என் மலர்tooltip icon

    வேலூர்

    எனது சொத்து மதிப்பு குறித்து வேட்பு மனுவிலேயே தெரிவித்துவிட்டேன் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறினார்.
    வேலூர்:

    வேலூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியதாவது:-

    நண்பர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதும் தொடங்காததும், அவரது உடல்நிலை, மனநிலை மற்றும் சூழ்நிலையை பொறுத்தது. அதில் நுழைந்து நாங்கள் எந்த கருத்துக்களையும் சொல்ல விரும்பவில்லை. ரஜினிகாந்த் குறித்து பேசுவது முடிந்து போன ஒன்று. முதல்வர் பதவிக்கு நான் ஆசைபடவில்லை.

    "திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசுவது, பெரியார், அம்பேத்கர், காந்தி சிலைகளை சேதப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவர்கள் பிறப்பால் மனிதராக இருந்தாலும் குணத்தால் மிருகங்கள். இதையெல்லாம் அரசு பார்த்துக்கொண்டிருக்க கூடாது அவர்களை கண்டிக்க வேண்டும். அவர்களை கண்டிக்கும் அக்கறை இந்த அரசுக்கு கிடையாது. சாயம் அடிப்பது யார் என அரசுக்கு நன்றாக தெரியும்.

    என்னுடைய சொத்து மதிப்பு குறித்த விவரத்தை என்னுடைய தேர்தல் மனுதாக்கலிலேயே தெரிவித்துவிட்டேன். ஆனால் அவர்கள் தவறான முறையில் சொத்துக்களை ஈட்டியுள்ளார்கள் என்பதை விசாரிக்கக்கோரி ஆளுநரிடம் புகார் மனு அளித்துள்ளோம். பொங்கல் பரிசை அரசு அலுவலர்கள் மூலம் தான் கொடுக்க வேண்டும். ஆனால் அதிமுககாரர்கள் டோக்கன் போட்டு, அமைச்சர் படம் போட்டு கொடுக்க இது என்ன அவர்கள் அப்பன்வீட்டு சொத்தா?" என்று கேள்வி எழுப்பினார்.
    வேளாண் சட்டத்தை அதிமுக ஆதரித்தது பெரிய துரோகம் என மாநில காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

    வேலூர்:

    வேலூர் மாங்காய் மண்டி அருகே காங்கிரஸ் கட்சியின் 136-ம் ஆண்டு நிறுவன நாள் மற்றும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி ஏர்கலப்பை விவசாயிகள் சங்கம் மாநாடு நடந்தது. மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார்.

    தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ஸ்ரீ வல்லபிரசாத், தேசிய செயலாளர் மெய்யப்பன், ஜெயக்குமார் எம்.பி, முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு, பொருளாளர் நாசே.ராமச்சந்திரன், திருவண்ணாமலை மாவட்ட தலைவர் செங்கம் குமார் ஆகியோர் பேசினார்.

    இந்த மாநாடு ஒரு எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதம் கிடையாது. 3 அல்லது 2 மாதத்தில் தேர்தல் வருகிறது. இதில் தமிழகத்தின் அடுத்த 5 ஆண்டு தலையெழுத்தை மாற்ற நாம் பாடுபட வேண்டும்.

    2019-ல் பா.ஜ.க., அ.தி.மு.க.வை எதிர்த்து நாம் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளோம்.

    ராகுல்காந்தியை பிரதம வேட்பாளராக அறிவித்திருந்தால் நாம் வெற்றி பெற்றிருப்போம். கடந்த தேர்தலில் பெற்ற வெற்றியை விட அதிக அளவு வெற்றியை நாம் தற்போது அடைய வேண்டும். நமது நோக்கம் எடப்பாடியை வீழ்த்தி அவர் அடிமையாக வைத்திருக்கும் பா.ஜ.க.வையும் தோற்கடிக்க வேண்டும்.

    புவியல் அமைப்புபடி தமிழத்தை போன்ற அமைப்பை கொண்ட தென்கொரியா பொருளாதாரத்தில் உயர்ந்துள்ளது. இது ஏன் தமிழகத்தால் முடியாது.

    நம் ஆட்சியில் இல்லாததாலும், மன்மோகன் சிங் இல்லாததாலும் சீர்செய்யமுடியாத அளவுக்கு இந்திய பொருளாதாரம் கீழே விழுந்துள்ளது. இதை நாம் கூறவில்லை ரிசர்வ் பேங்க் ஆளுனரே கூறுகிறார்.

    தனியார் துறையை வளர்ச்சி அடைய செய்து இந்தியாவில் ஒவ்வொரு பொதுத் துறையையும் அழித்து வருகிறார்கள் தேசத்தை சீர்குலைக்கிறார்கள்.

    பா.ஜ.க மதவிசயத்தில் மட்டுமே மக்களை பிரிக்கவில்லை. பொருளாதார ரீதியிலும் மக்களை வீழ்த்த முயற்சி செய்கிறார்கள். இதனால் தான் மோடியை தோற்கடிக்க வேண்டும்.

    வேளாண் சட்டத்தை அ.தி.மு.க. ஆதரித்து எவ்வளவு பெரிய துரோகம் செய்துள்ளது. அதை எதிர்த்து கேட்காமல் ஆதரித்ததால் அவர்கள் சுயமரியாதையை இழந்துவிட்டார்கள்.

    தி.மு.க. அண்மையில் தமிழக கவர்னரிடம் அ.தி.மு.க. மீதான உரிய ஆதாரத்துடன் ஒப்படைக்கப்பட்ட ஊழல் பட்டியல் மீது விசாரணை கமி‌ஷனை அமைக்க வேண்டும்.

    ஏர்கலப்பை ரத்தம் சிந்துவதை விரும்பவில்லை உணவு வழங்குவதையே செய்கிறது. அதனால் தான் காங்கிரஸ் ஏர்கலப்பையை கையில் எடுத்துள்ளது. ஆனால் பா.ஜ.க. முருகனிடம் உள்ள அவரின் ஆயுதமானை வேலை கையில் எடுத்துள்ளது. பா.ஜ.க. முருகனிடம் மட்டும் இருக்க வேண்டிய ஆயுதமான வேலை எடுத்துவர காரணம் என்ன? அதன் பொருள் என்ன? யாரை மிரட்ட அதை எடுத்து வருகிறீர்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கொரோனா விதியை மீறியது, சமூக இடைவெளியை கடைபிடிக்காதது போன்ற காரணங்களுக்காக கே.எஸ்.அழகிரி, தினேஷ் குண்டுராவ் உள்பட 1000 பேர் மீது வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    வேலூர்:

    காங்கிரஸ் கட்சியின் 136-ம் ஆண்டு தொடக்கவிழா மற்றும் ஏர்கலப்பை விவசாயிகள் சங்கமம் நேற்று மாலை வேலூர் மாங்காய் மண்டி அருகே நடந்தது.

    மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் கட்சி தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ஸ்ரீ வல்லபிரசாத், முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு, தமிழ்நாடு பொருளாளர் நாசே.ராமச்சந்திரன், திருவண்ணாமலை மாவட்ட தலைவர் செங்கம்குமார், வேலூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டீக்காராமன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இந்த நிலையில் கொரோனா விதியை மீறியது, சமூக இடைவெளியை கடைபிடிக்காதது போன்ற காரணங்களுக்காக கே.எஸ்.அழகிரி, தினேஷ் குண்டுராவ் உள்பட 1000 பேர் மீது வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இது வேலூர் காங்கிரசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    குடியாத்தம் அருகே சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குடியாத்தம்:

    குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் போலீசார் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தட்டப்பாறை மாரியம்மன்பட்டி, சேங்குன்றம் பகுதியில் சாராயம் விற்றுக்கொண்டிருந்த சின்னராஜ் (வயது 28), சுப்பிரமணி (45) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
    வேலூர் மாவட்டத்தில் நடந்த தேசிய திறனாய்வு தேர்வை 1,511 மாணவர்கள் எழுதினார்கள். தேர்வு மையங்களை மாவட்ட கல்வி அலுவலர் அங்குலட்சுமி பார்வையிட்டார்.
    வேலூர்:

    தமிழகத்தில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு நேற்று நடைபெற்றது. காலை 9 முதல் 11 மணி வரை மனத்திறன் தேர்வும், 11.30 முதல் 1.30 மணி வரை படிப்பறிவு தேர்வும் நடந்தது.

    வேலூர் மாவட்டத்தில் இந்த தேர்வை எழுத 1,589 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். அவர்கள் தேர்வு எழுத வேலப்பாடி, கொசப்பேட்டை, காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தொரப்பாடி, கணியம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி, பொய்கை, அணைக்கட்டு, கே.வி.குப்பம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட 17 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

    தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் காலை 8 மணி முதல் வரத்தொடங்கினர். சோதனைக்கு பின்னர் 8.30 மணி அளவில் தேர்வு அறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். செல்போன், கால்குலேட்டர், எலக்ட்ரானிக் கைக்கெடிகாரம் உள்ளிட்டவை கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. அனைத்து மாணவர்களும் முகக்கவசம் அணிந்திருந்தனர்.

    கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஒரு அறையில் 10 பேர் அமர்ந்து தேர்வு எழுதினர். தேசிய திறனாய்வு தேர்வை 1,511 மாணவ-மாணவிகள் எழுதினர். 78 பேர் பங்கேற்கவில்லை.

    வேலூர் கொசப்பேட்டையில் உள்ள ஈ.வெ.ரா. நாகம்மை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட பல்வேறு தேர்வு மையங்களை வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் அங்குலட்சுமி பார்வையிட்டார்.தேர்வு அறை மற்றும் மையங்களை கண்காணிக்கும் பணியில் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டிருந்தனர். தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    சத்துவாச்சாரி அருகே அலமேலுமங்காபுரத்தில் கணவருடன் மொபட்டில் சென்ற ஆசிரியையிடம் 5½ பவுன் சங்கிலி பறித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் வேலப்பாடி முகுந்தன் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர், வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பார்மசிஸ்ட்டாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி வனிதா (வயது 44). இவர், வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். கணவன்-மனைவி இருவரும் நேற்று ரத்தினகிரியில் உள்ள ஒரு கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்று விட்டு இரவு 8 மணியளவில் மொபட்டில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.

    சத்துவாச்சாரி அருகே அலமேலுமங்காபுரம் தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, அவர்களை பின்தொடர்ந்து ஒரு மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேரில் பின்னால் அமர்ந்திருந்தவா் திடீரென வனிதாவின் கழுத்தில் அணிந்திருந்த 5½ பவுன் சங்கிலியைப் பறித்தார். இதனால் திடுக்கிட்ட வனிதா கூச்சலிட்டார். தங்கச் சங்கிலியை பறித்ததும் மர்மநபர்கள் மோட்டார்சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். 

    இதுகுறித்து வனிதா சத்துவாச்சாரி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர் சத்துவாச்சாரியில் முன்னாள் விமானப்படை வீரர் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பொருட்களை திருடி சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி 2-ம் பகுதி 37-வது தெருவை சேர்ந்தவர் கோவிந்தசாமி, முன்னாள் விமானப்படை வீரர். இவருடைய மனைவி ராணி (வயது 72). கோவிந்தசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் ராணி தனியாக வசித்து வருகிறார். கடந்த மாதம் வள்ளிமலையில் வசித்து வரும் அவருடைய மகள் பிரசவத்திற்காக ராணி அங்கு சென்றார். இந்த நிலையில் சுமார் ஒருமாதத்திற்கு பின்னர் நேற்று முன்தினம் அவர் வீட்டிற்கு வந்தார்.

    வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டில் வைத்திருந்த ஒரு பவுன் தங்க நகை, 15 கிராம் வெள்ளி, ஒரு செல்போன், டேப் ஆகியவற்றை திருடி சென்றது தெரிய வந்தது. 

    இதுகுறித்து அவர் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று ராணி மற்றும் அருகேயுள்ள வீடுகளில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் வீட்டில் பதிவாகியிருந்த மர்மநபர்களின் விரல்ரேகை மாதிரியை கைரேகை நிபுணர்கள் சேகரித்தனர். இந்த திருட்டு குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வேலூர் மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு தொற்று உறுதியானது. அவர்கள் அனைவரும் அரசு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறையினர் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கையால் கொரோனா வைரஸ் பரவல் குறைந்துள்ளது. தொற்று பாதிப்பு அதிகம் காணப்படும் பகுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. அங்கு சளி, இருமல் உள்ளிட்ட அறிகுறி காணப்படும் நபர்களுக்கு சளி மாதிரி சேகரிக்கப்படுகிறது.

    நேற்றைய பரிசோதனையில் மேலும் 14 பேருக்கு தொற்று உறுதியானது. அவர்கள் அனைவரும் அரசு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் இதுவரை 20 ஆயிரத்து 109 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அவர்களில் 19,569 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 200 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 340 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    வேலூரில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பெண் பலியானார்.
    வேலூர்:

    வேலூரை அடுத்த அம்முண்டி மோட்டூரை சேர்ந்தவர் யோகானந்தம். இவருடைய மனைவி ஜெயப்பிரதா (வயது 29). கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜெயப்பிரதாவை சிகிச்சைக்காக அவருடைய தம்பி, குடியாத்தம் அருகே உள்ள தட்டம்பாறை பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் மோட்டார் சைக்கிளில் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே வந்த போது பின்னால் வந்து கொண்டிருந்த கார் திடீரென விக்னேஷ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் நிலை தடுமாறி சாலையில் விழுந்த ஜெயப்பிரதாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. விக்னேஷ் லேசான காயமடைந்தார்.

    இதை கண்ட பொதுமக்கள் 2 பேரையும் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஜெயப்பிரதாவை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். விக்னேஷ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து காரை பறிமுதல் செய்தனர். மேலும் விபத்து குறித்து கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த கார் டிரைவர் புருஷோத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூரில் மினிவேன் உரிமையாளரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஆவின் பொதுமேலாளர் உள்பட 2 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

    வேலூர்:

    வேலூர் ஆவின் மேலாளர் ரவி ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் மினிவேன் உரிமையாளரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யபட்டார். வேலூர் ஆவினில் பொது மேலாளராக பணியாற்றிய கணேசா (வயது 56 )கூறியதன் பேரில் லஞ்சப்பணம் கேட்டதாக ரவி தெரிவித்தார்.

    பொது மேலாளர் கணேசா கடந்த வாரம் வேலூரில் இருந்து திருநெல்வேலிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். லஞ்ச ஒழிப்பு போலீசார் திருநெல்வேலிக்கு சென்று அங்கு ஆவின் பொது மேலாளராக பணியாற்றிய கணேசாவை கைது செய்தனர். இருவரும் வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் 2 பேர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆவின் பொதுமேலாளர் கணேசா, மேலாளர் ரவி இருவரும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

    குடியாத்தம் அருகே கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் என்ன காரணத்திற்காக இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    குடியாத்தம்:

    குடியாத்தம் அருகே அம்மணாங்குப்பம் துர்கை நகர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 55), கட்டிட தொழிலாளி. இவர் நேற்று காலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் அம்மணாங்குப்பம் பகுதியிலுள்ள ஒரு நிலத்தில் உள்ள புளியமரத்தில் ஆறுமுகம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர் தண்டபாணி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆறுமுகத்தின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்துபோன ஆறுமுகத்திற்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர், ஆறுமுகம் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்துக் கொண்டார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
    வேலூர்:

    இயேசுபிரான் அவதரித்த தினமான கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று (வெள்ளிக்கிழமை) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு தேவாலயங்களில் கூட்டு திருப்பலி மற்றும் சிறப்பு ஆராதனை நடந்தது. பலர் புத்தாடைகள் அணிந்து ஆலயங்களுக்கு சென்றிருந்தனர்.

    விழாவை முன்னிட்டு பலர் தங்கள் வீடுகளில் குடில்கள் அமைத்து, வண்ண ஸ்டார்களை தொங்கவிட்டிருந்தனர். வேலூர் மாநகரில் உள்ள தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    வேலூர் சார்பனா மேட்டில் உள்ள ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் பங்கு தந்தை எட்வர்ட் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். ஒருவருக்கொருவர் கைகுலுக்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

    அதேபோன்று வேலூர் விண்ணேற்பு அன்னை பேராலயத்தில் ஆலய அதிபர் ஜோ.லூர்துசாமி, மறை மாவட்ட நிர்வாகி ஜான்ராபர்ட் ஆகியோர் தலைமையில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடந்தது. ஏசு பிறந்ததை குறிக்கும் விதமாக நள்ளிரவு 12 மணிக்கு குழந்தை ஏசு சொரூபத்தை ஆயர் காட்டினார். பின்னர் ஆலய வளாகத்தில் உள்ள குடிலில் சொரூபம் வைக்கப்பட்டது. இதில் ஆயர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

    வேலூர் சி.எஸ்.ஐ. மத்திய தேவாலயத்தில் பிஷப் சர்மாநித்தியானந்தம், தலைமை ஆயர் பர்னபாஸ்அப்சலோம் ஆகியோர் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. ஆலய வளாகத்தில் குழந்தைகள் பலர் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சீயோன் பெந்தெகொஸ்தே சபையிலும் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை நடந்தது.

    இதேபோல மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பல ஆலயங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வெவ்வேறு நேரங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டது.

    அனைத்து தேவாலயங்களிலும் கிறிஸ்தவர்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி கலந்துகொண்டனர்.
    ×