search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏசு பிறந்ததை குறிக்கும் வகையில் குழந்தை ஏசுவின் சொரூபத்தை ஆயர் காட்டியபோது எடுத்தபடம்.
    X
    ஏசு பிறந்ததை குறிக்கும் வகையில் குழந்தை ஏசுவின் சொரூபத்தை ஆயர் காட்டியபோது எடுத்தபடம்.

    வேலூரில் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை

    வேலூர் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
    வேலூர்:

    இயேசுபிரான் அவதரித்த தினமான கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று (வெள்ளிக்கிழமை) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு தேவாலயங்களில் கூட்டு திருப்பலி மற்றும் சிறப்பு ஆராதனை நடந்தது. பலர் புத்தாடைகள் அணிந்து ஆலயங்களுக்கு சென்றிருந்தனர்.

    விழாவை முன்னிட்டு பலர் தங்கள் வீடுகளில் குடில்கள் அமைத்து, வண்ண ஸ்டார்களை தொங்கவிட்டிருந்தனர். வேலூர் மாநகரில் உள்ள தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    வேலூர் சார்பனா மேட்டில் உள்ள ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் பங்கு தந்தை எட்வர்ட் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். ஒருவருக்கொருவர் கைகுலுக்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

    அதேபோன்று வேலூர் விண்ணேற்பு அன்னை பேராலயத்தில் ஆலய அதிபர் ஜோ.லூர்துசாமி, மறை மாவட்ட நிர்வாகி ஜான்ராபர்ட் ஆகியோர் தலைமையில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடந்தது. ஏசு பிறந்ததை குறிக்கும் விதமாக நள்ளிரவு 12 மணிக்கு குழந்தை ஏசு சொரூபத்தை ஆயர் காட்டினார். பின்னர் ஆலய வளாகத்தில் உள்ள குடிலில் சொரூபம் வைக்கப்பட்டது. இதில் ஆயர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

    வேலூர் சி.எஸ்.ஐ. மத்திய தேவாலயத்தில் பிஷப் சர்மாநித்தியானந்தம், தலைமை ஆயர் பர்னபாஸ்அப்சலோம் ஆகியோர் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. ஆலய வளாகத்தில் குழந்தைகள் பலர் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சீயோன் பெந்தெகொஸ்தே சபையிலும் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை நடந்தது.

    இதேபோல மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பல ஆலயங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வெவ்வேறு நேரங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டது.

    அனைத்து தேவாலயங்களிலும் கிறிஸ்தவர்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி கலந்துகொண்டனர்.
    Next Story
    ×