குறித்து, விவசாயிகளின் கருத்துக்களை கேட்டறிந்தார்.

    ஆய்வின்போது வேளாண்மை இணை இயக்குனர் மகேந்திர பிரதாப் தீக்சித், செயற்பொறியாளர் ஸ்ரீதர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வெங்கடேசன், உதவி இயக்குனர்கள் கலைசெல்வி, மணிகண்டன், தாசில்தார் ரமேஷ் மற்றும் பலர் உடனிருந்தனர்.
    வேலூர், பெங்களூரில் ஆவின் பொதுமேலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
    வேலூர்:

    வேலூர் ஆவின் மேலாளர் ரவி ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் மினி வேன் உரிமையாளரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

    அதில் வேலூர் ஆவினில் பொது மேலாளராக பணியாற்றிய கணேசா (வயது 56 ) கூறியதன் பேரில் லஞ்சப்பணம் கேட்டதாக ரவி தெரிவித்தார்.

    பொது மேலாளர் கணேசா கடந்த வாரம் வேலூரில் இருந்து திருநெல்வேலிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதற்குப்பிறகு காசோலை வழங்குவதற்காக தொடர்ந்து கணேசா ரூ.50 ஆயிரம் வசூலிக்கும் படி வற்புறுத்தியுள்ளார். அதன் பெயரிலேயே ரவி லஞ்சம் கேட்டுள்ளார்.

    இந்த தகவலை பெற்றுக்கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று முன்தினம் இரவு திருநெல்வேலிக்கு சென்று அங்கு ஆவின் பொது மேலாளராக பணியாற்றி வரும் கணேசாவை கைது செய்தனர்.

    விசாரணையில் பொது மேலாளர் கணேசா, மேலாளர் ரவி இருவருக்கும் லஞ்சம் தொடர்பு இருப்பது உறுதியானது. பொதுமேலாளர் கணேசா, மேலாளர் ரவி இருவரும் வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    வேலூர் ஆவினில் கணேசா நீண்ட காலமாக பணியாற்றி வந்துள்ளார். இந்த காலகட்டத்தில் அவர் அதிக லஞ்சப் பணம் வசூல் செய்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

    இதனால் அவருடைய சொத்து விவரங்களையும், வங்கி கணக்கு போன்றவற்றையும் சோதனை செய்ய லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்தனர்.

    பொது மேலாளர் கணேசா வேலூர் சத்துவாச்சாரியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அந்த வீட்டில் டி.எஸ்.பி ஹேமசித்ரா தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    இதேபோல் கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே உள்ள தாவங்கிரியில் உள்ள ஆவின் பொது மேலாளர் கணேசாவின் சொந்த வீட்டில் கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி. கிருஷ்ணராஜ் தலைமையில் சோதனை நடைபெற்றது.

    நேற்று மாலை முதல் விடிய விடிய இந்த சோதனை நடந்தது. வீட்டில் இருந்த பணம், நகை, சொத்து ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

    இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறுகையில்:-

    ஆவின் பொதுமேலாளர் கணேசா வாடகைக்கு தங்கியிருந்த சத்துவாச்சாரி வீடு மற்றும் பெங்களூரில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

    அங்கிருந்த நகை, பணம் போன்றவற்றுக்கு போதுமான கணக்கு உள்ளது. அவரது வீட்டில் இருந்து எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என்றனர்.
    காட்பாடியில் லாரிமோதி ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காட்பாடி:

    காட்பாடி லட்சுமிநகர் பகுதியை சேர்ந்தவர் ஜீவா (வயது 65). ஓய்வு பெற்ற மின்வாரிய உதவி செயற்பொறியாளர். இவர் நேற்று வேலூர் சென்று விட்டு காட்பாடிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். காங்கேயநல்லூர் கூட்ரோடு சாலையில் வந்தபோது, அந்தவழியாக வந்த டிப்பர் லாரி மோதியது. இதில் ஜீவானந்தம் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். அவருடன் மோட்டார் சைக்கிளில் வந்த தாமோதரன் படுகாயம் அடைந்து அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இந்த விபத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு காட்பாடியில் இருந்து வேலூர் சென்ற வாகனங்களும், வேலூரிலிருந்து காட்பாடி நோக்கி வந்த வாகனங்களும் நீண்ட வரிசையில் நின்றன.

    தகவலறிந்த விருதம்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஜீவானந்தம் உடலை பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போக்குவரத்தையும் சீரமைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரதராமியில் மோட்டார் சைக்கிள் ஓட்டிச்சென்ற பெண் மீது லாரி மோதியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    குடியாத்தம்:

    குடியாத்தத்தை அடுத்த பரதராமி புட்டவாரிபல்லி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ், விவசாயி, அவரது மனைவி கவிதா (வயது 34). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று மதியம் கவிதா மோட்டார் சைக்கிளில் தனது கிராமத்தில் இருந்து பரதராமி நோக்கி சென்றார். அப்போது சித்தூரில் இருந்து குடியாத்தம் நோக்கி வந்த லாரி திடீரென கவிதா ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த கவிதாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், கவிதா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன், பரதராமி சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர் ஆவின் நிறுவனத்துக்கு பால் சப்ளை செய்ததற்கு காசோலை வழங்க ஒப்பந்ததாரரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஆவின் மேலாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
    வேலூர்:

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (ஆவின்) வேலூர் சத்துவாச்சாரியில் செயல்பட்டு வந்தது.

    இந்த 4 மாவட்டங்களில் உள்ள விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் பால் ஆவின் வளாகத்தில் உள்ள பால் குளிரூட்டும் நிலையத்தில் பதப்படுத்தப்பட்டன.

    பின்னர் அவை பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இங்கு திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் அருகே உள்ள சொரக்குளத்தூரை சேர்ந்த முருகையன் (வயது 50) என்பவர் ஒப்பந்த அடிப்படையில் பால் சப்ளை செய்து வந்தார். அவர் கொடுக்கும் ஒரு லிட்டர் பாலுக்கு 40 பைசா வீதம் கமிஷன் வழங்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    முருகையன், திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து பால் கொள்முதல் செய்து, ஆவின் நிறுவனத்துக்கு வழங்கி வந்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் புதிதாக தொடங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் திருவண்ணாமலை ஆவின் நிறுவனத்துக்கு பால் சப்ளை செய்து வருகிறார்.

    கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்டு மாதம் வரை பால் சப்ளை செய்த வகையில் முருகையனுக்கு ரூ.1 லட்சத்து 81 ஆயிரம் ஆவின் நிறுவனம் வழங்க வேண்டியிருந்தது. இந்த தொகையை தரும்படி ஆவின் அதிகாரிகளுக்கு பலமுறை அவர் கோரிக்கை வைத்தும் காலம் கடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் ரூ.1 லட்சத்து 81 ஆயிரத்துக்கான காசோலை தயாராக உள்ளது என்று ஆவின் அலுவலகத்தில் இருந்து முருகையனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை பெறுவதற்காக கடந்த 3 நாட்களுக்கு முன்பாக அவர் வேலூர் ஆவின் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது ஆவின் பால் கொள்முதல் பிரிவு மேலாளர் ரவி (வயது 54) காசோலை வழங்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    அதனால் அதிர்ச்சி அடைந்த முருகையன் இதுகுறித்து வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அதையடுத்து போலீசார் ரவியை கையும், களவுமாக பிடிக்க முடிவு செய்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலை லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூ.500, ரூ.2,000 நோட்டுகள் அடங்கிய ரூ.50 ஆயிரத்தை முருகையனிடம் வழங்கினர். அவற்றை அவர் காலை 11.30 மணி அளவில் ஆவின் அலுவலகத்தில் இருந்த மேலாளர் ரவியிடம் கொடுத்தார்.

    அதைத்தொடர்ந்து அந்த அலுவலகத்துக்குள் அதிரடியாக நுழைந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஹேமசித்ரா தலைமையிலான போலீசார் மேலாளர் ரவியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
    வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு வாடகை செலுத்தும்படி தண்டோரா மூலம் அறிவுறுத்தப்பட்டது.
    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி நிர்வாக வசதிக்காக 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த மண்டலங்களில் 1,500 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளன. கடையை குத்தகைக்கு எடுத்தவர்கள் அந்தந்த மண்டல அலுவலகங்களில் மாதந்தோறும் கடை வரியை செலுத்தி வருகிறார்கள்.

    கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக வியாபாரம் பெரிதளவு பாதிக்கப்பட்டது. வியாபாரிகள் கடை வாடகை செலுத்த முடியாமல் தவித்து வந்தனர். அதனால் தமிழக அரசு 2 மாத கடை வாடகையை தள்ளுபடி செய்தது.

    கொரோனா கட்டுபாடுகளில் அளித்த தளர்வு காரணமாக கடந்த 2 மாதங்களாக பொதுமக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. ஆனாலும் பெரும்பாலான வியாபாரிகள் கடை வாடகை செலுத்தவில்லை. சிலர் நீண்டகாலமாக வாடகை செலுத்தாமல் உள்ளனர். அவர்களிடம் வாடகை வசூலிக்கும்படி கமிஷனர் சங்கரன் உத்தரவிட்டார். அதன்பேரில் மாநகராட்சி வருவாய் ஆய்வாளர்கள் வாடகை வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மாநகராட்சி 2-வது மண்டலத்துக்கு உட்பட்ட நேதாஜி மார்க்கெட்டில் பலமாதங்களாக வாடகை செலுத்தாத 50-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் வருவாய் ஆய்வாளர்கள் குமரவேல், ரவிக்குமார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று நேதாஜி மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு சென்று வாடகை செலுத்தும்படி கூறினர். மேலும் தண்டோரா மூலம் வாடகையை உடனடியாக செலுத்தும்படியும், இல்லையென்றால் கடைக்கு சீல் வைக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
    வேலூர் மாவட்டத்தில் 4 லட்சத்து 20 ஆயிரத்து 969 அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது என்று வழங்கல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    வேலூர்:

    தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பில் பொங்கல் தொகுப்பு ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் போன்றவை அடங்கியிருக்கும். கடந்தாண்டு பொங்கல் தொகுப்புடன் ரூ.1,000 வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் வருகிற பொங்கல் பண்டிகைக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 பொங்கல் பரிசு மற்றும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், ஒரு முழு கரும்பு மற்றும் இலவச வேட்டி-சேலை ஆகியவை வழக்கம்போல் ரேஷன் கடைகள் மூலம் வினியோகம் செய்யப்படுகிறது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் 4 லட்சத்து 20 ஆயிரத்து 969 அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

    இதுகுறித்து மாவட்ட வழங்கல் அதிகாரிகள் கூறுகையில், வேலூர் மாவட்டத்தில் அரிசி மற்றும் சர்க்கரை ரேஷன் அட்டைதாரர்கள் என்று மொத்தம் 4 லட்சத்து 23 ஆயிரத்து 680 பேர் உள்ளனர். இவற்றில் 4 லட்சத்து 20 ஆயிரத்து 969 அரிசி ரேஷன் அட்டைதாரர்கள். இவர்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்டவை அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    வருகிற 4-ந்தேதி முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு மற்றும் தொகுப்பு வழங்கப்படும். இதற்கான டோக்கனை வீடு, வீடாக ரேஷன் கடை ஊழியர்கள் வினியோகம் செய்வார்கள். அதில், குறிப்பிட்டுள்ள நாளில் ரேஷன் கடைக்கு நேரடியாக சென்று பொங்கல் பரிசை பெற்று கொள்ளலாம் என்று தெரிவித்தனர்.
    குடியாத்தத்தில் லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குடியாத்தம்:

    குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் நேற்று குடியாத்தத்தில் பல இடங்களில் திடீரென சோதனை நடத்தினர்.

    அப்போது பிச்சனூர் தியாகி குமரன் தெருவில் லாட்டரி சீட்டுகள் விற்றுக்கொண்டு இருந்ததாக அறிவழகன் (வயது 44), குடியாத்தம் நெல்லூர்பேட்டை நீலிகொல்லை தெருவில் லாட்டரி சீட்டுகள் விற்றதாக வரதராஜன் (56) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏராளமான லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
    கே.வி.குப்பம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    கே.வி.குப்பம்:

    கே.வி.குப்பம் தாலுகா பி.கே.புரம் பஞ்சாயத்தை சேர்ந்த வேளாளர் வீதி, வாணியர் வீதி, ஓம் சக்தி கோவில் வீதி ஆகிய பகுதிகளில் பஞ்சாயத்து மூலமாக குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. தற்போது குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் குடிநீர் கேட்டு வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி மற்றும் போலீசார் வந்து பொதுமக்களிடம் குடிநீர் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதாக வாக்குறுதி அளித்தனர். இதனால் அனைவரும் கலைந்து சென்றனர்.

    இந்த சம்பவத்தால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    வேலூர் மாநகராட்சி பகுதியில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை கலெக்டர் சண்முகசுந்தரம் ஆய்வு செய்தார்.
    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி பகுதியில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை திட்டம், கழிவுநீர் கால்வாய் அமைத்தல், கோட்டையை அழகுப்படுத்தும் பணி, சதுப்பேரியில் குப்பைகள் தரம் பிரித்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதற்கட்டமாக அவர் ரூ.33 கோடியில் கோட்டை அழகுப்படுத்தும் பணியை பார்வையிட்டார்.

    அப்போது அங்கு அமைக்கப்பட்டு வரும் நடைபாதை மற்றும் கோட்டை அகழி தூர்வாரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் நடைபாதையின் நீளம் மற்றும் அகலம் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டப்படி உள்ளதா என்று ஆய்வு செய்தார்.

    அதைத்தொடர்ந்து அம்மணாங்குட்டை பகுதியில் ரூ.2 கோடியில் அமைக்கப்படும் எரிவாயு தகனமேடை அமைக்கும் பணிகளையும், ஓட்டேரியில் உள்ள பூங்கா, ஏரிக்கரையோரம் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை, குடிநீர் கிணறுகளை ஆய்வு செய்தார். பின்னர் சதுப்பேரியில் குப்பைகள் தரம் பிரிக்கப்படுவதையும், சத்துவாச்சாரி குறிஞ்சி நகர் மற்றும் அம்பேத்கர் நகரில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளையும் பார்வையிட்ட கலெக்டர், பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

    இதுகுறித்து கலெக்டர் கூறுகையில், வேலூர் கோட்டையில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் அனைத்து வகையான மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்படும். அவற்றின் அறிவியல் பெயர் தமிழ், ஆங்கிலத்தில் எழுதி வைக்கப்படும். இது கோட்டைக்கு வரும் பள்ளி மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையும். மேலும் இங்கு காவலர்களுக்கான தங்கும் விடுதி அமைக்க பரிசீலனை செய்து வருகிறோம்.

    தொல்லியல்துறை சார்பில் ரூ.4½கோடியில் டெண்டர் விடப்பட்ட சிற்றுண்டி உணவகம், நவீன கழிப்பறை கட்டுதல் உள்ளிட்ட பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பணிகள் தொடங்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்கும்படி சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

    ஆய்வின்போது மாநகராட்சி கமிஷனர் சங்கரன், பொறியாளர் சீனிவாசன், நகர்நல அலுவலர் சித்ரசேனா, உதவிகமிஷனர் செந்தில்குமார், தாசில்தார் ரமேஷ், தொல்லியல்துறை அலுவலர் ஈஸ்வர் மற்றும் பலர் உடனிருந்தனர்.
    வேலூர் பழைய பஸ் நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தியது தொடர்பாக 183 ஆட்டோக்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    வேலூர்:

    வேலூர் பழைய பஸ் நிலையத்தில் ஆட்டோக்கள் அனுமதியின்றி உள்ளே சென்று வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நிலையில் வேலூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் கடந்த 2 நாட்களாக அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.

    அதன்படி நேற்று முன்தினம் 64 ஆட்டோக்கள் மீதும், நேற்று 119 ஆட்டோக்கள் மீதும் என மொத்தம் 183 ஆட்டோக்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது. இனியும் பழைய பஸ் நிலைய பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆட்டோக்களை நிறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர்.
    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்த கொத்தமங்கலம் புதியகாலனி பகுதியை சேர்ந்தவர் தினகரன் (வயது 55), மாற்றுத்திறனாளி. இவர் நேற்று காலை மனைவி மற்றும் மகள் நிவேதா ஆகியோருடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அவர்களை நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் சமூகநலத்துறை அலுவலத்தில் மனு அளிக்க செல்வதாக தெரிவித்தனர். அதையடுத்து 3 பேரையும் போலீசார் சோதனை செய்து கலெக்டர் அலுவலகத்துக்குள் அனுமதித்தனர்.

    சிறிதுநேரத்தில் கலெக்டர் அலுவலக போர்டிகோ அருகே தினகரன் திடீரென உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த பெண் போலீசார் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தி, உடலின் மேல் தண்ணீர் ஊற்றி அமைதிப்படுத்தினர். இதனை கண்ட அவருடைய மனைவி மற்றும் மகள் இருவரும் கதறி அழுதனர். தினகரனிடம் கலெக்டர் அலுவலக அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அதில், தினகரன் மகளுக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்து, வருகிற 29-ந் தேதி திருமணம் செய்ய ஏற்பாடு நடந்து வந்துள்ளது. ஆனால் திடீரென வாலிபர் மற்றும் அவரது குடும்பத்தினர் திருமணத்திற்கு மறுத்துள்ளனர். அதற்கான காரணத்தையும் அவர்கள் தெரிவிக்கவில்லை.

    அதனால் மனஉளைச்சலுக்கு உள்ளான தினகரன் இதுகுறித்து லத்தேரி போலீஸ் நிலையம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் மனமுடைந்த அவர் நிச்சயம் செய்யப்பட்ட வாலிபருடன் தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி தீக்குளிக்க முயன்றது தெரிய வந்தது. அதையடுத்து தினகரன் தான் வைத்திருந்த கோரிக்கை மனுவை கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடம் வழங்கினார்.

    கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் மற்றும் அவர்களின் உடைமைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் தினகரன் கலெக்டர் அலுவலகத்திற்குள் மண் எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் சிறிதுநேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ×